
விக்கிமேனியா என்பது விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமீடியா பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிப்பவர்கள் ஆண்டுதோறும் சந்தித்துக் கொள்ளும் ஒரு கொண்டாட்டம். 2022இல் உலகின் 50 இடங்களில் விக்கிமேனியா சந்திப்பு & கொண்டாட்டம் நிகழ்ந்தது. அதில் இந்தியாவில் நடந்த நான்கு நகரங்களுள் மதுரையும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. கூடல் மாநகரில் தமிழ் வளர்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர்.
மதுரையில் விக்கிமீடியா அமைப்பின் உதவியுடன் விக்கிமேனியா நிகழ்வு ஆகஸ்ட் 14 ஞாயிறன்று மதுரை அண்ணாநகர் அருகிலுள்ள சக்ரா ரெசிடென்சி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் தமிழ்ச்செல்வம், ராமதேவன் இவர்களுடன் நானும் கலந்துகொண்டேன். நீச்சல்காரன், மகாலிங்கம், செல்வசிவகுருநாதன், முகம்மது அம்மார், ஸ்ரீதர் போன்ற நண்பர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
விக்கிமேனியா சந்திப்பு விக்கிப்பீடியர்களின் அறிமுகத்தோடு தொடங்கியது. 5,000 கட்டுரைகள் தொடங்கிய பதிவரிலிருந்து விக்கிப்பீடியாவிற்கு தொடர்ந்து பங்களித்துவரும் பலரையும் நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பைக் குறித்து சொல்லச்சொல்ல நாமும் எதாவது செயலாற்ற வேண்டுமென்ற உந்துதல் கிட்டியது.
நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்தது சகோதரர் ப.தமிழ்ச்செல்வம். அவர் வாயிலாக விக்கிப்பீடியாவில் ஒரு சில கட்டுரைகளைத் தொடங்கவும், திருத்தவும் முடிந்தது. மதுரையில் பெண்கல்விக்கு உழைத்த கேட்டிவில்காக்ஸ் அம்மையார் குறித்து எழுத முயற்சிசெய்தேன். பல படங்களை ஏற்றியிருக்கிறேன். குறிப்பிடும்படியான பங்களிப்பு என்றால் தொ.பரமசிவன் அய்யாவின் படத்தை விக்கிப்பீடியாவில் பகிர்ந்ததைச் சொல்லலாம். ” என்பது போன்ற விசயங்களைக் குறிப்பிட்டேன்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு விக்கிமீடியாவின் பல்வேறு திட்டங்களைக் குறித்தும் இச்சந்திப்பின் நோக்கம் குறித்தும் நீச்சல்காரன் தெளிவாக எடுத்துரைத்தார். விக்கிப்பீடியா மட்டுமில்லாமல் விக்சனரி, விக்கிமேற்கோள், பொதுவகம், விக்கித்தரவு போன்ற திட்டங்கள் இருப்பதையும் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டையும் தெளிவான விளக்கங்களோடு எடுத்துரைத்தார்.
பள்ளிகளில் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தியதைக் குறித்து ஆசிரியர் ஸ்ரீதர் பேசினார். விக்கி நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களை ஏற்றுவதைக் குறித்து தகவல் உழவன் பேசினார். விக்கிப்பீடியாவில் எழுதும்போது அதில் ஏற்றப்படும் கட்டுரைகள், அதிலுள்ள சிக்கல்கள் குறித்து விரிவாகப் பேசினார் செல்வசிவகுருநாதன்.
எல்லோருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினரான தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யாவை அழைக்கச் சென்றோம். மதிய நிகழ்வில் விக்கி வாயிலாக வழங்கப்படும் நிதிநல்கை குறித்து பாலாஜி எடுத்துரைத்தார். அதன்பிறகு சாந்தலிங்கம் அய்யாவை குறித்து அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. ‘தமிழே திராவிடம்’ என்ற தலைப்பில் சாந்தலிங்கம் அய்யா உரையாற்றினார்.
டிஜிட்டல் உலகில் இயங்கும் இன்றைய இளைஞர்களிடம் தாம் கூறவேண்டியது என்ன என்பது பற்றி யோசித்த சாந்தலிங்கம் ஐயா, “இன்றைய அரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் பற்றிய ஒவ்வாமையைச் சிலர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றுரீதியாக திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிப்பதே, அதனால் அச்சொல்லைப் புறந்தள்ளுவது நமக்கே இழப்பு” என்பதை வலியுறுத்தும்விதமாக ஒரு உரையைத் தயார் செய்திருந்தார். சந்திப்பில் கலந்துகொண்டு அதன் பங்கேற்பாளர்களையும் நடைமுறைகளையும் கவனித்து அதற்கேற்ப மேலும் சில விசயங்களையும் பேசினார். உரிய இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளுடன் கச்சிதமான வடிவத்தில் அமைந்த அவரது கட்டுரை விக்கிப்பீடியா கட்டுரைகளில் பங்களிப்பவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது என்று கலந்துகொண்டவர்கள் மகிழ்ந்தனர்.
விக்கிப்பீடியாவில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. எல்லோரும் சேர்ந்து குழுப்படம் எடுத்துக்கொண்டோம். விக்கிப்பீடியாவிற்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். விழாவில் கலந்துகொண்ட எல்லோருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சூடான தேநீரும் பஜ்ஜியும் சாப்பிட்டு கிளம்பினோம். சாந்தலிங்கம் அய்யாவுடன் தொல்லியல் தொடங்கி பல விசயங்களையும் உரையாடியபடி சென்றது மகிழ்ச்சி.

இதிலுள்ள படங்கள் விக்கிமீடியா பொதுவகத்தில் இச்சந்திப்பு குறித்த பக்கத்தில் ஏற்றப்பட்டுள்ளவை. பங்களித்தவர்களுக்கு நன்றி.
நாம் தேடுகிற விசயத்தை நாம் விக்கிப்பீடியா வாயிலாகப் பெற்றுக்கொள்கிறோம். விக்கிப்பீடியாவில் இல்லாத விசயங்களை அல்லது இன்னும் விரிவு செய்யவேண்டிய தகவல்களை நாமும் அதில் ஏற்றலாம். அது சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமையும்.