தென்பறம்பு நாட்டுத் திருவாதவூரில் பசுமைநடை

Posted: செப்ரெம்பர் 24, 2013 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

Tiruvadhavur 1

வேண்டத் தக்க தறிவோய்நீ                                    வேண்ட முழுதும் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ                      வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டிநீ யாதருள்செய்தாய் யானும்             அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில்               அதுவும் உன்றன் விருப்பன்றே  

– திருவாசகம்

சமயக்குரவர் நால்வரில் மாணிக்கவாசகரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், அவரும் மதுரை வாசகர். பசுமைநடைக்குழுவாக மதுரையிலுள்ள தொன்மையான இடங்களை நோக்கி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை குழுவாகப் பயணித்து வருகிறோம். இம்முறை திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூருக்குச் சென்றோம். இந்த ஊரில் உள்ள ஓவா மலையில் சமணத்துறவியர் தங்கிய சுவடுகள் காணப்படுகிறது. சனிஸ்வரனுக்கு வாதநோயைப் போக்கிய திருமறைநாதர் ஆலயம் இந்த ஊரில் உள்ளது.

22.09.2013 அன்று அதிகாலை எழுந்து நானும், சகோதரியின் மகனும் கிளம்பி சென்றோம். எங்களுக்கு முன்னதாகவே மாட்டுத்தாவணி முன்னுள்ள டெம்பிள்சிட்டி ஹோட்டல் முன் சென்னையிலிருந்து பாபுவும், முருகராஜூம் வந்திருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் வர அரட்டை களைகட்டியது. எல்லோரும் வந்ததும் இரண்டு பேருந்துகளில் திருவாதவூர் நோக்கிச் சென்றோம். மாட்டுத்தாவணிக்கு அருகிலுள்ள தோரணவாயிலுக்குள் யானைமலை அழகாக வரவேற்றது. பார்த்தாலே பரவசம்.

யானைமலை ஒத்தக்கடையிலிருந்து வலப்புறமாக திரும்பி திருமோகூர் – திருவாதவூர் செல்லும் சாலையில் சென்றோம். வழிநெடுக வேடிக்கை பார்த்துக் கொண்டு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டே சென்றேன். திருமோகூர், தாமரைப்பட்டி, இடையபட்டி, மூக்கம்பட்டி தாண்டி திருவாதவூர் சமத்துவபுரத்திற்கு சற்றுமுன் மலைக்கருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓவாமலையை நோக்கி நடந்தோம்.

greenwalk

ஒருபக்கம் சிறுசிறு குன்றுகளாக மலைகள் வரவேற்றது. மறுபுறம் பாளம்பாளமாக கிடக்கும் மலையைப் பார்த்து கண்ணீர் வந்தது. ஓவாமலை தன் கிளைகளை இழந்து ‘ஓ’வென்று  இருந்தது.  வெய்யோனும் பசுமைநடையில் கலந்து கொண்டதால் வெயில் கொஞ்சம் சுள்ளென்று இருந்தது.

சமணப்பள்ளி உள்ள குன்றை நோக்கி பயணித்தோம். நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் இரண்டு பகுதியாக மலையிலுள்ள படுக்கைகளையும், தமிழ்பிராமிக் கல்வெட்டுகளையும் பார்த்தோம். திருவாதவூர் குறித்த தகவல்கள் அடங்கிய கைப்பிரதி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா திருவாதவூர் குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார்.

திருவாதவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர். சங்க காலப்புலவர்களில் கபிலர் பிறந்த ஊர். இவரது காலத்தை கி.மு.2-3 ஆம் நூற்றாண்டு எனலாம். பாரிவள்ளலிடம் அமைச்சராக பணியாற்றியவர் கபிலர். பாரி சிங்கம்பிடாரிக்கு அருகிலுள்ள பிரான்மலையை ஆண்டார். கபிலர், பரணர் என்ற இரண்டு புலவர்களையும் சேர்த்தே அக்காலத்தில் சொல்வார்கள்.

திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர். இவர் திருவாதவூரார் என்றே அழைக்கப்படுகிறார். இவரது காலம் கி.பி.9-10ஆம் நூற்றாண்டு. பாண்டியனிடம் அமைச்சராகப் பணியாற்றிய இவர் தொண்டிக்கருகில் குதிரை வாங்கச் சென்ற போது சிவனால் ஆட்கொள்ளப்பட்டு அறந்தாங்கிக்கருகில் ஆவுடையார் கோயில் கட்டினார். பின் பாண்டியன் குதிரைகளைக் கேட்க நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை சிவன் நிகழ்த்தினார். (இதைக்குறித்து மேலும் அறிய மதுரை வீதிகளில் பசுமைநடை பதிவை வாசிக்கவும்).

padugai

இங்குள்ள சமணப்பள்ளியில் இரண்டு மூன்று பேர் தங்குவதற்கு படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளது. குகையின் விளிம்பில் இரண்டு தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நீர்வடிவிளிம்பின் மேலுள்ள கல்வெட்டில் ‘பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்’ என்ற வரி காணப்படுகிறது. பாங்காடு என்ற ஊரைச் சேர்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் குடைவிக்கப்பட்டது எனப் பொருள் கொள்ளலாம். பாங்காட என்பது இவ்வூருக்கு அருகிலுள்ள பனங்காடி என்ற ஊரையும் குறிக்கலாம். பனங்காடியில் பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோயில் உள்ளது.

kalvettu

அடுத்த கல்வெட்டு குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பின் கீழ் ‘உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்’  என்றுள்ளது. பரசு என்ற உபாசகரால் இந்த உறைவிடம் அமைக்கப்பட்டது எனலாம். உபசன் என்பது சமய ஆசிரியரைக் குறிக்கும். இக்குகைத்தளத்தில் வட்டவட்டமாக சில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

திருமறைநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பிற்காலப்பாண்டியர்களில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்கோயிலுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டுகள் கொஞ்சம் உள்ளன. வியாபாரிகளும், தேவரடியார்களும் கோயிலுக்கு சிலைகள் வழங்கியதைக் குறிக்கும் கல்வெட்டுகளும் உள்ளன. இந்தக் கோயிலில் எழுபதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் இக்கோயிலில் சிலைகள் உள்ளன.

திருவாதவூரைத் தாண்டிச் சென்றால் பெரிய ஏரியொன்று வரும். அதற்கு ‘உலகளந்த சோழன் பேரேரி’ என்று பெயர். முதலாம் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்தது. சோழர்கள் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்த போது இந்த ஏரி வெட்டப்பட்டிருக்கலாம். இந்த மடையில் புருஷாமிருகம் சிலையுள்ளது. பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவி ஏற்றதை குறிக்கும் விதமாக நினைவுத்தூண் ஒன்று இந்த ஊரில் உள்ளது.

அந்தக் காலத்தில் மதுரையிலிருந்து உறையூருக்குச் செல்லும் பாதைகளில் இந்த வழியும் ஒன்றாகயிருக்கலாம். திருமோகூர், திருவாதவூர், பனங்காடி, மேலூர் வழி பெருவழியொன்று இருந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஊர் சங்ககாலத்திலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த ஊராகயிருக்கிறது.

sivan temple

சாந்தலிங்கம் அய்யாவின் உரையைக் கேட்டபின் மலையிலிருந்து இறங்கி பேருந்தை நோக்கி நடந்தோம். அங்கிருந்து திருமறைநாதர் கோயிலுக்கு சென்றோம். குடமுழுக்குக்கான பணிகள் கோயிலில் நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் பழமையான கோயில். மக்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் திருமறைநாதர் அமைதியாக வீற்றிருக்கிறார். கோயிலுக்குள் எல்லோரும் கூடினோம்.

அய்யாவுக்கு அவர்படம்

ஒவ்வொரு பசுமைநடையையும் அர்த்தமுள்ள நிகழ்வாக்கும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வை கோயில் வெளிப்பிரகாரத்தில் நடத்தினோம். சமணம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்து வரும் ஜெயஸ்ரீ அவர்கள் ராஜன்னா எடுத்த சாந்தலிங்கம் அய்யாவின் நிழற்படத்தை அவருக்கு வழங்கினார்.

பாபுவுக்குப் படம்

அதற்கடுத்து கல்லூரி ஆய்வு மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை தேடித்தேடி வாங்கி தந்து அவர்களது ஆய்வுகளுக்கு உதவி வரும் புத்தகத்தாத்தா முருகேசன் அய்யா அடுத்த நினைவுப்பரிசை சாந்தலிங்கம் அய்யாவிடம் வழங்கினார். விருட்சத்திருவிழாவில் புகைப்படகலைஞர் ஜேம்ஸ் எடுத்த படத்தை அற்புதமான ஓவியமாக ஓவியர் ரவி வரைந்திருந்தார். அந்தப் படத்தை அவர் பசுமைநடைக்கு வழங்க ஓவியர் பாபு பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இந்நிகழ்வுகளை அழகாக ஒருங்கிணைத்தார். அற்புதமான நிகழ்வு மிக எளிமையாக நடந்தது.

