இனவரைவியலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்

Posted: மார்ச் 11, 2018 in பார்வைகள், பகிர்வுகள்

வாசிப்புக்கூடல்

இனவரைவியல்நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்களின் வரலாற்றை தம் எழுத்தின் வாயிலாக பதிவு செய்து வரும் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன்  எழுதிய இனவரைவியலும் தமிழ் நாவலும் என்ற புத்தகத்தை வாசித்தேன். நாவல் வாசிப்பை நோக்கி ஈர்க்க கூடிய எழுத்து. விமர்சனமாக இல்லாமல் தம் வாசிப்பு அனுபவங்களை விரிவாக, எளிமையான மொழிநடையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தலைப்பாக உள்ள ‘இனவரைவியலும் தமிழ் நாவலும்’ கட்டுரை ஆராய்ச்சி மாத இதழில் வெளிவந்ததை கொஞ்சம் விரிவுபடுத்தி பெருங்கட்டுரையாக வந்துள்ளது. அதேபோல தமிழ்நாவல்களில் மீனவர்கள் குறித்த கட்டுரையும் கொஞ்சம் நீள்கட்டுரை. இந்நூலில் மொத்தம் 16 கட்டுரைகள் உள்ளன.

பாமாவின் தன் வரலாற்று நாவல்கள், சிவகாமியின் ‘பழையன கழிதலும்’, ஶ்ரீதர கணேசனின் ‘வாங்கல்’, ‘சந்தி’, அறிவழகனின் ‘கழிசடை’, செ.யோகநாதனின் ‘கிட்டி’, ‘நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே..!’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’, மீரான் மைதீனின் ‘அஜ்னபி’, ஸர்மிளா ஸெய்யத்தின் ‘உம்மத்’, சோலை சுந்தரபெருமாளின் ‘பெருந்திணை’, அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’, பூமணியின் அஞ்ஞாடி, செந்தில்குமாரின் ‘காலகண்டம்’ என 14 கட்டுரைகளில் ஆ.சிவசுப்பிரமணியனின் வாசிப்பனுபவம் நம்மை வியக்க வைக்கிறது.

இனவரைவியல் அறிவு உள்ள படைப்பாளியிடமிருந்து வரும் நாவல் நல்ல படைப்பாகத் திகழும் என்கிறார். தமிழில் எம்.வி.வெங்கட்ராமின் வேள்வித்தீ, கி.ரா.வின் கோபல்ல கிராமம், ராஜம் கிருஷ்ணனின் அலைவாய் கரையில், குறிஞ்சித்தேன், பூமணியின் பிறகு, எஸ்.அர்ஷியாவின் ஏழரைப் பங்காளி வகையறா, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் எல்லாம் இனவரைவியல் நாவலாகத் திகழும் விதத்தை குறிப்பிடுகிறார்.

சூழல், குடும்ப அமைப்பு, திருமண முறை, வாழ்வியல் சடங்குகள், வாழ்க்கை பொருளாதாரம், கைவினைத் தொழில்கள், விழாக்கள், நாட்டார் வழக்காறுகள், வழிபாட்டு முறை, மக்களின் உளவியல் பாங்கு போன்ற பல விசயங்களை உள்ளடக்கியதாக அமையும் போது அது அச்சமூகத்தைக் குறித்த நல்ல இனவரைவியல் நாவலாக ஆவணமாகிறது.

பாமாவின் தன் வரலாற்று நாவல்கள், சிவகாமியின் பழையன கழிதல், ஶ்ரீதர கணேசனின் சந்தி, அறிவழகனின் கழிசடை, சோலைசுந்தரப் பெருமாளின் பெருந்திணை, தலித் மக்களின் வாழ்க்கை பிரச்சனைகளை சொல்லும் நாவல்கள் பற்றிய கட்டுரைகள் உள்ளது. மேலும், மீனாட்சிபுரம் மதமாற்றச் சிக்கல்களைச் சொல்லும் அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்ற நூர்ஜஹான்’ நாவல், ஈழப் பிரச்சனைகளை மையமாக கொண்ட செ.யோகநாதனின் கிட்டி, நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே…, ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத். இந்த நாவல்கள் தமிழ் போராளிகள், ஈழ முஸ்லீம்களின் வாழ்க்கை, ஈழப்பழங்குடிகள் பற்றி பேசுகின்றன.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் குறித்த கட்டுரை மதுரையின் அன்றைய வாழ்வை எடுத்துச் சொல்கிறது. வெளிநாட்டில் வாழும் அயல்நாட்டவரை அஜ்னபி என்கிறார்கள். அதை தலைப்பாக கொண்டு அமைந்த மீரான் மைதீனின் அஜ்னபி நாவல் வெளிநாட்டில் வேலைக்குச் செல்பவர்களின் பிரச்சனைகளைக் கூறுகிறது. பூமணியின் ‘அஞ்ஞாடி’ கடந்த நானூறு ஆண்டுகால வரலாற்று ஆவணமாகத் திகழ்வதை குறிப்பிடுகிறார்.

தமிழ் நாவல்களில் மீனவர்கள் என்ற கட்டுரையில் வண்ணநிலவனின் கடல்புரத்தில், ராஜம் கிருஷ்ணனின் அலைவாய் கரையில், பொன்னீலனின் தேடல், ஜோ.டி.குருஸீன் ஆழி சூழ் உலகு பற்றி விரிவாக கூறுகிறார்.

கத்தோலிக்கத்திற்கு மாறிய இம்மக்களின் வாழ்வில் கிறித்துவ தேவாலயஆசிவசுப்பிரமணியன்ங்களின் பங்கு, நெய்தல் நில மக்களின் பிரச்சனைகளை இந்த நாவல்கள் எவ்வாறு கையாள்கின்றன என்பதைப் பற்றி ஆராய்கிறார். அதில் அலைவாய் கரையில் நல்ல சமூக நாவல் என்றும், ஆழி சூழ் உலகு ஆங்கில கடல் நாவல்களுக்கு இணையான அளவிற்கு உள்ளது என்கிறார்.

ஒரு நாவல் எப்படி வாசிக்க வேண்டுமென்ற புரிதலை என்னுள் ஏற்படுத்திய ஆ.சிவசுப்பிரமணியனுக்கு நன்றி. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளது. இந்த புத்தக வாசிப்பு அனுபவத்தை பசுமைநடை வாசகர் கூடலில் கட்டுரையாக எழுதியதைப் பகிர்ந்து கொண்டேன்.

* வண்ணமிடப்பட்ட நாவல்களை நான் வாசித்திருக்கிறேன்.

பின்னூட்டங்கள்
  1. அருவைக்காரன் சொல்கிறார்:

    Apdiyae enga vanguninganu sonna nalla irukum

பின்னூட்டமொன்றை இடுக