மதுரையும் தொ.பரமசிவனும்

Posted: திசெம்பர் 3, 2011 in நான்மாடக்கூடல், வழியெங்கும் புத்தகங்கள்

பேசுகிற இடம் மதுரை. பேசப்படுகிற விசயம் புத்தகம். எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிகமாக புத்தகங்கள் பிறந்தது என்றால் மதுரையில்தான் அதிக புத்தகங்கள் தோன்றியுள்ளன. ‘கலித்தொகை’ என்ற செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. ‘பரிபாடல்’ என்ற செவ்விலக்கியத்துக்குப் பெயரே மதுரை இலக்கியம். அப்பேர்ப்பட்ட ஊரிலே நின்று பேசுகிறேன் என்ற உணர்வு எனக்கு தன்னியல்பாகவே உண்டு. இந்த ஊரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல்.

– தொ.பரமசிவன்

(உலகமயமாக்கலில் பண்பாடும், வாசிப்பும்)

 

மதுரையைப் பற்றி பேசத்தொடங்கினாலோ, நினைக்கத்தொடங்கினாலோ அல்லது வாசிக்கத்தொடங்கினாலோ வரும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. அதுவும், தொ.பரமசிவன் அய்யா போன்றவர்கள் மதுரை குறித்துப் பேசும் போது அதைக் கேட்கும் வாய்ப்பைக் கொடுத்த மதுரைக்கும் தமிழுக்கும்  மிகுந்த நன்றி. மேலும், மதுரை புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்த அன்றைய மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன் அவர்களுக்கும், கவிஞர் தேவந்திரபூபதி அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

 

தொ.பரமசிவன் அய்யாவின் ‘பண்பாட்டு அசைவுகள்’ என்னும் புத்தகத்தை சகோதரர் எனக்கு வாசிக்கத் தந்தார். வாசித்ததும் ‘தொ.ப’ மீது பெரும் பற்று ஏற்பட்டது. அச்சமயம் குங்குமத்தில் வந்த ஒரு பேட்டியில் கமல்ஹாசனும் தொ.பரமசிவன் அய்யாவின் ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ நூல் குறித்து கூறியிருந்தார். மதுரை இரண்டாவது புத்தகத்திருவிழாவில் நான்மாடக்கூடல் எனும் அரங்கு தொடங்கிய அன்று தொ.பரமசிவன் அய்யா ‘சங்ககால மதுரை’ என்ற தலைப்பில் பேசினார். மிக அற்புதமான உரை. மதுரையின் பெயர்க்காரணம், மீனாட்சியம்மன், சித்திரைத்திருவிழா, சங்க இலக்கியங்கள் என மிக விரிவானதொரு உரை நிகழ்த்தினார். அன்றிலிருந்து நான் தொ.ப’வின் தீவிர வாசகனாகிவிட்டேன்.

 தொ.ப’அய்யா எழுதிய ‘அழகர்கோயில்’ என்னும் நூலை வாங்கத் தேடி அலைந்தோம். முதல்பதிப்பு மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் வெளியீடாக வந்திருக்கிறதென்று கேள்விப்பட்டு அங்கு போய் விசாரித்தேன். அங்கும் கிடைக்கவில்லை. அச்சமயம், தென்திசை படையலாக ‘அழகர்கோயில்’ வர சகோதரர் சென்னையிலிருந்தே வாங்கிவந்தார். அதை வாசித்ததும் தொ.பரமசிவன் அய்யாவின் மேலான மதிப்பு அதிகரித்தது. பல ஆண்டுகளாக பார்த்து வரும் சித்திரைத்திருவிழா மற்றும் அழகர்கோயில் குறித்து இவ்வளவு அரிய தகவல்கள் உள்ளதா என வாசித்து வியந்து போனேன்.

