தொன்மையும் பன்மையும் – தொ.ப. நினைவுச் சிறப்பிதழ்

Posted: பிப்ரவரி 10, 2022 in பார்வைகள், பகிர்வுகள்

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களது நூல்களைக் குறித்தும், அவரது கட்டுரைகளைச் சேர்த்தும் ஒரு சிறப்பிதழ் கொண்டுவர தொ.ப.வாசகர் வட்டம் சார்பாக முடிவுசெய்தோம். 2017இல் தொ.ப. வாசகர் வட்ட முதல் சந்திப்பு அழகர்கோயிலில் நடந்தது. அதைத் தொடர்ந்து 2018இல் தொ.ப. இல்லத்தில் தொ.ப. வாசகர் வட்ட நண்பர்கள் சந்தித்தோம். தொ.ப. சிறப்பிதழ் கொண்டுவரலாமென 2019இல் சந்தித்த தமிழறம் செந்தில்குமார் அவர்கள் சொன்னபோது கட்டுரைகளைத் தொகுக்கும் பணிகளைத் தொடங்கி சிறப்பிதழைத் தொ.ப. இல்லத்தில் வெளியிடலாம் என முடிவு செய்தோம்.

கட்டுரைகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள், எங்களுடைய சோம்பல் என 2020 வந்துவிட்டது, கூடவே கொரோனா பெருந்தொற்றும். சிறப்பிதழுக்கான பணிகள் தேங்கிநின்றது. எதிர்பாராதவிதமாக 24.12.2020 அன்று தொ.ப. இயற்கையெய்தினார். அவரது மரணத்திற்குப் பிறகு மீண்டும் தொ.ப. சிறப்பிதழ் பணிகளைத் தொடங்கினோம். காலம் கனிந்து தொ.ப.வின் முதலாமாண்டு நினைவுநாளன்று அழகர்கோயிலில் தொன்மையும் பன்மையும் தொ.ப. நினைவுச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.

அழகர்கோயில் பதினெட்டாம்படியான் சன்னதிக்கு அருகிலுள்ள அரசமரத்தடியில் நூலை தமிழறம் செந்தில்குமார், கவிதா செந்தில்குமார், கருந்துளை, கதிர்நம்பி, ரகுநாத், கணேசன், தமிழ்குடியோன், நான் என நண்பர்கள் கூடி நூலை வெளியிட்டோம். பாளையங்கோட்டையில் தொ.ப. முதலாமாண்டு நினைவு கருத்தரங்கிலும் இந்நூல் இதேசமயத்தில் வெளியிடப்பட்டது.

வேரும் விழுதும் என்ற கட்டுரையில் தொடங்கி பரண் தொகுப்பில் வந்த ஆங்கிலக் கட்டுரையோடு சேர்த்து மொத்தம் 20 கட்டுரைகள். தொ.ப. குறித்து, அவரது எழுத்துக்கள் குறித்து நல்லதொரு அறிமுகத்தை தரும் கட்டுரைகள். இத்தொகுப்பில் அழகர்கோயில், சமயம் ஓர் உரையாடல் நூல்கள் குறித்த எனது வாசிப்பனுபவமும் உள்ளது. பசுமைநடை விருட்சத் திருவிழாவில் தொ.ப. பேசிய உரையை எழுத்தாக்கம் செய்தது இந்நூலில் வந்துள்ளது. தொ.ப. அசலான ஆய்வாளர் என சகோதரர் ப.தமிழ்ச்செல்வம் எழுதிய கட்டுரையும், தொ.ப. எழுத்துக்களில் பெண்கள் என நண்பர் ரகுநாத் எழுதிய கட்டுரையும் இத்தொகுப்பிற்காக அவர்களிடம் வாங்கிக் கொடுத்தேன். இன்னும் சிலகட்டுரைகளை முகநூல் நண்பர்கள் வாயிலாக வாங்கிக் கொடுத்தேன்.

