puttuthoppumanbam

எத்தனை பாதைகள், எத்தனை வளைவுகள்! மதுரையின் வீதியமைப்புகளுக்குள் காலை நேரங்களில் நடந்து பாருங்கள். அது ஸ்பானிய நகரங்களை நினைவுபடுத்தக் கூடியது. கோவிலின் உயர்ந்த கோபுரங்களுக்கு சமமான விளம்பரப்பலகைகள், கட்டடங்கள் இன்று உருவாகி விட்டிருக்கின்றன. ஆனால், மீனாட்சிகோவில் பூமிக்கும் ஆகாசத்திற்கும் இடையில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மலரைப் போலவே தோன்றுகிறது. ஆயிரத்தொரு அராபிய இரவு கதைகளில் வரும் பாக்தாத் நகரை விடவும் அதிகக் கதைகள் கொண்டது மதுரை. குறிப்பாக மதுரையின் பகல் நேரக் கதைகள் சொல்லித் தீராதவை. ஜி.நாகராஜனும், சிங்காரமும் காட்டிய மதுரைக்காட்சிகள் வெறும் கீற்றுகளே. எல்லா வீதிகளிலும் இன்றும் நுரைத்தபடியே பொங்கிக் கொண்டிருக்கின்றன கதைகள். மதுரையின் கதை இல்லாத வீதிகள் இல்லை. நகரின் ஒவ்வொரு கல்லிற்குப் பின்னேயும் ஒரு கதையிருக்கிறது.

– எஸ்.ராமகிருஷ்ணன் (வாசகபர்வம்)

வெய்யோனின் கொடிய கரங்களுக்கு அஞ்சி இந்த முறை மலைகளை விட்டு மதுரை வீதிகளில் ஒளிந்திருக்கும் வரலாற்றுச் சின்னங்களை காணும் நடையாக பசுமைநடைப் பயணம் அமைந்தது. வடக்குமாசி வீதி இராமாயணச்சாவடி, செல்லத்தம்மன் கோயில், ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு மண்டபம் என மூன்று இடங்களுக்கு சென்றோம்.

ram

santhalingam

முதலில் வடக்குமாசி வீதியிலுள்ள இராமாயணச்சாவடிக்கு சென்றோம். இராமாயணச்சாவடி குறித்து சாந்தலிங்கம் அய்யா பேசினார். இராமனுஜர் வைணவத்தில் பிராமணரல்லாத பிற சாதியினரையும் தம் பொதுவுடமைக் கருத்தால் ஈர்த்தார். பெரும்பாலான யாதவர்கள் இராமானுஜர் காலத்தில் வைணவத்தில் சேர்ந்தனர். யாதவர்கள் யது குலத்தைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணன் வழி வந்தவர்கள்.

இராமனுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் அஷ்டெழுத்து மந்திரத்தைக் கற்க ஸ்ரீரங்கத்திலிருந்து பலமுறை நடையாய் நடந்து அறிந்தார். திருக்கோஷ்டியூர் நம்பி அஷ்டெழுத்து மந்திரமான ‘நமோ நாராயணாய’ என்பதை சொல்லித்தந்து இதை வேறு யாரிடமாவது சொன்னால் நரகம் புகுவாய் என்ற கட்டளையுடன் சொன்னார். இராமானுஜரோ தான் நரகம் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் மோட்சம் அடைய வேண்டுமென்று எண்ணி திருக்கோஷ்டியூர் கோயில் மீதேறி அனைவருக்கும் எட்டெழுத்து மந்திரத்தை கூறினார்.

மதுரையின் வடக்கு பகுதியில் யாதவர்கள் அக்காலத்திலிருந்து வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இராமாயணம், மகாபாரதம் வாசிப்பதற்கு கட்டப்பட்டதே இந்த இராமயணச்சாவடி. அக்காலத்தில் எல்லோருக்கும் கல்வியறிவில்லாததால் இக்கதைகளை ஒருவர் வாசிக்க எல்லோரும் கேட்பார்கள். பட்டாபிஷேகத்தன்று மழை வருமென்பது மக்கள் நம்பிக்கை. இந்த இராமாயணச்சாவடி 16 அல்லது 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகயிருக்கலாம். இங்குள்ள தூண்களில் தசாவதாரச்சிற்பங்கள் காணப்படுகிறது.

