பஞ்சபாண்டவமலையில் பசுமைநடைப் பயணக்குறிப்புகள்

Posted: ஓகஸ்ட் 19, 2011 in நான்மாடக்கூடல், மதுரையில் சமணம்

பூமியில் நடக்கும் அனைவருடனும் நான் நடக்க விரும்புகிறேன்…!

ஊர்வலம் என்னைக் கடந்து செல்வதை என்னால் நின்று பார்த்துக்கொண்டிருக்க முடியாது…!    

 – கலீல் ஜிப்ரான்.

பாண்டிய மன்னனின் மதுரைக்கு வந்த புதிய பெருமையாக ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் பெருகிவிட்ட இன்றைய சூழலில் இரண்டாயிரம் ஆண்டு பழமையான சமணப்படுகைகளும், குகைத்தளங்களும், தமிழ்பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள கொங்கர்புளியங்குளம் பஞ்சபாண்டவமலைக்கு பசுமைநடைக் குழுவினர் எண்பதுக்கும் மேற்பட்டோர் ஆடி மாதம் முதல் நாளன்று சென்றோம். அந்தப் பயணம் குறித்த பதிவு.

ஞாயிறு அதிகாலை எழுந்து நானும், சகோதரரும் கிளம்பினோம். அந்த நேரத்தில் பயணிப்பது அலாதி சுகம். அப்போது சூரியனைப் பார்த்ததும் இந்த வரிகள்தான் ஞாபகம் வந்தது: ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’. எல்லோரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நுழைவாயிலில் கூடினோம். பின் அங்கிருந்து கொங்கர்புளியங்குளம் சென்றோம். மலையடிவாரத்தில் வண்டியை எல்லோரும் நிறுத்திவிட்டு மலைநோக்கி நடந்தோம். மலையில் உள்ள படுகைகளை காணச்செல்வதற்கு இரும்புப்படிகள் உள்ளன. எல்லோரும் படுகை உள்ள இடத்தில் கூடினோம். அங்கிருந்து பார்க்கும்போது தொலைவில் உள்ள மலைகள், வீடுகள் எல்லாமே அழகாகத் தெரிந்தன. அங்குள்ள படுகைகளில் தமிழ்பிராமிக் கல்வெட்டுக்களைவிட நம்மவர்கள் செதுக்கிய வருகைக் குறிப்புகளும், காதல் சுவடுகளும்தான் அதிகம் உள்ளன.

கொங்கர்புளியங்குளம் மலையிலுள்ள தமிழ்பிராமி கல்வெட்டு எழுத்துகளிலிருந்துதான் எழுத்துகள் தோன்றி வருவதுபோல செம்மொழி பாடலில் முதலில் காட்டுவார்கள். (இதுவரை பார்க்காது இருந்தால் பார்க்கவும்). எல்லோரும் படுகைமுன் அமர்ந்து சமணப்பள்ளி மாணவர்களானோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார். ஒவ்வொருவரும் தனித்தனியே எழுந்து பெயர், வசிக்கும் ஊர், பணி அல்லது படிப்புக்களை பகிர்ந்து கொண்டோம். அதில் இரண்டு சிறுவர்கள் ‘கல்லூரி’ பட நகைச்சுவை போல ‘நீ சொல்லு நீ சொல்லு’ மாற்றி மாற்றிக் கூறி எல்லோரையும் சிரிக்க வைத்தனர். பின் இறுதிவரை அவர்கள் சொல்லவேயில்லை. அதிலும் ஒரு சிறுவன் முத்துக்கிருஷ்ணனை ‘நீங்க உங்களப் பத்திச் சொல்லுங்க, எங்களப் பத்தி மட்டும் கேட்டீங்கள்ல’ன்னு சொன்னதும் அவரும் சிரிச்சுட்டு ‘எம் பேரு முத்துக்கிருஷ்ணன், ஊர் சுத்துறது என் வேலை’ன்னார். எல்லோரும் பல துறைகளைச் சார்ந்தவர்கள் என்று அன்றுதான் அறிந்தோம். தொல்லியல் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஓவியர்கள், புகைப்படக்கலைஞர்கள், வழக்கறிஞர்கள், பொறியியல் மாணவர்கள், சுயதொழில் புரிபவர்கள், மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் என்னைப்போல் பணிபுரிவோர் என பலர் எங்கள் பசுமை நடைக்குழுவில் உள்ளனர்.