களஆய்வுன்றது மனுசன வாசிக்கிறது என்று சொல்லும் தொ.ப.வுடைய எழுத்துக்களும் மனித வாசிப்பை அடிப்படையாகக் கொண்டவை. தொ.ப.வுடன் பழகியவர்கள் சொல்லும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும்போது அவரொரு பண்பாட்டு நூலகமாக வாழ்ந்து வந்ததை அறிய முடிகிறது. காலச்சுவடு, காக்கைச் சிறகினிலே வெளியிட்ட தொ.ப. நினைவுச் சிறப்பிதழிலிருந்து தொகுத்தவற்றைக் கீழே காணலாம்:

பகுத்தறிவுக்கும் பண்பாட்டுக்கும் இடையில் ஒரு சங்கடமான உறவு உண்டு. ஒன்று மற்றொன்றுடன் எளிதில் பொருந்திப் போகாது. அறிவு, நவீன யுகத்தின் காத்திரமான முதல் போராளி. பண்பாடு, மானுடப் பரப்பின் ஆழங்களைப் பற்றி நிற்பது. பேராசிரியர் தொ.ப. இவை இரண்டுக்குமிடையில் ஓர் உரையாடலை முன்னெடுத்தார். பெரியாரிய மானுடவியல் என்ற ஒரு புதிய போக்கினை அவர் உருவாக்கித்தர முயன்றுள்ளார். மொழி, பண்பாடு, மானுடவியல், விளிம்புநிலை மக்கள் என்ற சந்திப்பில் பேராசிரியர் தொ.ப.வைக் காண்கிறோம்.

– ந.முத்துமோகன்

தமிழகத்தின் தெருக்களில் நின்று வயல்வெளிகளில் நின்று, மலைக்குகைகளில் நின்று தொ.ப. பேசிக்கொண்டிருக்கிறார். இதோ இந்தக் கற்சிலையையும் சங்க இலக்கியத்தையும் பக்தி இலக்கியங்களையும் இந்துத்வ பாசிசத்தையும் உலகமயத்தையும் ஒரே வரிக்குள் கொண்டு வந்து நமக்கு விளக்கமளிக்கிறார். இந்த இணைப்புத்தான் தொ.ப.வின் மகத்தான பங்களிப்பு. பொருள்சார் பண்பாட்டு அறிஞர் என்றுதான் அவரை அடையாளப்படுத்த வேண்டும். அப்படி நம்மைச் சுற்றியுள்ள பொருட்களோடும் நிகழ்வுகளோடும் நம்மையும் அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்த தமிழ்க்கருத்துலகையும் இழுத்துப் பிடித்துக் கட்டிவைத்தவர் அவர்தான்.

– ச.தமிழ்ச்செல்வன்

ஒவ்வொரு மனுசன் மனுசியின் அசைவிலும் நாச்சுழட்டலிலும் முகபாவத்தினதும் வழியாக வெளிப்படும் குணவாகுளைக் கூர்ந்து கவனித்தார். என்ன வகையாக இந்த எறும்புகள் எந்தப் புள்ளியில் இருந்து புறப்பட்டு வருகின்றன என்பதை வாசித்தார். இது ஒரு கதைசொல்லி செய்ய வேண்டிய காரியம். அதனால், மண்சார்ந்த படைப்புகளைத் தருகிற செய்கிற கதைசொல்லிகள் தொ.ப.வுக்கு பிரியமானவர்கள்.

– பா.செயப்பிரகாசம்

ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரையைச் சொல்லத் தொடங்குவார். தொடர்ந்து சொல்லிக் கொண்டே போவார். திடீரென்று நிறுத்தி தான் களப்பயணத்திற்கு மக்களைச் சந்தித்த போது கிடைத்த சுவையான அனுபவங்களை நீண்ட நேரம் சொல்வார். ஓர் ஊரைப் பற்றிச் சொல்கிறார் என்றால், அந்த ஊரில் என்னென்ன சாதியனர் வாழ்கின்றனர்? அவர்களின் திருமணமுறைகள் எப்படியிருக்கும்? இறப்புச்சடங்குகள் எப்படி நிகழ்த்தப்படும்? அந்த ஊரில் உள்ள நாட்டார் தெய்வங்களுக்கு கொடைவிழா எவ்வாறு நடைபெறும்? என்பதையெல்லாம் விரிவாக காரண காரியங்களுடன் விளக்குவார். இவற்றையெல்லாம் கேட்டு உள்வாங்கிக் கொள்ளும் நமக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் வளர்ந்துகொண்டே இருக்கும். இப்படி ஆய்வுக்கட்டுரைகள் எழுதும்போது இடையில் நிறுத்தி நடத்திய விவாதங்கள் உரையாடல்கள் விலைமதிப்பில்லாதவை.

