குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கிவருகிறது. மதுரையின் தொன்மையை இன்றும் நிறுவும் சான்றுகளாக குகை ஓவியங்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள், வடமொழி & பிறநாட்டறிஞர் குறிப்புக்கள், நாட்டுப்புறப் பாடல்கள் திகழ்கின்றன.

மதுரை என்ற பெயருள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமிக் கல்வெட்டு அழகர்கோயில் அருகிலுள்ள கிடாரிப்பட்டி குன்றிலும், அணைப்பட்டி அருகிலுள்ள சித்தர்மலையிலும் காணப்படுகிறது. இதன்மூலம் மதுரையின் தொன்மையும், மதுரையில் உள்ள குன்றுகளில் சமணர்கள் அங்கு தங்கியிருந்ததையும் அறியலாம். கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே சமணர்கள் மதுரைப் பகுதிக்கு வந்துவிட்டனர்.

மதுரையில் சமணம் குறித்து பள்ளி, கல்லூரிக் கல்வி மூலமாகவெல்லாம் நான் அறியவில்லை. மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும், தொ.பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள், எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, வெ.வேதாச்சலத்தின் எண்பெருங்குன்றம் போன்ற நூல்களை வாசித்தும் மற்றும் மதுரையில் பொருள்காட்சிகளின் போது வைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சி மூலம் ஆர்வம் அதிகமாகி சமணம் குறித்து தேடி அலையத் தொடங்கினேன்.

மதுரையில் சமணம் குறித்து அதிகமாக அறிந்து கொள்ள எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் நடத்தும் பசுமைநடைப் பயணம் பெரிதும் உதவியது. இப்பயணத்தின் மூலம் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா சொல்லும் தகவல்களிலிருந்தும் சமணம் குறித்து அதிகம் அறிந்து கொண்டேன்.

மதுரையில் சமணர்கள் இருந்த குன்றுகள் : குரண்டி திருக்காட்டாம் பள்ளி, திருப்பரங்குன்றம், யானைமலை, அழகர்மலை, மாங்குளம், கீழ்குயில்குடி சமணமலை, மேல்குயில்குடி, முத்துப்பட்டி, கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம், சித்தர்மலை, அரிட்டாபட்டி, கருங்காலக்குடி, கீழவளவு, திருவாதவூர், வரிச்சூர் குன்னத்தூர், உத்தமபாளையம்.

சமணம் குறித்து வாசித்து கேட்டு அறிந்த தகவல்கள்;

