திருப்பரங்குன்றமலையில் பசுமைநடை

Posted: மார்ச் 5, 2013 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

திருப்பரங்குன்றத்தில் சமணம்

பரங்குன்றொருவகம் பப்பாரம் பள்ளி                         

யருங்குன்றம் பேராந்தை யானை – இருங்குன்றம்

என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்

சென்றெட்டுமோ பிறவித் தீங்கு.

முருகனின் முதல்படைவீடாக வணங்கப்படும் திருப்பரங்குன்றம் சமணர்களின் எண்பெருங்குன்றத்தில் முதலாவது குன்றமாகத் திகழ்ந்ததை மேலே உள்ள யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாக காட்டப்பட்ட பாடல் வாயிலாக அறியலாம். திருப்பரங்குன்ற மலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமிக்கல்வெட்டு கண்டறியப்பட்ட பத்திரிகை செய்தியை சகோதரர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மலைப்பயணமாகப் பசுமைநடைக்குழுவோடு சென்றால் நன்றாகயிருக்கும் என்று எண்ணிய ஓரிரு நாட்களில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடமிருந்து 24.02.2013 திருப்பரங்குன்றத்தில் பசுமைநடை என்ற குறுஞ்செய்தி வந்தது பெரு மகிழ்ச்சியைத் தந்தது.

விடியலைநோக்கி

அதிகாலை மாசிப்பனி மச்சைத்துளைக்கும் வேளையிலே நானும், சகோதரரும் கிளம்பிச் சென்றோம். தியாகராயர் பொறியியற் கல்லூரி தாண்டி திருப்பரங்குன்றத்திற்குள் நுழையுமிடத்திலேயே திருமங்கல நண்பர்கள் இளஞ்செழியனும், ரகுநாத்தும் வந்தனர். திருப்பரங்குன்றத்திலுள்ள தம்பிகள் இருவரும் பேருந்து நிலையமருகில் வந்தனர். எல்லோரும் வந்ததும் சிக்கந்தர் சுல்தான் பள்ளிவாசல் செல்லும் மலைப்பாதையில் சென்றோம். சூரியன் மெல்ல எட்டிப்பார்த்தார்.

மலையில் ஏறுவதற்கு கற்களைப் படிகள் போல அமைத்து உள்ளனர்.  வழியில் பாறைகளில் நம்மவர்கள் தங்கள் பெயர்களை பொறித்து வைத்துள்ளனர். நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் நாவலில் நாயகியான பூரணியின் வீடு திருப்பரங்குன்றத்திலிருக்கும். அரவிந்தனும், பூரணியும் மலையேறும் போது ஒருநாள் தங்கள் பெயரையும் பாறையில் செதுக்கி வைத்துக்கொள்வது ஞாபகம் வந்தது. அதைக்குறித்து நண்பர்களிடமும் கூறினேன்.

மலையேற்றம்

பசுமைநடை

படிகளைக் கடந்து மலைப்பாதை தொடங்கியதும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டோம். நிறைய நிழற்படங்களெடுத்துக் கொண்டோம். தென்கால் கண்மாயில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். கிரிக்கெட் அழிவதற்காகவாவது தென்கால் கண்மாய் மற்றும் தெப்பக்குளத்திலெல்லாம் நீர் நிறையணும் என்று வேண்டிக்கொண்டேன். காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பள்ளிவாசல் செல்லும் பாதை பிரியும் இடத்தில் அமர்ந்தோம். சமதளமான இடம். இதற்கு முன்பொரு முறை நானும், நண்பரும் வந்திருந்த போது இந்த இடத்தில் பள்ளிவாசலுக்கு வந்திருந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கபடி விளையாடிக்கொண்டிருந்தனர். பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

காசிவிஸ்வநாதர்

குரங்கு

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு படிகள் வழியாக ஏறிச் சென்றோம். குரங்குகள் நிறையத் திரிந்து கொண்டிருந்தது. பாலிடெக்னிக் நண்பர்களுடன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நண்பர்கள் தினம் கொண்டாட இருக்கிற காசெல்லாம் போட்டு கேக் வாங்கிட்டு இம்மலைக்கு வந்தோம். வழியில் மண்டபத்தில் தண்ணீர் குடிப்பதற்காக பையை நண்பன் வைத்தபோது குரங்கொன்று தூக்கி கொண்டு ஓடியது. நாங்களும் துரத்தி பார்த்தோம். முடியவில்லை. பிறகு எங்கள் முன்னாடியே பிரித்து மகிழ்வாகத் தின்றது. மறக்க முடியாத நண்பர்கள் தினமாக அந்நாள் அமைந்தது.