அடுத்து, மதுரை மூன்றாவது புத்தகத்திருவிழாவில் ‘உலகமயமாக்கலில் பண்பாடும் வாசிப்பும்’ என்ற தலைப்பில் பேசினார். அன்றும் மதுரை குறித்து பல முக்கியமான தகவல்களை கூறினார். நான்காவது மதுரை புத்தகத்திருவிழாவில் ‘மண்ணும் மக்களும்’ என்ற தலைப்பில் மதுரை குறித்தும், அவர் வசிக்கும் பாளையங்கோட்டை குறித்தும் பேசினார். மதுரை தியாகராசர் கல்லூரிப் பணியை விட்டு செல்லும் போது  மதுரையை ‘என்று காண்பேன் இனி’ எனத் தோன்றியதாக அன்று கூறினார். அந்த வருடப் புத்தகத்திருவிழாவில் அவருடைய ‘சமயம்’ நூல் வாங்கினேன். ஐந்தாவது மதுரை புத்தகத்திருவிழாவில் தொ.பரமசிவன் அய்யாவை சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசி அவரிடம் ஒரு நூலில் கையெழுத்து வாங்கினேன். பின் மதுரையில் ஒரு கல்லூரியில் தொ.ப’அய்யா பேசுகிறார் என்று கேள்விப்பட்டு அன்று சென்று அவரது உரையைக் கேட்டுவிட்டு ஆ.சிவசுப்ரமணியன் எழுதிய ‘உப்பிட்டவரை’ என்னும் நூலில் கையெழுத்து வாங்கினேன்.

‘நாள் மலர்கள்’ என்ற தொ.பரமசிவன் அய்யா எழுதிய கட்டுரைத் தொகுப்பில் மதுரை மாநகரம் குறித்து வாசித்தேன். வாசிக்க வாசிக்க ஒருபுறம் பெருமையும், மறுபுறம் வருத்தமும் தோன்றின. உலகின் தொன்மையான நகரம் மதுரை தன் அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து வருவது வருந்தத்தக்கது.

 

“மதுரையைக் காப்பாற்றுவது நம் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகும்’’ என்று தொ.ப’ கூறுவது போல நம் பண்பாட்டைக் காக்க உலகமயமாக்கலின் பிடியிலிருந்து நம்ம மதுரையை மீட்டெடுப்போம்.

தொ.ப’வின்  கட்டுரை கீழே உள்ளது.

 

“பட்டணந்தான் போகலாமடி பொம்பள, பணம் காசு தேடலாமடி” என்பது ஒரு பழைய திரைப்படப்பாடல். இந்த பாட்டின் உண்மையான பொருள் என்ன? நகரங்களில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, தொழிலாளர் பெருக்கம், போக்குவரத்து வசதிகள், பணப்புழக்கம் எல்லாம் இருக்கும். அங்கே வாழ்க்கைக்கு எல்லாவிதமான உத்திரவாதமும் உண்டு என்பதுதான். பல ஊர்கள் இணைந்து நாடுகள் உண்டாகிறபோதே நகரங்கள் பிறந்து விடுகின்றன. எனவே உலகெங்கிலும் உள்ள நகரங்களைப் பற்றிய அறிவு என்பது மனிதனின் பொது அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்கின்றது.

மனித நாகரிக வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த ஒரு கட்டம் நகரங்களை உருவாக்கியது ஆகும். வாணிகத்திற்கான நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்களில் அரசியல் தலைமைகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் இடங்களாக நகரங்கள் உருவாயின. நீர் ஊர்திகள் வளர்ச்சி பெற்று கடல் வாணிகம் வளர்ந்த போது துறைமுக நகரங்கள் உருவாயின. உலகெங்கிலும் நகரங்கள் உருவான கதை இதுதான்.

