Posts Tagged ‘மதுரை’

1964இல் மதுரைக்கு பதினொரு வயதில் தன் பாட்டியோடு சிறுபையனாக வந்திறங்கினார் டி.கே.சந்திரன். வறுமை கற்றுத்தந்த பாடங்களோடு கடும் உழைப்பையும் சேர்த்து வாழ்வில் முன்னேறிய கதைதான் அறக்கயிறு. டி.கே.சந்திரன் தன் வாழ்க்கை அனுபவங்களையும் தான் சந்தித்த ஆளுமைகளையும் அவர்களின் உழைப்பையும் குறித்து எழுதிய நூல். டி.கே.சந்திரன் அவர்களின் வாழ்வை வாசிக்கும்போது மதுரையின் ஒரு காலகட்டத்தின் கதையை நாம் அறியலாம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இந்த நூலை எனக்கு வழங்கினார்.

1953இல் தாயாரின் ஊரான சின்னாண்டிபாளையத்தில் பிறந்தவர் டி.கே.சந்திரன். திருப்பூர் அவினாசி அருகே உள்ள தேவராயம்பாளையம்தான் டி.கே.சந்திரனின் சொந்த ஊர். எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா தறியில் துணிமட்டும் நெய்து கொடுத்துக் கொண்டிருந்தவர் அதை தானே விற்பனை செய்யவும் தொடங்கினார்.

டர்க்கி காட்டனில் இருந்து தயாரிக்கப்படும் துண்டு அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்தது. அதை தயாரிக்கும் பிரத்யேகமான மக்கம் தறிகள் மதுரையில் இருந்தன. டி.கே.சந்திரனுடைய அப்பா மதுரைக்கு வந்து புதிய நெசவு நுட்பங்களை அவ்வப்போது அறிந்து செல்வார். மதுரையிலிருந்த உறவினர் ஒருவரின் ஆலோசனையில் 1962இல் ‘கஸ்தூரிபாய் காதி வஸ்திராலயம்’ என்ற கடையை கீழவாசலில் தொடங்கினார். கடையை டி.கே.சந்திரனின் தாய்மாமாவும் சித்தப்பாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாய்மாமாவிற்கு சமைத்துப்போட பாட்டி உண்ணாமலையோடு கடைக்கு உதவியாக இருக்க சிறுவயது டி.கே.சந்திரனையும் மதுரைக்கு அவரது அப்பா அனுப்பிவைக்கிறார். திருப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடியாக வர முடியாத காலம். பழனி வந்து அங்கிருந்து சொக்கன் டிரான்ஸ்போர்ட் பேருந்தில் 5 ரூபாய் கட்டணத்தில் மதுரை வருகிறார்கள். அப்போது நகரப்பேருந்து கட்டணம் 10 பைசா.

காலையில் எழுந்து கடையைத் திறந்துவைத்து சுத்தம் செய்துவிட்டு பள்ளிக்குச் சென்று மீண்டும் மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு கடையிலுள்ள தாய்மாமாவிற்கு சாப்பாடு கொண்டுசென்று கொடுப்பது இவரது பணியாக இருந்தது. மாலைவேளைகளில் கடைக்கு வருபவர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்க, கடையை கவனித்துக்கொள்ள என உதவியாக இருக்கிறார்.

5 பைசா தினமும் அவருக்கு அவங்க மாமா கொடுப்பார். அதில் பக்கோடா வாங்கி இரவு உணவுக்கு தொட்டுக் கொள்வது, அதை சேர்த்துவைத்து 25 பைசாவில் தியேட்டரில் படம் பார்ப்பது என அந்தக் காலத்தை நம் கண்முன் கொண்டுவருகிறார். மரக்கட்டை பேனா என அழைக்கும் நேவி பேனா பற்றி வாசிக்கையில் நம்முடைய பால்ய நினைவுகளும் மனதில் எழுகிறது.

மதுரை சுங்குடி சேலை உருவான கதையை நூலினூடாக சொல்கிறார். “சாயமிடுவதில் கைதேர்ந்த ஒரு சௌராட்டிரர் நெய்த துணிகளில் சிறுசிறு கற்களை வைத்து நூலினால் முடிச்சிட்டு பின் அந்தத் துணிக்கு சாயமிட்டுப் பார்த்தார். நூல் முடிச்சு இருந்த இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் சாயம் ஏறியிருக்க முடிச்சிட்ட பகுதிகள் வட்டமாக வெள்ளை நட்சத்திரம் போல் வடிவம் இருப்பதைக் கண்டுகொண்டார். இப்படித் தயாரிக்கப்பட்ட துணிகளே பின்னாலில் மதுரையின் பாரம்பரியச் சின்னமான சுங்குடி சேலை என அறியப்பட்டது.”

ஆறாம் வகுப்புவரை வீட்டிற்கு அருகிலிருந்த சந்திரா பள்ளியில் படித்துவந்த டி.கே.சந்திரன் ஏழாம் வகுப்பில் விருதுநகர் இந்து நாடார் பள்ளி சேர்கிறார். அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்திலிருந்த காலம். மதுரையில் மாணவர் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள். அதன்பின் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருகிறது. கதர் வேட்டி போய் கலர் பார்டர் வைத்த வேட்டிகள் அறிமுகம் ஆகின்றன.

கந்தராஜ் என்ற கணக்கு ஆசிரியர் இவரது கல்வி வளர்ச்சியில் உறுதுணையாக இருந்திருக்கிறார். எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் அப்போதே 600க்கு 508 மதிப்பெண் வாங்கி கணக்கிலும் 100க்கு 100 வாங்கியிருக்கிறார். மெரிட் ஸ்காலர்சிப்பில் 500 ரூபாய் உதவித்தொகை பெற்று அப்போதிருந்த கல்லூரி புதுமுக வகுப்பான பியூசி-க்கு அமெரிக்கன் கல்லூரியில் சேர்கிறார். இவரது தமிழ் ஆசிரியராக சாலமன் பாப்பையா இருந்திருக்கிறார்.

அமெரிக்கன் கல்லூரியிலும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் பொறியியல் படிக்க விரும்பியிருக்கிறார். தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருக்கிறார். மாணவனின் வயது 21ற்குள் இருக்க வேண்டும். இவர் பிறந்த வருடம் 1950 எனத் தெரியாமல் சர்டிபிகேட்டில் இருந்ததால் இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பு இவருக்கு பறிபோனது. பிறகு தியாகராசர் கல்லூரியில் பி.எஸ்.சி பிசிக்ஸ் சேர்கிறார். இவரது அண்ணன் ‘நீ என்ன வாத்தியாராகவா போகிறாய்? எனகேட்டு ஒரு யோசனை சொல்கிறார். பிறகு பி.எஸ்.சி பிசிக்ஸ் படிப்பை பாதியில்விட்டு நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிகவியல் சேர்கிறார்.

படிப்பை முடித்தபின் டெலிகாம் டிபார்ட்மென்டில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விண்ணப்பத்தை பார்த்து போஸ்ட்கார்டில் மதிப்பெண்களை எழுதி அனுப்பியிருக்கிறார். நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி கடிதம் வர தேர்வாகி மத்திய அரசு ஊழியராக வாழ்க்கையைத் தொடங்குகிறார். சென்னையில் இரண்டு மாத பயிற்சி முடிந்து மதுரை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வேலைக்கு வருகிறார். அப்போது (1975) இந்திராகாந்தி எமர்ஜென்சியை அறிவிக்கிறார்.