ப்ளாக்பர்ன் மதுரை ஆட்சியராக இருந்த காலத்தில் கோட்டையை இடித்து அகழிகளை அகற்றி குடியிருப்பாக்கிய காலத்தில் இப்பகுதியில் யாதவர்கள் அதிகம் குடியேறினார்கள். காவல்கோட்டம் நாவலில் சு.வெங்கடேசன் மதுரை வீதிகளை காவல்காக்கும் காவலர்கள் இரவு இராமாயணச்சாவடியில் வந்து தங்குவதை குறிப்பிட்டுள்ளார்.

காவல்கோட்டம் வாசித்து இராமாயணச்சாவடி, செல்லத்தம்மன் கோயில் எல்லாம் ஒருமுறை சுற்றித் திரிந்தேன். வடக்குமாசிவீதி கிருஷ்ணன்கோயிலுக்கு எதிரேயுள்ள மணியம்மை மழலையர் பள்ளியில் நடக்கும் இலக்கிய கூட்டங்களுக்கு முன்பு அவ்வப்போது சென்றிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மண்கோட்டைகள் இருந்து அழிந்திருக்கின்றன. இவை பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து ஏக்கர் பரப்பளவிற்கு உள்ளாகவே அமைந்திருந்தன. இன்று இக்கோட்டைகள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டும் பெரும்பாலான ஊர்களில் எஞ்சியிருக்கின்றன. இக்கோயில்கள் பெரும்பாலும் செல்லியம்மன், செல்லத்தம்மன், வடக்குவாச் செல்வி(வடக்குவாசல் செல்வி) என்னும் பெயர்களில் அமைந்துள்ளன. பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே (அதாவது இன்றைய கேரளத்தை உள்ளிட்டு) தமிழகம் இருந்துள்ளது. எனவே பகைப்படை வடதிசையிலிருந்து மட்டுமே வரமுடியும். தெய்வம் வடக்குத் திசை நோக்கித் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே தொல் வரலாற்று உண்மையாகும்.      – தொ.பரமசிவன் (தெய்வம் என்பதோர்…)

cellathamman

chellathamman

இராமயணச்சாவடியிலிருந்து செல்லத்தம்மன் கோயில் நோக்கி சென்றோம். இப்பகுதியில் உள்ள எண்ணெய் செக்கு பிரபலமானது. செல்லத்தம்மன் கோயில் சென்று இறைவியை வணங்கி கண்ணகியை தரிசித்து வந்தோம். கோயிலை சுற்றி வந்து மரத்தடியில் கூடினோம். சாந்தலிங்கம் அய்யா செல்லத்தம்மன் கோயில் குறித்த வரலாற்று, தொல்லியல் தகவல்களை கூறினார். வடக்குவாச்செல்லி என்று இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதரி கண்ணகியையும், கோவலனையும் அடைக்கலமாக இப்பகுதிக்கு அழைத்து வந்ததாக குறிப்பு உள்ளது. மாதரி இடைக்குலத்தை சேர்ந்தவர். யாதவர்கள் அக்காலத்திலேயே இப்பகுதியில் இருந்திருக்கின்றனர்.

இக்கோயில் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டில் எடுத்து கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயில் கருவறைக்கு வெளியே உள்ள கற்கள் முன்பு தேனூர், சோழவந்தான் பகுதியிலிருந்த அழிந்துபோன சிவன் கோயிலிலிருந்து எடுத்து வந்து கட்டப்பட்டிருக்கலாம். இதில் உள்ள கல்வெட்டுகளில் உதிரியாக உள்ள தகவல்களிலிருந்து மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் திருவாடனைப் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைப் பற்றிய குறிப்பை இதன் மூலம் அறியலாம்.

