அலங்காநல்லூர் சல்லிக்கட்டு

Posted: பிப்ரவரி 2, 2022 in பார்வைகள், பகிர்வுகள்

மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டு உலகளவில் புகழ்பெற்றது. பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கலன்று அலங்காநல்லூரிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் மக்கள் தங்கள் வாழ்வோடு இணைந்த விசயமாக சல்லிக்கட்டை பார்க்கிறார்கள். சல்லிக்கட்டுத் தடை வந்தபோது ரேசன்காடுகளைத் திருப்பிக்கொடுத்து, மொட்டையடித்து எனப் பல வழிகளில் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். உலகையே தமிழகம் நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த சல்லிக்கட்டுப்போராட்டம் அலங்காநல்லூர் வாடிவாசலிலிருந்துதான் தொடங்கியது.

ஏறுதழுவுதல் குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பு உள்ளது. வாடிவாசலிலிருந்து வெளியேவரும் மாட்டை அடக்குதல் என்றில்லாமல் மாட்டின் திமிலை குறிப்பிட்ட தூரத்திற்கு விடாமல் சேர்த்து அணைத்து ஓடுவதும், அதன் கொம்பில் கட்டப்பட்ட பரிசை எடுக்கும் விளையாட்டே சல்லிக்கட்டு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்திலிருந்த சல்லிக்காசு காளையின் கொம்பில் கட்டப்படும். அதிலிருந்து வந்ததே சல்லிக்கட்டு. இன்று மாடுபிடித்த வீரர்களுக்கு தங்கநாணயங்களும், மகிழுந்துகளும் பரிசாகத் தரப்படுகிறது. பிடிபடாத மாடுகளுக்கும் பரிசு வழங்கப்படுகிறது. மஞ்சுவிரட்டு, எருதுகட்டு என்பன வேறுவகையான நிகழ்த்துமுறைகள்.

திருவிழாக்களில் நாடகம் நடத்துவதைப் போல அலங்காநல்லூரிலுள்ள காவல்தெய்வமான முனியாண்டிக்காக சல்லிக்கட்டு நடத்துகின்றனர். சல்லிக்கட்டில் முதலில் அலங்காநல்லூர் முனியாண்டி கோவில்மாடு, அரைமலை கருப்புகோவில்மாடு, வலசை கருப்புகோவில்மாடுகள் அவிழ்த்து விடப்படுகின்றன. கோவில்மாட்டை யாரும் அணையக்கூடாது என்பது ஊர் வழக்கம்.

சல்லிக்கட்டுப்போட்டி சிறப்பு விருந்தினரால் கொடியசைத்து துவங்கிவைக்கப்படுகிறது. சல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது. தங்கக்காசு, சைக்கிள், பீரோ, வாஷிங் மிஷின், பேன் என பல பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் உச்சமாக தற்போது சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறப்பாக விளையாடிய காளைக்கும் கார் பரிசாக வழங்கப்படுகிறது.

மாடுகளை அவிழ்த்துவிட்டால் மாடுகள் நேரே ஓடும்படியாக எல்லா வாடிவாசல்களும் அமைந்திருக்கும்போது அலங்காநல்லூர் வாடிவாசலில் காளைகள் வெளியேவந்து ஒரு சிறு மைதானம் போன்ற பகுதியில் சுற்றிவிளையாடி இடதுபுறமாகத் திரும்பிச்செல்லும்படி அமைந்துள்ளது. அலங்காநல்லூர் சல்லிக்கட்டில் குறைந்தது ஐநூறு காளைகள் தொடங்கி ஆயிரம் காளைகள் வரை அவிழ்த்துவிடப்படுகிறது. காலை ஏழு மணியளவில் தொடங்கும்போட்டி மாலை வரை நடைபெறுகிறது. மாடுபிடி வீரர்களும் மணிக்கொருமுறை மாற்றப்படுகின்றனர். வேடிக்கை பார்க்க வருபவர்களும் கொஞ்சநேரம் பார்த்துவிட்டு கிளம்ப அடுத்தகட்ட பார்வையாளர்கள் வருகிறார்கள்.

சல்லிக்கட்டு மாடுகளை நடைப்பயிற்சி, நீச்சல்பயிற்சி, மண்ணுமுட்டுதல் போன்ற பயிற்சிகளில் மாடுவளர்ப்பவர்கள் ஈடுபடுத்துகின்றனர். அதேபோல மாடுபிடிக்கும் வீரர்களும் காளைகளைப் போல பயிற்சியெடுக்கிறார்கள். வயல்வெளியில் சிறுவாடிகளை அமைத்து அதன்நடுவே சிறு கன்றுகளை ஓடவிட்டு தாவி அணைந்து பழகுகிறார்கள். மாடுகளின் சீற்றத்தை அறிந்துகொண்டு அதை எதிர்கொள்ளப் பழகுகிறார்கள்.

