ஒகாமோத்தோவின் மேசை

Posted: திசெம்பர் 19, 2017 in பார்வைகள், பகிர்வுகள்

IMG_20171210_085959 (1)

சகோதரர் ஒருவரின் பசுமை நடை பயணக்குறிப்பு…

மீனாட்சிபுரம் / மாங்குளம் தமிழிக் கல்வெட்டுகளைக் காண பசுமைநடைக் குழுவினருடன் (குழுவாக?) 10.12.17 அன்று செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மதுரை மேலூர் நான்கு வழிச் சாலையில் சிட்டம்பட்டி தாண்டி கத்தப்பட்டி முன்பாக மேற்கே செல்லும் சாலையில் சென்றால் முத்துப்பட்டி, பூசாரிப்பட்டி, கலிங்குப்பட்டி தாண்டி 74 மீனாட்சிபுரம் வருகிறது. (66 மேட்டுப்பட்டி, 74 மீனாட்சிபுரம் என்று ஊர்ப்பெயர்களுக்கு முன் எண்கள் ஏன் வருகின்றன?) 74 ‘நிர்’ மீனாட்சிபுரம் என்று வழங்கியதை ஒரு குட்டி யானை வண்டியின் பின்புறம் 74 ‘நீர்’ மீனாட்சிபுரம் என்று எழுதியிருந்தார்கள். நல்வினைப் பயனாக இவ்வாண்டு வைகை-பெரியாற்று நீர் இந்தப் பகுதிகளையும் எட்டியிருக்கிறது. மழையில்லாத கார்த்திகை நாளின் இளங்குளிரோடு நீர்கண்ட ஊர்ப்புறத்தின் சிலுசிலுப்பு உண்மையிலேயே பசுமைப் பயணமாக்கியது. வழியெங்கும் தாய்க்குலங்களும், அக்காமார்களுமே இத்தனை இரு/ நான்கு சக்கர வாகனங்களில் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். சமணப்படுக்கை என்று நாம் சொன்னதை ‘வாத்தியார் படுக்கை’ என்று அவர்கள் சொன்னதாக ஞாபகம். ஓடுகிற வண்டியில் சரியாகக் காதில் விழவில்லை.

அந்த காலை நேரத்திலேயே நான்கைந்து இளவட்டங்கள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள். அதில் குறும்புகூடிய ஒருவர் சத்தமாகக் காற்றுபிரிய விட்டார். இரயிலில் செல்பவர்களுக்கு கைகாட்டுவதுபோலச் சிறுவர்கள் நடுவிரலைக் காட்டுவதில்லையா?

முதியவர்களும், பெண்டிரும், குழந்தைகளும் உடன்வரக் கூட்டமாக ஏறும்போது மலை மலைப்பு தருவதில்லை. ஒரு வரையாட்டைப் போல குன்றேறி நின்று பசுமைநடையர்களைக் கூவி வரவேற்ற கந்தவேல்  ‘என்னப்பா கந்தவேலு, இங்கேயே இட்லிப் பொட்டலத்தை அவிழ்க்கணும்போலயே?’ என்ற கேள்விக்குக்கூட சீரியசாகப் பதில்சொன்னார். முகநூலில் தர்க்கரீதியாகப் பதில் அளிக்கத் துப்பில்லாத யாரையோ ராஜன்னா சாடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நடையிலும் உடன்வருபவருக்கு  யாராவது லெமன் கிராஸ் என்று கசக்கி நுகரக்கொடுப்பதுவும், அதன் பெயர் நரந்தம்புல் என்று வேறொருவர் சொல்லிக் கொடுப்பதுவும் வழக்கமாகிவிட்டன.

‘முகில்’ என்ற பெயர்கொண்ட சிறுவன் தாவி ஓடிக்கொண்டிருந்தான். ‘வெயில்’ இல்லையென்று சொல்லும் சுதந்திரம் வேண்டுமென்றால் இது கவிதையாக இருக்கவேண்டும். ‘மஞ்சு’வும் ‘அருவி’யும் கூட இருந்திருக்கக்கூடும். ‘அருவி’ என்றவுடன் நினைவுக்கு வருகிறது, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்தும் விழிப்புணர்வு உறுதிமொழியேற்க வைக்க வந்திருந்தார்கள்.

IMG_20171210_081116

இன்று நாம் ‘வெள்ளரி’ ஆக்கிவிட்டாலும் அந்தப் பட்டி ‘வெள்ளறை’யாய் 2300 ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்திருக்கிறது. முத்தின் தரத்தைச் சோதிக்கும் வணிகனைக் கொண்ட நிகமம் இருந்திருக்கிறது. ஆரியப்படை கடந்தவனுக்கும், தலையாலங்கானத்துச் செரு வென்றவனுக்கும் முந்தையவனான நெடுஞ்செழியன் இருந்திருக்கிறான். சகலை என்ற சொல்லின் வேர் கல்லின் எழுத்தாய் துலங்கி நிற்கிறது. இன்னும் இன்னும் பற்பலவாய் ஆனந்தராஜ், சுந்தர்காளி, கண்ணன் ஆகியோர் நமக்குச் சொல்லித் தந்த கருத்துக்களைப் பதிவுசெய்து தருவதற்கு ஆவணக்காரனும், செயல்வீரனுமாகிய சித்திரவீதிக்காரன் இருக்கும்போது ஆணவக்காரனும், முழுச்சோம்பேறியுமான எனது சவடால் தேவையில்லை.

திரும்பி இறங்கும்போதும் அந்த இளவட்டங்கள் அங்குதான் உட்கார்ந்திருந்தார்கள். பசுமை நடையின் திங்கள்காட்டி வெளியிடப்பட்டது. ஐம்பது ரூபாய் விலையுள்ள அதை கிட்டத்தட்ட இரந்துபெற்ற உள்ளூர்ப் பாட்டி தான் வைத்துக்கொள்ளவில்லை. அருகிலிருந்த ஒருவரிடம் ‘இதை நம்ம கோயில் வீட்டில கொண்டுபோய்ப் போடுறா’ என்று பொதுவிடத்துக்கே கொடுத்தது. அருகிலிருந்த சமுதாயக் கூடத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு மேசை மீது வைத்துத்தான் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அந்த மேசையில்  ‘PRESENTED BY Mr. HIDEKATSU OKAMOTO, JAPAN’ என்று எழுதப்பட்டிருந்தது. பாறைமேல் பொறித்திருந்ததுவும்கூட இத்தகைய கொடையைத்தானே!

IMG_20171210_093939

இன்றைய நடையில் தமிழி போன்ற எழுத்தில் இப்படி எழுதிப்பார்க்கலாம்:

New Doc 2017-12-17

பின்னூட்டமொன்றை இடுக