Archive for the ‘மதுரையில் சமணம்’ Category

குன்னத்தூர்

எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து பசுமைநடை என்ற பெயரில் மாதம் ஒரு முறை, மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர்குகைகள், படுகைகள், கல்வெட்டுகள், மற்றும் கலைச்செல்வங்களைப் பாதுகாக்கவும் மதுரையின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் பயண இயக்கம் ஒன்றை நடத்திவருகிறார்கள். மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் சமண குகைத்தளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வரிச்சியூர், கருங்காலக்குடி, கொங்கர்புளியங்குளம், மேட்டுப்பட்டி, மாங்குளம், நாகமலை, யானைமலை, பெருமாள்மலை, அரிட்டாப்பட்டி, விக்கிரமங்கலம், கீழவளவு, குரண்டி, அணைப்பட்டி, சித்தர்மலை, கீழகுயில்குடி, திருப்பரங்குன்றம், திருவாதவூர், உத்தமபாளையம் போன்ற இடங்களில் சமண சின்னங்கள் காணப்படுகின்றன.  

– எஸ்.ராமகிருஷ்ணன், சமணநடை

எஸ்.ரா’வின் தேசாந்திரி நூல் குறித்த பதிவு எழுதிய போது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆசையிருந்ததாக எழுதியிருந்தேன். அந்த ஆசை பசுமைநடை மூலம் நிறைவேறியது. மேலும், பல ஆளுமைகளுடன் பயணிக்கும் வாய்ப்பும் பசுமைநடை மூலம் கிட்டியது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. எழுத்தாளர். அ.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.

பசுமைநடை பயணமாக வரிச்சூர்-குன்னத்தூர் என்று கேள்விப்பட்டதும் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வருத்தமும் தோன்றியது. மகிழ்ச்சிக்கு காரணம் மாங்குளம் மீனாட்சிபுரத்தில் அ.முத்துக்கிருஷ்ணன் சொல்லும் போதே அடுத்த முறை பசுமைநடைக்கு நம்முடன் எழுத்தாளர்களும் வருகிறார்கள் என்றதுதான். வருத்தம் எதற்கு என்று கேட்கிறீர்களா வரிச்சூரில்தான் நான் தொழில்நுட்பவியல் படித்தேன். அந்தப் பகுதியில் படித்தபோது அங்கு இதுபோன்ற மலையிருக்கிறது என்றே தெரியாது. இரண்டு வருடம் அங்கு திரிந்தும் இது குறித்து அறியாமல் போய்விட்டோமே என்ற வருத்தம்தான்.

04.09.2011 அன்று அதிகாலை நண்பரிடம் வாங்கிய இருசக்கரவாகனத்தில் கிளம்பிசென்றேன். மதுரை ஆவின் பால்பண்ணை வாசலில் எல்லோரும் கூடுவதாக குறுந்தகவல் வந்திருந்தது. அங்கு நான் செல்லும் போதே நிறைய பேர் வந்துவிட்டார்கள். தேநீர்அங்காடி வாசலில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை பார்த்ததும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் போய் வணக்கம் சொல்லி இந்த பசுமைநடைக்கு அவர் வந்தது எங்களுக்கு பெருமகிழ்ச்சி தருவதாக கூறினேன். எல்லோரும் வந்ததும் அங்கிருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரிச்சூர் நோக்கி சென்றோம். படிக்கும் போது இந்த வழிநெடுக பலமுறை பேருந்தில் சென்றிருக்கிறேன். இப்பொழுது நிறைய மாறிவிட்டது. படித்த கல்லூரியை பார்த்தேன். அடையாளமே தெரியவில்லை. வரிச்சூர் போய் களிமங்கலம் பிரிவு வழித்திரும்பிச்சென்றோம். கொஞ்ச தூரத்தில் குன்று வந்தது.