1976இல் சேலத்தில் ஒரு புதிய கடையைத் தொடங்குகிறார்கள். அப்போது 1000 போஸ்ட்கார்டுகளில் சேலம் டைரக்டரியைப் பார்த்து ஊரிலுள்ள முக்கிய ஆட்களுக்கு செந்தில்முருகன் காதி வஸ்திராலயம் என்ற புதுக்கடைக்கு ஆதரவு தரும்படி கடிதம் போடுகிறார். இவரது இந்த உத்தி பலனளித்து அந்தக் காலத்திலேயே ஒரே நாளில் 3000 ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது.

1979இல் மதுரை ஆரியபவன் அருகே ஐந்தாவது புதிய கடையைத் தொடங்குகிறார்கள். அடிக்கடி பணிக்கு விடுப்பு எடுத்து கடையைப் பார்த்துக் கொள்ளும் சூழல். 1985இல் மத்திய அரசு வேலையை விட்டு குடும்ப நிறுவனத்தை பார்த்துக் கொள்ளத் தொடங்குகிறார். 2020இல் 40,000 பேர் பணிபுரியும் நிறுவனமாக அவர்களது நிறுவனம் வளர்ந்து நிற்கிறது. மதுரையில் மட்டுமல்ல, ஆசியாவிலே பெரிய திரையரங்காக இருந்த தங்கம் திரையரங்கு இருந்த இடத்தில் சென்னை சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடையையும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை என்ற பெயரில் நகைக்கடையும் இவர்களுடையதுதான்.

டி.கே.சந்திரன் தன் வாழ்வில் வாசிப்பு, பயணம் ஏற்படுத்திய மாற்றங்களையும் எழுதியிருக்கிறார். தரத்தை முன்னிறுத்தி அறத்தோடு தொழிலை முன்னேற்றிய கதையையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார். அவரது கதையாக மட்டும் நில்லாமல் இந்நூல் வாழ்வில் கடின உழைப்பால் முன்னேறிய ஜி.டி.நாயுடு, இயற்கை வேளான் அறிஞர் நம்மாழ்வார், அப்துல்கலாம், ஆர். பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், தைரோகேர் வேலுமணி, சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் சுப்பிரமணியம், எடிட்டர் லெனின், சூழலியளாளர் நித்யானந்தம், களப்பணியாளர் மாணிக்க அத்தப்ப கவுண்டர், மதுரை காந்திமதி அம்மாள், உமா பிரேமன், அன்புராஜ் என பலரது கதையையும் சொல்லியிருக்கிறார். இதில் ஜி.டி.நாயுடு தவிர மற்றவர்களை நேரில் சந்தித்தும் இருக்கிறார். பவா செல்லத்துரை யூடியுப் உரைகள் டி.கே.சந்திரன் அவர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. அவரோடு நட்பு குறித்தும் எழுதியிருக்கிறார்.

அறக்கயிறு வாசித்து முடிக்கையில் “வறுமை என்பது சிந்தனையின் வறுமையாக இருக்க கூடாது. நாம் முயன்றால் எதையும் சாதிக்க முடியும். கடின உழைப்பும் செயலில் தெளிவும் சமூகத்தின் மீதான அக்கறையும் இருந்தால் கட்டாயம் நாமும் வெல்லலாம்” என்ற எண்ணம் நம்முள் எழுகிறது. இந்நூல் சுயமுன்னேற்ற நூல் அல்ல. ஆனாலும், வாசித்து முடித்ததும் நம்முள் உத்வேகம் எழும்.

அறக்கயிறு, வம்சி பதிப்பகம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற வழக்கிற்கேற்ப இங்கு முருகன் கோவில் அமைந்துள்ளது. சித்திரை முதல்நாளன்று இக்கோவிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு இப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் காவடி, பால்குடம், அலகுகுத்தி வருதல் என ஏராளமான நேர்த்திக்கடன்களோடு வருகின்றனர்.

“மாவூற்று வேலப்பர் கோவில் பழமையான முருகன் கோவில். வள்ளிக்கிழங்கைத் தோண்டும்போது முருகனின் சிலை சுயம்பு மூர்த்தியாக கிடைத்தது என பளியர்கள் சொல்கின்றனர். தமிழகத்தின் ஆதிகுடிகளான பளியர்கள் இக்கோவிலின் பூசாரிகளாக விளங்கிவருவது குறிப்பிடத்தக்க விசயம். சித்திரை முதல்நாளன்று நடக்கும் திருவிழா மிகச் சிறப்பாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திருவிழா” என பேராசிரியர் சுந்தர் காளி அவர்கள் கூறினார்.

நானும் நண்பர் ரகுநாத்தும் மதுரையிலிருந்து அதிகாலை கிளம்பி இருசக்கரவாகனத்தில் ஆண்டிப்பட்டி நோக்கி சென்றோம். வழிநெடுக மலைகள், சில இடங்களில் குடைவரை போல மரங்கள் அடர்ந்த சாலை, சேமங்குதிரைகளில் காவல் தெய்வங்கள், நிறைந்திருக்கும் கண்மாய்கள், ஆண்டிப்பட்டி கணவாய் என வேடிக்கை பார்த்தபடி சென்றோம். ஆண்டிப்பட்டியிலிருந்து தேனி செல்லும் வழியில் தெப்பம்பட்டி விலக்கிலிருந்து இடதுபுறமாகத் திரும்பினோம்.

சாலையோரமிருந்த ஒரு தேநீர்கடையில் சூடாக உருளைக்கிழங்கு சமோசாவும், அப்பமும் தின்றோம். “தமிழ் வருசப்பிறப்புன்னு சொல்றீங்க, ஒரு வருசத்தோட பேரு கூட தமிழ்ல இல்ல. அப்புறம் என்னா தமிழ்வருசப்பிறப்பு” கடைக்காரர் எப்போதும் வருபவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடல்களை கேட்டபடி தேநீர் அருந்தினோம். அங்கிருந்து மாவூற்று வேலப்பர் கோவில் செல்லும் வழியிலுள்ள ஊர்களிலெல்லாம் அன்னதானமும், தாகசாந்திக்கு நீர்மோரும், பானகமும் வழங்கியதைக் காண முடிந்தது.

இராஜதானி, ஆர். சுந்தரராஜபுரம், கண்டமனூர் விலக்கு கடந்து தெப்பம்பட்டி சென்றோம். மலையடிவாரத்தில் எல்லா வாகனங்களையும் நிறுத்தியிருந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்கத்தொடங்கினோம். கோவிலை நோக்கி நடக்கும் சாலையில் வழிநெடுக புளியோதரை, தக்காளிசாதம், தயிர்சாதம் என வண்டிகளில் வைத்து தட்டுதட்டாக கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அடிக்கிற வெயிலுக்கு பானகமும், நீர்மோரும் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

மக்கள் குடும்பம்குடும்பமாக கோவிலை நோக்கி நடந்தபடி இருக்கிறார்கள். காவடி எடுத்து வருபவர்கள் முன்னே நையாண்டி மேளம் அல்லது தேவராட்டம் வைத்து ஒரு குழு ஆடியபடி வருகிறார்கள். வண்ண உடைகளில் உருமியின் இசைக்கேற்ப தேவராட்டம் ஆடுவதைப் பார்க்கும்போது கொண்டாட்டமாகயிருக்கிறது. அதிலும் உருமியின் உருமல் இதயத்தை சுண்டி இழுக்கிறது.

