மதுரை அரிட்டாபட்டியில் பசுமைநடை

Posted: ஜூலை 7, 2011 in ஊர்சுத்தி, நாட்டுப்புறவியல், நான்மாடக்கூடல், மதுரையில் சமணம்

பசுமைநடை இந்த மாதம் அரிட்டாபட்டியில் என்ற குறுந்தகவல் வந்ததும் மகிழ்ச்சியானது. ஏனென்றால் அங்கெல்லாம் தனியாகச் செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் முதல்நாளே அலைபேசியில் அழைத்து சரியான நேரத்திற்கு வரும்படி கூறினார். நாங்கள் பேருந்தில் சற்று முன்னதாகவே சென்று விட்டதால் நரசிங்கம்பட்டி பிரிவில் இறங்கி நடக்கத் தொடங்கிவிட்டோம். அதிகாலை வேளையென்பதால் பாதையின் இருபுறமும் மிக அழகாகயிருந்தது. பாலை நிலம் போல நீரின்றி வறண்டு இருந்தது. மயில்கள் வழிநெடுக அகவி வரவேற்றன. அதன் காலடித்தடங்களை கண்டு உடன் வந்த நண்பர் நொச்சியிலை போல இருக்கிறது என்றார். வழியில் மைல்கற்கள் இரண்டு இருந்தன. இரண்டிலும் ஒரு மைல், ஒரு மைல் என்றுதானிருந்தன. வேறு எந்த குறிப்புமில்லாமலிருந்தது. ஒரு வேளை ஒரு மைலுக்கு ஒரு கல் ஊன்டிருப்பாங்க போல.

நாங்கள் ஊரை நெருங்க பசுமைநடை நண்பர்களும் இருசக்கர வாகனங்களில் வரத்தொடங்கினர். ஊர் எல்லை தொடங்கியதும் சாலை மோசமாக இருந்ததால் யாரிடமும் உதவி கேட்டு வண்டியில் செல்ல மனமில்லை. ஊருக்குள் சென்று விசாரித்து மலைநோக்கி நடந்தோம். அழகான கிராமம்.

எப்போதுமே பயணங்களில் நிகழும் கூத்துகள்தான் நினைவில் நிற்கும். அப்படித்தான் அன்று மலைக்குமுன் பாதை இருபுறமும் பிரிய நான் வண்டித்தடத்தை பார்த்து வேட்டையாடு விளையாடு கமல்ஹாசன் போல ஒரு வழியை தேர்ந்தெடுத்து நடக்கத்தொடங்கினோம். அந்த பாதை வழியில் சென்றால் யாரையும் காணோம். ஊரில் உள்ளவர்களிடம் சமணர்படுகைக்கு இந்த பக்கம் போகலாமா எனக் கேட்டதற்கு அவங்களும் போகலாம் என்றனர். போகப்போகப் ஆட்கள் யாரையுமே காணோம். மனிதநடமாட்டத்தின் சுவடே இல்லை. சரி அலைபேசியில் அழைத்து வினவலாம் என்றால் இருக்கிற இடத்தை எப்படி அடையாளம் சொல்வதென்ற குழப்பம். மலையை அப்படியே சுற்றுவோம், எப்படியாவது அவர்களைப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நடந்தோம். சிறுசிறுகுன்றுகளாக ஆங்காங்கே இருந்தன. வழியில் ஏதோ படப்பிடிப்பு எடுத்ததற்கான சுவடுகள் தெரிந்தன. மலைமீது ஏறி யாராவது வருகிறார்களா பார்ப்போமென்று நண்பர் சொல்ல அருகிலிருந்த சிறு குன்றின் மேல் ஏறிப்பார்த்தோம். நினைத்தது போலவே சற்று தொலைவில் பசுமைநடை நண்பர்கள் வர மகிழ்ச்சியாகிவிட்டது. பின் அவர்களுடன் கலந்து சமணர்படுகை நோக்கி நடந்தோம். வழியில் இருந்த புல்லை எடுத்து நுகர்ந்து பார்த்தேன். அப்போது எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அது நரந்தம்புல் (lemon grass) என்றார். மேலும், இந்த புல்லிலிருந்து எடுக்கும் எண்ணெயிலிருந்து தான் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பார்கள் என்ற தகவலையும் கூறினார்.