  • சமணம், வடக்கே தோன்றிய மதம். மகாவீரர் சமணத்தீர்த்தங்கரர்களின் கடைசித் தீர்த்தங்கரர்.
  • வடநாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தால் சமணர்கள் தெற்கே வந்தனர்.
  • மதுரையில் உள்ள பெரும்பாலான குன்றுகளில் சமணத்துறவிகள் தங்கியிருந்தனர்.
  • சமணத்துறவிகள் கல்விதானம், மருத்துவதானம் செய்வதை தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்.
  • சமணத்துறவிகள் மலைகளில் தங்குவதற்கு கல்படுக்கைகளை பொதுமக்கள், வணிகர்கள், அரசர்கள் போன்ற பலரும் அமைத்துக் கொடுத்தனர்.
  • பாண்டிய மன்னன் செழியனின் பெயர் மாங்குளம் மீனாட்சிபுரம் சமணப்படுகையின் குகைத்தள முகப்பில் காணப்படுகிறது.
  • சமணர்கள் தமிழில் இயற்றிய நூல்கள் ஏராளம். ஏராளம்.
  • புகழ்பெற்ற நூல்களாக சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, நாலடியார் போன்றவை சமணத்துறவிகள் இயற்றியவைதாம்.
  • சமணத்துறவிகளை உள்ளுர் வணிகர்கள் ஆதரித்தனர். பௌத்த துறவிகளை வெளியூர் வணிகர்கள் ஆதரித்தனர்.
  • பௌத்த மடாலயங்கள் கடற்கரையோரங்களிலும், வெளிநாடுகளிலும் இருப்பதற்கு இதுவுமொரு காரணம்.
  • சமணம், பௌத்தத்திற்கு மூத்த மதம்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பக்தி இயக்கம் சமணத்தின் வளர்ச்சியைத் தடுத்தது.
  • கூன்பாண்டியனை திருஞானசம்பந்தர் சைவத்திற்கு மாற்றி சமணர்களை கழுவேற்றியதாக கதை நிலவுகிறது.
  • மதுரை சாமநத்தம் என்னும் ஊரில் சமணர்களை கழுவேற்றியதாக சொல்கிறார்கள்.
  • மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் போது கழுவேற்றத்தை நாடகமாக நிகழ்த்தினார்களாம். இப்போது கதையாக சொல்லப்படுகிறது.
  • சாமநத்தத்தில் கழுவேற்றம் குறித்து மணா எழுதிய கட்டுரையை வாசியுங்கள்.
  • சமணர்கள் பெரும்பாலும் மதம் மாற்றப்பட்டனர். பலர் வடதமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர்.
  • கீழ்குயில்குடி சமணமலையில் மாதேவிப் பெரும்பள்ளி என்ற கல்வி நிலையம் செயல்பட்டதை தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் அவரது “எண்பெருங்குன்றம்” நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
  • சமணம், பௌத்தம் போல ஆசிவகம் என்ற மதமும் அக்காலத்தில் தமிழகத்தில் இருந்ததாம்.
  • ஆசிவகம் குறித்து க.நெடுஞ்செழியன் ‘தமிழரின் அடையாளங்கள்’ என்ற நூலில் எழுதியுள்ளதை வாசியுங்கள். ஆசிவகத்தின் சின்னமாக யானை இருந்ததாம்.
  • சமண, பௌத்த தலங்கள் பக்தி இயக்க காலத்திற்கு பின் பெரும்பாலும் சைவ, வைணவ தலங்களாக மாற்றப்பட்டதாம்.
  • தென்பரங்குன்றத்தில் உள்ள குடைவரைக்கோயில் முன்பு சமணக்குடைவரையாக இருந்து பின் சைவக்குடைவரையாக மாற்றப்பட்டதாக சொல்கிறார்கள்.
  • சமணர்களில் திகம்பரத்துறவிகள் அம்மணமாக இருந்ததால் அவர்களை அமணர்கள் என்று அழைத்தனர்.
  • திருப்பரங்குன்றத்தில் உள்ள சமணப்படுகைக்கு போகும் வழியில் அமண் பாழி என்றே பதாகை உள்ளது.
  • சைவ உணவுப் பழக்கம் சமணர்களிடமிருந்தே மற்றவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.
  • சம்மணம் போட்டு அமர்வதையே சமணர்களைப் போல் அமர்வதைத்தான் குறிக்குமாம். சமணத்தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்த்தால் இதை அறியலாம்.
  • அடிதொழுதலும் சமணர்களிடமிருந்து வந்த பழக்கம் என தொ.பரமசிவன் தன் “பண்பாட்டு அசைவுகள்” நூலில் எழுதியுள்ளார்.
  • சமணத்துறவிகள் கழுகுமலைக்குச் செல்வதை தன் இளமைக்காலத்தில் பார்த்ததை தேசாந்திரியில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
  • தீபாவளி மகாவீரர் முக்தி அடைந்த நாள்.
  • கிராமப்புறங்களில் சமண துறவிகள் மற்றும் இயக்கியர் சிலைகளை நாட்டார் தெய்வங்களாக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

மதுரையில் சமணம் குறித்த எழுதக் காரணமான தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலம் மற்றும் சமணம் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள உதவிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

பின்னூட்டங்கள்
  1. IQBAL சொல்கிறார்:

