சமயம் – ஓர் உரையாடல்

Posted: மார்ச் 2, 2021 in பார்வைகள், பகிர்வுகள்

மதுரை புத்தகத் திருவிழா என் வாழ்வில் கொடுத்த கொடைகள் ஏராளம். அதிலொன்று தொ.பரமசிவன் அய்யாவின் உரையைக் கேட்டதும், அவரது புத்தகங்களை வாங்கியதும். 2008ல் நடந்த 3வது மதுரை புத்தகத் திருவிழாவில் சமயம் ஓர் உரையாடல் என்ற நூலை வாங்கினேன். அந்த வாரத்திலேயே ‘உலகமயமாக்கச் சூழலில் பண்பாடும் வாசிப்பும்’ என்ற தலைப்பில் தொ.பரமசிவன் பேசியதை கேட்கும் வாய்ப்பும் கிட்டியது. அந்த உரையும், சமயம் நூலும் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

தொ.ப.வுடனான நேர்காணல்கள் பல இதழ்களில் வந்திருந்தாலும் சமயம் குறித்து இந்த நூல்போல விரிவான உரையாடல் வேறு வந்ததில்லை. பேரா.சுந்தர்காளி மொழி, தத்துவம், நாடகம், திரைப்படம், நாட்டுப்புறவியல், தொன்மம் போன்ற தளங்களில் எழுதியும், பேசியும் வருபவர். இரணிய நாடகம் குறித்து களஆய்வு செய்து தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டை சமர்ப்பித்துள்ளார். தொ.ப மீது பெருமரியாதை கொண்டவர். சமயம் நூலில் தொ.ப.விடம் கேள்விகளை கேட்டு அவரது பதில்களை இவர் பெரும் விதமே அலாதியானது.

சமீபத்தில் வந்த நேர்காணலில் பேராசிரியர் சுந்தர்காளி “தொ.ப. தான் ‘மதுரையிலிருந்த காலத்தைத்தான் தனக்கு பொற்காலம்’ என அடிக்கடி சொல்வார். தொ.ப. மதுரையிலிருந்த காலம் எங்களுக்கு வேறுமாதிரியான பொற்காலம். தொ.ப. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார். தங்குவதற்கு விடுதியில் அறை எடுத்திருந்தார். அந்த சமயத்தில் தொடர்ந்து நண்பர்கள் அவரை சந்திப்பதும், சிலநேரங்களில் விடியவிடிய அவரோடு பேசிக்கொண்டிருந்த சம்பவங்களும் நடந்தது. அந்த சமயத்தில் தொ.ப.வினுடைய ஆளுமை எங்கள் பலபேரை வசீகரித்தது” என தொ.ப குறித்து கூறியுள்ளார்.

‘வியப்பு, ஈர்ப்பு, அச்சம் இந்த மூன்றும் கலந்த இடத்திலிருந்துதான் தெய்வ நம்பிக்கை பிறந்தது’ என்கிறார் தொ.ப. கடவுள், தெய்வம் என்ற இரண்டிற்குமான வித்தியாசம், சங்க இலக்கியங்களில் தெய்வங்களைப் பற்றிய செய்திகள், தமிழர்களின் சமய நம்பிக்கைகள், தாய்த்தெய்வ வழிபாடு, முருக வழிபாடு, கோயில்கள் உருவான விதம், சமண பௌத்த மதங்களின் வருகை, வைதீக மதத்தின் தாக்கம், பக்தி இயக்கங்களின் தோற்றம், சைவம், வைணவம், சமண பௌத்த மதத்திற்கு எதிராக சமயக்குரவர்களின் செயல்கள், விஜயநகர ஆட்சியாளர்களின் வருகை, சித்தர் மரபு, இஸ்லாமிய, கிறிஸ்துவ சமயங்களின் வருகை, மதமாற்றம் குறித்து இருவரும் விரிவாக உரையாடியிருக்கிறார்கள்.

சமயம் குறித்த ஒரு தெளிந்த பார்வையை இந்நூல் நமக்குத் தருகிறது. தெய்வ நம்பிக்கை குறித்த என் பார்வையையும் தெளிவாக்கியது இந்நூல். பிரமாண்டம், அதிகாரம் போன்றவற்றுடனான நம்முடைய நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டுமென கற்றுக்கொடுத்தது.