சுடச்சுட வடை- பஜ்ஜி சுடுபவர்கள் ஒருபுறம், அல்வா, பூந்தி, மிக்சர் என பலகாரக் கடைக்காரர்கள் ஒருபுறம், தோடு, சிமிக்கி என அலங்காரப் பொருள் விற்பவர்கள் ஒருபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டுச்சாமான்கள் விற்பவர்கள் ஒருபுறம் என மலையடிவாரம் திருவிழாக்களையுடன் திகழ்கிறது. நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்துபவர்கள் ஒருபுறம். தங்களுக்கு பிடித்த படத்தை, பெயரை பச்சை குத்துபவர்கள் ஒருபுறம் என அடிவாரத்தில் விதவிதமான முகங்களைக் காணமுடிகிறது.

வழியில் கருப்புசாமி கோவில்முன் இரண்டு சேமங்குதிரைகள் வரவேற்கின்றன. ஆடுகளை கருப்புசாமிக்கு பலியிடுபவர்கள், பொங்கலிடுபவர்கள் கூட்டமாக குழுமியிருக்கிறார்கள். காவடி எடுத்துவருபவர்கள் கருப்புசாமியை வணங்கிச்செல்கிறார்கள். சிறுகுன்றின்மீது கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி மலைகள் அழகாக அமைந்துள்ளன. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் காவடி எடுத்துவருபவர்களோடு வந்த தேவராட்ட குழுவினர் ஆட கூட்டம் கூடி வேடிக்கை பார்க்கிறது. தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகள் இதுபோன்ற வழிபாடு சார்ந்த நிகழ்வுகளால் உயிர்ப்போடு திகழ்கின்றன.

காவடி எடுத்து வருபவர்கள், அலகுகுத்தி வருபவர்கள், பால்குடம் எடுத்து வருபவர்கள் முருகன் சன்னதிக்கு அருகில் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திவருகின்றனர். முருகன் சன்னதிக்கு நேரே மயில் சிலை அமைந்துள்ளது. மயிலுக்கு வலப்புறமாக ஏழுகன்னிமார் சிலைகள் உள்ளன.

கோவிலுக்கு பின்புறமுள்ள மலையில் சிறுசுனையிலிருந்து நீர் வருகிறது. அது நிரம்பியிருக்கும் சிறுகுளத்தில் பக்தர்கள் குளிக்கின்றனர். சிறுவர்கள் குதித்து விளையாடி மகிழ்கின்றனர். பெரிய மருதமரங்கள் நிறைந்துள்ளன. மலையிலிருந்து படியிறங்கிவரும் வழியில் சிறுகுகையில் முருகனின் சிலையொன்று உள்ளது.

மாவூற்று வேலப்பர் கோவில் திருவிழா முடிந்து அடுத்து தேனி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு செல்வதாக திருவிழாக்கடைகாரர்களிடம் உரையாடியபோது கூறினர். தாகம் தணிக்க பானகம் குடித்தோம், கம்மங்கூழ் குடித்தோம், நீர்மோர் குடித்தோம். ஆனாலும், வெயில் வெளுத்துவாங்கிக்கொண்டிருந்தது. அனல்பறக்கும் சாலையில் மதுரை நோக்கி வந்தோம்.

திருவிழாக்காட்சிகளையும் அதைக்குறித்த பேராசிரியர் சுந்தர்காளி உரையையும் காண எங்கள் மதுரை பக்கத்தை சொடுக்குங்கள்.

படங்கள் & காணொளி – ரகுநாத்

உளுவத்தலையனது இந்தப் பதிவு கட்டுரைப் பொருள் கருதி இங்கு மீள்பதிவேற்றம் செய்யப்படுகிறது (என்று அவர் போடச் சொன்னார்):

ஈரம்பிரியன் மதுரைக்காரன்

அல்லது ஈரம்பிரியை மதுரைக்காரி. நேற்றைய தமிழ் ‘தி இந்து’ நாளிதழில்  அழிவின் விளிம்பிலுள்ள நன்னீர் தாவரங்கள் பற்றி ஒரு கட்டுரை வந்தது. அதில் ஒரு சிற்றினத்தின் அறிவியல் பெயர் ‘மதுரையைச் சேர்ந்தது’ என்பதைக் குறிக்கும்விதமாக ஹைக்ரோஃபிலா மெஜுரென்சிஸ் (மதுரென்சிஸ்?) என்று இடப்பட்டிருப்பதை அறிந்து ஆர்வம் மிகுந்தது.

கூடுதல் விவரங்கள் தேடியதில் அந்தச்செடி இயற்கையைப் பேணுதற்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில்“உய்ய அச்சுறுத்த நிலை” (critically endangered)- யில் உள்ள ஒன்று எனத் தெரிகிறது. அதாவது மிகவும் அருகிப்போய், அழிவின் விளிம்பில் உள்ள நிலையில் இருந்து இல்லாதொழியும் நிலைக்கு மாறுவதான கட்டம்.

1958ல் பாலகிருஷ்ணனும், சுப்பிரமணியமும் மதுரை அழகர்மலையில் நல்லகுளம் என்ற இடத்தில் இச்சிற்றினத்தைக் கண்டறிந்து வகைப்படுத்தினராம். இவர்கள் ஸ்பெயினில் பிறந்து பம்பாய், பூனா, ஆக்ரா, கல்கத்தாவில் தாவரவியல் பயிற்றுவித்து இந்திய தாவரவள அளவைநிறுவனத்தின் இயக்குனராக உயர்ந்த பத்மஸ்ரீ மறைதிரு.சாந்தாபாவ் நினைவாக சாந்தாபாவுவா என்றொரு பேரினம் உருவாக்கி சாந்தாபாவுவா மதுரென்சிஸ் (santapaua madurensis) என்று பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு கார்த்திகேயனும் மூர்த்தியும் 2010ல் இதை ஹைக்ரோஃபிலா பேரினத்தில் இணைத்து ஹைக்ரோஃபிலா மதுரென்சிஸ் என்று மாற்ற அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்கிவருகிறது. இரவிக்குமார் என்பவர் 1984ல் கடைசியாக இச்செடிகளைச் சேகரித்திருக்கிறார். பிறகு எங்காவது அடையாளம் காணப்பட்டதா என்பது பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. கடைசியாகப் பார்த்த இடத்தில் சுமார் 50 செடிகள்தான் இருந்தனவாம். எனவே இப்போதும் இவ்வினச் செடி இருக்குமா என்பதே ஐயத்திற்கிடமானது. இதை அழியாது பேணுவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லையென்றும், இதன் தற்போதைய பரவலைக் கண்டறிவது உடனடித் தேவை என்றும் தெரியவருகிறது. மேலும் விவரங்கள் கேட்டு ஒரு தாவரவியல் பேராசிரியருக்கு மின்மடல் அனுப்பியிருக்கிறேன். ஏதாவது சொல்கிறாரா பார்க்கலாம்.

