2022: திருவிழாக்களின் தலைநகரம் இரண்டாம் பதிப்பு

Posted: திசெம்பர் 29, 2022 in வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:

சமணமலை மதுரையில் எனக்கு நெருக்கமான இடம், மிகவும் பிடித்தமான இடம். 14.11.2010இல் நானும் தமிழ்ச்செல்வ அண்ணனும் பசுமை நடை சென்றபோது செட்டிப்பொடவு, பேச்சிப்பள்ளம் எல்லாம் போய் பார்த்தோம். செட்டிப்பொடவில் திருவிழாக்களின் தலைநகரம் முதல்பதிப்பு 2019இல் வெளியானதும், இரண்டாம்பதிப்பு 2022இல் பேச்சிப்பள்ளத்தில் வெளியானதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

இரண்டாண்டுகளுக்குப்பின் சமணமலையில் நடந்த பசுமை நடை நிகழ்வில் “திருவிழாக்களின் தலைநகரம் மதுரை” நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமையன்று இந்நூலை டோக்பெருமாட்டி கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் நிம்மா எலிசபெத் அவர்கள் வெளியிட இயற்பியல் துறை பேராசிரியை முனைவர் ஆரோக்கிய சியாமளாவும், பசுமை நடைத் தோழமைகளும் பெற்றுக்கொண்டனர்.

திருவிழாக்களின் தலைநகரம் முதலாம் பதிப்பு 1000 நூல்கள் விற்று, அடுத்த பதிப்பு வந்த அன்று இந்நூல் எழுதியதற்கான ராயல்டி தொகையாக 13,000 ரூபாய் பசுமை நடையினரால் சமணமலை அடிவாரத்தில் தேநீர்கடை நடத்திவரும் ஜெயமணி அம்மாவின் கரங்களால் எனக்கு வழங்கப்பட்டது. இது எதிர்பாராமல் வந்த பரிசு. பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் ’மதுர வரலாறு’ நூலை வெளியிட்ட போது முதல் பிரதியை பெற்றுக்கொண்டவர் ஜெயமணி அம்மா என்பது என் நினைவிற்கு வருகிறது.

திருவிழாக்களின் தலைநகரம் நூல் தந்த விதை நெல்லை அடுத்த வெளியீட்டில் சமூகத்திற்கு சரியான வகையில் திருப்பியளிப்பேன் என்ற உறுதியை இக்கணம் கூறிக்கொள்கிறேன்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

டோக் பெருமாட்டி கல்லூரி இயற்பியல் குடும்பத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

இக்கணத்தில் இந்நூல் உருவாக உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

எனை காக்கும் மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

இனிமேலும் வரங்கேட்கத் தேவையில்லை! இதுபோல் வேறெங்கும் சொர்க்கம் இல்லை!

பின்னூட்டமொன்றை இடுக