உலகின் பழைய நகரங்களையெல்லாம் பாருங்கள் அவை ஏதேனுமொரு ஆற்றங்கரையில் அல்லது கடற்கரையில் அல்லது குன்றுகள் சூழ அமைந்திருக்கும். உலகின் பழைய நகரங்களில் ஒன்றான மதுரையும் அப்படித்தான். பரங்குன்றம் மலை, பசுமலை, சமணமலை, நாகமலை, அழகர்மலை, ஆனைமலை என்று குன்றுகள் சூழ வைகை ஆற்றங்கரையில் உருவான கோட்டை நகரந்தான் மதுரை.

காலப்போக்கில் பழைய நகரங்கள் அழிந்துபோகப் புதிய நகரங்கள் உருவாயின. காலவெள்ளத்தில் கரைந்து போகாமல் தம்மை இன்றளவும் நிலை நிறுத்திக்கொண்ட நகரங்கள் மிகச் சிலவே. தமிழ்நாட்டில் மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரங்களும் குறைந்தது 25 நூற்றாண்டுக் கால வரலாறு உடையனவாக இன்றளவும் வாழ்ந்து வருகின்றன. இவை இரண்டிலும் மதுரை தனிச்சிறப்புகள் பல உடைய நகரமாகும்.

தமிழ்நாட்டின் பழையகால நெடுஞ்சாலைகளும் புதிய நெடுஞ்சாலைகளும் சந்திக்கும் மையப் புள்ளியாக தென்தமிழ்நாட்டின் மதுரை அமைந்திருக்கின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் வாழ்ந்த தடயங்கள் மதுரைக்கருகில் உள்ள சிவரக்கோட்டையிலும், துவரிமானிலும் கற்கருவிகளாக இன்றும் கிடைக்கின்றன. கற்காலத்தைத் தாண்டி வந்த நாகரிக மனிதர் வாழ்ந்த அடையாளங்களான ஈமத் தாழிகள் மதுரை நகரத்திற்கு உள்ளேயே கோவலன்பொட்டல், பழங்காநத்தம், அனுப்பானடி, தத்தனேரி ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத் தமிழிக் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டிலேயே மதுரையைச் சுற்றித்தான் திருப்பரங்குன்றம், கொங்கர்புளியங்குளம், திருவாதவூர், அழகர்கோயில், அரிட்டாபட்டி, ஆனைமலை ஆகிய இடங்களில் அதிகமாகக் கிடைக்கின்றன. இவையெல்லாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தமிழர்கள் நாகரிகம் கண்ட பகுதிகளில் ஒன்றாக மதுரை இருந்ததற்கான சான்றுகள் ஆகும்.

மதுரை நகரத்தின் பழைய பெயர் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துகளைச் சொல்கிறார்கள். புராணங்கள் பல கதைகளைச் சொல்கின்றன. கிறித்துவுக்கு முற்பட்டகாலக் கல்வெட்டுகளில் ‘மத்திரை’ என்ற பெயர் காணப்படுகிறது. கி.பி.750 முதல் 900 வரை உள்ள கல்வெட்டுகளில் மதுரை என்பதற்குப் பதிலாக ‘மதிரை’ என்ற பெயரே காணப்படுகிறது. பாமர மக்கள் வழக்கிலோ இது ‘மருதை’ ஆகும். குதிரை, பேச்சு வழக்கில் குருதை ஆனது போல மதிரையே பேச்சு வழக்கில் மருதை ஆனது என்று கூறுகின்றனர். இந்தக் கருத்துதான் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது.