அது அப்படியே இருக்க, வேறெந்த உயிரினங்களுக்கெல்லாம் இவ்வாறு மதுரைக்காரர்களாக அறியப்படும் வாய்ப்பு கிட்டியிருக்கிறதென்று தேடினேன். பழைய மதுரை மாவட்டத்தின் பழனி மலையில் கொடைக்கானலில் கண்டறியப்பட்ட ப்ளாட்டிப்ளெக்ட்ரூரஸ் மதுரென்சிஸ் (platyplectrurus madurensis)-இன்ஆங்கிலப் பொதுப்பெயரை சொல்லுக்கு சொல் பெயர்த்தால் திருவிதாங்கூர் மலை முள்வால் பாம்பு என்று வருகிறது. ஊட்டிப் பாம்பு போலத் தோற்றமளிக்கிறது. தெரிந்தவர்கள் விளக்கலாம். குரோடலேரியா மதுரென்சிஸ் (crotalaria madurensis) என்ற மூலிகைச்செடி மற்றொன்று. (பகன்றை அல்லது கிலுகிலுப்பைச் செடியோடு தொடர்புடையதாக இருக்கலாம்). இன்னும் பல பாசிச்செடிகளும் (ப்ளாட்டிடிக்டியா, ராம்ஃபீடியம், பர்த்ராமியா, ஃபேப்ரோனியா, ப்ளாஜியோதீசியம்) பழைய மதுரை மாவட்டத்திற்குரியனவாக பெயரிடப்பட்டுள்ளன.

இதில் ஒரு குழப்பம் என்னவென்றால் இந்தோனேசியாவின் மதுரா தீவுகளில் கண்டறியப்பட்டதை அடிப்படையாக வைத்தும் மதுரென்சிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இப்படித்தான் பால்பிஃபர் மதுரென்சிஸ் (palpifer madurensis) என்றொரு விட்டில்பூச்சியும், ரைனோலோஃபஸ் மதுரென்சிஸ் (Rhinolophus madurensis) என்றொரு வவ்வாலும், அபோக்ரிப்டோடோன் மதுரென்சிஸ் (apocryptodon madurensis) என்றொரு கடல்வாழ் உறிஞ்சுமீனும், சிட்ரஸ் மதுரென்சிஸ் என்றொரு எலுமிச்சை / ஆரஞ்சு வகையும்   மதுராக்காரர்களாகியிருக்கின்றன.

 எது எப்படியோ, மெட்ராஸ் ஐ,  நியூ டெல்லி மெடல்லோ-பீட்டா-லாக்டமேஸ் -1 என்றெல்லாம் கெட்ட பெயர் வாங்காமல் மதுரைக்கார உயிரினங்கள் சிற்றினம் சேர்ந்தமை ஆறுதலுக்குரியதே. ஆனால் இவ்வுயிர்களில் பலவும் அழிவின் விளிம்பில் இருப்பது வருத்தத்துக்கும், உடனடி செயல்பாட்டுக்கும் உரியது.

நன்றி: உளுவத்தலையன்

அரண்மனை

மதுரை சித்திரைத் திருவிழா தமிழகத்தின் பெருந்திருவிழாவாகும். மாசி மாதத்தில் நடந்து கொண்டிருந்த மீனாட்சி திருக்கல்யாணத்தையும், சித்திரை மாதத்தில் தேனூருக்கருகில் வைகையில் இறங்கி கொண்டிருந்த அழகர் திருவிழாவையும் ஒருங்கினைத்து பெருந்திருவிழாவாக்கிய பெருமை திருமலைநாயக்கரையே சேரும். பாண்டியர்களுக்குப் பின் பல்வேறு ஆட்சி மாற்றங்களுக்கிடையில் அல்லல்பட்டுக்கிடந்த மதுரை மக்களுக்கு நிலையான ஆட்சியை அமைத்து கோயில், திருவிழாவென்று மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவர் மன்னர் திருமலை.

பசுமைநடையாக இம்முறை 06.04.2014 அன்று விளக்குத்தூணிலிருந்து பத்துத்தூண் வழியாக திருமலைநாயக்கர் அரண்மனைக்கு தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மூலம் சிறப்பு அனுமதி பெற்று சென்றோம். அரண்மனையின் முற்றத்தில் உள்ள இருக்கைகளில் பசுமைநடைக்குழுவினர் அமர்ந்தோம். இம்முறை 250க்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.

நாடகசாலை


பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மதுரையின் வரலாறை பாண்டியர் காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை சுருக்கமாகச் சொன்னார். திருமலைநாயக்கர் மற்றும் அரண்மனை குறித்த தகவல்களை மிகவிரிவாகச் சொன்னார். மிகஅதிக பொருட்செலவில் நடத்தப்படும் வரலாற்று கருத்தரங்குகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது அய்யாவின் உரையும் அன்றைய நிகழ்வுகளும். பல்வேறுவகையான சூழல்களிலிருந்து வந்த பலதரப்பட்ட மக்கள் மனதினிலும் மதுரை வரலாற்றை பசுமரத்தாணிபோல சாந்தலிங்கம் அய்யா பதிய வைத்துவிட்டார்.

கூடல்


மதுரையில் பாண்டியர்கள் அரண்மனை இருந்ததை பரிபாடலில் வரும் அண்ணல் கோயில் என்ற வரிகள் மூலம் அறியலாம். மீனாட்சியம்மன் கோயில் அருகிலுள்ள கமிஷனர் அலுவலகம் இருந்த இடத்தில் அந்த அரண்மனை இருந்திருக்கலாம். பாண்டியர் ஆட்சிக்கு இடையிடையே பலரும் மதுரையை ஆட்சி செய்திருக்கிறார்கள். விஜயநகர பேரரசுக்காலத்தில் கிருஷ்ண தேவராயர் மதுரையை நிர்வகிக்க நாகம நாயக்கரை அனுப்பினார். அவர் தானே இராஜா என்று அறிவித்துக் கொண்டார். அவரை மற்ற மந்திரிகள் போட்டுக் கொடுக்க அவரை பிடிக்க அவரது மகன் விஸ்வநாத நாயக்கர் மதுரை வருகிறார். நாகம நாயக்கரை கைது செய்து விஜயநகரம் செல்கிறார். கிருஷ்ண தேவராயரிடம் தந்தையை விடுவிக்கவும், மேலும் மதுரைக்கு தலைமை ஒன்று தேவைப்படுவதாகவும் சொன்னார். அதன்பின் விஸ்வநாத நாயக்கரையே மதுரையை நிர்வகிக்க கிருஷ்ண தேவராயர் அனுப்பினார். கி.பி.1530லிருந்து கி.பி.1736 வரை மதுரையை நாயக்கவம்சத்தைச் சேர்ந்த 13 பேர் ஆட்சி புரிந்தனர். அதில் ஏழாவது மன்னரான திருமலைநாயக்கர் நாயக்க மன்னர்களுள் முக்கியமானவராவார்.