சிவபூஜை

காசி விஸ்வநாதர் கோயில் செல்லும் வழியில் பாறைக்கடியில் சுனையொன்று உள்ளது. கம்பி வேலியிட்டு அடைத்திருக்கிறார்கள். நம்மவர்கள் பாலித்தீன் குப்பைகளை போட்டு மலையை நாசமாக்கி வருகிறார்கள். குரங்குகள் பாலித்தீன் கவரை எடுத்து கடிக்கும்போது மனசுக்கு ரொம்ப சங்கடமாய் இருக்கிறது. கொண்டு செல்லும் பாலித்தீன் பொருட்களை மலைகளில் போடாமல் வந்தாலே பெரிய புண்ணியம்.

பாறையின் மேலே பார்சுவநாதர், கோமதிஸ்வரர் சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டிருந்த இடத்தின் கீழ் எல்லோரும் அமர்ந்தோம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா திருப்பரங்குன்றம் குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார்.

பசுமைநடைநட்சத்திரங்கள்

சமணமுனி

திருப்பரங்குன்றம் சமய நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்குகிறது. சங்க இலக்கியமான அகநானூற்றில் இம்மலை பற்றிய குறிப்புள்ளது. குறிஞ்சி நிலமான அக்காலத்தில் இங்கு புலி, சிங்கமெல்லாம் இருந்ததாம். மனிதர்கள் நுழைந்த பின் நம்முடைய கொடுமை தாங்காமல் வேறு எங்காவது சென்றிருக்கும். கி.பி ஏழாம் நூற்றாண்டில் இப்பொழுது நாம் வணங்கும் குடைவரை எடுக்கப்பட்டது. தேவாரத்தில் திருப்பரங்குன்றத்தைக் குறித்து பாடும்போது திருப்பரங்குன்றமுடைய நாயனார் என்று சிவனுடைய தலமாக குறிப்பிடப்படுகிறது.

இக்குடைவரை ‘ப’ வடிவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து சிவலிங்கமும் லிங்கத்திற்கு பின் சிவன் சோமாஸ்கந்த மூர்த்தியாக சிலைவடிவிலும் பார்வதியுடன் இருக்கிறார். சிவனுக்கு நேரே பவளக்கனிவாய் பெருமாள் இருக்கிறார். அதற்கடுத்து முருகன், துர்க்கை, பிள்ளையார் இருக்கிறார்கள். பாண்டிய பராந்தக நெடுஞ்செழியன் காலத்தில் இக்குடைவரை எடுக்கப்பட்டது. இன்று நாம் பொரி வாங்கிப் போடும் லட்சுமி தீர்த்தம் ஸ்ரீதடாகமென்று முன்பு அழைக்கப்பட்டிருக்கிறது. துர்க்கைக்கும், ஜேஷ்டா தேவிக்கும் ஒரு காலத்தில்  சிறப்பான வழிபாடுகள் இக்கோயிலில் நடைபெற்று இருக்கிறது. ஜேஷ்டா தேவிதான் மூத்த தேவி. வளத்தின் அடையாளமாக வழிபடப்பட்ட இத்தாய் தெய்வம் வைணவம் மேலோங்கிய பின் மெல்ல மறைந்து லட்சுமி வழிபாடு கூடியது.

நாம் திருப்பரங்குன்ற கோயிலில் நுழையும் போது முன்புள்ள மண்டபம் இராணி மங்கம்மாள் கட்டியது. இம்மலையின் பின்புள்ள குடைவரைக்கோயில் சமணர் குடைவரையாகயிருந்து சைவக்குடைவரையாக மாற்றப்பட்டுள்ளது. இன்றும் அர்த்தநாரீஸ்வரின் சிலைக்கு மேலே அசோக மரத்தின் அடையாளத்தைக் காணலாம். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சைவக்குடைவரையாக மாற்றப்பட்டிருக்கிறது. சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