உலகில் பழைய நகரங்கள் எல்லாம் திட்டமிட்டு அமைக்கப்பட்டவையே. ரோம், வெனீசு, மொகஞ்சதரோ ஆகியவற்றைப் போல மதுரையும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு நகரமாகும். ‘மதுரை நகரம் தாமரை பூப்போன்றது. அதன் தெருக்கள் தாமரைப்பூவின் இதழ்களைப் போன்றவை. இதழ்களுக்கு நடுவே அமைந்திருக்கும் பொகுட்டினைப் போலக் கோயில் அமைந்திருக்கிறது’ எனப் பரிபாடல் இலக்கியம் பாராட்டுகின்றது மாசி வீதிகளின் சந்திப்பில் மிகப்பெரிய தேரினைத் திருப்புவதற்கு வசதியாக வடம்போக்கித் தெருக்கள் அமைக்கப்பட்டிருப்பதும் தேர்வடங்களில் ஒன்றிரண்டை அத்தெருக்களுக்குள் கொண்டு சென்று மக்கள் இழுப்பதும் இன்றளவும் காணக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். 90°யில் நேராக அமைந்த மொகஞ்சதாரோ தெருக்களைப் போல அல்லாமல் மதுரை நகரத்துத் தெருக்கள் சற்றே வளைந்தவையாகும்.

தமிழ்நாட்டின் கோட்டை நகரங்கள் எல்லாமே நிறைய நீர் வசதிகளைக் கொண்டதாக இருக்கும். மதுரைக் கோட்டையும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. வடபுறத்தில் வைகை ஆற்றை எல்லையாகக் கொண்டிருந்தது. அதன் மேற்குப் புறத்தில் மாடக்குளம் என்னும் மிகப்பெரிய குளம் இருந்தது. வைகையாற்றில் இருந்து ஒரு நீர்க்கால் பிரிக்கப்பட்டு ‘கிருதமாலை’ என்னும் பெயரோடு கோட்டையின் மேற்கு, தெற்குச் சுவர்களை ஒட்டி ஓடிக்கொண்டிருந்தது. கோட்டையின் வெளிப்புறத்தில் கிழக்கு வாசலை ஒட்டியும் வடக்கு வாசலை ஒட்டியும் இரண்டு தெப்பக்குளங்கள் இருந்தன. கோட்டையின் உள்ளே மேற்குப் புறத்தில் ஒரு தெப்பக்குளமும் கோட்டையின் நடுவில் அமைந்த கோவிலுக்குள் ஒரு தெப்பக்குளமும் ஆக இரண்டு இருந்தன. இவை தவிரப் பல கிணறுகளும் இருந்திருக்கின்றன. கோட்டையின் மழைநீர் வடிகாலாக கிருதமாலை நதியும் வைகை ஆறும் பயன்பட்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியம் காலந்தோறும் தவறாது பாடும் நகரம் மதுரையாகும். இலக்கியங்கள் பாடும் பழையாறை, பூம்புகார் போன்ற பழைய நகரங்கள் அழிந்து போயின. தஞ்சை, கருவூர்(கரூர்), காஞ்சி போன்ற நகரங்கள் சிதைந்து அளவில் சுருங்கிப் போயின. மதுரை நகரம் மட்டும் சித்திரத்துப் பூப்போல வாடாமல் இருக்கிறது.

அரசர்களாலும் பக்தர்களாலும் இலக்கியங்களாலும் கொண்டாடப்பட்ட நகரங்களில் மதுரையும் ஒன்று. இத்தோடு எளிய மக்களின் நாவில் அன்றாடம் ஒலிக்கின்ற தாலாட்டு, ஒப்பாரி, ஆட்டப்பாடல்கள், பழமொழி, விடுகதை கதைகள் ஆகியவற்றிலும் தவறாது பேசப்படும் நகரம் மதுரையாகும். இந்தப் பெருமை தமிழ்நாட்டின் பிற நகரங்களுக்குக் கிடைத்ததில்லை.

நகரத்தின் தலைமைத் தெய்வமான மீனாட்சி மதுரைக்கு அரசி என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை. இன்றளவும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சித் தெய்வம் திருமணத்திற்குமுன் பட்டாபிஷேகம் செய்யப்பெற்று, செங்கோல் ஏந்தி மதுரை நகரத்து வீதிகளில் திக்குவிசயம் செய்கின்றது. திருமணம் நடந்த பின்னரும் சுந்தரேசர் இராணியின் கணவராகவே கருதப்படுகிறார். அரசராகக் கருதப்படுவதில்லை. இந்திய வரலாற்றில் எந்தப் பெண் தெய்வமும் இப்படியொரு தனிச் சிறப்பைப் பெற்றது இல்லை. புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட திருவிழாவாக இது இருந்தாலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் திராவிட நாகரிகத்தில் பெண்களும் முடிசூடி ஆண்ட நிகழ்வினை இது நமக்கு நினைப்பூட்டுகிறுது.

