வைகை வடகரையில் ஆலவாய் அண்ணலும் அங்கயற்கண்ணம்மையும்

Posted: மே 23, 2021 in பார்வைகள், பகிர்வுகள்

ஆண்டிற்கு ஒருமுறை வைகையைக்கடந்து பங்குனி உத்திரநாளன்று வைகை வடகரையில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோவிலுக்கு ஆலவாய் அண்ணலும் அங்கயற்கண்ணம்மையும் எழுந்தருளுகின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் பன்னிரண்டு மாதங்களிலும் திருவிழாக் கொண்டாடப்படுகிறது. பங்குனிமாதம் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் உச்ச நாளான பங்குனி உத்திரத்தன்று தம் சொத்தையெல்லாம் விற்று கோவில்கட்டிய தாசி பொன்னையாளுக்கு காட்சிதர சொக்கநாதப்பெருமான் திருப்பூவனத்திலுள்ள திருப்பூவனநாதர் கோவிலுக்கு எழுந்தருளியிருக்கிறார். மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் வைகையில் வெள்ளம் வந்த சூழலில் இரவு நேரங்களில் கோவிலுக்கு உற்சவமூர்த்திகளை கொண்டுவருவது சிரமமாக இருந்திருக்கிறது. அதனால், அருகிலுள்ள திருவாப்புடையார் கோவிலுக்கு எழுந்தருளுமாறு விழாவை திருமலைநாயக்கர் மாற்றியமைத்திருக்கிறார்.

மீனாட்சியம்மன் திருக்கோவில் மலரில் வைகையில் வெள்ளம் வந்ததால் திருமலைநாயக்கர் வீரர்களை அழைத்து ஆற்றுநீரைக்கடந்து உற்சவர்களை கோவிலுக்கு கொண்டுவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த வீரர்களுக்கு சாமநத்தம் என்ற ஊரும் கொடையாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறுகுழப்பம் என்னவென்றால் மீனாட்சியம்மன் கோவிலும், திருப்பூவனநாதர் கோவிலும் வைகையின் தென்கரையில்தான் அமைந்துள்ளன. இதில் வைகைக்கு குறுக்கே வெள்ளம் வந்ததா? கிருதுமால் நதிக்கு குறுக்கே வெள்ளம் வந்ததா எனத்தெரியவில்லை. தற்போது உற்சவர்கள் எழுந்தருளும் திருவாப்புடையார் கோவில்தான் வைகை வடகரையில் அமைந்துள்ளது. இங்குதான் வெள்ளம்வந்தால் சாமியை இரவு கோவிலுக்கு கொண்டுசெல்வது கடினம். ஆனால், கோடை காலத்தில் வைகை பெருக்கெடுத்து ஓடுவதில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி.

மதுரையிலுள்ள பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலம் என்ற பெருமை பெற்றது திருவாப்புடையார் கோவில். குபேரன் தோன்றிய தலம், இந்திரன் வழிபட்ட தலம் என்றெல்லாம் புராணகாலத்தில் சொல்லப்பட்ட இப்பகுதி, அப்பொழுது ஆப்பனூர் என்றழைக்கப்பட்டிருக்கிறது. திருஞானசம்பந்தர் இத்தலம் குறித்து பாடியிருக்கிறார்.

ஆப்பனூர் என்று பெயர் வர ஒரு கதையைச் சொல்கிறார்கள். சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். சிவபூஜை செய்த பின்னரே சாப்பிடுவான். ஒருமுறை காட்டில் வேட்டையாடச் சென்றபோது அங்கு வழிபட சிவலிங்கம் இல்லாததால் சாப்பிடாமல் இருந்தபொழுது புத்திசாலி அமைச்சர் ஒரு ஆப்பை லிங்கமென்று இம்மன்னனிடம் சொல்ல, சோழாந்தகனும் அதை வணங்கி உணவருந்தினான். தான் வணங்கியது ஆப்பு என்று அறிந்த மன்னன் இந்த ஆப்பில் வந்து உறையுமாறு சிவனை வேண்ட அவரும் இந்த ஆப்பில் வந்துறைந்தார் என மதுரை மாவட்ட திருக்கோயில்கள் பயணிகள் கையேட்டிலுள்ள கதை சொல்கிறது.

பங்குனி உத்திரத்திற்கு முந்தைய ஒன்பது நாட்களும் ஆலவாய் அண்ணலும் அங்கயற்கண் அம்மையும் தெற்குச் சித்திரை வீதியிலுள்ள வெள்ளியம்பலம்  பள்ளியில் அமைந்துள்ள மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். அங்குள்ள ஊஞ்சலில் உற்சவர்களை வைத்து உற்சாகமாக ஊஞ்சலாட்டி பின் சித்திரை வீதிகளை வலம் வந்து கோயிலுக்குச் செல்கிறார்கள்.

சித்திரைத் திருவிழாப் போல பெருங்கூட்டமாக இல்லாமல் கடைவீதிகளுக்கு வந்த மக்களே சாமி வருவதைப் பார்த்து வருகிறார்கள். நூறுபேர் அளவிலேயே இவ்விழா நடக்கிறது. கோயில்யானையும், தம்பட்ட மாடும் முன்னேவர உற்சவர்கள் சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள். பங்குனி மாதம் வேப்பமரங்கள் முதற்கொண்டு வீதியிலுள்ள பல மரங்களும் பூத்துக் குலுங்குகின்றன. அதிலும் கிழக்குச் சித்திரைவீதியிலுள்ள நெட்டிலிங்க மரத்தின் பூக்கள் அத்தனை அழகாய் சிரிக்கின்றன.

பங்குனி உத்திரத்தன்று கோவிலிலிருந்து உற்சவர்கள் புறப்பாடாகி திருவாப்புடையார் கோவிலுக்கு வருகிறார்கள். திருவாப்புடையார் கோவிலுக்கு வருவதை அறிந்த செல்லூர் பகுதி மக்கள் நிறைய பேர் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

மதியம் கோவில்நடை அடைக்கப்படுகிறது. மாலையில் காளை வாகனத்தில் புறப்பாடாகி கோயிலுக்கு திரும்புகிறார்கள். பஞ்சவாத்தியம் முழங்க, நாதசுர இசை காற்றலைகளில் பரவ மீனாட்சி சுந்தரேசுவர் ஊர்வலம் வருகிறார்கள்.

வைகையைக் கடந்து வரும் இந்த உற்சவத்தை மதுரை மக்கள் பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். திருவிழாக்கடைபோடும் எளிய மனிதர்களுக்கு இவ்விழாவினால் வணிகம் சிறக்க வேண்டும்.

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s