பார்சுவநாதர் சிலையும், பாகுபலி சிலையும் இங்குள்ளது. பார்சுவநாதர் மகாவீரருக்கு முந்தையவர். 23வது தீர்த்தங்கரர். சமணப் புராணக்கதையொன்றை இங்கு சிற்பமாக வடித்திருக்கிறார்கள். ஐந்துதலை நாகத்தை குடையாகக் கொண்டுள்ள பார்சுவநாதர் மேல் கல்லை போட கமடன் என்ற அசுரன் வருவதாகவும் பின் அவன் திருந்தி அவரை வணங்குவதாகவும் சிலை உள்ளது. கோமதிஸ்வரர் என்றழைக்கப்படும் பாகுபலி சிற்பம் பார்சுவநாதரின் அருகில் உள்ளது. இவருடைய தங்கைகள் பிராமி மற்றும் சுந்தரி அருகில் உள்ளனர். பல்லாண்டுகளாக தவம் இருந்ததால் இவர் காலுக்கடியில் புற்றிருப்பதுபோலவும் பாம்பு சிலைகளும் உள்ளது. இம்மலையிலுள்ள சிக்கந்தர் ஷாவின் பள்ளிவாசல் மிகப்பழமையானது.

சாந்தலிங்கம் அய்யா பேசிய பிறகு பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பேசும் போது நூற்றுக்கும் மேற்பட்ட முறை இம்மலைக்கு வந்ததைக் குறிப்பிட்டார். தமிழகத்திலுள்ள முக்கியமான எழுத்தாளர்கள் பலரோடு இம்மலையில் இரவு தங்கி உரையாடியதைக் குறிப்பிட்டார். மேலும், இம்மலையிலிருந்து சுற்றிப்பார்க்கும்போது நிறைய கண்மாய்கள் நீரால் நிரம்பி காட்சியளிக்கும். துரதிர்ஷ்டவசமாக இம்முறை எந்த கண்மாயும் நிரம்பவில்லை. மலைக்கு வருவதற்கு படிக்கட்டு வழி வருவதை விட பள்ளிவாசலுக்கு வரும் மலைப்பாதையே சிறந்தது. பாதுகாப்பானது. தினமும் பள்ளிவாசலுக்கு, கோயிலுக்கு வருபவர்கள் இப்பாதையையே உபயோகிப்பதால் நமக்கும் பாதுகாப்பு எனக் கூறினார். மேலும், இம்மலைக்கு நாமெல்லாரும் அடிக்கடி குடும்பத்தோடும், நண்பர்களோடும் வந்து சென்றால் இந்த இடத்தின் பழமை பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

மலைரயில்

திருப்பரங்குன்றம்

காசிவிஸ்வநாதர் கோயில் சென்றோம். சிவனை வணங்கி பின்னாலுள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டைக்காணச் சென்றோம். சுனையருகே அமைந்திருந்த சிலைகள் மிக அழகாகயிருந்தது. அந்தச் சூழல் மனதிற்கு மிக நெருக்கமாகயிருந்தது. சாந்தலிங்கம் அய்யா சுனையின் கரையோரமிருந்த தமிழ்பிராமிக் கல்வெட்டை படித்துக் காண்பித்தார். இக்கல்வெட்டு சமீபத்தில்தான் கண்டறியப்பட்டதாம். சுனையில் நீர் இருந்ததால் முன்பு காணமுடியாமல் இருந்திருக்கும்.

சாந்தலிங்கம்

சாந்தலிங்கம் அய்யா எழுதிய மதுரையில் சமணம் நூல் இம்முறை நடைபயணத்தின்போது கொண்டு வந்தார்கள். எனக்கொரு பிரதி வாங்கினேன். சகோதரர்களுடனும், நண்பர்களுடனும் மலையிலிருந்து கதைத்துக் கொண்டே கீழேயிறங்கினோம்.

Kalvettu - Copy

பழனியாண்டவர் கோயில் மண்டபத்தில் வைத்து எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இக்கோயிலின் சுனையிருக்கும்  (சமீபத்தில் தூர்ந்து போய் குப்பையாக போட்டிருக்கிறார்கள்) பாறைக்கு மேல் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி சிற்பங்கள் உள்ளது. இதற்கருகிலேயே வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இவை கி.பி.எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சாந்தலிங்கம் அய்யா அக்கல்வெட்டுகளை வாசித்துக் காண்பித்தார். ஆவியூர் அருகிலுள்ள குரண்டியைச் சேர்ந்தவர் இதை செய்திருக்கிறார். குரண்டி திருக்காட்டாம் பள்ளி முன்பு பெரிய சமணப் பள்ளியாகயிருந்து இன்று அதன் சுவடே இல்லாமல் மறைந்துவிட்டது. சமணமுனிவர்கள் சிலையிருக்கும் பாறைக்கருகிலேயே நாயக்கர்கால கல்வெட்டு ஒன்று உள்ளது.