தமிழ்மொழி வளர்ச்சியில் மதுரை நகரம் தொடர்ந்து கணிசமான பங்கு வகித்துவந்துள்ளது. தமிழ்நாட்டு அரச மரபினரில் பாண்டியரே பழைய மரபினர் என்பது வரலாற்று அறிஞர் கொள்கை. பாண்டியர் சங்கம் வைத்துத் தமிழ் மொழியினை வளர்த்தனர் என்று செப்பேடுகளும் இலக்கியங்களும் கூறுகின்றன. சங்க இலக்கியப் புலவர்களில் மதுரையைச் சேர்ந்தவர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சி மதுரை நகரத்தை மட்டுமே பாடுகின்றது. எட்டுத்தொகையில் ஒன்றான பரிபாடல் மதுரையினையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாடுகின்றது. சிலப்பதிகாரக் காப்பியம் மதுரை நகரத்தை மிக விரிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. தேவார மூவரும் ஆழ்வார்களும் மதுரை நகரத்தைப் பாடியுள்ளனர். திருவாசகமோ சிவபெருமான் கூலியாளாக வந்து ‘மதுரை’ மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்ட கதையைப் பாடுகின்றது. சிவபெருமான் மதுரையில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டியதனை திருவிளையாடற் புராணம் பேசுகிறது. மதுரை நகரத்தின் மீது எழுந்த சிற்றிலக்கியங்கள் நூற்றுக்கணக்கானவை.

சங்க இலக்கியப் புலவர்களில் கணிசமானோர் மதுரை நகரத்துப் புலவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையாகும். இருபதாம் நூற்றாண்டிலும் தமிழாராய்ச்சிக்குக் களமான தமிழ்ச்சங்கம் மதுரையில்தான் பாண்டித்துரைத் தேவரால் தொடங்கப்பெற்றது.

மதுரை நகரத்துத் தெருப்பெயர்கள் இன்னமும் இவ்வூரின் பழமையினையும் நகர அமைப்பினையும் தெளிவாகக் காட்டுகின்றன. வாழைக்காய்ப்பேட்டை, நெல்பேட்டை, தவிட்டுச்சந்தை, வெற்றிலைப்பேட்டை என வணிகப் பெருமைகாட்டும் இடப்பெயர்களைக் காண்பதோடு  சித்திரக்காரர், எழுத்தாணிக்காரர், தென்னோலைக்காரர் எனக் கலைஞர்கள் வாழ்ந்த இடங்களையும் பெருமையோடு நம்மால் இந்நகரத்தில் காணமுடிகிறது.

பழந்தமிழரின் கலைத் திறனையும், நீர் மேலாண்மைத் திறனையும் தெளிவாகக் காட்டும் நகரம் மதுரை. 1000 அடி நீளம், 980 அடி அகலம் 20அடி ஆழம் உடைய மாரியம்மன் தெப்பக்குளத்தின் அலைகற்களோடு கூடிய கற்சுவர்களும், படிக்கட்டுகளும் தமிழர்களின் பொறியியல் நுண்ணறிவுக்கு அடையாளமாகும். அதன் சுற்றுச்சுவர்களும் சுவரில் அமைந்த சிலைகளும் மையமண்டபமும் தமிழர்களின் கலைத்திறனுக்குச் சான்றாகும்.