எல்லோரும் கோயிலுக்குள் சென்று திருமறைநாதர், வேதநாயகியை வணங்கினோம். குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதால் விதானங்களில் வண்ண வண்ண பூக்கோலங்கள் அழகாக வரையப்பட்டிருந்தன. கோயில் மிகவும் ரம்மியமாகயிருந்தது. வரவே மனசில்லை. அவ்வளவு அமைதியான இடம். வெளிபிரகாரத்தில் எல்லோரும் சேர்ந்து உணவருந்தினோம். அங்கிருந்து மறக்க முடியாத நினைவுகளோடு கிளம்பினோம். இந்தப் பயணத்தில் எங்களோடு எம்.ஏ.வி.எம்.எம் பள்ளி மாணவர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குகன் & எம்.ஏ.வி.எம்.எம் பள்ளிகளிலிருந்து இந்நடைக்கு பேருந்து உதவி செய்தனர். அவர்களுக்கு நன்றிகள் பல.

kulam

பதிவிற்கான நிழற்படங்களை தந்துதவிய நண்பர் ராஜன்னா சிறந்த வாசகர், சூழலியல் ஆர்வலர், பல் மருத்துவர். மதுரக்காரன் என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வருகிறார். மேலும், இவர் எடுக்கும் படங்களில் மந்திரப்பொடியைத் தூவி அந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கும்படி செய்துவிடுகிறார்.

ஆவணி புட்டுத்திருவிழாவிற்கு மதுரைக்கு வந்த மாணிக்கவாசகரை மாட்டுவண்டியில் வைத்து மாட்டுத்தாவணிக்கிட்ட சென்ற மாதம் பார்த்தேன். எளிமையாக சென்று கொண்டிருந்தார். சங்ககாலப்புலவர் கபிலர் மீதான காதலை ஜெயமோகனின் ‘காடு’ நாவல் ஏற்படுத்தியது. குறிஞ்சி நிலப்பரப்பில் அலைய வேண்டுமென்ற ஆவலை உண்டாக்கிய நாவல் ‘காடு’. நாலு வருடங்களுக்கு முன் நானும் என் சகோதரனும் திருமோகூரிலிருந்து திருவாதவூருக்கு மாலைப்பொழுதில் சைக்கிளில் சென்றது மறக்க முடியாத அனுபவம்.

தினகரன் நாளிதழில் இப்பயணம் குறித்த பதிவு 23.09.2013 அன்று மதுரை செய்திகளில் வந்திருந்தது. தொடர்ந்து பசுமைநடைப் பயணங்களை பதிவு செய்து வரும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.

பின்னூட்டங்கள்
  1. மதுரக்காரன் சொல்கிறார்:

    நன்றிகள் பல சித்திரவீதிக்காரரே!

    மேலும் பல நடைகள் செல்வோம். தமிழகத்தின் உண்மை வரலாற்றை சொல்வோம். 🙂

    இந்த தடவ வெயில் கடுமையாய் இருந்ததால பயங்கர தலவலி. பதிவு எழுதுற மூடே போச்சி. மெல்ல எழுதுறேன். 🙂

  2. பா.உதயக்குமார்... சொல்கிறார்:

    பசுமைநடையில் கலந்து கொள்வது ஒரு அனுபவமென்றால், அதை சித்திரவீதிக்காரன் எழுதிப் படிப்பது இன்னொரு அனுபவம்… இரண்டுமே தவறவிடக்கூடாதவை…

  3. வி.பாலகுமார் சொல்கிறார்:

    இருவேறு மனநிலையைத் தந்தது இந்தப்பயணம். குன்றின்மீதேறி வாதவூரின் வரலாற்றை அறிந்தது மகழ்வென்றால், துண்டு துண்டு அறுக்கப்பட்டிருந்த மலைகளை பார்க்க வேதனையாக இருந்தது. அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். புகைப்படங்கள் மிக அருமை.

  4. rathnavelnatarajan சொல்கிறார்:

    தென்பறம்பு நாட்டுத் திருவாதவூரில் பசுமைநடை = எங்கள் அருமை நண்பர் திரு சித்திரவீதிக்காரன் அவர்களின் அற்புதமான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு சித்திரவீதிக்காரன்.
    (இந்த பசுமை நடை சம்பந்தமாக புத்தகங்கள் கிடைக்குமா? எனது மின்னஞ்சலுக்கு தகவல் சொல்லுங்கள்: rathnavel.natarajan@gmail.com.

பின்னூட்டமொன்றை இடுக