சங்க இலக்கியங்களில் கூற்றம் என்ற சொல் வரும். முத்தூற்றுக் கூற்றம், மிழலைக் கூற்றம் என்று சொல்வர். முத்தூற்றுக் கூற்றம் என்பது இப்போதுள்ள திருவாடனைப் பகுதி. மிழலைக் கூற்றமென்பது இப்போதுள்ள அறந்தாங்கிப் பகுதி. தேனூர் சோழவந்தான் பகுதியிலிருந்து அழிந்து போன கோயில்களிலிருந்த கற்களை கொண்டு கூடல் அழகர்பெருமாள் கோயிலின் மதில் சுவரைக் கட்டியுள்ளனர். இக்கோயிலில் உள்ள கண்ணகி சிலை அம்மன் சிலை போல உள்ளது.

செல்லத்தம்மன்கோயில் 

எண்ணெய் செக்கு

kannagi

செல்லத்தம்மன் கோயிலிலிருந்து வடக்கு மாசி வீதி சந்திப்பிற்கு வந்தோம். வடக்குமாசி வீதியிலிருந்து எல்லோரும் கிளம்பி புட்டுத்தோப்பு நோக்கி இருசக்கரவாகனங்களில் சென்றோம். வைகை கரையோரம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு சற்றுத்தொலைவிலும், மங்கையர்க்கரசி மேனிலைப் பள்ளிக்கு அருகிலும் புட்டுத்தோப்பு மண்டபம் உள்ளது. பலமுறை இந்த வழியாக வேடிக்கை பார்த்துச் சென்றிருக்கிறேன். முதன்முறையாக பசுமைநடை நண்பர்களுடன் புட்டுத்தோப்பு மண்டபம் சென்றேன். தெப்பக்குளத்திலுள்ள மைய மண்டபத்தை நினைவு படுத்தியது.

pututhoppu

சாந்தலிங்கம் அய்யா புட்டுத்தோப்பு மண்டபம் குறித்த தகவல்களையும், கதையையும் கூறினார்.

puttuthoppu

muthukrishnan

அறுபத்தினாலு திருவிளையாடல்களுள் புட்டுக்கு மண்சுமந்த கதையும் ஒன்று. இக்கதையோடு மாணிக்க வாசகரின் கதையும் சேர்ந்து வருகிறது. மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டு இறுதி அல்லது பத்தாம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் வாழ்ந்தவர். திருவாதவூரை சேர்ந்தவர். இவர் இயற்றிய திருவாசகம் எட்டாம் திருமுறையாக அழைக்கப்படுகிறது. ‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்ற சொல்வழக்கு ஒன்றுள்ளது. அமார்த்திய பிராமண வகுப்பைச் சேர்ந்த இவர் திருவாதவூரார் என்று அழைக்கப்படுகிறார். அதிமர்த்தன பாண்டியன் காலத்தில் இவர் வாழ்ந்ததாக கதையில் கூறப்படுகிறது. அச்சமயம் இராஜசிம்மன் ஆண்ட காலம்.

மந்திரியாகயிருந்த மாணிக்கவாசகர் குதிரை வாங்குவதற்காக தொண்டி பகுதியை நோக்கி சென்றார். காயல்பட்டிணத்திலும், தொண்டிப் பகுதியிலும் அரேபியக் குதிரைகளை அக்காலத்தில் இஸ்லாமியர்கள் கொண்டு வந்து விற்றிருக்கின்றனர். திருப்பெருந்துறைப் பகுதியில் ஆலமரத்தடியில் வீற்றிருந்த இறைவனைக் கண்டு அவர் விருப்பத்திற்கிணங்க கோயில் கட்டத் தொடங்கினார். மற்ற மந்திரிகள் பாண்டிய மன்னனிடம் மாணிக்க வாசகரைப் பற்றி போட்டுக்கொடுக்க அவரைக் கைது செய்ய சொல்லி மன்னன் உத்தரவிடுகிறார்.