100 ஆண்டுகளுக்கு முன்புவரை மதுரை நகரம் தன் நீர்வளத்தைப் பாதுகாத்தற்கான அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. பழைய கல்வெட்டுக்களில் ‘மாடக்குளக்கீழ் மதுரை’ என்றே குறிப்பிடப்படுகின்றது. மதுரையைச் சுற்றி இருந்த பெரிய குளங்கள் மட்டும் அல்ல. மதுரையின் வடதிசையில் ஓடிய வைகை நதியும், தென்திசையில் ஓடிய கிருதமாலை நதியும் ஊருக்கு கிழக்கே ஓடிய கால்வாய்களும் மதுரையின் வடதிசையில் ஓடிய வைகை நதியும், தென்திசையில் ஓடிய கிருதமாலை நதியும் ஊருக்கு கிழக்கே ஓடிய கால்வாய்களும் மதுரையின் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாத்தன. மதுரை நகரத்துக்குள் குடிநீர் வழங்கும் மூலங்களாக பெருமாள் தெப்பக்குளம், எழுகடல் தெப்பக்குளம், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், மைனாத் தெப்பக்குளம் ஆகியவை இருந்தன. இவையன்றி கோயிலுக்குள்ளும் குளம் இருந்தது. ஆற்று நீராலும் மழை நீராலும் இவை எல்லாம் நிரம்பி இருந்தன.

இன்று சுற்றுக்சூழல் சீர்கேட்டிலும், நீருக்கான மூலவளங்களை அழித்ததிலும் மதுரைநகரம் தன் பொலிவினை இழந்து நிற்கிறது. ஊருக்குள் இருந்த குளங்கள் மூடப்பட்டுள்ளன. நீரைச் சேமித்து வைக்கும் ஆதாரங்கள் எதும் இல்லை. வாணிகக் கழிவுகளும் மருத்துவமனைக் கழிவுகளும் வைகை ஆற்றைக் கூவமாக்கி விட்டன. மதுரை நகரத்தின் காற்றும் எண்ணெய் புகையினால் மாசுபட்டு விட்டது.

நமது முன்னோர்கள் அரிய கலைச் செல்வங்களையும் இலக்கியங்களையும் மட்டும் நமக்குச் சொத்தாக விட்டுவிட்டுப் போகவில்லை. தூய்மையான காற்றையும், நீரையும், நெடிய மரங்களையும் வளங்களை உருவாக்கும் மூல வளங்களாக நமக்குத் தந்து சென்றனர். நாளைய தலைமுறையினை மறந்து நம் தலைமுறையினை மட்டும் நினைத்தால் இயற்கை நம்மைப் பழிவாங்கும் என்பதற்கு இன்றைய மதுரை நகரம் ஒரு உதாரணம் ஆகும்.

இன்றளவும் மதுரையே தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாகக் கருதப்படுகிறது. மதுரையைக் காப்பாற்றுவது நம் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகும்.

 

தொ.பரமசிவன் அய்யாவிற்கும், பாவை பப்ளிகேஷன்ஸ்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. மதுரை குறித்த ஒரு சிறு புத்தகத்தில் ‘மரதநாடு’ என்று இந்தியாவின் தலைநகரம் என்று முகப்பில் இளமையில் நான் எழுதியிருந்ததை இப்போது பார்த்ததும் சிரிப்பு வந்தது. அன்றிலிருந்து இன்று வரை எனக்கு மதுரையே உலகமாகயிருக்கிறது.

தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் வாசித்துத்தான் சித்திரைத் திருவிழா, அழகர்கோயில் தேரோட்டம், மதுரையில் சமணம் எல்லாவற்றையும் பதிவு செய்யத்தொடங்கினேன். இக்கட்டுரையில் தொ.ப வடம்போக்கித்தெரு பற்றி கூறியிருக்கிறார். பலமுறை அந்தத்தெருவில் திரிந்திருந்தாலும் அதன் பெயர்க்காரணம் பற்றி எதுவும் தெரியாது. இந்த வருடச் சித்திரைத்திருவிழா தேரோட்டத்தின் போது மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் தேர்ப்பார்க்க நின்று கொண்டிருந்தோம். அப்போது தேர் வடத்தை வடம்போக்கி தெருவில் இழுத்துக் கொண்டு போய் பின் வடக்கு மாசி வீதியில் திருப்பினார்கள். அப்போது தான் தேர் இழுத்துவரும் போது வடம்போகும் தெரு என்பதால் இப்பெயர் பெற்று இருக்கிறது என்று அறிந்தேன்.

