ஓநாய் குலச்சின்னம்

Posted: பிப்ரவரி 7, 2022 in பார்வைகள், பகிர்வுகள்

மேய்ச்சல் பிரதேசத்தில் அந்த குட்டிகளை கண்டெடுத்த குகையைத் தேடி தன் நண்பனோடு வந்தவன், அதை கண்டுபிடித்து அந்த இடத்தை சுத்தம் செய்கிறான். தான் கொண்டு வந்திருந்த கறியை அந்த ஏழு குட்டிகளுக்கும் பிரித்து வைக்கிறான். அதில் பெரிய துண்டு அவன் வளர்த்த குட்டிக்குரியது. ஏழு பத்தியைப் பொருத்திவைக்கிறான். பெரிய கீதாரியின் நினைவாக அவருக்கு பிடித்த மதுவை அந்தப் பகுதியைச் சுற்றித் தெளிக்கிறான். தான் எழுதிய அந்த நிலத்தின் வாழ்வைப் பற்றிய புத்தகத்தின் முதல் பக்கத்தை மட்டும் எடுத்து நெருப்பை பற்ற வைக்கிறான். அந்தப் பக்கம் எரியும்போது தீ அந்தப் புத்தகத்தின் பெயரையும், அவன் பெயரையும் தீண்டுகிறது. அவர்களின் ஆன்மா அவனை ஆசிர்வதித்ததாக, அவனது குற்றங்களை மன்னித்ததாக நினைத்துக் கொள்கிறான். 

நம்ம ஊரில் நாட்டார் தெய்வத்திற்கு படையல்போடுவது போல நடக்கும் மேற்கண்ட நிகழ்வு நடப்பது மங்கோலிய மேய்ச்சல் நிலமான ஓலான்புலாக்கில். பீஜிங்கொத்துக்கறியை தான் வளர்த்த ஓநாய் குட்டிகளுக்கு படையலிடும் ஜென்சென் சீனாவைச் சேர்ந்தவன். அவன் வணங்கும் முதியவர் பில்ஜி, அவனுக்கு வழிகாட்டியாக இருந்த மங்கோலியப் பழங்குடி. அவன் வைத்து வணங்கிய புத்தகம் ‘ஓநாய் குலச் சின்னம்’.

எதற்காக ஜென் ஓநாய் குலச்சின்னம் என்னும் நூலை எழுதினான்? சீன மாணவனான ஜென் ஏன் மங்கோலிய மேய்ச்சல் நிலத்திற்கு வந்தான்? பில்ஜி யார்? அந்த மேய்ச்சல் நிலம் என்னவானது? ஓநாய் பெயரில் நூல் எழுதும் அளவிற்கு அவைகளுக்கு என்ன முக்கியத்துவம்? எனப் பல கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்நாவல்.

கலாச்சாரப் புரட்சியின் விளைவாக மங்கோலிய மேய்ச்சல் நிலத்திற்கு கற்கவரும் சீன மாணவன் ஜென், மங்கோலியப் பழங்குடிகளின் வாழ்க்கை முறையை, அப்பழங்குடிகளின் பண்பாட்டை, அவர்கள் வாழ்வில் ஓநாய்கள் பெற்றுள்ள இடத்தை அறிந்துகொள்கிறான். தன்னையும் ஒரு மங்கோலியனாக கருதும் மனநிலையை அடைய ஒரு ஓநாயை வளர்க்க முயற்சிக்கிறான். இதற்கிடையில் மேய்ச்சல் நிலங்களை அழித்து அங்கு பயிர்த்தொழில் செய்ய சீனராணுவம் ஓநாய் வேட்டையைத் தொடங்குகிறது. மங்கோலியப் பழங்குடிகளின் வாழ்க்கை எவ்வாறு சிதைந்தது, இயற்கை வளங்களை பிரம்மாண்டங்கள் எவ்வாறு சூறையாடியது என்பதை இந்நாவல் எடுத்துரைக்கிறது.

ஓநாய்கள் பொறுமையாக காத்திருப்பது, தலைமை ஓநாய்க்கு அடிபணிவது, சரியான முடிவுகளை எடுப்பது, வேட்டையாடுவது, குடும்பமாக வசிப்பது, அவசரகாலத்தில் தன் உயிரைக் காக்க உடலின் ஒரு பாகத்தைத் துண்டித்துக் கொள்ளத் துணிவது, எதிரிகளின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவது என ஓநாய்கள் இந்நாவலின் நாயகர்களாகத் திகழ்கிறது. மங்கோலிய குதிரைகளின் வேகத்திற்கு ஓநாய்களின் மீதான அதன் பயம் ஒரு காரணம். மான்களும், மர்மோட்டுகளும் மேய்ச்சல் நிலத்தையும், மலைகளையும் முழுக்க அழிக்காமல் இருக்க ஓநாய்கள்தான் காரணம். இப்படி மேய்ச்சல்நிலத்தின் காவலனாக, டெஞ்ஞரின் (மங்கோலியப் பழங்குடிகளின் தெய்வம்) தூதுவனாக ஓநாய் திகழ்கிறது. 

மனித ஓநாயாக பில்ஜி இருக்கிறார். அற்புதமான பெரியவர். வேட்டையாடும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கும், தாக்குதல் நடத்த சரியான காலத்தைத் தேர்ந்தெடுப்பதும், டெஞ்ஞருக்கு பயந்து வாழ்வதும் என பில்ஜி நம்மை கவர்ந்த மனிதராக இருக்கிறார். ஜென் நல்ல வாசகன், தான் வாசிக்கும் விசயங்களைக் குறித்து பில்ஜிக்கு சொல்லி அவருடைய அனுபவங்களை கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

சீனாவில் வசிப்பவர்களுக்கு கறிக்கு, பனியாடைகளுக்குத் தேவையான ஆடு, மாடுகளை வளர்ப்பது, மான்களை வேட்டையாடுவது அதை சீனர்களுக்கு விற்பது, அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்து மங்கோலியப் பழங்குடிகள் வாழ்கின்றனர். விவசாயக்குடிகளைவிட நாடோடிகளாக உள்ள மக்களிடம் உள்ள நற்பண்புகளை, இயற்கை மீதான அம்மக்களின் புரிதலை நாம் அறிய முடிகிறது.

மங்கோலிய மேய்ச்சல் நிலத்திற்கு வந்த ஜென்சென் சீனாவிலுள்ள ஹேன் இனத்தைச் சேர்ந்தவன். மங்கோலியனாக வாழ விரும்பும் ஜென் அதற்காக அவர்களின் குலச்சின்னமாக விளங்கும் ஓநாயை வளர்க்க விரும்புகிறான். ஓநாயை வளர்ப்பதை பில்ஜி விரும்பவில்லை. இருந்தாலும் ஜென் அதை முயற்சிக்கிறான். மற்ற விலங்குகளைப் போல ஓநாய்கள் மனிதனின் வளர்ப்பு பிராணி ஆவதில்லை என அவன் அறிகிறான்.

பாவோ சுங்காய் என்ற சீன இராணுவத் தளபதி ஓலான்புலாக்கில் உள்ள ஓநாய்களை கொன்றழிக்கும் குணம் படைத்தவன். இயற்கை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் ஓநாய்களை வேட்டையாட முடிவு செய்வதில் தொடங்கி அந்த நிலத்தை சீர்குலைத்தவன். ஓநாய்களை, மான்களை, மர்மோட்டுகளை, வாத்துகளை வேட்டையாடி சீன ராணுவ அதிகாரிகளை மகிழ்விக்க நினைக்கிறான் பாவோ சுங்காய். 

ஓநாய்கள் அழிய மேய்ச்சல் நிலம் அழியத் தொடங்குகிறது. அவர்களின் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிடுகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு ஜென்னும் அவனது நண்பன் யாங்கீயும் ஓலான்புலாக்கிலுள்ள பில்ஜி பிள்ளைகளான பட்டுவையும், கஸ்மாயையும் பார்க்க வருகிறார்கள். அப்போதுதான் ஜென் எழுதிய அந்த நாவலையும் படையலிடுகிறார்கள். 

ஓநாய்குலச்சின்னம் வாசித்தபோது இந்தச் சூழலியல் சீர்கேடுகள் குறித்து தெளிவாகப் புரிந்தது. ஓநாய்களைப் பற்றிய நிறைய கதைகளை வாசித்திருக்கிறோம். அதில் பெரும்பாலும் அந்த ஓநாய் கெட்ட குணங்களைக் கொண்ட ஒரு விலங்காகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். ஓநாய்குலச்சின்னம் அந்த எண்ணத்தை சிதறடித்துவிட்டது. நாம் எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் ஓநாய் குலச்சின்னம்.

நம்ம ஊரின் வீதிகளில், சாலைகளில் மாடுகள் வழிமறித்துக்கொண்டு அலைவதைக் காணும்போது மேய்ச்சல் நிலம் எல்லாம் வீட்டடி மனைகளாக மாறியதைப் பார்க்கும்போது பில்ஜி சொல்லும் வரிகள் நினைவிற்கு வருகிறது. “இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர் வாழ்வதற்குப் பெரிய உயிரையே சார்ந்திருக்கின்றன. ஓநாய்களும் மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள், இறைச்சி உண்ணும் ஜீவன்களைவிட மோசமானவை.”

2004ல் ஜியாங் ரோங் எழுதி வெளியான ஓநாய் குலச்சின்னம் அடுத்த இரண்டாண்டுகளுக்குள் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையாகியிருக்கிறது. ஜியாங்ரோங் தனது சொந்த அனுபவத்தையே அற்புதமான புனைவாக மாற்றியிருக்கிறார். கடந்த பதினைந்து வருடங்களில் ஒரு கோடிப்பேர் இந்நாவலை வாசித்திருக்கலாம். இந்நாவலை தமிழில் சி.மோகன் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். இதுவரை வாசித்த மொழிபெயர்ப்பு நாவல்களில் இத்தனை நெருக்கத்தை உணர்ந்ததில்லை. இயக்குநர் வெற்றிமாறன் இந்நாவலை வெளியிடுவதற்காகவே அதிர்வு என்ற பதிப்பகத்தைத் தொடங்கியிருக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணன் 2013ல் நடத்திய நாவல் முகாமில் இந்த நாவலை வாங்கிய சகோதரர் அதை 2020ல் என்னிடம் தர புத்தகத்திலும், கிண்டிலிலும் மாறிமாறி வாசித்தேன். சி.மோகன் இந்நாவல் குறித்து சொன்ன வரிகளோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன். “இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர்; ஞான சிருஷ்டி.”

பின்னூட்டமொன்றை இடுக