-வே.சங்கர்ராம்

ஆய்வுமாணவர்கள் மீதான கரிசனம், நூல் வாசிப்பை அவர்கள் முன்னெடுப்பதற்கான உத்வேகமளிக்கும் சிரத்தை, ஆய்வு நோக்கில் புதிதானதொரு வெளிச்சப்புள்ளியைச் சுட்டும் திறன், ஆய்வு மாணவர்கள் குறிப்பெழுத மடைத்திறப்பாய் விழும் கருத்துரைகள், நூல் குறித்த அபாரமான மனனத்திலான விவரணைகள், தன்னுறவுகளை நிராகரித்துத் தன்னாய்வு மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவரளிக்கும் பங்களிப்பு எனப் பேரா.தொ.ப. மாணவருலகில் பேரெழுச்சி மிகுவித்தப் பேராசானாகவே திகழ்ந்திருக்கிறார்.

– கண்ணா கருப்பையா

நட்பு சக்தி எது? பகை சக்தி எது? என்பதை பெரியாரைப் போலவே துல்லியமாக அறிந்து வைத்திருந்தார் தொ.ப. அதுதான் மொன்னை நாத்திகவாதிகளும் மூடக்காவிகளும் தொ.ப.விடம் தோற்றுப் போகும் மகத்தான புள்ளி

– பாமரன்

பன்நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு அறியப்படாத வெகுமக்கள் பண்பாட்டினை மாணவர்கள் கற்க இன்னும் போதிய இடம் அளிக்க வேண்டும். பள்ளிக்கல்வியில் குறைந்தது 10, 11, 12ஆம் வகுப்புகளில் மொழி, வரலாறு, அறிவியல் பாடங்களில் தொ.ப. எழுத்துக்கள் உரிய அளவுக்குச் சேர்க்கப்பட வேண்டும். பல்கலைக்கழக, கல்லூரி மட்டங்களில் இளம்கலை, முதுகலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் தொ.ப. அவர்கள் நூல்கள் சேர்க்கப்பட வேண்டும்.

– அப்பணசாமி

தொ.ப.வுடன் பேசும் போதெல்லாம் திராவிட குழுக்களுக்குள்ளிருக்கும் தமிழர் பண்பாடுகள் குறித்து ஆய்வை நிகழ்த்துங்கள் என்பார். தன்னிடம் பேசும் அனைவரையும் ஆய்வாளராகப் பார்த்த பெருமை அவரை மட்டுமே சேரும். நாமும் அவரைப்போல தமிழ்ச் சமூகத்தின் தொன்மங்களைத் தேடி அவை பயன்படுமெனில் அதை மக்களிடம் சொல்லுவோம். இதுவே ஒரு ஆய்வாளருக்கு நாம் செய்திடும் கைமாறு.

-முத்துநாகு

சிலர் சுடர்மிகும் அறிவுடன் விளங்குவர். கண்முன் விரியும் எதையும் அவர்களால் புரிந்துகொண்டு விளக்க முடியும். ஆனால் ஆழமாகப் படித்தவர்கள் என்று சொல்ல முடியாது. தொ.ப. ஆழமாகவும் படித்துக் கொண்டவர்.

-பழ.அதியமான்

தனது ஒவ்வொரு நூலிலும் தன் கருத்துக்களை எந்தவித மனத்தடையும் தயக்கமும் இல்லாமல் அவர் பதிந்திருக்கின்றார் என்றே உணர்கிறேன். தனக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்களிடம் உரையாடுவது போன்றே கட்டுரைகள் ஒவ்வொன்றும் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தகைய எழுத்து நடை, வாசிப்பை இலகுவாக்குகிறது. சமூகவியல், மானுடவியல், பண்பாட்டு ஆய்வு, வரலாறு, அகழாய்வு மட்டுமின்றித் தனது அரசியல் பார்வையையும் தனது எழுத்துக்களின் வழி ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறார்.