திருமலைநாயக்கர் கி.பி.1623ல் அரச பொறுப்பேற்றார். திருச்சியில் சூழல் இவருக்கு ஒத்துவரவில்லை. மண்டைச்சளி பிடித்திருந்தது. மதுரைக்கு வரும்போதெல்லாம் மீனாட்சி அம்மனை தொழுது செல்வார். திண்டுக்கல்லில் திருமலைநாயக்கர் இருந்தபோது ஒருநாள் கனவில் மீனாட்சி சுந்தரர் ‘இனி திருச்சிக்குப் போக வேண்டாம். மதுரைக்கு நிலையாக வந்துவிட்டால் நோய் தீரும்’ எனச் சொன்னார். காலையில் முகங்கழுவி மூக்கைச் சிந்திய போது அவரது நோய் பூண்டோடு போய்விட்டதாக கதை சொல்கிறார்கள். திருச்சியிலிருந்த தலைநகரத்தை மதுரைக்கு மாற்றி கி.பி1659 வரை மதுரையை ஆட்சி செய்தார்.

மீனாட்சியம்மன் கோயில், புதுமண்டபம், இராயகோபுரம், தமுக்கம், தெப்பக்குளம், அழகர்கோயில், ஶ்ரீவில்லிபுத்தூர், இராமநாதபுரம் போன்ற பல இடங்களில் கோயில் திருப்பணிகள் செய்தார். திருமலைநாயக்கர் காலத்திலேயே மதுரைப்பகுதிக்கு கிறிஸ்துவர்கள் வந்துவிட்டனர். திருமலைநாயக்கர் அரண்மனை இத்தாலியப் பொறியாளரின் உதவிகொண்டு இந்து இஸ்லாமிய ஜெர்மானிய கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகும்.

குவிமாடங்கள் இஸ்லாமியக் கலைமரபிலும், தூண்கள் கோதிக் கலைமரபிலும், யாளி போன்ற சிலைகள் இந்தியக் கலைமரபிலும் கட்டப்பட்டது. மரம் இல்லாமல் செங்கலிலும், சுண்ணாம்பிலும் கட்டப்பட்ட அரண்மனை. மிக அழகிய இந்த அரண்மனை ரங்க விலாசம், சொர்க்க விலாசம் என்ற இரண்டு பகுதிகளை கொண்டிருந்தது. சொர்க்க விலாசம் பகுதியில் தர்பார் மண்டபம் அமைந்துள்ளது. இதில் அமர்ந்துதான் திருமலைமன்னர் கிடாசண்டை, சேவல்சண்டையெல்லாம் பார்ப்பாராம். மந்திரி மண்டபம் இருபுறமும் உள்ளது. 248 தூண்கள் இன்றுள்ளன.

திருமலைநாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கர் அரண்மனையை திருச்சிக்கு மாற்ற முயற்சித்து பாதியை இடித்துவிட்டார். அதனால் கட்டிய கொஞ்ச காலத்திலேயே பாதி இடிக்கப்பட்ட அரண்மனை இதுவாகத்தான் இருக்கும். நாயக்கர்கள் ஆட்சிக்குப்பின் மருதநாயகம் யூசுப்கான், மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இந்த அரண்மனை இருந்தது. சென்னை ஆளுநராகயிருந்த நேப்பியர் பிரபு மதுரைக்கு வந்து இந்த அரண்மனையை பார்த்து வியந்து சிதைந்து போயிருந்ததை புதுப்பிக்க ஐந்து லட்சத்திற்கும் மேல் பணம் ஒதுக்கினார். அதன்பின் 1975 வரை நீதிமன்றமாக செயல்பட்டது. அதன்பின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

(தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவின் உரையிலிருந்து சிறுதுளியை மட்டும் சித்திரைச் சிறப்பிதழுக்காக இப்பதிவில் தொகுத்துள்ளேன். மொத்த உரையையும் தனியொரு பதிவாக பின்னாளில் தொகுத்து வைக்கிறேன்)

திருமலைநாயக்கர் அரண்மனை

அன்பு

சாந்தலிங்கம்திருமலைநாயக்கர் அரண்மனையின் மிகப்பெரிய தூண்களையும், மேற்கூரைகளில் வரையப்பட்ட சித்திரங்களையும், சிலைகளையும் பசுமைநடைப் பயணிகள் இரசித்துப் பார்த்தனர். பசுமைநடைப்பயணம் ஒளிஓவியர்களையும், பதிவர்களையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. தர்பார் மண்டபத்தில் வைத்து வாழும் வரலாறாக உள்ள சாந்தலிங்கம் அய்யாவின் பிறந்தநாளை கொண்டாடினோம். வரலாற்றுப் பயணத்தில் வரலாற்று நாயகனை கொண்டாடிய மகிழ்ச்சி எல்லோர் முகத்திலும் பூத்தது. ஒரு சிறுவன் வாழ்க வாழ்கவே என்று பாடிய வாழ்த்துப்பா எல்லோரையும் மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தொல்லெச்சங்கள்

சம்பந்திஅங்கிருந்து எல்லோரும் நாடகசாலையையும், பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்துவந்த தொன்மையான சிலைகளையும் பார்த்தனர்.

பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு நூலை புதிதாக வந்த நிறைய நண்பர்கள் வாங்கினர். எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது.

எல்லோர் முகத்திலும் முக்கியமான நிகழ்வில் தாங்களும் பங்கேற்ற உணர்வு தெரிந்தது.

படங்கள் உதவி – அருண்

சொக்கப்பனை

கட்டுக்களங்காணும் கதிர் உழக்கு நெல்காணும்

அரிதாள் அறுத்துவர மறுநாள் பயிராகும்

அரிதாளின் கீழாக ஐங்கலத் தேன் கூடுகட்டும்

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று

யானை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை

–    நாட்டுப்புறப்பாடல்

மதுரை மிகப்பெரிய கிராமம். மதுரை வீதிகளில் இன்றும் பால்குடங்களும், முளைப்பாரி ஊர்வலங்களும் நையாண்டிமேளம் முழங்க நடந்து கொண்டுதானிருக்கிறது. மதுரை மிகப்பெரிய கிராமமாகயிருப்பதே அதன் பலம். எங்கள் பகுதியில் கார்த்திகைக்கு மறுநாள் சொக்கப்பனையும், பொங்கலுக்கு மறுநாள் பூரொட்டியும் கொண்டு செல்வதையும் அதைக்குறித்த தகவல்களை இதில் பதிவு செய்கிறேன்.

திருக்கார்த்திகைதான் தமிழர்களின் தீபத்திருநாள். மழையை வழியனுப்புவதற்காக தமிழர்கள் விளக்கேற்றி வழிபடுவதாக தொ.பரமசிவன் அய்யா சமயம் நூலில் கூறியிருக்கிறார். தமிழர் பண்டிகைகள் எல்லாம் பெரும்பாலும் முழுநிலவு நாட்களில் வரும். அந்தக் காலத்தில் இரவு நேரத்தில் இயற்கை வெளிச்சத்தில் விழாக் கொண்டாடிய நம் முன்னோர்களின் அறிவாற்றலை எண்ணி வியக்கிறேன். தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகைகள் முழுநிலவு நாட்களிலேயே கொண்டாடப்படுகிறது.

