மதுரை கொங்கர் புளியங்குளமும் கி.மு இரண்டாம் நூற்றாண்டு தமிழ்பிராமி எழுத்துருவும்

Posted: மார்ச் 19, 2011 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

நாகமலையை ஒட்டி பஞ்சபாண்டவர்மலை என்றழைக்கப்படும் சிறிய குன்று உள்ளது. இக்குன்றத்தின் தென்மேற்குப் பகுதியில் இயற்கையான ஆறு குகைத்தளங்கள் உள்ளன. கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் சமணப் பள்ளியாக இவை உருவானபோது இக்குகைத்தளங்களில் வளவளப்பான நீண்ட கற்படுக்கைகள் செய்விக்கப்பட்டுள்ளன. குகைத்தளம் ஒன்றின் முகப்பில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் இப்பள்ளியை உருவாக்கிய உபாசகன் உப்பறுவன், சிறுஆதன், பாகனூர்ப் பேராதன் பிட்டன் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். குகைத்தளத்திற்கு வெளிப்புறம் பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த தீர்த்தங்கரர் திருமேனி புடைப்புச் சிற்பமாக உள்ளது. அசோகமரத்தின் கீழே முக்குடை நிழலில் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த இத்தீர்த்தங்கரர் உருவத்தை அச்சணந்தி என்ற சமணமுனிவர் செய்வித்துள்ளார். இதனைத் தெரிவிக்கும் வட்டெழுத்துக் கல்வெட்டு இச்சிற்பத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

 -வெ.வேதாசலம் (எண்பெருங்குன்றம்)

புளியங்குளத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டதிலிருந்து அங்கு போக வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. ஆனால், மதுரையில் மூன்று இடங்களில் புளியங்குளம் என்ற ஊர் இருக்கிறது. சிலைமானுக்கருகில் ஒரு புளியங்குளமும், திருப்பரங்குன்றம் பகுதியில் வேடர்புளியங்குளமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தாண்டி கொங்கர் புளியங்குளமும் இருக்கிறது. நாகமலைக்கருகில் உள்ள கொங்கர் புளியங்குளங் குன்றுக்கு பஞ்சபாண்டவர் மலையென்று பெயராம்.

நானும் சகோதரரும் ஒரு நாள் நல்ல வெயிலில் சென்றோம். நாங்கள் சென்ற வண்டியை ஒரு வீட்டின் முன் நிறுத்திவிட்டு மலை நோக்கிச் சென்றோம். மலையடிவாரத்தில் ஒரு மண்டபம் மரம் சூழ உள்ளது. நல்ல நிழல் சூழ்ந்த இடம். அங்கு ஒரு வகுப்பே நடத்தலாம். இங்கு மாயன் கோயில் எனும் நாட்டார் தெய்வக் கோயில் உள்ளது.

குன்றின் ஓரமாக சென்றால் மலையில் பாதி உயரத்தில் படுகை உள்ளது. இப்போது ஏறிச்செல்ல இரும்புப்படி போட்டிருக்கிறார்கள். எனக்கு இந்த படியில் ஏறிச்செல்வதற்கே பயமாக இருந்தது. அந்தக் காலத்தில் இதில் எப்படி ஏறிச்சென்று இருப்பார்கள் என்பதுதான் பெரும் ஆச்சர்யமாக உள்ளது.

குகைபோல் உள்ள பாறை முகடுகளின் மேல் தமிழ்பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. அது படுகைகளை செதுக்கித் தந்தவர்களின் பெயர் போல. பெரும்பாலான கல்வெட்டுக்களில் கிடைக்கும் செய்திகள் எல்லாமே ‘உபயம்’ செய்தவர்களைப் பற்றித்தான் குறிப்பு காணப்படுகிறது. இனி பல நூற்றாண்டுகள் கழித்து இப்ப உள்ள கோயில்களில் காணப்படும் இந்த உபயக் கல்வெட்டுகள்தான் தமிழுக்குச் சான்றாக அமையும் போல. பாறைகளுக்கிடையில் இயற்கையாக அமைந்த குகைத்தளம் உள்ளது. செதுக்கி வைத்த படுகைகளில் படுத்தபோது அவ்வளவு வெயிலிலும் குளிர்ச்சியாக இருந்தது. நம்மவர்கள் படுகைகளில் தங்கள் வருகையை வேறு செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

பிறகு ஒரு வழியாக இறங்கி வந்தோம். பாறைகளுக்கு வெளியே ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அதை கிட்டப்போய் காணமுடியவில்லை. செடிகள் அடர்ந்திருந்தன. பிறகு, வீட்டுக்கு கிளம்பிட்டோம். படங்கள் எல்லாம் சகோதரரின் அலைபேசியில் எடுக்கப்பட்டது. நன்றி.