எங்கள் குழுவினருக்கு அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் வழிகாட்டியாக வந்தனர். மலை மீதான அவர்கள் அன்பும், பாசமும் சொல்லில் அடங்கக்கூடியதல்ல. சமணர்குகைத்தளமும், தீர்த்தங்கரர் சிற்பமும் இருக்கும் இடத்திற்கு சென்றோம். இது நாங்கள் முதலில் வந்த பாதைதான். ஆனால், உள்தள்ளியிருந்ததால் எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், பசுமைநடை நண்பர்கள் முதலில் மலைக்கு அந்த புறமுள்ள பாண்டியர்கால குடைவரைக்கோயிலை பார்த்துவிட்டு பின் வந்துள்ளனர். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அங்குள்ள குகையின் முன் உள்ள தமிழ்பிராமி கல்வெட்டில் உள்ள வரிகளை வாசித்துப் பொருள் கூறினார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் இக்குகையைச் செய்து கொடுத்திருக்கிறார். இந்த எழுத்துக்கள் முதலாம் நூற்றாண்டைச் சேரந்தவை. படுகை மண்மூடிப்போய் கிடக்கிறது. குகைத்தளத்தின் மேலே மழைநீர் உள்நுழையாமல் இருக்க புருவம் செதுக்கப்பட்டுள்ளது.

அதன் அருகில் உள்ள சமணதீர்த்தங்கரரின் சிற்பம் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. முக்குடைக்கு கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரரின் இருபுறமும் சாமரம் வீசுகின்றனர். அந்த சிற்பத்தின் மேலே பலநூற்றாண்டுகளுக்கு முன் தீட்டப்பட்டுள்ள வண்ணம் இன்னும் லேசாகத் தெரிகிறது. சாந்தலிங்கம் ஐயா சிற்பத்தின் கீழே காணப்படும் வட்டெழுத்துக்களை வாசித்துப் பொருள் கூறினார். அச்சணந்தி என்பவர் செய்வித்திருக்கிறார்.

அங்கிருந்து மலையில் உள்ள சுனையைக் காண நடந்தோம். மலைகள் ஒவ்வொன்றும் அழகழகாக காட்சி தந்தது. மலைமீது ஏறிச்சென்று அந்த சுனை நீரை அருந்தினோம். அந்த தண்ணி மிகவும் சுவையாய், செறிவாயிருந்தது. மலைமீது ஏறி பாரதிதாசன் கவிதை போல ‘பாரடா உன் மானிடப் பரப்பை’ எனக்கூவ வேண்டும் எனத்தோன்றியது. தொலைவில் உள்ள வயல்கள், மரங்கள் எல்லாம் சிறிதாகிக் கொண்டே சென்றன. அழகர்கோயில் மலையும், கோபுரமும் கூட இங்கிருந்து தெரிந்தது. மதுரையில் இவ்வளவு மலைகள் உள்ளனவா என்று நாம் வியந்து கொண்டிருக்கும் போது, இன்னும் இந்த மலைகளை எல்லாம் அறுக்காமலா இருக்கிறோம் என ஒரு கூட்டம் நாவூற காத்துக்கிடக்கிறது. இம்மலையில் ஏறி மறுபுறம் பார்த்ததும் மனசு நொறுங்கிப்போனது. மலைகளை பெரிய, பெரிய வில்லைகளாக அறுத்து வைத்திருக்கிறார்கள். நல்லவேளை ஊர்மக்கள் பார்த்து நீதிமன்றத்தில் மலையை அறுக்க இடைக்காலத்தடையும் வாங்கிவிட்டனர். இனி இது போன்ற மலைகளை கிரானைட் கற்களுக்காகவோ வேறு எதற்காகவும் அறுப்பதை மொத்தமாகத் தடை செய்ய வேண்டும். அதற்கு நாமும் குரல் கொடுக்க வேண்டும். கீழே இறங்கிச் சென்று பார்த்ததும் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. இப்போதிருக்கும் நவீன கருவிகளை வைத்து மலைகளை மூன்றே நாளில் அறுத்துவிடுவார்கள் போல. அந்தளவு அறிவியலை நாம் நாசவேலைகளுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். மலைகளை இம்மக்கள் தெய்வமாக பார்க்கிறார்கள். மலைமுழுங்கிகளோ கிரானைட் குவாரிகளாக பார்க்கிறார்கள். தலைகீழா ஆயிரம் வருசம் நின்னாலும் நம்மால ஒரு கல்லக்கூட படைக்க முடியாது. ஆனா, ஒரு நிமிசத்துல உலகத்தையே அழிக்க அறிவியலை தலைகீழா பயன்படுத்திக்கிட்டிருக்கோம். எனக்கு என்ன சந்தேகம்னா கடல்கள், மலைகள், காடுகள், ஆறுகள், கண்மாய்கள் எல்லாம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதா? பெரிய பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமானதா? மக்களுக்குச் சொந்தமானதா? இயற்கைக்குச் சொந்தமானதா? என்பதுதான்.