பல்வேறு ஊர்களிலிருந்து மாடுகளை அலங்காநல்லூர் சல்லிக்கட்டுக்கு கொண்டுவருகின்றனர். கோவில்மாடுகள் தொடங்கி தனிநபர் வளர்க்கும் காளைகள் வரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டில் அவிழ்க்கப்படுகின்றன. மாடுகளுக்கு வழங்கப்படும் பரிசுகளைவிட அதற்கு அவர்கள் செலவளிக்கும் தொகை அதிகம். ஆனாலும், மாடு வளர்ப்பதை பெருமையாக கருதி சல்லிக்கட்டு மாடுகளை பராமரித்துவருகின்றனர். வாடிவாசலிலிருந்து மாடு வெளியேறி விளையாடி பிடிபடாமல் வரும்போது மாட்டுக்காரர்களை கையில்பிடிக்க முடியாது. அவ்வளவு மகிழ்ச்சியாகயிருப்பர். மாடுவளர்ப்பதில் பெண்களின் பங்களிப்பும் குறிப்பிடவேண்டியது. அதிலும் மாடுகளை வாடிவாசலில் கொண்டுவந்து அவிழ்க்கவும் பெண்கள் வருவது குறிப்பிடத் தகுந்தது.

சல்லிக்கட்டில் சுவையான விசயம் என்றால் அறிவிப்பாளர்களின் பேச்சுதான். ஒரு காளையை இரண்டுபேர் சேர்ந்து அடக்கும் வேளையில் அந்த இளைஞர்களுக்குப் ’பொங்கல் வாழ்த்துகள்’ என்பது, வாடிவாசலில் மாட்டைவிட்டு வெளியே வந்து அலப்பறை செய்யும் மாட்டுக்காரர்களுக்கு பரிசுகள் இல்லை என்பது, அதோடு அதில் ஒரு மாட்டுக்காரர் சாரி கேட்க ’சாரின்னாலும் கிடையாது பூரின்னாலும் கிடையாது’ என ரைமிங்காக பேசுவது, மாடு சுத்துமாடுன்றாங்க சுத்துதான்னு பார்ப்போம் என நக்கலாகச் சொல்வது எனப் பல விசயங்களைச் சொல்லலாம். அலங்காநல்லூரில் தங்கமழை, வாடிவாசலில் நுழையும் ஒவ்வொரு காளைக்கும் தங்க நாணயம் என்பதோடு தொலைக்காட்சி அறிவிப்பாளரைப் போல சல்லிக்கட்டுப் பரிசாக தங்க நாணயங்களை வழங்கியவர்களின் பெயர்களை அவ்வப்போது அறிவிக்கிறார்கள்.

அதிகாலையிலேயே வாடிவாசலுக்கு எதிரேயுள்ள மேடையில் தொலைக்காட்சி, பத்திரிகைக்காரர்கள் நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வந்துவிடுகின்றனர். பல செய்தித்தொலைக்காட்சிகள் சல்லிக்கட்டை நேரடியாக ஒளிபரப்புகின்றன. நிழற்படக்கலைஞர்கள் மாடுபிடிப்பதை, மாடுவெளியே வருவதை அற்புதமாக காட்சிப்படுத்துகின்றனர். ஊடகத்துறையினருக்கு விழாக்கமிட்டியினர் இவர்களுக்கான உணவை வழங்குகின்றனர்.

காவல்துறையினர் விழாமேடையிலும், மாடுவரும் பாதையிலும் வாகனங்களிலிருந்தும் பாதுகாப்புத் தருகின்றனர். மாடுபிடி வீரர்களோ, மாட்டுக்காரர்களோ அலும்பு செய்யும்போது அவர்களை கூட்டத்திலிருந்து வெளியேற்றுகின்றனர். சல்லிக்கட்டு நாட்களில் இரவுபகலாக காவலர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது.

மதுரைக்கான வளர்ச்சித் திட்டங்களை சமீபத்தில் அறிவித்த தமிழக முதல்வர் அலங்காநல்லூரில் பெரிய அரங்கம் அமைக்கவிருப்பதாக அறிவித்திருப்பது சிறப்பு.

படங்கள் – வெற்றிதாசன், செல்லப்பா

பின்னூட்டமொன்றை இடுக