ஜப்பானில் ஜானகிராமன்

Posted: ஓகஸ்ட் 1, 2021 in பார்வைகள், பகிர்வுகள்

தி.ஜானகிராமனின் ஜப்பான் பயண அனுபவங்களைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி யூடியுப் சேனலில் பேசியதைக் கேட்டதும் அந்த நூலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது. ‘நீ ஒன்றை விரும்பும்போது அதை அடைய இந்தப் பிரபஞ்சமே வழிவகுக்கும்’ என ரசவாதியில் பௌலோ கொய்லோ சொல்வதைப் போல நூலகத்தில் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது உதயசூரியன் புத்தகம் கண்முன் வந்து கிட்டியது பெருமகிழ்ச்சி.

தி.ஜா.வின் இந்த நூல் வாயிலாக ஜப்பானிய மக்களின் வாழ்க்கை முறை, அவர்களது உழைப்பு, தேனீர்க்கலை, ஜென் தியான முறையை ஒட்டிய வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது. இந்நூல் 1965ல் வெளிவந்திருக்கிறது. தி.ஜா.வின் எழுத்து நடை நம்மையும் ஜப்பானிய வீதிகளுக்கு அழைத்துச் செல்கிறது. இந்நூலிலிலிருந்து சுவாரசியமான பகுதிகளை காணலாம்.

ஜப்பானில் பிறமொழிகளை வானொலி வாயிலாக கற்றுக் கொடுக்கிறார்கள். இதுவொரு நல்லதிட்டம். தி.ஜா. அங்குபோய் ஜப்பானிய மொழியில் சிலவார்த்தைகளை கற்றுக் கொள்கிறார். உதாரணமாக, அரிஙாதோ (நன்றி), டகாமோ டபேமாஸேன் (முட்டை சாப்பிடமாட்டேன்). சம்மணம் போட்டு அமரும் வழக்கம் ஜப்பானியர்களிடம் இல்லை. அவர்கள் வஜ்ராசனம்போல இரண்டு முழங்கால்களையும் மடக்கி அதன்மேல் அமர்கிறார்கள். நாம் சம்மணமிட்டு அமர்வதை ‘ஜீதார்தா’ மாதிரி அமர்வது என்கிறார்கள். நம்ம சித்தார்த்தனைத்தான் அவர்கள் ஜீதார்தா என்கிறார்கள்.

ஜப்பானிலுள்ள கியாத்தோ நகரம் பழமையான ஊராக இருக்கிறது. மதுரை, காஞ்சி, வாரணாசி போல தொன்மையான நகராக இருக்கிறது. ‘கியாத்தோவின் அழகும் அடக்கமும் அபார ஆற்றல் வாய்ந்தவை. ஜப்பானின் மற்ற இடங்களில் தங்கிக் கழித்த நினைவுகளை எல்லாம் துடைத்துவிட்டு வியாபித்துக் கொண்டுவிடும். கியோத்தோவில் இருந்த இரண்டு நாட்களும் அணுஅணுவாக நினைவில் படிந்திருக்கின்றன” என்கிறார் தி.ஜா.

ரேடியோவில் பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்தளவிற்கு கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வாரம் 80 மணிநேரம் கல்விசார்ந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. பள்ளிகளிலும் இதன் வாயிலாக பாடங்களை போதிக்கிறார்கள். நம்ம ஊரில் வாரம் ஒரு ஏழு மணிநேரம் ஒலிபரப்பலாமே.

நவம்பர் 15ஆம் தேதியை ஜப்பானில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். 7 – 5 – 3 வயதுக் குழந்தைகளுக்கு அழகிய வர்ணக் கிமோனோக்களை அணிவிக்கிறார்கள். அவர்களின் பாரம்பரிய உடையிது. ‘மெய்ஜித் தோட்டத்தில் அன்று ஒரு நாலாயிரம், ஐயாயிரம் காமிராக்களை பார்த்திருப்பேன்’ என்கிறார் தி.ஜா. அந்தக் காலத்திலேயே அங்கு அவ்வளவு தொழில்நுட்ப சாதனைகள் நிகழ்ந்திருக்கிறது. அதோடு ஜப்பானியர்கள் குழந்தைகளை மலர்களைப் போல பேணுவதாகக் குறிப்பிடுகிறார். நாம் கூண்டுக்கிளி போல வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஜப்பானியர்களின் தேநீர்கலை பற்றி ஒக்ககூரா காக்குஜோ எழுதிய நூலை தமிழில் அ.பெருமாள் ஐயா மொழிபெயர்த்ததை வாசித்திருக்கிறேன். இந்நூலில் தி.ஜா. அவர் கலந்து கொண்ட தேநீர் விருந்துபற்றி குறிப்பிடுவதைப் பார்க்கும்போது நாமும் அதில் கலந்துகொள்ள வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. மென்மை, இனிமை, அடக்கம் போன்ற பண்புகள் நாம் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

