தஞ்சை ஆர்சுத்திப்பட்டு இரணிய நாடகம்

Posted: ஜூன் 12, 2022 in பார்வைகள், பகிர்வுகள்

இளம்பிராயத்தில் ஆச்சியிடம் ஏராளமான கதைகள் கேட்டிருக்கிறேன். அதில் பக்த பிரகலாதன் கதையும் ஒன்று. பின்னாளில் திரைப்படமாக பிரகலாதன் கதையைப் பார்த்திருக்கிறேன். பிரகலாதன் கதையை இரணிய நாடகமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நிகழ்த்தப்படுவதை பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் சொன்னார்.

1991இல் முனைவர் பட்ட ஆய்விற்காக இரணிய நாடகத்தைத் தேர்ந்தெடுத்த பேராசிரியர் சுந்தர்காளி ஆய்வு முடிந்தபின்னும் கடந்த 30 ஆண்டுகளாக நாடகம் நடக்கும் ஊர்களோடு தொடர்பிலிருக்கிறார். அவரோடு உரையாடியதிலிருந்து நரசிம்ம ஜெயந்தியையொட்டி தஞ்சை சாலியமங்கலம் அருகிலுள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் நடக்கும் இரணிய நாடகத்தின் சிறப்பை அறிய முடிந்தது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு 2022ல் 375வது ஆண்டாக நடக்கும் இரணிய நாடகம் நடப்பதை பேரா. சுந்தர்காளி சொன்னார். என்னையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டிருந்தேன். மே 13 அன்று காலை பேராசிரியர் சுந்தர்காளி, ஓவியர் சரவணன், நான் என மூவரும் தஞ்சை நோக்கிப் புறப்பட்டோம். பயணத்தின்போது கூத்து, நாடகம், திரைப்படம் பற்றிய சந்தேகங்களை பேரா.சுந்தர்காளியிடம் கேட்க அவரும் விரிவாக பதிலளித்தபடி வந்தார். பார்சி நாடகக் குழுக்கள் வழியாக வந்த நாடகங்கள், திரைப்படங்களின் எழுச்சி என விரிவாக பல விசயங்களை அவரோடான பேச்சின்போது அறிய முடிந்தது.

மதியம் தஞ்சாவூர் சென்றோம். பழமையான அசோகா லாட்ஜில் அறை எடுத்தோம். மதிய உணவுக்குப் பிறகு கொஞ்சநேரம் ஓய்வெடுத்தோம். மாலை அங்கிருந்து நானும் ஓவியர் சரவணனும் தஞ்சை பெரிய கோவில் சென்றோம். மாலை ஏழு மணிக்கு மேல் நாங்கள் தஞ்சையிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் சாலையில் புன்னைநல்லூர், சாலியமங்கலம் போய் அங்கிருந்து ஆர்சுத்திப்பட்டு சென்றோம்.

மிக அழகான சிறிய கிராமம். அந்த கிராமத்திலிருந்த வீடுகள் பெரும்பாலும் ஓட்டுவீடுகளாக இருந்தாலும் முன்னால் பெரிய திண்ணை, நடையுடன் அழகாக இருந்தன.

நாடக ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் அருமையான இட்லியும், பொங்கலும் வழங்கினார்கள். இரவு விழித்திருக்க வேண்டுமென்பதால் அளவோடு சாப்பிட்டுக் கிளம்பினோம். பலவருடங்களாக அந்த ஊரில் இரணிய நாடகம் பார்க்கச் செல்வதால் பேராசிரியர் சுந்தர்காளியை அங்குள்ள பலருக்கும் தெரிந்திருக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் நலம் விசாரித்து உரையாடுவதைப் பார்க்க முடிந்தது.

இரணிய நாடகம் நடக்கும் அரங்கிற்கு சென்றோம். ஒரு திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அரங்கு. அரங்கிற்கு பின்புறம் ஒப்பனை நடந்துகொண்டிருந்தது. அங்கு நரசிம்ம ‘முகமூடி’கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருந்தன. இரணியன், பிரகலாதன், இரணியன் மனைவி, காவலர்கள் என அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

மிருதங்கம், பின்பாட்டு, ஆர்மோனியம் வாசிப்பவர்கள் அரங்கிற்கு இடதுபுறம் இருக்கிறார்கள். அரங்கில் பெரிய மரமேசையும் அதன் மேலே இரண்டு உருளைக்கட்டைகள் (அமரும் ஆசனம்) உள்ளது. நாடகம் தொடங்கும்முன் அன்றைய நாள் நிகழ்வை அறிவிக்கிறார்கள். முதல்நாள் பிரகலாதன் பிறப்பு, மறுநாள் கல்வி கற்கச் சென்ற கதை நிகழ்கிறது. மூன்றாம் நாள் இரவு இரணியன் ஹரிநாமம் சொல்லும் பிரகலாதனை பல்வேறு வகைகளில் கொல்ல முயன்று தோற்றுப் போகும்கதை நடக்கிறது.

நாடகம் பார்க்க அந்த ஊர்க்காரர்களும், பக்கத்து ஊர்க்காரர்களும் வருகிறார்கள். பாய் போர்வைகளை விரித்து இடம்பிடித்து அமர்கிறார்கள். கொஞ்சம் நாற்காலிகளும் ஒரு ஓரமாக போட்டிருக்கிறார்கள். பிரகலாதன் கதையில் நான் முன்பு கேள்விப்படாத சில கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள். கிணறு வெட்டும் ஒட்டர்கள், வாணிபம் செய்யும் சோனகர்கள் (அரபு வணிகக்குழுவினர்), காளி, எமன் என புதிதாக சில கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள்.

ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் நடக்கும் இரணிய நாடகத்தின் சிறப்பு முக்கிய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் இரண்டிரண்டு பேராக வேடமேற்று நடிப்பதுதான். இரணியன், பிரகலாதன், தாய், காவலர் என இரண்டிரண்டு பேர் வருகிறார்கள். இதில் இரணியன் கதாபாத்திரம்தான் உச்சம். இரண்டு இரணியன்களும் வந்து பாடி, ஆடிக்குதித்து தம் இருக்கையில் ஏறி அமரும் அழகு சொல்லுக்கடங்காது. அதேபோல ஒருவர் எழுந்து பாடியபடி தவ்வி இறங்குவதும், சலங்கைகள் ஒலிக்க, புழுதிபறக்க அரங்கே அதிர்கிறது. காலத்திற்கேற்றபடி காலர் மைக் வைத்துக்கொண்டு இரணியன் இருவரும் பாடுவதும், பேசுவதும் சிறப்பு.

இந்நாடகத்தின் உச்சக்காட்சி அதிகாலையில் நிகழ்கிறது. இரணியன் பிரகலாதனிடம் உன்னுடைய நாராயணன் எங்கிருக்கிறான் என அழைக்க நரசிம்மர் வருகிறார். நரசிம்ம அவதாரம் எடுத்திருப்பவர் அருள் வந்ததுபோல அமர்ந்திருக்கிறார். இரணியன் எதிரே நின்று நரசிம்மரை பார்த்து சண்டைக்கு அழைக்க, இருவருக்கும் இடையே சண்டை நிகழாதபடி தடுத்துக்கொள்ள ஒரு பெரிய துணியை முறுக்கிப்பிடித்துக் கொள்கின்றனர்.

அந்தக் காட்சியை தரிசிக்க மக்கள் நாடகம் நிகழும் இடத்தருகே வந்து குழுமி நிற்கின்றனர். இறுதியில் இரணியனின் மகுடம் தட்டிவிடப்பட்டு நரசிம்மரின் கைக்கு அதைக் கொண்டுவருகின்றனர். அத்துடன் நாடகம் நிறைவுறுகிறது. நரசிம்மருக்கு ஊரிலிருந்து மாவிளக்கு எடுக்கத் தொடங்குகின்றனர். பிறகு ஊர்வலமாக நாடகக் குழுவினர் ஊருக்குள் செல்கிறார்கள்.

மதுரை, புதுக்கோட்டைப் பகுதியில் நிகழும் இசை நாடகங்களைப் போல இல்லாமல் தெருக்கூத்தின் நீட்சியாகவே இரணிய நாடகம் நிகழ்கிறது. நாடகநடிகர்களாக உள்ளூர்காரர்களே நடிக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களின் கலையார்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நாடகத்தில் நடிப்பவர்களுக்கு அவர்களது உறவினர்கள் செய்முறை செய்வதை காணமுடிந்தது. அதேபோல இரணிய வேடத்தை நள்ளிரவுவரை ஒரு ஜோடியும், அதற்குபிறகு ஒரு ஜோடியும் ஏற்று நடிக்கின்றனர். அதேபோலத்தான் பிரகலாதனும்.

இரணிய நாடகம் பார்த்து மதுரை நோக்கிக் கிளம்பினோம். கோவை காரமடையருகே பகத்தூரில் நரசிம்மரைப்போல இரணியனுக்கும் முகமூடியிருக்கும் என்ற தகவலை பேரா.சுந்தர்காளி குறிப்பிட்டார். பசுமைநடைப் பயணங்கள் வாயிலாக அவரோடு அறிமுகமாகி அவரது ஆய்வுக்களமாகிய இரணிய நாடகத்தை அவரோடு சேர்ந்து பார்க்கச் செல்லும் வாய்ப்பு அமைந்தது குறித்தது மகிழ்ச்சி.

பின்னூட்டமொன்றை இடுக