Posts Tagged ‘சமணப் பண்பாட்டு மன்றம்’

அ.முத்துக்கிருஷ்ணன்

இவ்வுலகம் இனியது.

இதிலுள்ள வான் இனிமையுடைத்து.

காற்றும் இனிது; தீ இனிது; நீர் இனிது;

நிலம் இனிது; ஞாயிறு நன்று; திங்களும் நன்று;

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

–    மகாகவி பாரதி

மேலக்குயில்குடி சமணமலைக்கருகில் சமணப்பண்பாட்டு மன்றம் அமைந்துள்ளது. 2013ம் ஆண்டு குடியரசு தினவிழாவன்று இம்மன்றத்தைத் தொடங்கினர். மதுரை சமணப்பண்பாட்டு மன்ற ஓராண்டு நிறைவுவிழாவில் பசுமைநடை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மற்றும் சமணத்தலைவர்கள் பலரும் பேசினர். அதில் பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் இலக்கியம், இயற்கை, பொதுவுடமையோடு சமணம் கொண்டிருந்த தொடர்பைக் குறித்து மிக எளிமையாக விளக்கினார். அந்த உரையைக் காண்போம்:

DSCN7612

பசுமைநடையாக பயணிக்கத் தொடங்கியபோது ‘உங்களையெல்லாம் சந்திப்போம், இது போன்ற கூடுகை அமையும்’ என்றெல்லாம் நாங்கள் அப்போது நினைத்துக்கூட பார்த்ததில்லை. உங்களையெல்லாம் சந்திப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சியாகயிருக்கிறது.

இந்த மலைகளுக்கெல்லாம் கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக பயணித்து வருகிறேன். திருப்பரங்குன்றத்தில்தான் நான் பத்து, பதினைந்து ஆண்டுகள் வசித்தேன். நினைத்தால் திருப்பரங்குன்ற மலையேறி விடுவோம். திருப்பரங்குன்றத்தில் கதை, கவிதை என்று இலக்கியம் தொடர்பான ஆட்களோடு நெருக்கம் ஏற்பட்டது. எல்லோரும் பல இடங்களில் பணிபுரிபவர்கள். ஆனால், எல்லோருக்குள்ளும் இலக்கியம் சார்ந்த ஒரு பெரிய நாட்டம் இருந்தது. எல்லோருக்கும் வேலை பார்க்கும் இடங்களில் நெருக்கடிகள், பிரச்சனைகள் மற்றும் விடுப்பு கிடைக்காது போன்ற நிலை இருக்கும். ஆனால், திடீரென ஒருநாள் மழைமோடமாகயிருந்து வெயில் திறக்காது எனத் தெரிந்தால் நாங்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டதில்லை. அப்போது செல்போன் இல்லை, எஸ்.எம்.எஸ் இல்லை. மழையடிவாரத்திற்கு போனால் நாங்கள் பத்து, பதினைந்து பேர் சந்தித்துக்கொள்வோம். வேலையே போனாலும் பரவாயில்லையென்று அன்று மழைமேல் ஏறிவிடுவோம். அன்று செல்ஃபோன், கிரெடிட்கார்டு எல்லாம் மழையில் நனைந்துவிடுமென்ற பயம் இல்லை. அதனால், ஒரு விடுதலை உணர்வும் மனதில் இருந்தது.

muthukrishnan speaksமலைமீது காலையில் ஏறிவிட்டால் இறங்க இரவாகிவிடும். இடையிடையே உடன்வந்த இளைஞர்களிடம் பணத்தை கொடுத்து கடலைமிட்டாய், கொய்யாப்பழம், வாழைப்பழம் எனத் திங்க வாங்கி வரச்சொல்வோம். அப்படியே பணமில்லாவிட்டாலும் ஊரிலுள்ள நண்பர் யாரையாவது பிடித்து எதாவது வாங்கி வரச் சொல்லிவிடுவோம். யாருக்கும் மலைமீது ஏறினால் இறங்குவதற்கு மனமே வராது. இதே உணர்வலையை வெவ்வெறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்கள் இந்த மலையிலிருந்து பெற்றுக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இந்த மலைக்கு வயது என்ன என்பதை கல்வெட்டுகளை வைத்து தேடிக்கொண்டிருக்கிறோம். ஆயிரம், இரண்டாயிரம் என நீண்டு கொண்டே போகிறது. அறிவியலை மையமாக வைத்துப் பார்த்தால் பல்லாயிரம் ஆண்டுகள் என நீளும். விலங்குகள் குறித்து ஆய்வு செய்து வரும் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆடுகள் இதுபோன்ற மலைகளின் உச்சிகளுக்கெல்லாம் செல்வதைப் பார்க்கும்போது நமக்கு முன்னரே அவைகள் அங்கு சென்றிருக்கும் என்று தோன்றுகிறது என்றார். அதன் கால்களும் அதற்கேற்ப தகவமைக்கப் பட்டிருக்கிறது.

