பண்பாட்டுத் தளங்கள் வழியே… – தொ.பரமசிவன் மதிப்புரை

Posted: ஒக்ரோபர் 22, 2022 in பார்வைகள், பகிர்வுகள்

செந்தீ நடராசன் எழுதிய பண்பாட்டுத் தளங்கள் வழியே நூலில் தொ.பரமசிவன் அய்யாவின் மதிப்பரையைப் பார்க்கக் கிடைத்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இந்நூலை வெளியிட்டுள்ளது. தொ.ப.வின் நூல்களில் வராத இந்த மதிப்புரையை பகிர்கிறேன்.

மதிப்புரை

தமிழ் ஆய்வுலகம் என்ற ஒன்று 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழ் நாட்டில் கருக்கொண்டது. அதன் முதல் அசைவாக மனோன்மணியம் சுந்தரனாரின், ‘ஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி’யினைக் குறிப்பிடலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் ‘செந்தமிழ்’ இதழின் வழியாகத் தமிழ் ஆய்வுலகம் உருத்திரளத் தொடங்கியது. முதல் முப்பது ஆண்டுகளுக்குள் தமிழ் ஆய்வுலகம் மற்றும் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது. அதாவது எழுத்திலக்கியச் செய்திகளுக்கு உரைவிளக்கம் தருவதோடு பெரும்பாலான தமிழ் அறிஞர்கள் தேங்கிப் போயிருந்த காலத்தில் இலக்கியச் செய்திகளைக் களஆய்வுச் செய்திகளோடு ஒத்தும் உறழ்ந்தும் பார்க்கின்ற முயற்சியினைச் ‘செந்தமிழ்’ இதழின் ஆசிரியர் மு. இராகவையங்கார் தொடங்கி வைத்தார். இதுவே தமிழாய்வுலகம் பெற்ற புதிய பரிமாணத்தின் தொடக்கமெனலாம். அவரைத் தொடர்ந்து ‘தமிழ்க்கிழவர்’ மயிலை. சீனிவேங்கடசாமி இந்தப் புதிய நெறியினை வளர்த்தெடுத்தார்.

1923-இல் தாம் இளைஞராக இருந்த போதே ‘லட்சுமி’ என்னும் இதழில் மணிமேகலை காட்டும் மணிபல்லவத் தீவினைக் கண்டறியும் முயற்சியில் அவர் கட்டுரை ஒன்றெழுதினார். அதற்குப் பின் வந்த இருபது ஆண்டுகளில் தமிழ்ப்பண்பாட்டின் வலிமையான வேர்கள் அவைதீக மரபில் கால் கொண்டிருப்பதை அவரது எழுத்துக்கள் தமிழாய்வாளர்களுக்கு எடுத்துக் காட்டின. அவரைத் தொடர்ந்து காசுகள், அணிகலன்கள், விளக்குகள் எனப் புழங்கு பொருட்களை முதலடையாளமாகக் கொண்டு மறைந்திருந்த தமிழ் மரபினை மீண்டும் கட்டமைத்துக் காட்டியவர் சாத்தன்குளம் அ. ராகவன் ஆவார். இந்த மூவரின் ஆய்வுலக வழித் தோன்றலாக நமக்கு கிடைத்தவர் பேராசிரியர் நா. வானமாமலை ஆவார்.

இயக்கவியல் பொருள் முதல்வாதப் பின்னணியில் எளிய மக்களின் வாழ்க்கை அசைவுகளையும், வழக்காறுகளையும் மூலப்பொருளாகத் திரட்டி அதற்குரிய ஆராய்ச்சி முறையியல் ஒன்றையும் அவர் உருவாக்கிக் காட்டினார். அவரது தொடர்ந்த முயற்சியின் விளைவாக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஆய்வுத் துறையாகவும், கல்விப் புலமாகவும் வளர்ந்தது. பழங்காலத்துச் சமணமுனிவர்களைப் போல தன்னுடைய கருத்தியலை ஏந்திச் செல்ல அவர் ஒரு மாணவர் பட்டாளத்தையும் உருவாக்கினார். தமிழாய்வுலகில் அவரது ‘நெல்லை ஆய்வுக்குழு’ மாணவர்கள் முயற்சி நினைக்கப்பட வேண்டிய ஒன்று. அவரது மாணவர் வரிசையில் இந்த நூலாசிரியர் செந்தீ நடராசன் ஒருவர் என்பதை நானறிவேன்.

ஆறு கட்டுரைகள் அடங்கிய இந்த நூலில் எல்லாக் கட்டுரைகளுமே களஆய்வுச் செய்திகளை மூலத் தரவுகளாகத் கொண்டவை.

