5karudasevai

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு!

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!

–    பெரியாழ்வார்

மனிதர்களுக்கு தங்களுக்குத் தெரியாத விசயங்களின் மேல் ஆர்வமும், ஐயமும் ஏற்படுவதுண்டு. இதற்கு பாண்டிய மன்னனும் விதிவிலக்கல்ல. அரசியின் கூந்தலில் இயற்கையாகவே மணம் உண்டா இல்லையா என்ற ஐயம் பாண்டிய மன்னனுக்கு வந்தபோது அதை வைத்து சிவபெருமான் நக்கீரர், தருமியைக் கொண்டு ஒரு திருவிளையாடலையே நிகழ்த்தினார். அதைப்போல ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியமன்னனுக்கு வேதங்கள் குறிப்பிடும் உயர்கடவுள் யார் என்ற ஐயம் வர அதைத்தீர்த்து வைக்க ஒரு அறிஞர் குழுவையும் ஏற்பாடு செய்தான். ஒரு மண்டபத்தில் பொற்கிழியை மாட்டி யார் சரியான பதிலைக் கூறுகிறார்களோ அப்போது அந்த பொற்கிழி தாளும்படி செய்தான்.

பெரியாழ்வார் வந்து நாராயணனே உயர்கடவுள் என்ற சொன்ன போது பொற்கிழி தாழ்ந்து பணிந்தது. அதைக்கண்ட ஸ்ரீவல்லபன் அகமகிழ்ந்து பெரியாழ்வாரை யானைமேலேற்றி வீதிவலம் வரச்செய்தான். கூடல்மாநகரில் நிகழும் இந்நிகழ்வை காண பெருமாளும் தன் பெரியதிருவடியான கருடவாகனத்தில் ஏறி வந்தார். கருடவாகனத்தில் வந்த பெருமாளின் அழகைக்கண்டு கண்பட்டுவிடுமென்று பெரியாழ்வார் ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என்ற பாசுரத்தை வாழ்த்திப் பாடினார். பெருமாளை மட்டும் வாழ்த்தாமல், போர்களுக்கு உதவும் பெருமாளின் சங்கான பாஞ்சசன்யம் வரை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்.

நன்றி:http://aazhvarmozhi.blogspot.in/2009/04/blog-post.html

இந்நிகழ்வை நினைவூட்டும்விதமாக ஆண்டுதோறும் புரட்டாசிமாதம் பௌர்ணமியன்று கூடல்அழகர் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்த்துகின்றனர். ஐந்து கருடசேவை குறித்து ‘மதுரை கோயில்களும் திருவிழாக்களும்’ நூலில் முனைவர்.ஆறுமுகம் எழுதியிருந்ததை வாசித்து அதை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவலிலிருந்தேன். இம்முறை புரட்டாசி மாதம் தல்லாகுளம் பெருமாள் கோயில் சென்றபோது 19.09.2013 அன்று ஐந்து கருடசேவை நடக்கிறது என்ற பதாகையைப் பார்த்ததும் விழாவிற்கு செல்ல முடிவெடுத்தேன். மாலை பணிமுடிந்தவுடன் என் துணைவியுடன் கூடலழகர் பெருமாள் கோயில் சென்றேன்.

koodalalagarkoil

ஐந்துகருடசேவைத் திருவிழாவை கூடலழகர் பெருமாள் கோயில், மதனகோபாலசாமி கோயில், வீரராகவப் பெருமாள்கோயில் என மூன்று பெருமாள்கோயில்களும் இணைந்து கொண்டாடுகிறார்கள். நாங்கள் சென்றபோது மூன்று கருடவாகனங்களில் பெருமாள் காட்சி தந்துகொண்டிருந்தார். கூடலழகர்பெருமாள் கோயில் முன் உள்ள மண்டபத்திற்கு சற்றுத் தொலைவில் கிழக்கு நோக்கி யானைவாகனத்தில் பெரியாழ்வார் கருடவாகனத்தைப் பார்க்க நின்றிருந்தார். வந்திருந்த மக்கள் கூடலழகர் வந்துட்டாரா, மதனகோபாலசாமி வந்துட்டாரா என சொந்தக்காரர் வருகையைப் போல பேசிக்கொண்டார்கள். எனக்கு யார் எந்தப் பெருமாள் என்று தெரியவில்லை.

karudasevai

பௌர்ணமி என்பதால் நிலவொளியில் அந்த சூழலே மிகவும் ரம்மியமாகயிருந்தது. முழுநிலவு நாட்களில் திருவிழாக்கள் கொண்டாடிய நம் முன்னோர்களை எண்ணும் போது பெருமையாகயிருக்கிறது. கூடலழகர் வர மக்கள் பரவசத்தில் ‘நாராயணா! நாராயணா!’ என்று வணங்கினர். எனக்கு தசாவதாரம் படத்தின் முதல்காட்சி ஞாபகம் வந்தது. ‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ பாடல் இடைவெளியிலும் பெரியாழ்வாரின் இந்த ‘பல்லாண்டு பல்லாண்டு’ பாசுரத்தை வைணவ அடியார்கள் பாடுவார்கள்.

