2022: பெங்களூர் பயணக்குறிப்புகள்

Posted: திசெம்பர் 29, 2022 in ஊர்சுத்தி

பெங்களூருக்கு ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஈர்ப்பது அங்குள்ள மரங்கள்தான். ஒவ்வொரு சாலையிலும் எதாவது பெருமரம் அந்த வீதியின் காவல்தெய்வம் போலக் காத்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள நகர நெரிசலைத்தாண்டி, பிரமாண்ட கட்டிடங்களைத் தாண்டி அந்த ஊரின் அழகு அந்த மரங்களில்தான் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

இராமன் ஆய்வகத்திற்கு சென்று பார்த்தபோது அந்த இடமே ஒரு காடு போலிருக்கிறது. அங்குள்ள அரங்கை அவ்வளவு அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள். அதைத் தொடங்கியபோது சர்.சி.வி.ராமன் இருந்த காணொளிகளை ஒலிபரப்புவதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதேபோல பிரபஞ்சம் குறித்தும், சூரியக்குடும்பம் குறித்தும் நிறைய செய்திகளை அங்குள்ள வல்லுநர்கள் சிறப்பாக எடுத்துரைக்கிறார்கள்.

இராமனின் சேகரிப்புகள் எல்லாம் அரிதான பொருட்கள். அங்குள்ள கண்ணாடிப் படிமங்களைப் போன்று வேறெங்கும் கண்டதில்லை. மேலும், அவர் இசை ரசிகர் என்பதால் அவருடைய வீணையையும் காணலாம். இராமன் தொடங்கிய நூலகத்தை இப்போது மிகப்பெரிதாக எடுத்துக்கட்டியிருக்கிறார்கள். அங்கு இராமனின் வாழ்வை, அவரது கண்டுபிடிப்புகளை பற்றிய அரங்கை மிகச் சிறப்பாக வைத்திருக்கிறார்கள். மிக அரிய நூல்களைக் கொண்ட நூலகம்.

1962 ஜூலை 14இல் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை பிரதமராகயிருந்த ஜவகர்லால் நேரு தொடங்கிவைத்திருக்கிறார். பள்ளி, கல்லூரியிலிருந்து வருபவர்கள் பார்வையிட சலுகை கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி தவிர ஆண்டின் எல்லா நாட்களிலும் காலை 9.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை இந்த அருங்காட்சியகம் இயங்குகிறது. இயற்பியல், வேதியியில், உயிர்தொழில்நுட்பவியல், வானியல், கணினியியல் என பல்துறை சார்ந்த விசயங்களை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு செய்முறையையும் நாம் செய்து பார்க்கும்படி சிறப்பாக வடிவமைத்து அதைக்குறித்த விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

பெங்களூர் அரசு அருங்காட்சியம் இந்தியாவிலுள்ள பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்று. 1865இல் தொடங்கப்பட்டு 1877இல் தற்போதுள்ள இடத்தில் இந்திய ரோம கட்டிடக்கலையில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியது. இங்கு கன்னடச் செப்பேடுகள், கல்வெட்டுகள், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், ஓவியங்கள் என பல அரிய பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

அரசு அருங்காட்சியகத்தின் அருகில் வெங்கடப்பா ஓவிய கேலரி உள்ளது. பெங்களூரிலிருந்த வெங்கடப்பா என்ற ஓவியரின் படைப்புகள் இங்குள்ளன. 1886இல் பிறந்தவர். கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்கெல்லாம் சென்று அந்த ஊரின் இயற்கை காட்சிகளை ஓவியமாக வரைந்திருக்கிறார். இந்த கேலரியின் இரண்டாவது மாடியில் பல்வேறு ஓவியர்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒரு அறையில் மரத்தில் செய்த அரிய மரச்சிற்பங்கள் உள்ளன.

ஜவகர்லால் நேரு கோளரங்கம் பெங்களூரில் எனக்கு மிகவும் பிடித்த இடம். பிரபஞ்சத்தில் நமது பூமி எத்தனையெத்தனை சிறிது என்பதை அறிய கோளரங்கம் பெரிதும் உதவுகிறது. திரையரங்கு போன்ற இடத்தில் நடுவில் சிறிய புரொஜக்டரிலிருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. லால்பார்க் என்ற இடத்திலுள்ள தாவரவியல் பூங்காவும், பூங்காவின் தொடக்கத்திலுள்ள பாறைத்திட்டில் அமைந்துள்ள தொல்சின்னமும் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்கள்.

பெங்களூரில் மெஜஸ்டிக், கிருஷ்ணராஜ மார்க்கெட் பகுதியிலுள்ள கடைவீதிகள் மிகவும் பிரபலம். இந்த வீதியில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கிறது. துணிகள், கைப்பைகள், அலங்காரப்பொருட்கள் என ஒவ்வொருவரும் வேண்டியதை வாங்குகிறார்கள். சாலையோரங்களில் குடைமிளகாய் வைத்து சுடச்சுட பஜ்ஜி போடுகிறார்கள். இட்லி, தோசை, பூரி, பிரியாணி என தள்ளுவண்டிக்கடைகளில் ஒரு கூட்டம். பெங்களூரில் கிடைக்கும் சாம்பாரை சாம்பார்னு சொல்ல மட்டும் மனசு வரமாட்டேங்குது. எல்லா ஊர்களிலும் மாலை நேரங்களில் கடைவீதிகளுக்கான அழகு தங்க விலை போலக் கூடிக்கொண்டேயிருக்கிறது.

பெங்களூரில் பயணிப்பதற்கு பொறுமை ரொம்ப அவசியம். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவ்வளவு எளிதில் சென்று விட முடியாது. நகர நெரிசல், சிக்னலில் மாட்டி நம்முடைய பெரும்பாலான நேரம் அதில் போய்விடும். பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கின்றன.

பின்னூட்டமொன்றை இடுக