கொங்கர்புளியங்குளம் சமணர்படுகைக்குச் செல்ல:

மதுரை பெரியார் நிலையத்திலிருந்து பல்கலைக்கழகம் தாண்டி (செக்கானூரணி, உசிலம்பட்டி வழி) செல்லும் பேருந்துகளில் செல்லலாம். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தாண்டியவுடன் கொங்கர்புளியங்குளம் உள்ளது. பேருந்தில் சென்றால் இறங்கி கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் சென்றால் வசதி. ஆறு அல்லது ஏழு பேராக குழுவாகச் செல்லுங்கள். வெயிலுக்குமுன் சென்றால் நன்றாக இருக்கும். இது போன்ற இடங்களுக்குச் சென்று வருவதால் நம் மதுரையின் தொன்மையை அறிந்து கொள்ளலாம். மேலும், நிறைய பேர் அடிக்கடி போய் வந்தால் மலைகளெல்லாம் கல்குவாரி ஆவதாவது தடுக்கப்படும். இது போன்ற சமணர் படுகைக்குப் போய்ட்டு வந்த பிறகு உங்கள் கஷ்டங்கள் தீரும்; மகிழ்ச்சி பெருகும்; உலகம் வெப்பமயமாதல் குறையும்; உலகமயமாக்கல் நெருங்காது. புளியோதரை மாதிரி எதாவது கட்டிட்டுப் போய் சாப்பிட்டு குடும்பத்தோட நல்லா பேசிச் சிரிச்சுட்டு வந்தீங்கன்னா உறவுகள் மலரும். மதுரை சிறக்கும். (என்னல்லாம் செய்ய வேண்டியிருக்கு பாருங்க, மலைகளைக் காப்பாற்ற!)

பின்னூட்டங்கள்
  1. IQBAL சொல்கிறார்:

    படங்களும் செய்திகளும் மிகவும் அருமை.. இப்படியான இடங்கள் ரோமிலோ, சீனத்திலோ இருந்திருந்தால்.. ஏன் சிறிலங்காவில் இருந்திருந்தால் ( பௌத்த மதம் மட்டுமே ) … உலக பாரம்பரிய சின்னமாகவும், சுற்றுலா இடமாகவும் மாறியிருக்கும் … தமிழ்நாட்டில் அரசுக்கும் மக்களுக்கு அருமை தெரியாமல் போய்விட்டது … தொடருங்கள் ….

  2. Rajkumar சொல்கிறார்:

    S naan athapathi romba kelvipatuiriken. Good place.

  3. தொப்புளான் சொல்கிறார்:

    ஆமா, அது ஏன் பெரும்பாலும் இந்த மாதிரி மலை எல்லாத்துக்குமே பஞ்ச பாண்டவர் மலைன்னு பேரு?

    மலையைக் காப்பாத்துற வேலையையெல்லாம் யாராவது சோக்கோ ட்ரஸ்ட் பார்த்துக்குவாங்க. இந்த மலைக்கு எதிர்த்தாப்புலயே ஒரு ஐ.டி. பார்க் தொடங்குறான்ய்ங்களாம்! அங்க ஏதாவது பொட்டி தட்ற வேலை கிடைக்க என்ன வழின்னு போய்ப் பாருங்க தம்பி!

  4. chella சொல்கிறார்:

    photos parkum pothu enakum antha idathirku pokanum nu thonu kirath. na kantipaka poven.

  5. rathnavelnatarajan சொல்கிறார்:

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தாண்டி கொங்கர் புளியங்குளம் பற்றிய பதிவு. நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக