மொழிப்போர் தியாகி தி. சீனிவாசன்

Posted: பிப்ரவரி 19, 2022 in பார்வைகள், பகிர்வுகள்

பொதுவாக இந்தித் திணிப்பை எதிர்த்த போராளிகள் என்றாலே திராவிடக் கட்சி பின்னணி கொண்டவர்கள் என்றே நினைப்போம். அவர்களுள் கம்யூனிஸ்ட்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரை 13 பிப்ரவரி 2022 அன்று சந்தித்தோம்.

கோவில்பாப்பாகுடி சாலையில் ஓரிடத்தில் மாவட்ட மொழிப்போர் தியாகிகள் சங்கம் பற்றிய அறிவிப்புப் பலகை இருந்தது. அந்த சங்கத்தின் மாவட்டச் செயலாளரான திரு தி. சீனிவாசன் அங்கு வசிக்கிறார். சரி, நமது பகுதியிலேயே இப்படி ஒருவர் இருக்கிறாரே என்று அவரைச் சந்திக்க முடிவு செய்து தொடர்புகொண்டோம். உடனே வரச்சொல்லி இசைவு தந்தார்.

சீனிவாசன் 1947-இல் பிறந்தவர். இன்றைக்கு எழுபத்தைந்து வயதுப் பெரியவரான அவர் தனது பத்தொன்பதாம் வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றிருக்கிறார். கோவில்பட்டியில் பிறந்த அவர் தனது பத்து வயதுக்குள்ளேயே பெற்றோர் இருவரையும் இழந்து மதுரையில் ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் குடியேறி இருக்கிறார். அவரது வளர்ப்புத் தந்தை மதுரையில் ஹார்வி மில்லில் வேலை பார்த்திருக்கிறார். அவரது குடும்பம் என்பது இந்தக் குடும்பமே.

அதிகம் படிக்கவில்லை என்றாலும் அரசியல் ஆர்வம் இருந்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபாடு. இந்தித் திணிப்பு தொடர்பில் நடந்த போராட்டத்தில் தன்னெழுச்சியாக கலந்துகொண்டு அந்த நேரத்தில் சிறைசென்ற பலரில் இவரும் ஒருவர்.

தனது வீட்டுக்கு ஜானகி இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார். கே. பி. ஜானகி அம்மாள் அவர்களை அம்மா என்றே சொன்னார். அவரது பணிகளை நினைவுகூர்ந்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இருந்த சின்னம்மாள் என்ற இயக்கத் தோழரையே சீனிவாசன் மணமுடித்திருக்கிறார். அந்தத் திருமணத்தை ஜானகி அம்மாள் நடத்திவைத்ததாகச் சொன்னார். இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் படத்தை தோழர் ஒருவர் பரிசளித்திருக்கிறார். அதை வீட்டில் மாட்டிவைத்திருக்கிறார்.

அவரைச் சந்தித்ததில் மொழிக்காவலர்கள் அரசு அறிவித்த ஓய்வூதியம் பெறுவதற்கு எதிர்கொண்ட சட்டப்போராட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு மாதமாவது சிறையில் கழித்திருக்கவேண்டுமா, ஒரு நாள் இருந்திருந்தாலே போதுமா என்று நீதிமன்றப் படியேறி இருக்கிறார்கள்.

ஆர். ஆர். தளவாய் என்பவர் இந்தி எதிர்ப்பு போரில் கலந்துகொண்டவர்களுக்கு வெகுமானமா என்று வழக்குப் போட்டிருக்கிறார். உச்சநீதிமன்றமும் இப்படி இன்னொரு மொழிக்கு எதிராகப் போராடுவதையெல்லாம் அங்கீகரிக்கக் கூடாது, முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்; இது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் மக்களாட்சிக்கும் எதிரானது என்று மொழியுரிமை, திணிப்பு, ஆதிக்கம் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபோல நாட்டுப்பற்றையும் தியாகத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் போட்ட முட்டுக்கட்டைகள் பல. அதனால் மாநில அரசு 1983-இல் தனியாகச் சட்டம் இயற்ற வேண்டியிருந்திருக்கிறது. ‘மொழிக்காவலர்’, ‘எல்லைக் காவலர்’, ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்’ என்றெல்லாம் வெவ்வேறு அடைமொழிகள் தந்து தனது கடமையை நிறைவேற்ற வேண்டியிருந்திருக்கிறது.