சிவன் மாணிக்கவாசகரிடம் குதிரையோடு வருவேனென்று சொல்லி அனுப்பினார். சொன்னதுபோல குதிரைகளுடன் சிவனே வந்தார். லாயத்தில் குதிரைகளை கட்ட அவை நடுச்சாமத்தில் நரியாக மாறி அங்கிருந்த குதிரைகளையும் தின்றுவிட்டு சென்றது. மாணிக்கவாசகர் சிறையிலிருந்தார்.

சிவன் பாண்டியனுக்கு புத்தி புகட்டும் பொருட்டு வந்திக்கிழவியின் மூலம் தன் திருவிளையாடலை தொடர்ந்தார். அச்சமயம் வைகையில் பெருவெள்ளம் வந்தது. அணையைப் பலப்படுத்த வீட்டுக்கு ஒருவர் வரச்சொல்லி தண்டோராப் போட்டனர். வந்தி என்னும் புட்டுவிற்கும் கிழவிக்கு ஒருவரும் இல்லை. அவளோ சிவபக்தை. தினமும் அவிக்கும் புட்டில் முதல் பங்கை சிவனுக்கு படைப்பதை வழக்கமாகக் கொண்டவள். சிவன் மாறுவேடத்தில் அவளிடம் வந்து அவள் கணக்கிற்கு மண் அடைக்க போவதாகக் கூறினார். அதற்கு கூலியாக அன்று செய்யும் புட்டில் உடைந்து உதிர்ந்தை மட்டும் கொடுக்கச் சொன்னார். அன்று சோதனையாக அவள் அவித்த புட்டு எல்லாமே உடைந்து போனது. அதை துண்டில் வாங்கி கொண்டு போய் தின்றுவிட்டு மரத்தடியில் படுத்து தூங்கிவிட்டார். அணை அடைபடாமல் கிடக்க பாண்டியன் வந்து விசாரித்து வந்திக்கு பதிலாக வந்து தூங்கும் சிவனை பிரம்பெடுத்து முதுகில் அடித்தார். உலகிலுள்ள சகலசீவராசிகளுக்கும் வலித்தது. அப்போதுதான் பாண்டியனுக்கு உறைத்தது வந்திருப்பது இறைவனென்று. பின் மாணிக்கவாசகரை விடுவித்தார்.

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் எழுதிய காலம் 17ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் பதிமூன்றாம் நூற்றாண்டில் திருப்பத்தூர் நம்பி எழுதியுள்ளார். அவர் கல்லாடம் என்ற நூலிலிருந்து இதை எழுதியிருக்கிறார். கல்லாடத்தில் 30 திருவிளையாடல்களே உள்ளது. அதற்கு முன் வடமொழியில் எழுதப்பட்டதில் 64 திருவிளையாடல்களும் மதுரையை மையமாக வைத்து எழுதப்பட்டது. எனவே, கதைகளில் வரலாற்றுத்தகவல்கள் எவ்வளவு உண்மை என்று கண்டறிவது கடினம். ‘நரகரை தேவுசெய்வானும், நரியைப் பரிசெய்வானும்’ என்ற வரி திருநாவுக்கரசர் எழுதிய பதிகம் ஒன்றில் உள்ளது.

திருமலைநாயக்கர் அவருடைய ஆட்சிக் காலத்தில் திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்டும் வழக்கத்தை தொடங்கி வைத்தார். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கருகில் வலைவீசித்தெப்பம் என்று ஒன்றிருந்தது. நாலைந்து வருடங்களுக்கு முன்பு அது மூடப்பட்டது. அங்கு வந்து சிவன் வலைவீசிய கதை முன்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. புட்டுத்திருவிழா ஆவணி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்விற்கு திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகர் வருவார்.