காய்ந்தசொக்கப்பனைதிருக்கார்த்திகையையொட்டி பெரிய கோயில்களிலும், கிராமங்களில் மந்தைகளிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சிவன் கோயில்களில் திருக்கார்த்திகையன்றும், பெருமாள் கோயில்களில் திருக்கார்த்திகைக்கு மறுநாளும் கொளுத்தப்படுகிறது. எங்க ஊர் அழகர்கோயிலுக்கு பாத்தியப்பட்டது என்பார்கள். அதனால் திருக்கார்த்திகைக்கு மறுநாள் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.

காய்ந்த பனை மரம், பனையோலை மற்றும் நல்ல காய்ந்த மரங்களைக் கொண்டு சிறுகுடிசை போல சொக்கப்பனைக்கு தயார் செய்வார்கள். மாலை ஏழுமணிக்கு பிறகு நல்ல நேரத்தில் ஊர் மந்தைக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டு வந்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். தீ நன்கு கொளுந்துவிட்டு எரியும். எரிந்து முடிந்ததும்  கனலோடு சில குச்சிகளை வேண்டியவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதை தங்கள் வயல்களில் ஊன்றி விடுவார்கள். பயிர்கள் செழிப்பாக வளரும் என்பது மக்கள் நம்பிக்கை.

ஜோதி

தைப்பொங்கலை அடுத்து தென்மாவட்டங்களில் கொண்டாடப்படும் திருவிழா சிறுவீட்டுப் பொங்கல். மார்கழி மாதம் முப்பது நாட்களும் அதிகாலையில் வாசல் தெளித்துக்கோலமிட்டு, சாணத்தில் பூ சொருகி வைக்கும் பழக்கம் உள்ளது. பீர்க்கு, பூசணி, செம்பருத்தி ஆகிய பூக்களே சாணத்தில் செருகப்படும். மாலையில் வாடிவிடும் இந்த பூக்களைச் சாணத்துடன் சேர்த்துக் காயவைத்துவிடுவார்கள். பொங்கல் முடிந்து 8-15 நாட்கள் கழித்து சிறுவீட்டுப்பொங்கல் கொண்டாடப்படும். பெண் பிள்ளைகளுக்காகவே வீட்டுக்குள் களி மண்ணால் ஆன சிறு வீடு கட்டப்படும். சிறு வீட்டு வாசலில் பொங்கல் அன்று பொங்கலிடப்படும். பிறகு, பொங்கலையும் பூக்களால் ஆன எருத்தட்டுக்களையும் பெண்கள் ஆற்றில் விடுவர்.                                                                                                                                                                                                                                  – தொ.பரமசிவன்

பூசணிப்பூகிராமங்களில் மார்கழி மாதத்தில் கோலமிட்டு அதில் பூசணிப்பூ அல்லது செம்பருத்திப் பூவை சாணத்தில் செருகி கோலத்தின் நடுவே வைப்பர். பார்ப்பதற்கே மிக அழகாகயிருக்கும். மாலையில் சாணத்தை வட்டமாக ரொட்டி போலத் தட்டி அந்தப் பூவை அதன் மேலே வைத்து பூரொட்டியாக்கி அதைக் காய வைத்துவிடுவார்கள்.

தைப்பொங்கலுக்கு மறுநாள் மாலை சிறுமிகள் அந்தப் பூரொட்டிகளை கிராமக்காவல் தெய்வக்கோயிலில் வைத்து வழிபட்டு அந்த பூரொட்டி கொண்டுபோன கூடைகளை நடுவில் வைத்து சுற்றிவந்து தானானே கொட்டி பின் பூரொட்டி மீது சூடம் பொருத்தி அதை அருகிலுள்ள மடைநீரில் விடுவர்.

கும்மி

சோனையா

வீட்டில் பெண்பிள்ளைகள் இருந்தால்தான் வாசலில் பூசணிப்பூ வைக்க வேண்டுமென்ற கருத்தும் இருக்கிறது. முன்பெல்லாம் பூரொட்டி கொண்டுவரும் சிறுமிகளோடு கூட வரும் அவர்களது மூத்த சகோதரிகளைக் காண இளைஞர்கள் கோயிலுக்கு வழிபாடு செய்ய வருவதும், அவர்கள் பார்க்கும் இடங்களில் விளையாடுவதும் நடக்கும். இப்போதெல்லாம் இளையதலைமுறையிடம் இந்த ஆர்வம் குறைந்து வருகிறது.

பூரொட்டி

நீர்நிலைகளை நம் முன்னோர்கள் கொண்டாடி வழிபட்டு இதுபோன்ற திருவிழாக்களை அமைத்திருக்கிறார்கள். ஆனால், நாம் இன்று பிளாஸ்டிக் கவர்களையும், கழிவுகளையும் போட்டு சாக்கடையாக்கி வைத்திருக்கிறோம். நம் முன்னோர்களின் செயல்களை மூடப்பழக்க வழக்கங்கள் என்று நிறைய ஒதுக்கிவிட்டோம். ஐம்பூதங்களையும் நேசித்துக் காத்த அந்த இயற்கையோடான மனநிலை நமக்கு வாய்க்குமா? நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் எல்லாவற்றையும் வணங்காவிட்டாலும் பரவாயில்லை அவைகளை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.

5karudasevai

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு!

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!

–    பெரியாழ்வார்

மனிதர்களுக்கு தங்களுக்குத் தெரியாத விசயங்களின் மேல் ஆர்வமும், ஐயமும் ஏற்படுவதுண்டு. இதற்கு பாண்டிய மன்னனும் விதிவிலக்கல்ல. அரசியின் கூந்தலில் இயற்கையாகவே மணம் உண்டா இல்லையா என்ற ஐயம் பாண்டிய மன்னனுக்கு வந்தபோது அதை வைத்து சிவபெருமான் நக்கீரர், தருமியைக் கொண்டு ஒரு திருவிளையாடலையே நிகழ்த்தினார். அதைப்போல ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியமன்னனுக்கு வேதங்கள் குறிப்பிடும் உயர்கடவுள் யார் என்ற ஐயம் வர அதைத்தீர்த்து வைக்க ஒரு அறிஞர் குழுவையும் ஏற்பாடு செய்தான். ஒரு மண்டபத்தில் பொற்கிழியை மாட்டி யார் சரியான பதிலைக் கூறுகிறார்களோ அப்போது அந்த பொற்கிழி தாளும்படி செய்தான்.

பெரியாழ்வார் வந்து நாராயணனே உயர்கடவுள் என்ற சொன்ன போது பொற்கிழி தாழ்ந்து பணிந்தது. அதைக்கண்ட ஸ்ரீவல்லபன் அகமகிழ்ந்து பெரியாழ்வாரை யானைமேலேற்றி வீதிவலம் வரச்செய்தான். கூடல்மாநகரில் நிகழும் இந்நிகழ்வை காண பெருமாளும் தன் பெரியதிருவடியான கருடவாகனத்தில் ஏறி வந்தார். கருடவாகனத்தில் வந்த பெருமாளின் அழகைக்கண்டு கண்பட்டுவிடுமென்று பெரியாழ்வார் ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என்ற பாசுரத்தை வாழ்த்திப் பாடினார். பெருமாளை மட்டும் வாழ்த்தாமல், போர்களுக்கு உதவும் பெருமாளின் சங்கான பாஞ்சசன்யம் வரை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்.