முதற் கட்டுரையான ‘அவ்வை நோன்பு’ அந்த நோன்பினைச் சமணத்தோடு தொடர்புப்படுத்த முயலுகின்றது. இந்த முயற்சிக்கான அடிப்படைக் காரணம் அவ்வை என்பது சமணப் பெண் துறவிகளைக் குறிக்கும் சொல்லாக நிகண்டு நூல்களில் காணப்படுவதேயாகும். ஆனால் இலக்கியங்களில் இந்தச் சொல் இந்தப் பொருளில் பதிவு பெறவில்லை. இதனோடு ஒலித் தொடர்புடைய, ஐயன் என்பதின் பெண்பாற் சொல்லான ‘ஐயை’ என்ற சொல்லே காணப்படுகிறது. அவ்வை நோன்பு மகப்பேற்று நோன்பு என்பதாகவே தோற்றமளிக்கிறது. சமணமே உலகில் முதன் முதலாக புலாலை நீக்கச் சொன்ன மதமாகும். பிச்சை எடுப்பதனை அங்கீகரித்த மதமுமாகும். அவ்வை நோன்பில் புலால் இடம் பெறாமையும், பிச்சை மதிப்பிற்குரிய செயலாகவும் காட்டப் பெறுவது ஆய்வாளர் செந்தீ நடராசனை இந்தத் திசை நோக்கி சிந்திக்கத் தூண்டியிருக்கலாம். ஆனால் அவ்வை நோன்பு நேரிடையாகவும், மறைமுகமாகவும், வணிகத்தோடு தொடர்புடைய சாதியாரால் தான் இன்றளவும் விரும்பிக் கொண்டாடப்படுகிறது. சமணம் வணிகரால் வளர்க்கப்பட்ட மதம். ‘வாரிசுரிமைக் கவலை’யும் அதன்விளைவாகத் தத்தெடுக்கும் பழக்கமும் வணிகச் சாதியாருக்கே மிகவும் உண்டு. இனக்குழுச்சடங்குகளோடு பெருஞ்சமய நெறிகள் ஊடாடியிருக்கின்றன. அந்த வகையில் ஓர் இனக்குழுச் சடங்கின் எச்சத்தை தமிழ் நாட்டுச் சமணம் உள் வாங்கியிருக்கலாம் என்ற செந்தீநடராசனின் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது கட்டுரையும் சமணம் பற்றியதாகவே அமைகின்றது. திகம்பர சமணத் துறவிகளின் தோற்றத்தைக் குறிக்கும் ‘மயிராண்டி’ என்ற சொல் வைதீக நெறியாளர்களால் வசைச் சொல்லாக மாற்றப்பட்டதை இவர் கூர்மையாக இனம் கண்டு காட்டுகிறார். ஆனால் இலையிலிட்டுப் படைத்த உணவைச் சுற்றி நீர் தெளிப்பது சமண வெளிப்பாடாகத் தோன்றவில்லை. வீட்டுச் சடங்குகளில் படைக்கப் பெற்ற உணவைச் சுற்றி பெண்கள் கையில் சிறிதளவு நீர் எடுத்துத் தெளிப்பதை ‘நீர் விளவுதல்’ என்ற சொல்லாலும் குறிப்பர். பாத்திரத்தில் பூவிதழ்கள் இட்ட நீரையே இவ்வாறு எடுத்துத் தெளிப்பர். இது சடங்கின் முடிவைக் குறிக்கும் ஓர் அசைவாகும். மாறாக உண்ணும் இலையினைத் தரையில் விரிப்பதற்கு முன்னால் அந்த இடத்தில் தண்ணீரைத் தெளித்து ‘தலசுத்தி’ செய்யும் முறை சமணருக்குரியதே.

கோவலனுக்கு உணவு படைக்க முற்படும் கண்ணகி

“மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி  

குமரி வாழையின் கோட்டகம்”

விரித்த செய்தியினைச் சிலப்பதிகாரம் பதிவு செய்திருக்கிறது.

(தலசுத்தி செய்யும் இப்பழக்கம் வைணவப் பார்ப்பனர்களிடையே இன்றும் காணப்படுகிறது.) ஆனால் நீர் விளவுதல் பெண்கள் செய்யும் வீட்டுச் சடங்குகளின் நிறைவுப் பகுதி என்றே தோன்றுகிறது; சமணத் தோற்றமுடையது என ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

எஞ்சிய மூன்று கட்டுரைகளும், கட்டுரைகளுக்கான மூலத்தரவுகளும் நாஞ்சில் நாடு, ஆய்நாடு, வேணாடு என்று மூன்று பெயர்களில் சுட்டப்படும் நிலப்பகுதியினைச் சார்ந்ததாகும்.