    பதிவும் தகவலும் மிக அருமை .. சமணம் தமிழகத்துக்கு தந்த கொடைகள் ஏராளம்.. பெரும்பாலும் இது மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் விட்டன. சங்கங்கள் உருவாகவும், தமிழ் எழுத்துக்கள், இலக்கணங்கள் சீர்மை படவும், warring tribes ஆக இருந்த தமிழினத்தை ஒன்றுப் படுத்தியதிலும் சமணத்தின் பங்கு அளப்பரியது. பிற்கால கிருத்துவ மதம் தமிழுக்கு ஆற்றிய சமூக, மொழி வளர்ச்சிக்கு மேலாக சமணம் தமிழுக்கு ஆற்றியுள்ளது. கழுவேற்றம் பற்றி இந்து மதத்தினர் பலர் தவறான தகவல்களை தந்துள்ளனர். ஆனால் படத்துடன் விளக்கம் அருமை … மதுரை உலகத் தரம் வாய்ந்த பெரு நகராக மாற வேண்டும் …

  2. IQBAL சொல்கிறார்:

    சமண மதம் இன்று அழியவில்லை. திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர் பகுதிகள் பலவற்றில் தமிழ் சமணர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் … உங்களின் நூல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் சகோ…

  3. இரா. பானுகுமார் சொல்கிறார்:

    நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!! மேலும் எழுதவும்!

    இரா.பா,
    சென்னை

  4. Rajkumar சொல்கிறார்:

    Very interesting

  5. தொப்புளான் சொல்கிறார்:

    தற்செயலாக நீங்கள் இந்தப் பதிவை இட்ட அதே காலத்தில் – இரண்டு வாரங்களுக்கு முன்பு – தி ஹிந்துவில், கேரளத்தில் உள்ள பட்டணத்தில் (அன்றைய முசிறி என்று கருதப்படுவது) நடத்தப்படும் அகழ்வாய்வுகளில் “அ ம ண” என்று பொறிக்கப்பட்ட பாண்டம் கண்டெடுக்கப்பட்ட செய்தி வந்துள்ளது.
    http://www.hindu.com/2011/03/14/stories/2011031453981800.htm

    //முன்காலங்களில் சமணர்களை அமணர்கள் என்றே மக்கள் அழைத்தனர். சமணதுறவிகள் அம்மணமாக இருந்ததால் அமணர்கள் என்று அழைத்தனர் போலும்//

    ஸ்ரமண (வடமொழி) > சமண (பிராகிருதம்) > சமண (தமிழ்) > அமண என்று ஆனதாக ஒரு குறிப்பு மேற்கண்ட செய்தியில் உள்ளது.

    ஒருவேளை அம்மணம் அமணத்தில் இருந்து வந்திருக்கலாம்?

    ஸ்ரமணம் என்பது ப்ராஹ்மணம் என்பதற்கு எதிர்ச்சொல் என்றும் அது அவைதிக மதங்களான பௌத்தம், ஜைனம் இரண்டையுமே முன்னர் குறித்தது வந்தது என்றும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் “பௌத்தமும் தமிழும்” நூலில் படித்ததாக நினைவு.

    //நிறைய சமணர் படுகைகளில் நம்மவர்கள் அவர்களின் சுவடுகளை பதித்து நாசம் செய்கின்றனர்//

    அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் ஏடுகளை அழித்தவர்கள் காலத்தால் முந்தைய கல்லெழுத்துக்களை விட்டு வைக்க, விட்ட இடத்திலிருந்து இப்போதுள்ளவர்கள் தொடர்கிறார்கள் போலும்.

    வேதாச்சலம் அவர்கள் மதுரை வடக்கு மாசி வீதி மணிமேகலை பள்ளியில் நடந்த (மாற்று பண்பாட்டுச் சிந்தனைக் களம் நடத்தியது?) ஒரு கூட்டத்தில், சமணர் கழுவேற்றம் நடந்ததற்கான சமகாலத்திய கல்வெட்டு, ஓவியம் போன்ற சான்றுகள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டதாக நினைவு. (கவனிக்க: சமகாலத்திய உறுதியான சான்றுகள் இல்லை என்றுதான் தெரிவித்தாரே ஒழிய, நடக்கவில்லை என்று கருதுவதாகச் சொல்லவில்லை)

  6. Namathan சொல்கிறார்:

    உங்கள் வலைப்பூவில் மதுரையில் சமணம் என்ற பகுதியில் மதுரையிலிருந்து சமணம் ஆற்றிய தமிழ்த்தொண்டையும் இது சார்ந்த புதைபொருள் தடயங்களையும் சிறப்பாக வர்ணித்திருக்கிறீர்கள். பானுகுமார் தனது தழிழ்சமணம் என்ற வலைப்பூவில் தமிழ் இலக்கிய விளக்கங்கள் ஊடாக இதையே அருமையாக விபரிக்கிறார். எனது தமிழர்தூக்கம் என்ற வலைப்பூவில் இருண்டகால இலக்கியங்களிள் செளிப்பு பின்னர் தமிழ் இலக்கியத்தில் அற்றுப்போனதின் பின்னணியை விபரிக்க முற்படுகிறேன்.