நன்றி:http://aazhvarmozhi.blogspot.in/2009/04/blog-post.html

இந்நிகழ்வை நினைவூட்டும்விதமாக ஆண்டுதோறும் புரட்டாசிமாதம் பௌர்ணமியன்று கூடல்அழகர் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்த்துகின்றனர். ஐந்து கருடசேவை குறித்து ‘மதுரை கோயில்களும் திருவிழாக்களும்’ நூலில் முனைவர்.ஆறுமுகம் எழுதியிருந்ததை வாசித்து அதை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவலிலிருந்தேன். இம்முறை புரட்டாசி மாதம் தல்லாகுளம் பெருமாள் கோயில் சென்றபோது 19.09.2013 அன்று ஐந்து கருடசேவை நடக்கிறது என்ற பதாகையைப் பார்த்ததும் விழாவிற்கு செல்ல முடிவெடுத்தேன். மாலை பணிமுடிந்தவுடன் என் துணைவியுடன் கூடலழகர் பெருமாள் கோயில் சென்றேன்.

koodalalagarkoil

ஐந்துகருடசேவைத் திருவிழாவை கூடலழகர் பெருமாள் கோயில், மதனகோபாலசாமி கோயில், வீரராகவப் பெருமாள்கோயில் என மூன்று பெருமாள்கோயில்களும் இணைந்து கொண்டாடுகிறார்கள். நாங்கள் சென்றபோது மூன்று கருடவாகனங்களில் பெருமாள் காட்சி தந்துகொண்டிருந்தார். கூடலழகர்பெருமாள் கோயில் முன் உள்ள மண்டபத்திற்கு சற்றுத் தொலைவில் கிழக்கு நோக்கி யானைவாகனத்தில் பெரியாழ்வார் கருடவாகனத்தைப் பார்க்க நின்றிருந்தார். வந்திருந்த மக்கள் கூடலழகர் வந்துட்டாரா, மதனகோபாலசாமி வந்துட்டாரா என சொந்தக்காரர் வருகையைப் போல பேசிக்கொண்டார்கள். எனக்கு யார் எந்தப் பெருமாள் என்று தெரியவில்லை.

karudasevai

பௌர்ணமி என்பதால் நிலவொளியில் அந்த சூழலே மிகவும் ரம்மியமாகயிருந்தது. முழுநிலவு நாட்களில் திருவிழாக்கள் கொண்டாடிய நம் முன்னோர்களை எண்ணும் போது பெருமையாகயிருக்கிறது. கூடலழகர் வர மக்கள் பரவசத்தில் ‘நாராயணா! நாராயணா!’ என்று வணங்கினர். எனக்கு தசாவதாரம் படத்தின் முதல்காட்சி ஞாபகம் வந்தது. ‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ பாடல் இடைவெளியிலும் பெரியாழ்வாரின் இந்த ‘பல்லாண்டு பல்லாண்டு’ பாசுரத்தை வைணவ அடியார்கள் பாடுவார்கள்.

ஐந்துகருடசேவைக்கு கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து இரண்டு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். தங்கக்கருடவாகனத்தில் வியூக சுந்தரராசப்பெருமாளும், மற்றொரு கருடவாகனத்தில் கூடலழகரும்  வருகிறார்கள். தெற்குமாசி வீதிக்குத் தென்புறமாக எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து வீரராகவப் பெருமாளும், வடக்குமாசிவீதியிலுள்ள கிருஷ்ணன் கோயிலில் உள்ள கருடவாகனத்தில் வீரராகவப்பெருமாள் கோயிலில் உள்ள உற்சவரான ரெங்கநாதரும் வருகிறார்கள். மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பிலுள்ள மதனகோபாலசாமி கோயிலிலிருந்து மதனகோபால சாமியும் ஐந்து கருட சேவை உற்சவத்திற்கு கூடல்அழகர்கோயில் முன் எழுந்தருளி கூடல்மாநகர மக்களை மகிழ்விக்கிறார்கள்.

koodal

madurasweetஒரே சமயத்தில் ஐந்து கருடவாகனங்களில் பெருமாளைக் காணும் போது நமக்குப் பரவசமாகயிருக்கிறது. தீபாராதனை நடந்ததும் ஐந்து கருடவாகனங்களில் பெருமாள் மாசிவீதிகளை நோக்கி கிளம்பினார். நாங்களும் மெல்ல வீடு நோக்கி கிளம்பினோம். கோயிலுக்கிட்ட விற்ற சவ்வுமிட்டாய் வாங்கினேன். அதன் சுவை அடிஉயிர்வரை இனித்தது. அதன் ரோசா வண்ணம் ஒட்டி வாயெல்லாம் சிவப்பாகியது. சவ்வுமிட்டாய் வாங்கிக் கொண்டுபோய் உடன்பணிபுரிபவர்களுக்கெல்லாம் கொடுத்து அவர்களின் பால்யகால நாட்களை நினைவூட்டியது மகிழ்வான விசயம். ஒரு அண்ணன் சவ்வுமிட்டாய் தின்று இருபது அல்லது முப்பது வருடங்கூட இருக்கும் என்றார். கூடலழகர் கோயில் செல்லும் வழியிலுள்ள வடைக்கடையில் முள்ளுமுருங்கை கீரை வடை, பருப்புவடை வாங்கி தின்றோம். மதுரையைப் போல மற்ற ஊர்களில் வடை கிடைக்காது. அதுவும் இங்கு வடைக்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சாம்பார், சட்னிக்கு இணையே இல்லை.

சில கோயில்களில் ஐந்துக்கும் அதிகமான கருடசேவைகள் ஒருநாளில் நிகழ்த்தினாலும் புரட்டாசி பௌர்ணமிக்கு கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு. ஐந்துகருடவாகனங்களில் பெருமாள் மாசிவீதிகளைச் சுற்றி வருகிறார். மக்கள் திரளாக வந்து பெருமாளை வணங்கி மகிழ்கிறார்கள்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். அசைவம் உண்பவர்களில் கூட சில பிரிவினர் இந்த மாதம் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறார்கள். மதுரையில் சௌராஷ்டிர மக்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வீடுவீடாக காணிக்கைப் பெற்று அதை வைத்து கோயிலில் பொங்கல் கொடுக்கிறார்கள். கோவிந்தோ! கோவிந்தோ! என்ற ஒலியை மதுரையில் அதிகமாக சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் அதிகம் கேட்க முடியும்.

திருவிழாக்களின் தலைநகரில் திருவிழா பார்த்து அலைவதை நினைத்தாலே இனிக்கும்.

நன்றி:

happyman

பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்

பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி

தோண்டிய புலவர் சொல்லடியும் – இளம்

தோகைமார்தம் மெல்லடியும்

மயங்கி ஒலித்த மாமதுரை – இது

மாலையில் மல்லிகைப் பூமதுரை.  