பசுமைநடை முடிந்ததும் நண்பர்களிடம் விடைபெற்று கிளம்பினோம். திருப்பரங்குன்றத்திலுள்ள சித்தி வீட்டிற்கு சென்றோம். மத்தியானம் கிளம்பி நானும் சகோதரரும் வீடு வந்தோம்.

இதே தொடர்பில் சில முக்கியமான இணைப்புகள் அடுத்த பதிவில்.

பின்னூட்டங்கள்
  1. ச.மே.இளஞ்செழியன் சொல்கிறார்:

    கிரிக்கெட் அழிவதற்காகவாவது தென்கால் கண்மாய் மற்றும் தெப்பக்குளத்திலெல்லாம் நீர் நிறையணும் என்று வேண்டிக்கொண்டேன். நிச்சயம் தோழரே கிரிக்கெட் அழியும் நீரினால் மட்டும் அல்ல நம் உணர்வுகளாலும். அருமையான பதிவு. நன்றி

  2. இனிய பயண தகவல்களுக்கு நன்றி…

  3. Thangamani சொல்கிறார்:

    உங்கள் பதிவை நான் தொடர்ந்து வாசித்துவருபவன். குறிப்பாக பசுமை நடை குறித்த உங்கள் பதிவுகள் தமிழகத்தில் சமீப காலமாக மக்களால் தொடங்கப்பட்டு எழுந்து வரும் சமூக, பண்பாட்டு அரசியல் செயல்பாடொன்றினைப் பற்றிய முக்கியமான குறிப்புகள். இப்படியான பதிவுகள் வரலாற்று நோக்கில் பெறுமதியானவை.

    நான் திருச்சியில் வசிப்பதால் பசுமை நடையில் பங்குகொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்தப்பகுதிகளுக்கு நீங்கள் வரும் போது முன்பே தெரிந்திருந்தால் நானும் பங்குகொண்டிருப்பேன்.

    நீங்கள் குறிப்பிட்ட ‘மதுரையில் சமணம்’ நூலை வாங்க இணையத்தில் துலாவினேன். பயனில்லை. நீங்கள் அதன் பதிப்பாளர்/விற்பனையாளர் தகவல்களைத் தரமுடியுமா? நான் ஒரு புத்தகம் வாங்க விரும்புகிறேன்.

    நன்றி.

    • மதுரையில் சமணம் – சொ.சாந்தலிங்கம்,
      முதற்பதிப்பு சனவரி 2013,
      வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்
      மதுரை சமணப் பண்பாட்டு மன்றம்,
      மேக்ஸ்வொர்த் நகர்,
      மதுரை.
      மதுரையில் சமணம் நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டதால் கடைகளில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. விரைவில் இந்நூல் குறித்த பதிவொன்று எழுதுகிறேன்.
      நன்றி.

  4. மதுரையில் சமணம் – சொ.சாந்தலிங்கம்,
    முதற்பதிப்பு சனவரி 2013,
    வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்
    மதுரை சமணப் பண்பாட்டு மன்றம்,
    மேக்ஸ்வொர்த் நகர்,
    மதுரை.

  5. வேல்முருகன்.கு சொல்கிறார்:

    அருமையான நடையில் எழுதபட்டுள்ளது

  6. rathnavel natarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு. நன்றி.
    நீங்கள் செய்யும் முயற்சி தமிழுக்கு செய்யும் முயற்சி.
    பொது மக்களுக்கு பொறுப்புணர்வு வேண்டும். எல்லாவற்றையும் பாழ்படுத்தி விடுகிறார்கள்.
    வாழ்த்துகள்.

  7. rathnavelnatarajan சொல்கிறார்:

    திருப்பரங்குன்றமலையில் பசுமைநடை = சித்திரவீதிக்காரன் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு சித்திரவீதிக்காரன்

  8. சண்முகசுந்தரம் சொல்கிறார்:

    மதுரை மண்ணில் பெருமை உண்டு என்று அறிந்தோம்,நன்றி

பின்னூட்டமொன்றை இடுக