    நமதன்

  7. மறுமொழியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ‘மதுரையில் சமணம்’ குறித்து பதிவு செய்யத்தொடங்கிய பின் பசுமைநடை குழுவினருடன் இணைந்து அரிட்டாபட்டி, கொங்கர்புளியங்குளம், மாங்குளம் மீனாட்சிபுரம், குன்னத்தூர், திருப்பரங்குன்ற மலை எனப் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னும் நிறைய பயணங்கள் அமைய மகாவீரர் அருளட்டும். தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய சமணர்களை குறித்து பதிவு செய்வது நம் கடமை. அனைவருக்கும் நன்றி.

  8. கீரா சொல்கிறார்:

    ஜைனர் என்பது வேறு …சமணம் என்பது வேறு…சமணம் சமமான இல்லறத்தொடு நல்லறத்தை போதித்த தமிழர்களே சமணர்கள் ..உண்மையில் சமணம் தமிழர்களில் தொல்லியல் ..அது திரிக்கப்பட்டு விட்டது..தொல்காப்பியம் கிறித்து பிறக்கும் முன்பே தொல்காப்பியரால் எழுதப்பட்டது..ஜைனர்கள் வருகைக்கு முன்பே சமணம் நம்மிடம் இருந்தது..பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின்[5] இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். எனினும், இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும்

  9. Mohamed Rafi சொல்கிறார்:

    சமணம் எந்த அளவு தமிழ் நாட்டில் மேலோங்கி இருந்ததற்கு நாலடியார் மற்றும் சமண தமிழ் நூல்களே சாட்சி.

    Jainism பற்றிய விக்கி வலை தளத்தில் ஏன் தமிழ் சமணர்களை பற்றி பெரிய அளவு செய்தி இடம் பெறவில்லை என்று தெரியவில்லை. தமிழ் சமணர் பற்றிய குறிப்புகளை தயவு செய்து அறிஞர் யாராவது விக்கி வளைதளத்தில் பதிவு செய்யவும் http://en.wikipedia.org/wiki/Jainism

  10. எண்ணாயிரம் சமணர் என்பது 8000 பேர் என்று ஆகாது. பாண்டி நாட்டு வணிகக் குழுக்களில் திசை ஐயாயிரத்து ஐநூற்றுவர் என்று ஒரு பிரிவுண்டு. அதனால் 5500 பேர் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதே போல் எண்ணாயிரம் என்பது ஒரு குழுப்பெயரே. இதை ஆய்வு மூலம் ஒருவர் நிறுவியுள்ளார் விரைவில் அதற்கான மேற்கோளை செர்க்கிறேன். போலி வரலாற்று பகுப்பில் இருந்து இதை நீக்கவும் செய்கிறேன். இது போலி வ்ரலாறு அல்ல தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வரலாறு. கழுவேற்றப்பட்ட சமணர் அளவில் குறைந்தவர்கலாகவே இருப்பர்.

    களப்பிரர் வரலாறு இருண்ட காலம் என்று கூறப்படுவதே அவர்கள் சமணர் என்பதால் தான். மேலும் சமணம் தமிழ்கத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே நுழைந்து விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பூவிலுடையார் ஆலயத்தில் சமணக் கல்வெட்டுகள் காண்பட்டுகின்ரன. மாங்குளம் கல்வெட்டில் கூறப்படும் செழியன் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலேயெ சமணத்தை ஆதரித்தான் என்றால் அதற்கு முன்னரேயெ தமிழ் வணிகர்கள் அதை பின்பற்றினர் எனலாம்.

பின்னூட்டமொன்றை இடுக