உதயகீரிஸ்வரர் குடைவரை

உதயகிரீஸ்வரர்எல்லோரும் வண்டியை நிறுத்திவிட்டு உதயகிரிஸ்வரர் குடைவரைக் கோயிலை நோக்கிச் சென்றோம். எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கால குடைவரைக்கோயில். சூரிய உதயம் இக்குடைவரையில் உள்ள சிவலிங்கத்தின் மீது காலையில் படும்படி அமைத்திருக்கிறார்கள். மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரை. மிகச்சிறிய கோயில். வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் மிகஎளிமையாய் நின்று கொண்டிருக்கிறார்கள். இடதுபுறம் குடைவரையோரம் பிள்ளையாரை செதுக்கியுள்ளார்கள். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இக்குடைவரை குறித்த தகவலைக்கூறினார். இக்குடைவரை எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றம் எல்லாம் இதற்கு முந்தியவை. பல்லவர்கள் காலத்தில்தான் இதுபோன்ற குடைவரைகள் அமைக்கப்பட்டன. அதே காலத்தில் பாண்டியர்களும் குடைவரையை அமைத்திருக்கிறார்கள். இதுபோல பல கோயில்கள் மதுரையை சுற்றியிருக்கின்றன். கணபதி வழிபாடு பல்லவர்கள் காலத்தில்தான் தமிழகத்திற்கு வந்தது. வணிகர்கள் கணபதியை வைத்து வழிபட்டுவந்தனர். மேலும், அந்தக்காலத்தில் நடுகற்கள் இறந்தவர்களுக்கு எடுத்ததால் கல்லில் கோயில்கள் இறைவனுக்கு எடுக்கப்படவில்லை. பின்னர்தான் இந்த வழக்கம் பரவத்தொடங்கியது. இந்த குடைவரையை விட இம்மலைக்கு பின்னால் உள்ள குடைவரையை சற்று நன்றாக செதுக்கியிருக்கிறார்கள். மேலும், இக்குன்றுக்கு அருகில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச்சார்ந்த சமணர்படுகைகள் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வாறு சாந்தலிங்கம் அய்யா கூறினார்.

சாந்தலிங்கம்

பின் அங்கிருந்து அருகில் சமணர்படுகை இருந்த இடத்தை நோக்கி நடந்து சென்றோம். அந்த இடத்தில் வேறுகடவுளை வைத்து தற்போது  பொதுமக்கள் வழிபடும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் படுகைக்கு மேலே முகப்பில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன். இதில் ஒரு கல்வெட்டு அந்தக்காலத்தில் நூறுகலம் நெல் கொடையாக வழங்கப்பட்டதை குறிப்பிடுகிறது. இந்த மூன்று கல்வெட்டுகளையும் சாந்தலிங்கம் அய்யா வாசித்துக்காட்டினார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

பிறகு பேராசிரியர் சுந்தர்காளி இந்தநடை குறித்து உரையாடினார். இந்த நடைக்கு பலர் வருவது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எங்களுடன் இதுபோன்ற இடங்களுக்கு வருவதைக் குறித்தும், அதைப் பதிவு செய்ய வேண்டிய கடமை குறித்தும் விரிவாக பேசினார். சமணநடை என்ற அவரது பதிவை வாசியுங்கள். அங்கிருந்து அஸ்தகீரிஸ்வரர் குடைவரை நோக்கி நடந்தோம். மிக அழகாக குடைவரை செதுக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம்.

அங்கிருந்து அருகிலுள்ள பழமையான கோயிலைப் பார்க்க சென்றோம். மிக அருமையான இடம். பசுமைநடை குறித்த அனுபவங்களை சில நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர். சு.வேணுகோபால் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அவருடைய வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பு வாசித்ததை சொன்னேன். அங்கிருந்து மதுரை சரவணனுடன் பேசிக்கொண்டே கீழ்குயில்குடி ஆலமரத்தடிக்கு வலசை கூட்டத்திற்கு சென்றேன். மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது பெற்றதற்காக பாராட்டுவிழா நடந்தது. அருமையான நிகழ்வு. இந்த நாள் இனிய நாள்.

எழுத்தாளுமைகள்

கவிஞர் தேவதேவன், ஆவணப்பட இயக்குனர் இளங்கோவன், அவரது துணைவியார் கீதா இளங்கோவன். தமிழினி வசந்தகுமார், எழுத்தாளர் வேணுகோபால். எழுத்தாளர் அர்ஷியா, குறும்பட இயக்குனர் அருண்பிரசாத், பேராசியர் சுந்தர்காளி, ஓவியர் பாபு என நிறைய ஆளுமைகள் இப்பயணத்தில் கலந்து கொண்டார்கள்,

படங்கள் பசுமைநடை முகநூல் பக்கத்திலிருந்தும், அ.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய பதிவிலிருந்தும் எடுத்தேன். நன்றி. இது மீள்பதிவல்ல, முதல்பதிவுதான். இதுபோல எழுத்தாளுமைகள் பலரையும் சந்திக்க பசுமைநடை 25 விருட்சத்திருவிழாவிற்கு கீழக்குயில்குடி சமணமலையடிவார ஆலமரத்தடிக்கு வாருங்கள். பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், சூழலியல் அறிஞர் தியோடர் பாஸ்கரன் மற்றும் பல ஆளுமைகள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

அனைவரையும் அன்புடன் விருட்சத்திருவிழாவிற்கு அழைக்கிறோம்.