  • மனிதன் ஆக்கிய பிரமாண்டம் என்பதே அதிகாரம் சார்ந்த விசயம். மற்றவற்றின் இருப்பை நிராகரிக்கக்கூடிய பிரமாண்டம் இயற்கையில் கிடையாது.
  • எதையும் அவநம்பிக்கையோடு பார்க்க வேண்டாம். கொதிநிலை எட்டியவுடன் எல்லாம் மாறத்தான் செய்யும்.
  • மனித குலத்தின் அடிப்படையான அறிவு என்பதே எண் சார்ந்தது. எழுத்துச் சார்ந்த விசயமல்ல.
  • மனித குலத்தின் பெரிய கண்டுபிடிப்பெல்லாம் எண்ணிலிருந்து பிறந்தன; எழுத்திலிருந்து பிறக்கவில்லை.
  • எதிர்கலாச்சார நடவடிக்கைகளில் படித்தவர்கள் போதுமான அளவுக்கு இறங்கவில்லை.
  • சம்பந்தருக்கு வேள்வியும் வேதமும் முக்கியம். அப்பருக்கு சிவன் மட்டுமே முக்கியம்.
  • கடவுள் மதுரைக்காரன் என்று கூறுகிறார் மாணிக்கவாசகர். கடவுளை மதுரையான் என்கிறார்.
  • பெருங்கோயில்கள் காற்றாடிப் போனாலும் சாலையோரத் தெய்வங்கள் வீரியத்தோடு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நூலை வாசித்ததும் மேற்கண்ட விசயங்கள் எனக்கு மிகவும் முக்கியமாகப்பட்டன. கொதிநிலை எட்டியவுடன் சமநிலைக்கு வரும் என்ற தொ.ப.வின் வார்த்தைகள் நம்பிக்கையை விதைக்கிறது.

நவீனம், ஐரோப்பிய சிந்தனையாளர்களின் கருத்துகள் எனப் பல விடயங்கள் வாயிலாக தொ.ப.விடம் கேள்விகளைத் தொடுக்கும் பேராசிரியர் சுந்தர்காளி ஓரிடத்தில் சொல்வது போல “இந்தியச் சமுதாயத்தில் எப்போதும் மையத்தை நோக்கி இழுக்கிற சக்தி செயல்படுகிற அதே நேரத்தில் விளிம்பை நோக்கி இழுக்கிற சக்தியும் உண்டு. ஒன்றாக எல்லாவற்றையும் மாற்ற, ஒற்றைத் தன்மைக்குள் கொண்டுவர முயற்சிக்கும் நேரத்தில், பன்முகமாக்கும் சக்தியும் மாறிமாறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்ற கருத்து மிக முக்கியமானது. தமிழ்நாடு எப்போதும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் மையமாகத் திகழ்கிறது, திகழ வேண்டும் என்பதே நமது அவா.

சமயம் என்ற நூலை ஆத்திகர்களும், நாத்திகர்களும் வாசிக்க வேண்டும். ஆனால், அவர்கள் தலைப்பைப் பார்த்ததும் தங்களுக்குத்தான் இதில் என்ன இருக்குமென்று தெரியுமே என இரண்டு தரப்பினருமே வாசிக்க மாட்டார்கள் என்ற நிலையில் ஒன்றுபடுகிறார்கள்.

இந்நூலின் முதல்பதிப்பை தென்திசைப் பதிப்பகம் வெளியிட்டது. தற்போது அன்னம் பதிப்பக வெளியீடாக இந்நூல் வந்து மூன்று பதிப்புகளுக்குமேல் வந்துவிட்டது. இந்நூலில் பின்னட்டையில் கோம்பை அன்வர் எடுத்த இராவுத்த குமாரசாமி கோவில் படம் உள்ளது. அதைக்குறித்த கட்டுரை பின்னட்டை புகைப்படம் பற்றியொரு குறிப்பாக இந்நூலில் உள்ளது. அதைத் தட்டச்சு செய்து கொடுத்ததற்காக நன்றியுரையில் என் பெயரையும் பேரா.சுந்தர்காளி சேர்த்திருக்கிறார். அவருக்கு நன்றி.

சமயம் ஓர் உரையாடல், 112 பக்கங்கள், 75 ரூபாய், அன்னம் வெளியீடு

தமிழறம் (ஆகஸ்ட் 2020) இதழில் வந்த கட்டுரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s