புத்த மதத்தில் உள்ள ஸதிபத்தானம் என்ற பயிற்சி நாமும் கடைபிடிக்கலாம். “எந்தக் காரியத்தையும் உணர்வோடு நினைவோடு செய்ய வேண்டும். உட்கார்ந்திருந்தால் அடிக்கடி உட்கார்ந்திருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டால் சாப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். நடக்கும்போது அதில் நினைவு இல்லாமல் நடக்காதீர்கள். நடப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். பேசும்போது, எழுதும்போது எதைச் செய்தாலும் அதைச் செய்வதான ஞாபகம் இருக்கட்டும். அப்படியே சரீரத்தையும் மனதையும் அதன் எண்ணங்களையும் எட்ட நின்று பார்க்கச் சொல்கிறது அந்தப் பயிற்சி. நடக்கும்போது சாப்பிடுவதையும், சாப்பிடும்போது பிறநினைவுகளோடு அள்ளி முழுங்குவதையும் நிறுத்திவிட்டு அந்தக் கணத்தில் வாழச் சொல்கிறார்கள்.” கொஞ்சம் முயற்சி பண்ணிப்பார்ப்போம்.

சுற்றுலாத் தளங்களுக்கு வெளிநாட்டவர்களும், வெளியூர்க்காரர்களும்தான் செல்ல வேண்டும் என்றில்லாமல் அவர்களே விடுமுறைக்கு மலைப்பிரதேசங்களுக்கு செல்கின்றனர். நாம் நம் கண்முன் பார்க்கும் மலைகளுக்குகூட போக வேண்டும் என்ற உணர்வில்லாமல் இருப்பதை மாற்ற வேண்டும். மதுரையில் பலர் திருப்பரங்குன்ற மலையின் மீதுகூட ஏறியிருக்க மாட்டார்கள்.

நன்றியுணர்வு ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பழக்கம். ஜப்பானியர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 1000 நன்றிகளாவது சொல்லிவிடுகிறார்கள். ஒரு நடத்துனர் பயணச்சீட்டு வாங்கும் ஒவ்வொருவரிடமும் நன்றி சொல்கிறார். அதுபோல கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களிடம் பணிவோடு நடந்து கொள்வது குறிப்பிடத்தகுந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜப்பானில் குரூப்-4 போன்ற பணிகளுக்கு வேலையாட்கள் இல்லை. நம்முடைய சாதாரண பணியை செய்வதற்கு கூட தனக்கு கீழ் பணியாற்றுகிற நபரை ஏவுகிற மனப்பான்மை ஜப்பானியர்களிடம் இல்லை. நிலையாமையை உணர்ந்ததால் அவர்களிடம் வாழ்க்கை குறித்த புரிதல் இருக்கிறது. ப்யூஜி எரிமலையையும், நிலவையும் ரசித்துக் கொண்டே ஜப்பானில் இருந்து கிளம்புகிறார் ஜானகிராமன்.

By H. Grobe – Own work

ஜப்பானுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை மனதில் எழுகிறது. ஆனால், இந்த ஊரடங்கு காலத்தில் மகளோடு கார்டூன் பார்த்துப்பார்த்து நான் மதுரையில் இருக்கிறேனா டோக்கியோவில் இருக்கிறேனா என்று ஒரு கணம் யோசிக்க வேண்டியிருக்கிறது. சிங்சாங், ஹட்டோரி, கெம்முமாக்கி, ஹீமாவாரி எனக் கேட்கும் பெயர்களெல்லாம் ஜப்பானியப் பெயர்களாகத்தான் இருக்கிறது.

இந்த நூல் குறித்து மேலும் அறிந்துகொள்ள எஸ்.ராமகிருஷ்ணனின் உரைக்கான இணைப்பு

படங்கள் : கூகுள் உபயம்

பின்னூட்டங்கள்
  1. sudharsan sundarsan சொல்கிறார்:

    தொடர்ந்து தமிழ்க்கு எழுத்து மாலை சுட்டும் என் தோழருக்கு வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s