சேரன் பாண்டியன் பெருவழித்தடம்

Posted: நவம்பர் 9, 2013 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

பெருவழித்தடம்

santhalingamதீபாவளி நாயகனைக் காண பதிவு காண்க. கொங்கர்புளியங்குளம் பசுமைநடையின்போது மேலும் பல தகவல்களை சொ.சாந்தலிங்கம் அய்யா அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

சேரன்பாண்டியன் பெருவழித்தடம்

அற்றைநாளில் சேரநாட்டுக்கும் பாண்டியநாட்டுக்கும் இடையே இருந்திருக்கக்கூடிய பெருவழித்தடத்தின் வரலாற்றுச் சுவடுகள் இன்றும் கிடைத்துவருகின்றன. அதன் அடிப்படையில் அமைந்த உத்தேசமான வரைபடந்தான் மேலே இருப்பது.

மேலும் கொங்கர்புளியங்குளம் குறித்து அவர் தந்த தகவல்கள் இங்கே.

தமிழிக் கல்வெட்டுகளின் தந்தை

தமிழிக் கல்வெட்டுகளின் தந்தை என்றழைக்கப்படும் கே.வி.சுப்பிரமணிய ஐயர் கொங்கர்புளியங்குளத்திலுள்ள கல்வெட்டுகளைக் காண வந்ததைக் குறித்து நகைச்சுவையாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மழைக்காலமொன்றில் மதுரையிலிருந்து நாகமலைக்கு குதிரை வண்டியில் வந்தபோது குதிரை வழியில் அடிக்கடி சண்டித்தனம் செய்திருக்கிறது. இதனால் குதிரை வண்டிக்காரர் இவரை நாகமலைப்புதுக்கோட்டை சற்று முன்னே இறக்கி சென்றுவிட்டார். பின்னர் சுப்பிரமணிய ஐயர் இந்த ஊரில் உள்ள தலையாரி போன்றோரை பார்த்து இம்மலைக்கு வந்து இங்குள்ள கல்வெட்டுகளைப் படித்துள்ளார். இதுபோன்ற மலைகளில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழிக் கல்வெட்டுகள் என்று நிறுவியதில் கே.வி.சுப்பிரமணிய ஐயருக்கு பெரும்பங்குண்டு.

kongarpuliyankulam1

ஸ்ரீபாலன் – அன்றும் இன்றும்

ஜீவபந்து ஸ்ரீபால் அவர்கள்  ஒருமுறை தேனிக்குப் பேருந்தில் சென்ற போது நாகமலைப் பகுதியில் வண்டி கோளாறாகியுள்ளது. ஸ்ரீபால் இறங்கி அருகில் தெரிந்த சமணமலைக்கு சென்றுள்ளார். மலையில் சமணச்சிற்பங்களை பார்த்து பேருவகை கொண்டார். பின்னர் இங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகளை தொல்லியல் துறை மூலம் பாதுகாக்க ஏற்பாடு செய்தார். இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டொன்றில் ஸ்ரீபாலன் செய்வித்த திருமேனி என்ற பெயரைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். தம்முடைய பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மலையில் பொறிக்கப்பட்டதன் மூலம் இச்சிலை செய்வித்தவரின் மறுபிறவியாகவே தன்னை எண்ணி மகிழ்ந்தார். இம்மலை சரளைக் கற்களுக்காக அறுபடாமல் காத்த பெருமை ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களையே சேரும். இவர் சமணமலை என்ற பெயரில் ஒரு நூல் ஒன்றை எழுதியுள்ளார். ஜீனர் மலைகள் அல்லது அறவோர் பள்ளிகள் என்ற நூலும் எழுதியுள்ளார்.

kathirclicks

கொங்கர்புளியங்குளம் – கொங்கர்கள் – சமணமலை – சோழவந்தான்

kongarpuliyankulam

கொங்கர்புளியங்குளம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தடயங்களை கொண்ட ஊர். சமணமலையில் செயல்பட்டு வந்த மாதேவிப்பெரும்பள்ளிக்கு தானமாக இந்த ஊர் வழங்கப்பட்டதை அங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொங்குநாட்டிலிருந்து வந்த கவுண்டர்கள் இப்பகுதியில் குடியேறியதால் கொங்கர்புளியங்குளம் என அழைக்கப்படுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இம்மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளத்தில் வெட்டப்பட்டுள்ளது. இதை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் பாறையின் முகப்பில் வெட்டப்பட்டுள்ளது.

