அரிட்டாபட்டி மலை எண்பெருங்குன்றங்களில் ஒன்று – வெ.வேதாச்சலம்

Posted: ஜூலை 11, 2011 in நான்மாடக்கூடல், மதுரையில் சமணம், வழியெங்கும் புத்தகங்கள்

மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டி திருப்பிணையன் மலையை எண்பெருங்குன்றங்களில் ஒன்று என தொல்லியல் அறிஞர் முனைவர். வெ.வேதாச்சலம் அவர்கள் தன் ‘எண்பெருங்குன்றங்கள்’ நூலில் ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார். அதைக்குறித்து கீழே காண்போம்.

‘’மதுரைக்கு வடக்கே அமைந்துள்ள அரிட்டாபட்டிமலை சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் சமணத்தலமாக இருந்துள்ளது. இங்கு உள்ள சமணச்சிற்பத்தின் அடியில் காணப்படும் பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு பிறவியைக் கடக்கவுதவும் புணையாக (தெப்பமாக) இம்மலை விளங்கியது என்பதை உணர்த்துகிறது. கல்வெட்டில் இது பிணையன்மலை என்று குறிப்பிடப்படுகிறது. புணையன்மலை என்பதே பிணையன்மலை என வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்நிலையில் பரங்குன்றம், சமணர்மலை (திருவுருவகம்), பள்ளி (குரண்டி மலை), யானைமலை, இருங்குன்றம்(அழகர்மலை) முதலிய ஐந்து மலைகளை எண்பெருங்குன்றங்களாக ஐயமின்றிக் கூறலாம். நாகமலை (கொங்கர்புளியங்குளம் குன்று), அரிட்டாபட்டிமலை (திருப்பிணையன் மலை), கீழவளவுக்குன்று முதலிய மூன்று மலைகளை எண்பெருங்குன்றங்களைச் சார்ந்தவையாகக் கருத வாய்ப்புள்ளது.’’

– எண்பெருங்குன்றம். வெ.வேதாச்சலம் பக்கம்.7

ஆனைமலைக்கு வடக்கே திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அரிட்டாபட்டி மலை உள்ளது. இது மதுரையிலிருந்து வடக்காக சுமார் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனைத் தற்போது கழிஞ்சமலை என்று அழைக்கின்றனர். இதன் பழம்பெயர் ‘திருப்பிணையன் மலை’ ஆகும். இம்மலையின் கீழ்ப்புறமுள்ள இயற்கையான குகைத்தளத்தில் கி.மு முதல் நூற்றாண்டைச்சார்ந்த தமிழ் பிராமிக்கல்வெட்டு காணப்படுகிறது. ‘நெல்வேலி சழிவன் அதினன் வெளியன்’ என்பவன் இப்பள்ளியை உருவாக்கியதாக இக்கல்வெட்டு கூறுகிறது. இங்குள்ள கற்படுக்கைகள் தற்போது மண்மூடிக்கிடக்கின்றன.

குகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே அர்த்தபரியாங்காசனத்தில் அமர்ந்த தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று பாறையில் புடைப்புச் சிற்பமாகக்காட்சியளிக்கிறது. இதனை கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார். திருப்பிணையன்மலையில் இருந்த பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இத்தீர்த்தங்கரர் உருவத்தின் மீது ஆனைமலையில் காணப்படுவது போன்று வண்ண ஓவியம் அழகுறத் தீட்டப்பட்டு அழியாது விளங்குகிறது’’.     

– முனைவர்.வெ.வேதாச்சலம், எண்பெருங்குன்றம்.  பக்கஎண் 12

(நன்றி: வெ.வேதாச்சலம், எண்பெருங்குன்றம், சாஸ்தா பப்ளிகேசன்ஸ்)

அரிட்டாபட்டி மலை எண்பெருங்குன்றங்களில் ஒன்று என முனைவர்.வெ.வேதாச்சலம் சொல்கிறார். ஆனால், பெருங்குன்றத்தை சிறுகுன்றாக மாற்றப் பார்க்கிறார்கள். பக்தி இயக்க காலத்திலேயே அழிக்க முடியாத சமணத்தின் சுவடுகளை இன்று நவீன ராட்சசக் கருவிகள் கொண்டு அழிக்க பார்க்கிறார்கள். காலம்தான் கயவர்களை தண்டிக்க வேண்டும். இயற்கையன்னையின் மடியில் வளர்ந்த நம் முன்னோர்களை காட்டுமிராண்டிகள், மூடநம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறிவிட்டு இன்று நாம் இயற்கையன்னையின் மார்பைப் பிளந்து இரத்தத்தை உறிஞ்சுவதோடு கருவறுக்கவும் தொடங்கிவிட்டோம். நாம் நல்ல மனிதர்களாக, இயற்கையை வணங்கி வழிபடுவோம். நல்லது நடக்கும். நம்புவோம்.

(திரு. வேதாச்சலம் அவர்களின் படம் ஃபிரண்ட்லைன் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி)

அரிட்டாபட்டி தொடர்பான பிற பதிவுகள்:

மதுரை அரிட்டாபட்டிமலையில் பாண்டியர்கால குடைவரைக்கோயில்

மதுரை அரிட்டாபட்டியில் பசுமைநடை

அரிட்டாபட்டி மலை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

பின்னூட்டங்கள்
  1. சங்கரபாண்டி சொல்கிறார்:

    அரிட்டாபட்டி மலையை மட்டுமல்ல வேறு எந்த மலையையும் அருக்கவிடக்கூடாது. மலைகளை அருப்பவர்களின் சங்க அருத்தத்தான் சரிபடுவானுங்க.

  2. […] நரசிங்கம்பட்டி அருகே உள்ளது. சித்திரவீதிக்காரன் பதிவிலிருந்து கொஞ்சம் விளக்கம் […]

பின்னூட்டமொன்றை இடுக