பேராசிரியர் சுந்தர்காளி சமணம் குறித்த தகவல்களைக் கூறினார். இம்மலையில் காணப்படும் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தியவை. இவைகளில் காணப்படும் செய்திகள் யார் இந்த படுகையை செய்து தந்தவன் என்ற உபயக் கல்வெட்டுக்கள்தான். மேலும், இந்த மலையை பஞ்சபாண்டவமலை என்று அழைக்கிறார்கள். பொதுவாக மக்களுக்கு தங்கள் ஊரோடு இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களோடு தொடர்புபடுத்திக்கொள்வதில் பெருமை அதிகம். ‘இந்த இடத்தில் உள்ள காலடித்தடங்கள் இராமருடையவை’, ‘இந்த மலை அனுமான் சஞ்சீவிமலையை தூக்கிச் சென்றபோது கீழே விழுந்தவை’ என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள். அதுபோல பஞ்சபாண்டவர்களோடு தொடர்புபடுத்தி இது போன்ற குகைத்தளங்கள் உள்ள நிறைய மலைகளை பஞ்சபாண்டவமலைகள் என்றே கூறுகிறார்கள். தமிழில் உள்ள பல முக்கியமான நூல்களை இயற்றியவர்கள் சமணர்களே. தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் சமணத்துறவிகளே. மேலும், அன்று வைதீக மதம் கல்வியை மறைத்து வைத்துக் கொண்டிருந்த வேளையில் சமணம் ஞானதானம் என்பதில் முதன்மை பங்கு வகித்தது. சமணர்கள் கல்வியை மற்றவர்களுக்குக் கற்றுத்தருவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்கள். பள்ளி என்ற வார்த்தையே சமணமுனிவர்கள் தங்கிய இடங்களையே குறிக்கும். அங்கு அவர்கள் கல்வி வழங்கியதால் இன்றும் கல்வி போதிக்கும் இடம் பள்ளி என்றே அழைக்கப்படுகிறது. மேலும், சமணம் குறித்த பல தகவல்களை கூறினார். மிக அற்புதமான பகிர்வாகயிருந்தது. ஒரு மாதம் கழித்து அதைப் பதிவிட எழுதும்போது பல விசயங்கள் மறந்துவிட்டன. மன்னிக்கவும்.

அதற்கடுத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டார்வழக்காற்றியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் தர்மராஜன் பேசினார். அவர் பேசும் போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இடம் என்னும்போது நாம் கற்பனை செய்து பார்ப்பதற்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கிறது. அதுவும் இங்கிருந்து 180˚கோணத்தில் காணும்போது அவர்களுக்கு தோன்றிய விசயங்கள் குறித்து நாம் கற்பனை செய்து பார்க்கும்போது இன்னும் நிறைய விசயங்கள் கிடைக்கலாம். ஒருமுறை இது போன்ற படுகைக்குச் சித்தவைத்திய நண்பர் ஒருத்தரை அழைத்துச் சென்றபோது அவர் இதையெல்லாம் பார்த்துவிட்டு பெரிய சித்தவைத்தியசாலை போல இருக்கிறது என கூறினார். இவ்வாறு ஒரு புதிய சிந்தனையை நோக்கி தர்மராஜன் அழைத்துச் சென்றார். சுந்தர்காளி கூறியதுபோல சமணர்கள் கல்வியை மட்டும் போதிக்கவில்லை, சித்தமருத்துவமும் செய்துள்ளனர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதற்கடுத்து கல்லுப்பட்டியில் இருந்து வந்த ஆசிரியை ஒருவர் ‘ஏன் வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் அழைத்து வரவில்லை?’ எனக் கேட்டார். அடுத்த பசுமைநடைப் பயணத்தில் பெண்களுக்கு தனிப்பெரும்பான்மை வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கடுத்துப் பேசிய கல்லூரிப் பேராசிரியர் பெரியசாமிராஜா அவர்களும் ‘பெண்கள் மூலம்தான் வரலாறு அடுத்த தலைமுறைக்குச் செல்ல முடியும். இங்குள்ள பலருக்கும் நம் அம்மா சொல்லாமல் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை’ எனக்கூறினார்.

பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பசுமைநடை குறித்த பல முக்கிய தகவல்களை கூறினார். அரிட்டாபட்டியில் பசுமைநடை சென்றுவந்த பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர் தர்மராஜன் தனது துறை மாணவர்களுடன் சேர்ந்து அரிட்டாபட்டி சென்று அம்மலையை குறித்து ஆவணப்படம் ஒன்றை எடுத்து உள்ளனராம். அந்தப்படம் விரைவில் வெளிவரும். மேலும், அரிட்டாபட்டி பசுமைநடை குறித்து ‘டெக்கான் க்ரானிக்கிள்’ பத்திரிக்கையில் கட்டுரையொன்று வந்ததைப் பார்த்து பசுமைநடையில் கலந்து கொள்ள சில பள்ளிகள் விரும்பியிருப்பதாக கூறினார். பேஸ்புக்கில் பசுமைநடை பயணம் குறித்து தனிக்குழு உருவாக்கியிருக்கிறார்களாம். இன்னும் பல தகவல்களை கூறினார். மேலும், புகைப்படக்கலைஞர் ஒருவர் கீழ்குயில்குடி மலையை இருநூறுக்கும் மேற்பட்ட நிழற்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார். சென்னையிலிருந்து வந்த ஒருவர் அடுத்த முறை வரும்போது சென்னையில் இதுபோன்று ஆர்வம் உள்ளவர்களை அழைத்து வருவதாக கூறினார்.