புட்டுத்திருவிழாவிற்கு மாணிக்கவாசகர் வந்து சென்றதை ஒருமுறை திருமோகூர் செல்லும் போது பார்த்தேன். மாட்டுவண்டியில் மாணிக்கவாசகர் மதுரையிலிருந்து வந்து கொண்டிருந்தார்.

navakkragama

பசுமைநடை நண்பர் உதயகுமாரும் புட்டுத்திருவிழா குறித்து அவங்க தாத்தா சொன்ன கதையை அருமையாகச் சொன்னார். மேலும், இராமாயணச்சாவடி சித்திரைத்திருவிழா காலங்களிலும், இராமர் தொடர்பான விழா நாளிலும் திறந்திருக்கும். மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லக்கூடிய தெய்வம் செல்லத்தம்மன் என்ற தகவலையும் கூறினார். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் சிவன் அள்ளிப்போட்ட மண்ணில் ஒரு பகுதி பசுமலையானது என்ற கதையையும் கேட்டதாகச் சொன்னார். பசுமைநடைக்கு வரும் ஆசிரியை ஒருவர் புட்டுத்திருவிழா அன்று இப்பகுதியில் உதிர்ந்த புட்டு செய்வதாகச் சொன்னார். சாந்தலிங்கம் அய்யா சித்திரைத்திருவிழா குறித்து சொன்னதை அழகர்கோயிலும் சித்திரைத்திருவிழாவும் பதிவில் காண்போம். புட்டுத்தோப்பு மண்டபத்திலமர்ந்து கள்ளழகர் வேடமிட்டுக் கொண்டிருந்த பக்தர்களை பார்த்தோம்.

alagar

பதிவர் மதுரக்காரன் ராஜன்னா அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சி. நண்பர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பினோம்.

மதுரை வீதிகள் – எஸ்.ராமகிருஷ்ணன், காவல்கோட்டத்திலிருந்து…

பின்னூட்டங்கள்
  1. Geetha Sambasivam சொல்கிறார்:

    மதுரைக்கு இரண்டு, மூன்று முறை கடந்த வருடங்களில் சென்றிருந்தாலும் எல்லா சமயங்களிலும் புற நகரத்திற்கே செல்லும்படி நேரிட்டது. வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோயிலும், அதன் திருவிழாக்களும் மறக்கவே முடியாத ஒன்று. ஒவ்வொரு மார்கழி மாதமும் காலையில் நடக்கும் கோஷ்டிக்குத் தவறாமல் சென்றுவிடுவோம். ராமாயணச் சாவடி இருக்கா இல்லையானே தெரியலையேனு வருத்தமா இருந்தது. உங்கள் பயணம் அவற்றைத் தீர்த்து வைத்தது. மதுரையில் இருந்தவரையில் அம்மா செல்லத்தம்மன் கோயில் செக்கிலிருந்தே எண்ணெய் வாங்கி வருவார். பசுமையான நினைவுகள். நன்றி பகிர்வுக்கு.

  2. ramani சொல்கிறார்:

    நானும் மதுரைக்காரன் எனப் பேரு
    தங்கள் பதிவுகள் மூலம்தான்
    மதுரையின் சிறப்புகளை அறிகிறேன்
    படங்களுடன் பதிவு வெகு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  3. maathevi சொல்கிறார்:

    இடங்களைக் கண்டுகோண்டோம். வரலாறுகளும் அறியக்கிடைத்தன.

    • மதுரக்காரன் சொல்கிறார்:

      அண்ணே!!

      மன்னிச்சூ.. இன்னைக்கு தான் இந்த பதிவை பார்க்கிறேன். இணைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. இந்த வாரம் பசுமை நடை வருவீர்கள் என்று நம்புகிறேன். அங்கே சந்திப்போம். நன்றி வணக்கம்.

      அன்புடன்,
      மதுரக்காரன்.

  4. தொப்புளான் சொல்கிறார்:

    இராமாயணச் சாவடியில் தெய்வச் சிற்பங்களோடு காந்தி, நேரு சிற்பங்களும் இருப்பதை சு.வெங்கடேசன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதா?

பின்னூட்டமொன்றை இடுக