சீனிவாசனுக்கு மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற கூடுதல் சிக்கல். ஓய்வூதியம் பெற இருபத்தோராண்டுகள் போராடி இருக்கிறார். இடையில் ஒருமுறை ஒரே தடவையாக பத்தாயிரம் பணமுடிப்பு போல வழங்கியிருக்கிறார்கள். பின்பும் போராடி ஓய்வூதியம் பெற்றிருக்கிறார். பி டி ஆர் பழனிவேல் ராஜனை சந்திக்க வேண்டியிருந்ததாம். சிறையில் உடனிருந்த காவேரிமணியம், பி. எஸ். மணியன் போன்றவர்கள் சான்றளித்திருக்கிறார்கள். இவரது பெயர் உள்ளிட்ட பெயர்களடங்கிய சிறைப் பதிவேட்டின் 32 பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தனவாம். அரசு ஊழியர் சிலர் கையூட்டோ , கமிஷனோ பெற விரும்பியது வேறு நடந்திருக்கிறது.

இரண்டாயிரமாயிருந்த ஓய்வூதியமும், மருத்துவ உதவித்தொகையும் சேர்ந்து இன்று ஐயாயிரம் வரை வருகிறது. மொழிக் காவலருக்கும், அவரது உடன்செல்லும் உதவியாளருக்கும் இலவச பேருந்துப் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குடியரசு தினம், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அழைப்பு வருகிறது. ஒருமுறை அவ்விதம் அழைப்பெதுவும் வரவில்லையாம். இவர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்தைப் பார்த்திருக்கிறார். அவர் உங்களை யாரும் தடுக்கவில்லையே என்றிருக்கிறார். அப்படியெல்லாம் அழையா விருந்தாளியாக வரமுடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அதன்பிறகு ஒழுங்காக கடந்த சுதந்திர தினவிழா வரை முறையாக அழைப்பு வந்திருக்கிறது. இந்த குடியரசு தினத்துக்கு மறந்துவிட்டார்கள் என்றார்.

நாங்கள் சென்றபோது ‘மார்க்ஸ்- அம்பேத்கர் – பெரியார் :ஒரு ஒப்பீடு’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தார். சாதி மறுப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இறை நம்பிக்கை தனிநபர் சார்ந்த விஷயம் என்றார். ஈழம் தொடர்பில் அவர் சொன்னது வரலாற்றுக்குப் புறம்பானது. மற்றபடி கருத்தியல்ரீதியாகப் பேசுமளவுக்குத் தாம் படித்தவனோ, பெரிய தலைவர்களுள் ஒருவனோ அல்லவென்று சொன்னார். மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனது செயல்பாடு குறித்து நிறைவுகொண்டிருந்தார்.

சீனிவாசனோடு பேசும்போது மாரி, மணவாளன், தில்லைவனம், ஐ. வி. சுப்பையா போன்ற பெயர்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. என். ராமகிருஷ்ணன் கோவில்பாப்பாகுடி தினமணி நகர் பகுதியில்தான் இருந்திருக்கிறார். சீனிவாசனது தலைமுறையில் விவசாயப் பிரச்சினை, பஞ்சாலைப் பிரச்சினை என்று பலவற்றைப் பார்த்திருக்கிறார்கள். இப்போது இந்தப் பகுதியில் எது முதன்மையான பிரச்சினை என்று கேட்டோம். சிறு, குறு தொழில்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திப்பதாகச் சொன்னார்.

உருப்படியாகச் செலவிட்ட நாளாக அமைந்தது.

பின்னூட்டமொன்றை இடுக