அப்படியே அந்த இடத்திலிருந்து கிளம்பினோம். மலையில் இருந்த தீர்த்தங்கரின் சிற்பத்தைப் பார்த்தோம். மேலும், மலையில் இயற்கையான குகைத்தளங்கள் பல உள்ளன. அதில் ஒன்றில் போய் அமர்ந்து பார்த்தோம். பேசாமல் இதுபோன்ற மலையிலேயே தங்கிவிடலாமா எனத்தோன்றியது. மலைமேல் வீசும் காற்று, பரந்தவெளி, கணத்துக்கு கணம் புதிய சித்திரங்களை படைக்கும் வானம், தொலைவில் தெரியும் மலைகள் எனப் பார்த்துக்கொண்டே இருந்தால் போதும் எனத்தோன்றியது.

மலைமேல் ஏறிப்பார்த்தபோது இம்மலைக்கு அருகில் உள்ள மலைகளை எல்லாம் அறுத்து விட்டதைக் கண்டு மனசு கொதித்தது. எல்லாம் பெரிய பெரிய கற்பள்ளங்களாக காட்சி தந்தன. அருகில் நாகமலை மிக அழகாக தெரிந்தது. மலைமேல் கிராம தெய்வக்கோயிலும் ஒரு பெருமாள் கோயிலும் உள்ளன. மிக அற்புதமாக இருந்தது. மலையிலிருந்து 360˚கோணத்தில் சுற்றிக்காணும்போது மிக அழகாயிருந்தது.

மேகத்தின் மீது நாம் அமர்ந்துகொண்டு பார்த்தால் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்குமிடையே எல்லைக்கோடு தெரியாது…! ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்குமிடையில் கல்லைப் பாரக்க முடியாது… ஆனால், மேகத்தின் மீது ஏறி அமர முடியாதது நமது துரதிர்ஷ்டம்…! 

– கலீல் ஜிப்ரான்.

வீட்டில் ஒரு வேலை இருந்ததால் பசுமைநடை முடியும் முன்னே நானும், சகோதரனும் மலையிலிருந்து இறங்கி கிளம்பினோம். கொங்கர்புளியங்குளம் மலை குறித்த மற்றொரு பதிவையும் வாசியுங்கள். பசுமைநடை குறித்து ஆனந்தவிகடனில் இணைப்பாக வரும் என்விகடனில்(10.8.11) வந்து உள்ளது. மகுடேஸ்வரனின் ‘மண்ணே மலர்ந்து மணக்கிறது’ கவிதைத்தொகுப்பிலுள்ள கீழ்உள்ள கவிதை ஞாபகம் வந்தது. அந்தக் கவிதை,

என் ஒரே உடைமை

அடிவானைக் குடைந்து செல்லும் 

அந்தப் பாதை

என் ஒரே சொத்து

ஓரிடம் நில்லா மனது

என் ஒரே அறிவு 

நடைபோட வேண்டிய திசை

என் ஒரே பற்று

என் கால்கள்.

– மகுடேஸ்வரன்

பின்னூட்டங்கள்
  1. தொப்புளான் சொல்கிறார்:

    //வீட்டில் ஒரு வேலை இருந்ததால் பசுமைநடை முடியும் முன்னே நானும், சகோதரனும் மலையிலிருந்து இறங்கி கிளம்பினோம்//

    இட்லி போச்சே..

    //…‘எம் பேரு முத்துக்கிருஷ்ணன், ஊர் சுத்துறது என் வேலை’ன்னார். எல்லோரும் பல துறைகளைச் சார்ந்தவர்கள் என்று அன்றுதான் அறிந்தோம்//

    ஊரு சுத்துறதுதான் இருக்கிறதிலேயே ஆகமுக்கியமான துறை

    //…அதிகாலை எழுந்து நானும், சகோதரரும் கிளம்பினோம்.//

    அதிகாலையிலேவா? எப்ப ‘வெளிய’ இருக்கிறது? தண்ணி வாடை கண்டாலே மனசு வயிறைத் தூண்டுமே? ‘அடக்கியாள்வது’ நமது இயல்புக்கு ஒவ்வாததாயிற்றே?

  2. maduraivaasagan சொல்கிறார்:

    இந்த முறை பசுமைநடைக்குச் சென்றபோதும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வாசலிலிருந்த இலவசக் கழிப்பிடத்திற்குச் சென்றுதான் நிம்மதியாகச் சென்றேன். ஆனந்தத்தொல்லையல்லவா அது?

  3. nathnaveln சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

  4. வேல்முருகன் சொல்கிறார்:

    அழகான பதிவு மீண்டும் அதே இடம் ஆனால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி யுள்ள நிலையில் இந்ந பயணம் இனிமையாக இருக்கும்

பின்னூட்டமொன்றை இடுக