குற கொடுபிதவன் உபசஅன் உபறுவன்

உபறுவன் என்பவர் செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. உபசஅன் என்பது சமய ஆசிரியரைக் குறிக்கும்.

குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன்ஓன்

சேர ஆதன் என்பவன் செய்வித்த குகை எனலாம். அந்நாளில் சேர அரசர்களில் பெயர்கள் பெரும்பாலும் ஆதன் என வருவதைக் காணலாம். பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் இடையேயான பெருவழியில் இந்த ஊர் அமைந்துள்ளது.

பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவெபோன்

பாகனூரைச் சேர்ந்த பேராதன் பிட்டன் என்பவர் செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மூன்றாவதாக உள்ள கல்வெட்டில் பாகனூர் என்ற ஊர்பெயர் காணப்படுகிறது. சங்க இலக்கியங்களில், வேள்விக்குடி செப்பேட்டில் பாகனூர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய சோழவந்தான்தான் பாகனூர். சோழன்தலைகொண்ட வீரபாண்டியனின் வெற்றியை நினைவு கூறும் பொருட்டு சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. வீரபாண்டியன் காலம் கி.பி.946-கி.பி.964. பொன்னியின் செல்வன் வாசகர்கள் இந்த பாண்டியனை அறிவார்கள். ராஜராஜன் இப்பகுதியை கைப்பற்றிய போது அவன் பெயரில் ஜனநாதசதுர்வேதிமங்கலம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. ராஜராஜனின் பட்டப்பெயர்களுள் ஜனநாதனும் ஒன்று. இதை உறுதிசெய்யும் பொருட்டு இன்னும் சோழவந்தானில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு ஜனகை மாரியம்மன் கோயில் என்று பெயர்.

பின்னூட்டங்கள்
  1. Pandian சொல்கிறார்:

    அருமையான படங்கள் மற்றும் கட்டுரை.
    தமிழகத்தில் சமணம் என்று வரும்போது புதுக்கோட்டையையும் தவிர்க்க இயலாது. முக்கியமாக
    சித்தன்னவாசல் – http://pudukkottai.grassfield.org/node/15
    நார்த்தாமலை – http://pudukkottai.grassfield.org/node/13

    தொரட்டும் சித்திரை வீதியின் முத்திரைச் சொற்கள்

    பாண்டியன்
    புதுகை

  2. Pandian சொல்கிறார்:

    தொரட்டும் சித்திரை வீதியின் முத்திரைச் சொற்கள்

    பாண்டியன்
    புதுகை

  3. வணக்கம்
    வரலாற்றுக் கட்டுரை மிக நன்றாக உள்ளது படங்களும் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  4. k.velmurugan சொல்கிறார்:

    அருமை, படங்களுடன் வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்

  5. rathnavelnatarajan சொல்கிறார்:

    சேரன் பாண்டியன் பெருவழித்தடம் = திரு சித்திர வீதிக்காரன் அவர்களின் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு சித்திர வீதிக்காரன்.

  6. kesavan.muthuvel சொல்கிறார்:

    #சோழன்தலைகொண்ட வீரபாண்டியனின் வெற்றியை நினைவு கூறும் பொருட்டு சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது.

    சோழர்கள் ஆட்சியின் பொருட்டே சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்ட்டது [பாண்டியர்கள் ஆட்சியின் போது: பராக்கிரமபாண்டியபுரம்]

    ராசராசன் [ஜனநாதன்] வெற்றியை குறித்து ஜனநாதசதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டது. ராஜராஜனின் பட்டப்பெயர்களுள் ஒன்று.

    #இதை உறுதிசெய்யும் பொருட்டு இன்னும் சோழவந்தானில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு ஜனகை மாரியம்மன் கோயில் என்று பெயர்.

    ஜனகை மாரியம்மன் கோயிலுக்கும் இந்த வரலாற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இது வெகுசமீபத்திய காலத்தயது[19ம் நூற்றாண்டு].ராசராசன் [ஜனநாதன்] வெற்றியை குறித்து கொண்ட கற்றளி [கற்கோவில்] ஜெனகை நாராயண பெருமாள் கோவில்.இன்றும் இங்கு ராசராசன் பெயர் பொறித்த கல்வெட்டுக்களை பார்க்கலாம்.

    பாதை ஓரமாக இருந்த கிராம காவல் தெய்வந்தான் மாரியம்மன் கோவில், இன்று வளர்ந்துவிட்டது.

    கேசவன் முத்துவேல்
    kesavan.info

பின்னூட்டமொன்றை இடுக