முடிப்புரை அம்மன் வழிபாடு ஒடுக்கப்பட்டவர்கள் திருநிலைப்படுத்தப்பட்டு தெய்வமாக்கப்பட்டால், மேல்சாதி ஆளுமை அதனை எப்படிப் பார்த்தது என்பதற்கான அடையாளமாகும். தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் இது அறியப்படாத வழிபாட்டு நெறியாகக் காணப்படுகிறது. ‘புரை’ என்பது இடப்பொருள் தரும் சொல்லாகும். இங்கே முடி தலையிடத்தில் சூடப்பட்ட அணிகலனாகத் தோன்றவில்லை. மாறாக, காலமல்லாத இறப்பைச் சந்தித்த பெண்ணின் தலைமுடியாக இருக்கலாம். இவ்வகை நிகழ்வுகளின் தொகுதி முடிப்புரை அம்மன் என்னும் வழிபாட்டு நெறியினை (Cult) உருவாக்கி இருக்க வேண்டும். திரு. செந்தீ கண்டுபிடித்துள்ள இந்த புதிய ஆய்வுக்களம் நம்முடைய ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்.

கேரளச் சமூகத்தின் திருமண உறவுகள் குறித்த கட்டுரையும், குமரி மாவட்டச் சமூக ஒடுக்குமுறைக்கெதிரான குரல்களைப் பற்றிய கட்டுரையும் தனித்தனியே இரண்டு நூற்களுக்குப் பொருளாக விரிக்கத்தக்கன. திரு. செந்தீ அவர்களின் உழைப்பு அதனைச் சாத்தியமாக்குமென நினைக்கின்றேன், நம்புகின்றேன்.

கடைசர் பற்றிய கட்டுரை இந்த நூலில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழில் சார்ந்து மக்கள் திரள்களின் தன்னடையாளத்தைக் காண முயல்வது தமிழ்நாட்டு ஆய்வாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். எண்ணிக்கையில் சிறுத்தவர்களாக, மூன்று அல்லது நான்கு வகையான தொழில் செய்கின்ற கடைசர் போன்ற மக்கள் திரள்கள் (சாதிகள்) தமிழ்நாட்டில் நிறையவே உள்ளன. “அனுலோமம்”, “பிரதிலோமம்” என்ற வடசொற்கள் குறிப்பிடும் (தமிழில் இவற்றுக்கு நிகரான சொற்கள் காணப் பெறவில்லை என்பது வியப்பே). சாதிக்கலப்பு மணங்கள் தமிழ்நாட்டில் உட்சாதிகளின் எண்ணிக்கையினை வட்டாரம் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் பெருக்கிக் காட்டியுள்ளன. இதன் விளைவாகவே ஒவ்வொரு சாதியும் சாதியின் உட்பிரிவுகளும் அடையாளத்தைக் காட்ட முற்பட்டன. அதன் தொடர்ச்சியாகச் சாதித் தொன்மங்களும், சாதிப் புராணங்களும் தோன்றத் தொடங்கின. இதனை மட்டும் நம்மால் உறுதியாகக் கணிக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் கள ஆய்வு நடத்தப் பெற்றால் மட்டுமே இந்நிகழ்வுகள் குறித்த ஆய்வுக் கோட்பாடு ஒன்றை நம்மால் உருவாக்க முடியும். அந்த வகையில் திரு, செந்தீ அவர்களின் “கள ஆய்வு” முயற்சி பாராட்டுக்குரியதாகும்.

பண்பாட்டுத் தளத்தில் நம்மை நோக்கி நிறைய வேலைகள் காத்துக் கிடக்கின்றன. அதிகாரப்பின்னணியில் ஒற்றைப் பண்பாட்டை முன்வைக்கும் கொடுமையான முயற்சிகள் நாள்தோறும் அரங்கேறுகின்றன. வளமற்றதாகக் கருதப்படும் மண் கூட ஒரு போதும் ஒற்றைத் தாவரத்தை ஏந்தி நிற்பதில்லை. வளமான மக்கள் திரள்கள் பண்பாட்டுத் தளத்தில் ஆயிரமாயிரம் அசைவுகளை உடையன. பன்முகத் தன்மை என்பதே மண்ணுக்கும் மக்களுக்கும் உயிர்சார்ந்த இயல்பாகும். மண் சார்ந்த அசைவுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் திரு. செந்தீ போன்றவர்கள் தங்களின் சமூகப் பொறுப்பினை நேர்மையாக ஆற்றுகின்றார்கள். இவரைப் போன்றவர்கள் அணி திரட்சியே தமிழ் ஆய்வுலகத்திற்கு புதிய தடம் அமைத்துத் தருமென நம்புகிறேன், வாழ்த்துகின்றேன்.

பேராசிரியர் – தொ.பரமசிவன்

தமிழியல் துறைத்தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

நெல்லை.

1-12-2002.

பின்னூட்டமொன்றை இடுக