– தி.சுபாஷிணி

பல்கலைக்கழகத் துறைத்தலைவர்களின் அறைகளுக்குள் நுழையும் மாணவர்கள் செருப்பை வாசலில் கழற்றிவிட்டுச் செல்வது வழக்கம். தொ.ப. செருப்பைக் கழற்றிவரும் மாணவர்களை மீண்டும் அணிந்துவருமாறு வலியுறுத்துவார். மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், சாப்பிட்டார்களா, என்ன சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் கவனிப்பார். மாணவர்கள் துறைத்தலைவருக்கு விண்ணப்பக் கடிதங்கள் எழுதும்போது ‘தங்கள் கீழ்படிதலுள்ள’ என்று எழுத வேண்டும் என்பது நடைமுறை. அவ்வாறு எழுதும் மாணவர்களின் கடிதங்களைத் திருத்தி ’தங்கள் உண்மையுள்ள’ என்று எழுதித் தருமாறு கூறுவார் சுயமரியாதைக்காரர் தொ.ப.

– இரா.இலக்குவன்

தங்களுடைய திறமையை எழுத்துக்கும் மேதைமையை உரையாடலுக்கும் வழங்கிவிட்டவர்கள் என்று ஆங்கிலக் கவிஞர்கள் கோல்ரிட்ஜ் பற்றியும் ஆஸ்கார் ஒயில்டு பற்றியும் சொல்லப்படுவது தொ.ப.வுக்கும் பொருந்தக்கூடியதே. புலமையோடு இணைந்த மொழி வறட்சி, தொ.ப.விடம் காணப்படாத ஒன்று.

– ந.ஜயபாஸ்கரன்

தொ.ப.வுக்குப் பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்லும் பழக்கம் அதிகம். அவ்வாறு செல்லும்போதெல்லாம், மறக்காமல் தமிழ் இசை நூல்கள் எதுவும் உண்டா என விசாரிப்பார். நூல்களை வாங்கி மறக்காமல் எனக்கு அனுப்புவதை விரதமாகவே கொண்டிருந்தார். “நண்பனாய், நல்லவனாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்” என இழைஇழையாய் இசைத்தமிழாய் என்ற என் இசை ஆய்வுநூலைத் தொ.ப.வுக்கு அர்ப்பணித்தேன் – நன்றிக் கடனாற்ற சிற்றளவில்.

– நா.மம்மது

ஒரு வாக்கியத்தில் நாலைந்து சொற்கள்; ஒரு பொருள் முடிபு; அதனோடு தொடர்புடைய வாக்கியங்கள்; தேவையெனில் மேற்கோள்கள்; அவற்றில் படிப்படியே விரியும் பொருள். இது அவரது நடையின் பொதுப்போக்கு. இதனோடு சிறப்புக் கூறுகள் பல விரவியது தொ.ப.வின் நடை.

– பா.மதிவாணன்

நவீன கல்வி நிறுவனங்களில் படித்துப் பணியாற்றினாலும் அதன் விதிகளுக்கு வெளியே கிராமப்புறக் கதைசொல்லியின் குணத்தொடு இயங்கியவர். கல்விப்புலத்தால் எதிர்மறையாகப் பார்க்கப்படும் இப்பண்பே அவர் பரவலாகக் கவனம் பெறுவதற்கும் காரணமாயிருக்கிறது.

– ஸ்டாலின் ராஜாங்கம்

சமூகப் பண்பாட்டியல் குறித்து தொ.ப.விடமிருந்து பெறுகிற அவதானிப்புகளை, உரசிப்பார்த்துத் தேர்வதற்கான குறுக்குத் தரவுகளை, ஆய்வுநூல்களாக நிறுவப்பட்டுள்ளவற்றைப் பார்க்கிலும், இயங்கிக் கொண்டுள்ள களங்களின் வழியேதான் பெரிதும் கண்டுணர முடியும். ஏனெனில், ‘பண்பாட்டியல் கல்வி’ என்ற ஒரு புதிய கல்விப்புலத்தின் முன்னோடி தொ.பரமசிவன் அவர்கள்.

-ஆ.திருநீலகண்டன்

நன்றி – காலச்சுவடு, காக்கைச் சிறகினிலே

(தொ.ப. படங்கள்: முகநூல் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி)

பின்னூட்டமொன்றை இடுக