ஐந்துகருடசேவைக்கு கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து இரண்டு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். தங்கக்கருடவாகனத்தில் வியூக சுந்தரராசப்பெருமாளும், மற்றொரு கருடவாகனத்தில் கூடலழகரும்  வருகிறார்கள். தெற்குமாசி வீதிக்குத் தென்புறமாக எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து வீரராகவப் பெருமாளும், வடக்குமாசிவீதியிலுள்ள கிருஷ்ணன் கோயிலில் உள்ள கருடவாகனத்தில் வீரராகவப்பெருமாள் கோயிலில் உள்ள உற்சவரான ரெங்கநாதரும் வருகிறார்கள். மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பிலுள்ள மதனகோபாலசாமி கோயிலிலிருந்து மதனகோபால சாமியும் ஐந்து கருட சேவை உற்சவத்திற்கு கூடல்அழகர்கோயில் முன் எழுந்தருளி கூடல்மாநகர மக்களை மகிழ்விக்கிறார்கள்.

koodal

madurasweetஒரே சமயத்தில் ஐந்து கருடவாகனங்களில் பெருமாளைக் காணும் போது நமக்குப் பரவசமாகயிருக்கிறது. தீபாராதனை நடந்ததும் ஐந்து கருடவாகனங்களில் பெருமாள் மாசிவீதிகளை நோக்கி கிளம்பினார். நாங்களும் மெல்ல வீடு நோக்கி கிளம்பினோம். கோயிலுக்கிட்ட விற்ற சவ்வுமிட்டாய் வாங்கினேன். அதன் சுவை அடிஉயிர்வரை இனித்தது. அதன் ரோசா வண்ணம் ஒட்டி வாயெல்லாம் சிவப்பாகியது. சவ்வுமிட்டாய் வாங்கிக் கொண்டுபோய் உடன்பணிபுரிபவர்களுக்கெல்லாம் கொடுத்து அவர்களின் பால்யகால நாட்களை நினைவூட்டியது மகிழ்வான விசயம். ஒரு அண்ணன் சவ்வுமிட்டாய் தின்று இருபது அல்லது முப்பது வருடங்கூட இருக்கும் என்றார். கூடலழகர் கோயில் செல்லும் வழியிலுள்ள வடைக்கடையில் முள்ளுமுருங்கை கீரை வடை, பருப்புவடை வாங்கி தின்றோம். மதுரையைப் போல மற்ற ஊர்களில் வடை கிடைக்காது. அதுவும் இங்கு வடைக்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சாம்பார், சட்னிக்கு இணையே இல்லை.

சில கோயில்களில் ஐந்துக்கும் அதிகமான கருடசேவைகள் ஒருநாளில் நிகழ்த்தினாலும் புரட்டாசி பௌர்ணமிக்கு கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு. ஐந்துகருடவாகனங்களில் பெருமாள் மாசிவீதிகளைச் சுற்றி வருகிறார். மக்கள் திரளாக வந்து பெருமாளை வணங்கி மகிழ்கிறார்கள்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். அசைவம் உண்பவர்களில் கூட சில பிரிவினர் இந்த மாதம் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறார்கள். மதுரையில் சௌராஷ்டிர மக்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வீடுவீடாக காணிக்கைப் பெற்று அதை வைத்து கோயிலில் பொங்கல் கொடுக்கிறார்கள். கோவிந்தோ! கோவிந்தோ! என்ற ஒலியை மதுரையில் அதிகமாக சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் அதிகம் கேட்க முடியும்.

திருவிழாக்களின் தலைநகரில் திருவிழா பார்த்து அலைவதை நினைத்தாலே இனிக்கும்.

நன்றி:

பின்னூட்டங்கள்
  1. ranjani135 சொல்கிறார்:

    ஸ்ரீ வில்லிப்புத்தூரிலும் திருவாடிபூர உற்சவத்தில் இதேபோல ஐந்து கருட சேவை நடக்கிறது.
    மிகவும் நன்றாக வர்ணனை செய்திருக்கிறீர்கள் – பெருமாளை மட்டுமல்லாது அங்கு கிடைக்கும் வடை, சாம்பார் பற்றியும்!
    பாராட்டுக்கள்.

  2. சிறப்பு… தரிசனம் கிடைத்தது… நன்றி…

  3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக் கார,

    படங்களூடன் கூடிய ஐந்து கருட சேவை பதிவுஅ ருமை – படங்களூம் அருமை. விளக்கங்கள் நன்று –

    நாராயணனே உயர் கடவுள் எனக் கண்டறிந்த பெரியாழ்வாரை பாராட்டும் வண்ணம் பாண்டிய மன்னன் அவரை யானை மேலேற்றி நகர வலம் வரச் செய்தான். இக்காட்சியைக் காண விரும்பிய பெருமாளோ கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
    பெரியாழ்வார் பெருமாளை மட்டுமல்ல அவரது சங்கினையும் பல்லாண்டு வாழ வாழ்த்திப் பாடினார்.

    ஒரே சமயத்தில் ஐந்து கருட வாகனங்களில் பெருமாள் காட்சி தருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    கீரை வடை பருப்பு வடை சவ்வு மிட்டாய் என வாங்கித் தின்பதற்கு இது தான் நல்லதொரு சந்தர்ப்பம் – அதுவும் புதிதாய்க் கலயாணம் ஆனவர்கள் தம்பதி சமேதராகச் சென்று வழிபட்டு வருவது நல்லதொரு செயல்.

    நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  4. வணக்கம்

    பதிவு ஒரு தனிச்சிறப்புத்தான் கற்பனை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  5. சாலமன் சொல்கிறார்:

    நல்ல பதிவு. வாழ்த்துகள்

  6. rathnavelnatarajan சொல்கிறார்:

    ஐந்து கருடசேவை = திரு சித்திரவீதிக்காரன் அவர்களின் மண் மணம் உள்ள பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திரு சித்திரவீதிக்காரன்

ranjani135 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி