விருட்சத்திருவிழாவிற்கு முன்னிரவுக்காட்சிகள்

Posted: செப்ரெம்பர் 27, 2014 in ஊர்சுத்தி, மதுரையில் சமணம்

இரவிற்கும் பகலைப் போல பல வண்ணங்கள் உண்டு. நாம் காகத்தின் கண் கொண்டு நோக்காமல் கூகையின் கண் கொண்டு பார்க்க வேண்டும். விழித்திருப்பவனின் இரவு நீளமானது என்கிறார் புத்தர். ஒரு பெருந்திருவிழாவிற்கு முந்தைய இரவு கொண்டாட்டமானது. சென்றாண்டு பசுமைநடையின் 25வது நடையை விருட்சத் திருவிழாவாக சமணமலை அடிவாரத்திலுள்ள பெரிய ஆலமரத்தடியில் கொண்டாடினோம். நெஞ்சைவிட்டு அகலாத விருட்சத்திருவிழாவிற்கு முன்னிரவுக் காட்சிகளை குறித்த சிறுபதிவிற்குள் நுழையலாம்.

விருட்சத்திருவிழாவிற்கு முதல்நாள் மாலையே குழுவினர் எல்லோரும் கீழக்குயில்குடி சமணமலையடிவாரத்தில் கூடினோம். கருப்புகோயிலுக்கு அருகிலுள்ள தேனீர் கடையில் சூடான தேனீரோடு மறுநாள் திருவிழாவிற்கு ஆயத்தமானோம். நாடக மேடைக்கு அருகிலுள்ள புங்க மரத்தடியில் பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வழிகாட்டுதல்படி பணிகளைப் பிரித்துக் கொண்டோம்.

நீளவானம் கருநீல வானமானது. மெல்ல சாரல் மழை பெய்யத் தொடங்கி அந்த இடத்தின் புழுதியை அடக்கியது. நாடக மேடையில் காயப்போட்டிருந்த புலுங்கலை குவித்து வைத்துவிட்டு மழைக்கு ஒதுங்கினோம். மழை விட்டதும் பணிகளைத் தொடங்கினோம். விழாவிற்கு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடுவைகளை வண்டியிலிருந்து இறக்கினோம். மின்விளக்கு எடுக்காததால் இரவோடிரவாக மின்பணியாளரை அழைத்து வந்து சரிசெய்தோம். மறுநாள் உணவிற்குத் தேவையான பணிகளை சமையல் கலைஞர்கள் தொடங்கினர்.

விருட்சத்திருவிழாவிற்காக செய்து வைத்திருந்த பதாகைகளை மரங்களில் கோர்பதற்கு வாகாக சணல் கயிறுகளைக் கட்டி வைத்தோம். சமையலுக்கு வந்த விறகுகளை இறக்கிவைத்துவிட்டு சாமியானா பந்தல்காரர்களிடம் மறைப்புத் தட்டி கட்டச் சொல்லிவிட்டு நாகமலைப்புதுக்கோட்டைக்கு குட்டியானையில்(TATA ACE) பதாகைகளை எடுத்துப் போட்டு  எல்லோரும் கிளம்பினோம்.

நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்தோம். வேல்முருகன், இளஞ்செழியன், உதயகுமார், ரகுநாத், கந்தவேல், மதுமலரன், மணி மற்றும் நானும் பதாகை கட்டும் பணிகளைத் தொடங்கினோம். நாகமலைப் புதுக்கோட்டையிலிருந்து சமணமலையடிவாரம் வரை உள்ள மின்கம்பங்களில் கைக்கு எட்டும் உயரத்தில் பதாகைகளைக் கட்டினோம். எங்களுடன் உற்சாகமாக வேல்முருகன் அண்ணனும் இணைந்து பதாகைகளைக் கட்ட உதவினார். அந்த இரவை இப்போது நினைத்தாலும் உற்சாகம் வந்து அப்பிக் கொள்கிறது. மறக்க முடியாத பசுமைநடை.