இலக்கியம் சார்ந்த ஆட்களுக்கிடையே ஒத்திசைவு ஏற்படுவதைப் போலவே இயற்கையை விரும்புவர்களுக்கிடையிலும் ஒத்திசைவு ஏற்படுகிறது. உலகில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறோம். உதாரணத்திற்கு அருகிலுள்ள சதுரகிரி மலைக்கு போறோம். நம்முடைய வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, ரேஷன்கார்டுகளைவிட்டு மலைமீது செல்லச்செல்ல உடன்வருபவர்கள் சிலமணிநேரங்களில் நமக்கு மிகவும் நெருக்கமாகிவிடுகிறார்கள். ரயில்பயணங்களில் கூட நமக்கு இந்த அனுபவம்தான் நிகழ்கிறது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறதென்றால் நாம் தினசரி வாழக்கூடிய வாழ்க்கை நமக்கு அலுப்பாகயிருக்கிறது. எல்லோருக்கும் அந்த வாழ்க்கையின் மீது ஏராளமான குறைகள் இருக்கிறது. அது பிடிக்காமல்தான் வாழ்கிறோம். அதைவிட்டு வெளியே வந்தால் எல்லோர் முகத்திலும் சிரிப்பு வருகிறது, மகிழ்ச்சி வருகிறது. என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட விசயம் என்னவென்றால் எவ்வளவுக்கெவ்வளவு பயணம் செய்கிறோமோ அந்தளவிற்கு எல்லாவிதமான கசடுகளிலிருந்தும் நாம் விடுதலையாவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. உங்கள் முன்னோர்களும் (தமிழ்ச்சமணர்கள்) இந்த தமிழ் நிலத்தில் அதிகம் பயணம் செய்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை வாசிப்பினூடாக அறிகிறோம்.

இன்னொருபுறம் பார்த்தால் இன்றைய வாழ்க்கையென்பது பயணங்களையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு ஒரு முட்டாள் பெட்டியின் முன்னமர்ந்து ரிமோட்டை எடுத்து மேலயும் – கீழயும், மேலயும் – கீழயும் என மலையை ஏறியிறங்க வேண்டியவன் ரிமோட்டில் ஏறியிறங்கிக் கொண்டிருக்கிறான். இருநூறு சேனல் ஏற மீண்டும் இருநூறு சேனல் இறங்க என எதையும் உருப்படியாக பார்ப்பதில்லை. எனக்குத் தெரிய தொலைக்காட்சியைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்டேனென யாரும் சொன்னதில்லை. அதற்குள் உள்ள அறிவு தெரியாதளவு குப்பை கூளங்களால் மூடிக்கிடக்கிறது. வர்த்தக உலகம் உருவாக்கிய இந்த முட்டாள்தனங்களிலிருந்து நாம் விடுபட வேண்டியிருக்கிறது. குடும்பங்களாக நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. சனி, ஞாயிறு விடுமுறையில் எங்காவது பயணியுங்கள். அது பெரிய விடுதலையாகயிருக்கும்.

602114_4751299936624_1209504232_n

இலக்கியம், இயற்கை போல இளம்வயதில் நாங்களெல்லாம் பொதுவுடமைக்கருத்துகளின்பால் ஈர்க்கப்பட்டவர்கள். பொதுவுடமையை அந்தக் காலத்திலேயே சமண இலக்கியங்கள் போதிக்கின்றன. எல்லோரும் சமமாக வாழ வேண்டும். நாங்களும் இலக்கியம், அரசியல் வழியாக காண விரும்புவது இதைத்தான். என்னுடைய இளவயதில் ஒருநாள் மதுரை சர்க்யூட் ஹவுஸ் எதிரிலுள்ள டீக்கடையில் ஒரு வயதான மனிதர் டீ குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒருவேளை அவராக இருக்குமோ என நாங்கள் யோசித்துக் கொண்டே அருகில் சென்றோம். அப்போது கேரளத்தின் முதல்வராகயிருந்த ஈ.கே.நாயனார்தான் அங்கு நின்று கொண்டிருந்தார். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். ஒரு முதல்வர் இவ்வளவு எளிமையாக இப்படியிருப்பதைப் பார்த்து வியந்தோம். இதைப் போல வேறெந்த முதல்வர்களையும் பார்க்க முடியாது.

வந்தவாசிப்பகுதியிலுள்ள உங்கள் (தமிழ்ச்சமணர்) வீடுகளுக்கெல்லாம் வந்தபிறகுதான் நீங்கள் எளிமையான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தேன். பிழைப்புக்காக தமிழைக் கற்றுக்கொடுக்கும் பேராசிரியர்களுக்குக்கூட சில தமிழ் இலக்கியங்களுக்கு உரையாசிரியர் யாரென கேட்டால் உடனே சொல்லத் தெரியாது. ஆனால், வந்தவாசியில் உள்ள பலரும் தமிழ் இலக்கியங்களில் பேரறிவாளர்களாக இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். உங்களுடைய இளைய தலைமுறையையும் இங்குள்ள மலைகளுக்கு அழைத்து வாருங்கள். நன்றி.

படங்கள் உதவி – ரகுநாத், பசுமைநடை முகநூல் பக்கம்