இனி, நான் சுற்றித்திரியும் மதுரை வீதிகள் குறித்தும் நிறைய பதிவு செய்யவும், சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி, பரிபாடல் எல்லாம் முழுதாக வாசிக்கவும் விரும்புகிறேன். சங்க இலக்கியம், பண்பாடு, கோயில்ஆய்வுகள் மீது ஆர்வம் வரத் தொ.பரமசிவன் அய்யா தான் காரணம். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்த மாதம் உலகமயமாக்கலில் பண்பாடும் வாசிப்பும் என்ற உரையை தங்கள் தளத்தில் மீள்பதிவு செய்து அய்யாவின் உரை இன்னும் பலரை சென்றடையச் செய்த நல்லூர்முழக்கம்குருத்து தள நண்பர்களுக்கு நன்றிகள் பல. தொ.பரமசிவன் அய்யாவின் மற்ற கட்டுரைகளை தமிழ்த்தொகுப்புகள் தளத்தில் வாசியுங்கள். மதுரைக்கும், தமிழுக்கும் நன்றி. இதிலுள்ள மதுரையின் பழைய நிழற்படங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் முனியசாமிக்கு நன்றி. மேலும், அதை அந்தக்காலத்தில் எடுத்த அந்த முகமறியாத சகோதரருக்கும் நன்றி.

பின்னூட்டங்கள்
  1. தனபாலன் சொல்கிறார்:

    அருமை… அருமை… நல்ல அலசல், கருத்துக்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    “அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? – பகுதி 1”

  2. rathnavel சொல்கிறார்:

    மதுரையைப் பற்றிய அருமையான பதிவு. இந்த பதிவு ஒரு பொக்கிஷம். அருமையான படங்கள்; அரிய படங்கள். மனப்பூர்வ வாழ்த்துகள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

  3. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

    பதிவு அருமை . படங்கள் மிக அருமை. மதுரையின் பெருமை சொல்லவும் அரிதே
    சொல்லிச் சொல்லி மாளாது. ஆனால் தற்போது அதன் அருமை புரியாது அழித்து
    வருகின்றனரே.கவலைக்குரியது.தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

    • தங்கவேல் சொல்கிறார்:

      என்றென்றும் என் நினைவில் பசுமையாயிருக்கும் மதுரை குறித்த அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி. காவல்கோட்டம் நாவல் நீங்கள் படித்திருக்கலாம் என நினைக்கிறேன்; மதுரையின் மத்தியகாலகட்ட வரலாற்றை புனவு மொழியில் சொல்லும் ஒரு அரிய படைப்பு.

  4. mohan சொல்கிறார்:

    Thanks
    no more words.

  5. […] உலகின் தொன்மையான நகரம் பதிவையும், மதுரையும் தொ.பரமசிவனும் பதிவையும் பார்க்கவும். Like this:LikeBe the first to like […]

  6. […] உலகின் தொன்மையான நகரம் பதிவையும், மதுரையும் தொ.பரமசிவனும் பதிவையும் பார்க்கவும். Like this:LikeOne blogger likes this […]

  7. மதுரை சரவணன் சொல்கிறார்:

    நல்ல அருமையான பதிவு.. மனமகிழ்ச்சி கொள்கிறேன் உங்களின் அரிய சேவை மதுரையை மீட்டுத் தரும் நம் இளைஞர்களுக்கு… பாராட்டுக்கள்

பின்னூட்டமொன்றை இடுக