 – வைரமுத்து

மாமதுரை போற்றுவோம் விழாவில் தேரோடும் வீதிகளில் ஊர்கூடும் திருவிழா என்ற பாரம்பரிய நடன அணிவகுப்பு மதுரைக்கல்லூரியிலிருந்து தமுக்கம் வரை நடந்தது. தொன்மையைப் போற்றுவோம் தினத்திற்கு பொருத்தமாக இந்த விழா அமைந்தது. தமிழக ஆளுனர் திரு.ரோசய்யா அவர்கள் கொடியசைத்து துவங்கிவைக்க ஊர்வலம் கிளம்பியது.

maamadurai

kokalikattai

கரகாட்டம், கும்மியாட்டம், முளைப்பாரி, தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், கொக்கலிக்கட்டையாட்டம், பொய்க்கால் குதிரை, பலவேசம், பெரியமேளம், ஜிக்காட்டம் என்ற பலவகை ஆட்டங்களுடன் சில வாகனங்களில் மதுரையின் பெருமையை பறைசாற்றும் காட்சிக்கூடங்களுடன் அணிவகுப்பு வந்தது. பாண்டியர்களின் அயல்நாட்டு வாணிகம், பென்னிகுயிக் கட்டிய பெரியாறு அணை, மதுரையில் அரையாடைக்கு மாறிய மகாத்மா எனப் பல காட்சிகளின் மாதிரிச்சிலைகள் வியக்க வைத்தது.



நாட்டுப்புறக்கலைஞர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களும் கலந்து கொண்டு தப்பாட்டம், ஒயிலாட்டம் எனப் பல்வகையான நடனங்களை நிகழ்த்தியபடி வந்தனர். மீனாட்சியம்மன், கண்ணகி, திரியாட்டக்காரர்கள், கருப்புசாமி வேடமிட்டும் மாணவ மாணவியர் வந்தனர். தற்காப்புக்கலைகளை நிகழ்த்தியபடி வந்த மாணவமாணவியர்களை காணும்போது பெருமையாகயிருந்தது.

oyillattam

நானும் நண்பர் இளஞ்செழியனும் மதுரைக்கல்லூரி மைதானத்திலிருந்து தமுக்கம் வரை ஊர்வலத்தினூடே சென்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆடும் குதிரைகளை மும்பையிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். ஒரு சாரட்டில் திருமலைநாயக்கர் அமர்ந்து வருவதைப் போல கல்லூரி மாணவியர் ஒரு மாதிரிக்காட்சியை அமைத்து வந்தனர்.

மதுரைக்கல்லூரியிலிருந்து கிளம்பி ஊர்வலத்தினூடே நடந்தோம். வழிநெடுக மக்கள் திரளாக வந்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். கடைவாசல்கள் முன்பாக நீர்தெளித்து வண்ணகோலமிட்டு கலைஞர்களை வரவேற்றனர். நிறைய இடங்களில் தண்ணீர் மற்றும் ரொட்டி கொடுத்து கலைநிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு தங்கள் அன்பை தெரிவித்தனர்.

tappatam

kottai

பெரியார்நிலையம் அருகில் நல்ல கூட்டம். மேலவாசல் கொத்தளத்தைக் கடக்குமிடத்தில் நிறைய மக்கள் குழுமியிருந்தனர். நேதாஜிசாலை வழியாக சென்று மேலமாசிவீதியை அடைந்தது. யாதவர் கல்லூரியிலிருந்து ஒரு வாகனத்தில் அழகர் குதிரையில் வருவதைப் போன்ற ஒரு மாதிரியைக் கொண்டு வந்திருந்தனர். மாமதுரையைப் போற்ற திருமாலிருஞ்சோலை அழகன் வந்துவிட்டார். மக்கள் சித்திரைத்திருவிழாவிற்கு சாமி பார்க்க வருவதைப் போல திரளாக வந்திருந்தனர்.

alagar

மேலமாசிவீதியிலிருந்து தெற்குமாசிவீதி மறவர்சாவடி வழியாக ஊர்வலம் வந்தது. மக்கள் கூட்டம் கலைஞர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. முக்கிய சந்திப்புகளிலும், மக்கள் கூடியுள்ள இடங்களிலும் மகிழ்ச்சி பொங்க ஆடிவந்தனர். மதுரை விரிவுபடுத்திய கலெக்டர் ப்ளாக்பர்ன நினைவு விளக்குத்தூண் அருகில் தேவராட்டக்குழுவினர் சுழன்று, சுழன்று ஆடிவந்தனர்.

devarattam

கீழமாசிவீதியில் கடைக்காரர்கள் பாரம்பரிய கலாச்சார நடன ஊர்வலத்தைக் காணத் திரளாக கூடிநின்றனர். தேர்நிற்கும் கீழமாசிவீதியில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க ஆடிவந்தனர். தைமாதத்தில் சித்திரைத்திருவிழா போல மக்கள் திரண்டிருந்தனர். கீழமாசிவீதி, யானைக்கல், புதியபாலம் வழியாக ஊர்வலம் வந்தது. ஜிக்காட்டக்குழுவினருடன் யானைக்கல் பெரிய பாலத்தில் வந்தோம்.

pallivaasal

கோரிப்பாளையம் வந்து கொண்டாட்டமான மனநிலையில் கொண்டாடும் சுவைகளில் கிடைக்கும் பவண்டோ குடித்தோம். கோரிப்பாளையம் தர்ஹா சார்பாக ஒரு வண்டியில் முன்னால் சாம்பிராணி போட்டுச் சென்றனர். தமுக்கம் மைதானத்தை வண்டிகள் வந்து சேர்ந்தபோது பார்த்த மக்கள் கூட்டம் சித்திரைப் பொருள்காட்சியை நினைவூட்டியது.

puliyaattam

மைதானத்தில் பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், ஜிக்காட்டம் என ஒவ்வொரு குழுவும் ஆடத்தொடங்க மக்கள் அவர்களைச் சுற்றிக் குழுமினர். பொள்ளாச்சிப் பகுதியில் ஆடப்படும் ஜிக்காட்டத்தை நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த ஆட்டத்தை தமுக்கத்தில்தான் முதன்முதலில் பார்க்கிறேன். துடியான ஆட்டம். ஆட்டம் முடிந்ததும் பார்வையாளர்களில் ஒருவர் ஆடியவர்களை மகிழ்வோடு கட்டுப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இளஞ்செழியனும் ஜிக்காட்டத்தை தனியே பதிவு செய்ய விரும்புவதாகச் சொன்னார்.

நம்முடைய பாரம்பரிய நடனங்களைப் பார்க்கும்போது எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எழுகிறது. நினைப்பதையெல்லாம் நடத்த வாழ்க்கை அனுமதிக்குமா என்ன?. நாட்டுப்புறக் கலைஞர்கள் நல்ல மருத்துவர்கள். ஆட்டங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நம் மனதில் உள்ள கவலைகள் விழந்தடித்துக் கொண்டு ஓடிவிடுகிறது. நாட்டுப்புறக்கலைகளை போற்றுவதும், நாட்டுப்புறக் கலைஞர்களை கொண்டாடுவதும் நமது கடமை.

jimnastics

மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்களுக்கும், மாவட்ட மேயர் ராஜன் செல்லப்பா அவர்களுக்கும், மாமதுரை போற்றுவோம் விழாக்குழுத் தலைவர் கருமுத்து கண்ணன் அவர்களுக்கும், துணைத்தலைவர்கள் சு.வெங்கடேசன் மற்றும் பரத் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

மாமதுரை போற்றுவோம்

நாட்டுப்புறக்கலைகள் அகமும் புறமும்