மலையில் இயற்கையாகவே ஒரு அணை அமைந்துள்ளது. இரண்டு மலைகள் இணையும் இடத்தில் உள்ள பள்ளத்தில் நீர்நிரம்பி இங்குள்ள மக்களுக்கு விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்குகிறது. இந்த மலையை அறுத்துவிட்டால் அந்த நீராதாரமும் இல்லாமல் போகும். எனவே, அதற்காகவாவது இம்மலை அறுப்பதைத் தடுக்கவேண்டும். பொதுவாக அணைகளை உருவாக்க அரசு எவ்வளோ மக்களை வெளியேற்றி, காடுகளை அழித்து அணைகளைக் கட்டி வருகிறது. அப்படியிருக்கும்போது இயற்கையாக அமைந்த இது போன்ற அணையைக் காப்பது நமது கடமை மட்டுமல்ல அரசின் கடமையும்கூட.

மலையிலிருந்து இறங்கி ஆலமரத்தடியில் உள்ள குளத்தருகே வந்தோம். அங்குள்ள குளத்தின் கரையிலும் ஏதோ சிற்பங்கள் உள்ளன. சமண இயக்கியர்கள் சிற்பங்கள் போலிருந்தன. அப்போது குளத்தருகே ஒரு பாட்டி மலையை நோக்கி விழுந்து வணங்கி கொண்டிருந்ததைப் பார்த்தது நெகிழ்ச்சியாயிருந்தது. குளத்தினருகில் பெரிய பெரிய மரங்களிருந்தன. அங்கிருந்த மக்கள் இம்மலையை நம்பித்தான் இருக்கின்றனர். இந்த மலையிலிருந்து வரும் நீர் தான் ஆனைகொண்டான் கண்மாயை நிறைக்கிறது. பின் வெளியாகும் உபரி நீர் வெளிச்சென்று, அழகர்மலையிலிருந்து வரும் சிலம்பாற்று நீருடன் சேர்ந்து வைகையில் கலக்குமாம். இப்ப எங்க வையையே எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியல. சிலம்பாறு நூபுரகங்கையாயிருச்சு. அடுத்த தலைமுறை நேச்சுரல் வாட்டர் பிளாண்ட்டுன்னு சொல்வாங்ங. என்ன செய்ய? அந்த பெரியவர் சிறு நீர்நிலைகளை குறிக்க ‘ஏந்தல்’ என்ற வார்த்தையை எல்லாம் கூறினார். நாம் கண்மாய்கள், ஆறுகளையே அழித்துக் கொண்டிருக்கும் போது ஏந்தல் என்ற வார்த்தையை எங்கே சொல்லப் போகிறோம்? அந்த ஊர் மக்களின் ஒற்றுமையை பார்த்துத்தான் வியப்பாயிருந்தது. மலையை அறுத்தா என்ன? உடைச்சா என்ன? எங்களுக்கு எதாவது கொடுத்தா சரின்னு இல்லாம போராடும் இம்மக்களின் குணம் வணக்கத்திற்குரியது. குளத்திற்கருகிலுள்ள ஆலமரத்தின் கீழ் உள்ள சிற்பத்தை போய் பார்த்தோம்.

பின் ஆலமரத்திற்கடியில் படையல். எல்லோரும் சேர்ந்து ஒரே வட்டமாக அமர்ந்து உண்டோம். அதைக்குறித்து தனி பதிவே எழுதலாம். ஒரு குடும்ப உறுப்பினர்களே சேர்ந்து உணவருந்த முடியாத காலகட்டத்தில் எண்பது பேர் கூடி ஓரிடத்தில் கூட்டமாக உணவருந்தியது மகிழ்ச்சியான விசயம்தானே. அங்கிருந்த மரத்தடியில் உடுக்கையடுத்து ஒருவர் குறி சொல்லத் தொடங்கினார். மக்கள் நிறைய பேர் வந்திருந்தனர். ஏதோ வழிபாடு போல. கண்மாய்கரையில் நிறைய மரங்கள் வைத்துள்ளனர். இந்த மலையை கழிஞ்சமலை என்று இப்பொழுது அழைக்கின்றனர். அங்கிருந்த ஒரு பெரியவர் இவ்வூர் குறித்து அரிய தகவல்களை கூறினார். இந்த ஊரின் பெயர் அரி ஆட்டன் பட்டி என்று இருந்ததாம். இப்போது அதுதான் அரிட்டாபட்டி என்று சுருங்கிவிட்டதாம். திருக்குறள் ஒன்று இவ்வூரைக் குறிப்பிடுவதாகக் கூறினார். அந்த குறள்

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

ஆலமரத்தடியில் கூடி பசுமைநடை நண்பர்கள் இந்த பயணம் குறித்தும் அடுத்த பயணம் குறித்தும் பேசினோம். மதுரை பல்கலை. காமராசர் நாட்டுப்புறவியல் துறையில் பணியாற்றும் தர்மராஜன் அவர்கள் பேசினார். உள்ளூர் வரலாறுகள் குறித்து பேசினார். இங்குள்ள ஊற்று நீர் பாசனம் நாம் இதுவரை அறியாதது, மேலும், இந்த ஊரில் உள்ள மக்களின் கதைகளையும் வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டுமென கூறினார்.

இந்த பசுமைநடையை சிறப்பாக எடுத்து நடத்தும் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனுக்கும், தொல்லியல் அறிஞர். சாந்தலிங்கம் ஐயா அவர்களுக்கும், நாட்டார் வழக்காறுகள் குறித்து ஆய்வு செய்து வரும் தர்மராஜன் அவர்களுக்கும், இந்த ஊரைச்சேர்ந்த இளைஞர்களுக்கும், மக்களுக்கும் நன்றிகள் பல. இம்மலையை அறுக்கக் கூடாதென தடையுத்தரவு வாங்கிய வழக்கறிஞருக்கும் நன்றி! மேலும், இப்படங்கள் என்னுடன் பயணித்த நண்பரது அலைபேசியில் எடுக்கப்பட்டது. அவருக்கும் நன்றி!

பின்னூட்டங்கள்
  1. தொப்புளான் சொல்கிறார்:

    பசுமை நடையில் கலந்துகொண்ட நண்பர் உண்டுவளர்ந்தான் தரும் கூடுதல் தகவல்கள்:

    • பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் பணியாற்றி தற்போது மதுரை காமராசர் பல்கலை.க்கு பணிமாற்றி வந்திருக்கும் முனைவர் டி.தர்மராஜன் தனது தார்ச்சாலை மரத்தடி சிற்றுரையில், மன்னர் வரலாறுகளே புகட்டப்படும் நிலையில் மக்கள் வரலாறு பதிவுசெய்யப்படும்போதுதான் தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் அரிட்டாபட்டி ஊற்றுப் பாசனம் போன்றவை வெளியுலகுக்குத் தெரியவே வரும் என்றார். மேலும் பசுமை நடை குறித்துக் கூறும்போது, ஒரு விழா நிமித்தமாகவோ, உறவினர்களைப் பார்க்கவோ என்றில்லாது வேறெவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு ஊருக்கு நாம் வேர்களைத் தேடி வரத் தொடங்கியிருப்பது தமிழ்ச் சமூகம் நவீனமாகி வருவதன் அறிகுறி என்றார். சிலர் திராவிட இயக்கத்தின் தொடக்கத்துடனேயே தமிழ்ச் சமூகம் நவீனமாகிவிட்டதாகக் கருதினாலும் தான் இப்போதுதான் அது நிகழ்வதாகக் கருதுவதாகக் கூறினார்.

    • நடையில் கலந்துகொள்ள வந்தவர்கள் வரும்வழியில் காரை நிறுத்திவிட்டு நிழற்படங்கள் எடுத்துக்கொண்டிருக்க அந்த வழியாக மிதிவண்டியில் வந்த கிராமத்து நபர் ஒருவர் “ஷூட்டிங்கா?” என்று கேட்டார். நம்முடன் வந்தவர் அவரது அறியாமையை எண்ணி நக்கலாக, “ஆமா, அசின் சாயங்காலம் வருது” என்று சொல்ல நமுட்டுச் சிரிப்பு சிரித்தோம். உண்மையில் அங்கு ஒருவாரத்திற்கும் மேலாக ‘அரவான்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்ததை அறிந்தபோதுதான் யாருக்கு அறியாமை என்பது புரிந்தது.

    • இட்லிக்குச் சாம்பாருடன் வழக்கமான தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி என்றில்லாமல் அருமையான புதினாச் சட்னி வழங்கியது நிகழ்வின் சுவையையும், பயனையும் மிகுவித்தது.

  2. தொப்புளான் சொல்கிறார்:

    //வழியில் மைல்கற்கள் இரண்டு இருந்தன. இரண்டிலும் ஒரு மைல், ஒரு மைல் என்றுதானிருந்தன. வேறு எந்த குறிப்புமில்லாமலிருந்தது. ஒரு வேளை ஒரு மைலுக்கு ஒரு கல் ஊன்டிருப்பாங்க போல.//

    இசையின் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பில் உள்ள ‘3 கி.மீ’ கவிதையை இரண்டு நாட்களுக்குமுன் வாசித்தபோது இது நினைவுக்கு வந்தது.

  3. Thamil Nila சொல்கிறார்:

    OMFG is this really you?

பின்னூட்டமொன்றை இடுக