இளஞ்செழியன், ரகுநாத்துடன் வேல்முருகன் அண்ணனும் திருமங்கலத்திற்கு இரவு சென்று தங்கிவிட்டு விடிகாலையில் வருவதாகக் கூறிச் சென்றார். தரைவிரிப்பு பத்தாமல் இருந்ததால் எடுப்பதற்காக நானும், மதுமலரனும் சம்மட்டிபுரத்திற்கு சென்றோம். நேரம் நள்ளிரவை நெருங்கியது. தரைவிரிப்பில் படுத்தபடியே கதைக்கத் தொடங்கினோம். முருகராஜூம், உதயகுமாரும் பேசத் தொடங்கினர். கந்தவேலும், மதுமலரனும் கொஞ்ச நேரத்தில் கண்ணயர்ந்தனர். நான் தூங்காமல் படுத்துக் கொண்டு உதயகுமார் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

ஆலமரத்தடிக்காற்று இதமாக வீசியது. மலை இருளில் பதுங்கிக் கொண்டது. விளக்கு வெளிச்சத்தில் கருப்பு கோயிலைப் பார்த்த போது கருப்பு குதிரைகளைப் பூட்டி ஊர்வலம் கிளம்பிக் கொண்டிருந்தார். அமானுஷ்யக் கதைகள் முளைக்கும் வேளையில் அன்றாடக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம். நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து ஆகஸ்ட் 25ற்கு வந்துவிட்டது.

உதயகுமார்தான் இளமைக்காலங்களில் விளையாடிய விளையாட்டுகளை பழங்காநத்ததில் தொடங்கி கிராமம் வரையான நினைவுகளையும், அவங்க அய்யாவிடம் கேட்ட ஆளண்டாப்பச்சி கதை தொடங்கி சல்லிக்கட்டுத் தொடர்பாக தான் எழுதிய கட்டுரை வரை பலவற்றையும் கூறிக்கொண்டிருந்தார். இடையிடையே என் நினைவுகளையும் கூறிவிட்டு உதயகுமார் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

மணி நாலு ஆனதும் வீட்டில் சென்று குளித்து வருவதாக உதயகுமாரும், கந்தவேலும் கிளம்பினர். நானும் மதுமலரனும் கீழக்குயில்குடி சுடுகாட்டு வாசலில் உள்ள தொட்டியில் குளிக்க அவர்களுடன் வண்டியில் சென்றோம். விடியும் முன் இருளில் சுடுகாட்டு வாசலிலிருந்த சில்லென்ற நீரில் குளித்தோம். மேலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. அப்படியே அங்கிருந்து மலை நோக்கி நடந்தோம். மலை அங்கிருந்து ஒரு மைலுக்கும் மேலிருந்தது. வழியில் எங்கள் பேச்சு சத்தம் கேட்டு நாய்கள் குரைக்கத் தொடங்கியது. பயம் இருந்தாலும் ஓடி ஒளிய இடம் இல்லை. மெல்ல பேசிக் கொண்டே கடிபடாமல் ஒருவழியாக ஆலமரத்தடியை அடைந்தோம். கிழக்கு வெளுக்கத் தொடங்கியது.

அதிகாலையில் குளிருக்கு இதமாக தேனீரை அருந்திவிட்டு அறிவிப்பு பதாகைகளை எடுத்து கட்டத் தொடங்கினோம். திருமங்கல நண்பர்கள் வந்தனர். ஆட்கள் மெல்ல வரத்தொடங்கினர். ஒரு பெருந்திருவிழா சத்தமில்லாமல் தொடங்கியது. பெரிய ஆலமரத்திற்கு கொண்டாட்டமாக இருந்தது. விருட்சத்திருவிழா என்றால் கேட்கவும் வேண்டுமா?.  குதிரைகளின் மீதிருந்து கருப்பு அதைப் பார்த்து வாய் சிவக்கச் சிரித்துக் கொண்டிருந்தார்.

பின்னூட்டங்கள்
  1. சிறுகதைக்கான நேர்த்தியுடன் எழுதியிருக்கிறீர்கள். பாறைத்திருவிழா ஏற்பாடு அனுபவங்களையும் கேட்கக் காத்திருக்கிறோம், வாழ்த்துகள் சுந்தர் !

  2. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
    http://wp.me/pTOfc-bj

  3. k.velmurugan சொல்கிறார்:

    அற்புதமான பதிவு

  4. udayabaski சொல்கிறார்:

    மிக நேர்த்தியான பதிவு… அந்த மதுரமான இரவை எழுத வேண்டும் போலிருக்கிறது எனக்கும்…

பின்னூட்டமொன்றை இடுக