எதிர்வரும் ஞாயிறன்று நிகழவிருக்கும் பசுமைநடை 25: விருட்சத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

invitation front

invitation back

(அழைப்பிதழை முழு அளவில் காண படத்தின்மேல் சொடுக்கவும்)

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கீழக்குயில்குடிக்கு (நிகழ்வு நடைபெறும் இடம் வரைக்குமே) நேரடிப் பேருந்து வசதி உள்ளது. வழித்தட எண் 21C. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காலையிலிருந்து மதியம் வரை பேருந்து கிளம்பும் நேரங்கள்: 05.35, 07.05, 07.15, 08.30, 10.05, 11.35, 12.55. (பத்து நிமிடங்கள் முன்பின் ஆகலாம்).  கீழக்குயில்குடி சமணமலை கருப்பு கோயில் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

மற்றபடி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழியாகச் செல்லும் எந்தப் பேருந்திலும் வந்து நாகமலை புதுக்கோட்டையில் இறங்கினால் 2கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமணமலைக்கு ஷேர்ஆட்டோ வசதி உண்டு.

முத்துக்கிருஷ்ணன்

குகைகளுக்குள் கொடையாளர்கள் செதுக்கச் செய்த கல் படுக்கைகளில் துறவியர் கண்ணயர்கிறார்கள். பசிக்கும்போது அடிவாரக் குடியிருப்புகளில் கையேந்தி உணவிரந்து நின்றவாறு புசிக்கிறார்கள். பள்ளிகளையொட்டி நீர் நிறைந்திருக்கும் சுனைகளில் கையால் மொண்டு பருகுகிறார்கள். கள்ளை வெறுக்கிறார்கள். புலாலை மறுக்கிறார்கள். லோச்சன நோன்பிருந்து கண்ணீர் சிந்த மயிர்க்கால் பிடுங்கித் தலையை மழித்துக் கொள்கிறார்கள். சூத்திரச் சாதியினர்க்குச் கல்வி உணவு மருந்து என அவர்கள் அளிக்கும் கொடைக்கு அளவில்லை. எங்கிருந்தெல்லாமோ அவர்களைத் தேடி வந்து சித்தாந்தம் கேட்பவர்கள் ஏராளம். இருட்டில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கிடைத்த பேரானந்தம்.             

– பூமணி (அஞ்ஞாடி)

மதுரை உலகின் தொல் நகரம். மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக பாறை ஓவியங்களும், தமிழிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும், வாய்மொழி வழக்காறுகளும், பிறநாட்டறிஞர் நூல்களும் உள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் வாழ்ந்த தொல்குடிகள் தாங்கள் கண்டவற்றை பாறைகளில் ஓவியமாக தீட்டி உள்ளனர். மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய பார்வையை பதிவு செய்வதிலும், பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாய் இருக்கிறான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய  பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடி மலையைக் காண பசுமைநடைக் குழுவோடு 23.06.2013 ஞாயிறன்று சென்ற அனுபவப் பதிவு.

மந்தை

அதிகாலை எழுந்து மாட்டுத்தாவணி பேருந்துநிலைய வாசலுக்கெதிரில் கூடினோம். அங்கிருந்து ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் கருங்காலக்குடி சென்றோம். மேலூர் தாண்டி கொட்டாம்பட்டி செல்லும் வழியில் கருங்காலக்குடி இருக்கிறது. கருங்காலக்குடி மந்தையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து மெல்ல நடந்தோம்.

காரைவீடு

கருங்காலக்குடி மிக அழகான ஊர். இவ்வூரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். மக்களிடம் பாதை கேட்டு மலையை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுகளும், திண்ணைகளும் மனதை ஈர்த்தது.

அன்பின் பாதை

வலைப்பதிவர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு சமீபத்திய வாசிப்பு, பதிவு குறித்து உரையாடிக்கொண்டே நடந்தேன். வழியிலுள்ள சிறுசிறு குன்றுகளும், வறண்ட வயல்வெளிகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். சிறுகுன்றின் அடிவாரத்திலுள்ள குடிநீர் ஊருணியை மிகவும் சுத்தமாக இந்த ஊர்மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பாராட்டிற்குரிய விசயம்.

ஊருணி

மழை வருவது போல மேகம் சூழ்ந்திருந்ததால் சூழல் மிகவும் ரம்மியமாகயிருந்தது. தொல்குடிகள், சமணத்துறவிகள் வாழ்ந்த குன்றிற்கு சென்றோம். குகைத்தளத்தினடியில் படுக்கைகளும், மருந்து அரைப்பதற்கு ஏற்ப குழிகளைச் செதுக்கியிருந்தனர். குகை முகப்பில் தமிழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்தோம்.

சமணமுனி

சாந்தலிங்கம் அய்யா கருங்காலக்குடி குறித்த தகவல்களை கூறினார். கருங்காலக்குடி பாண்டிய நாட்டிற்கும் சோழநாட்டிற்குமான பெருவழிப்பாதையில் அமைந்துள்ளது. ஏழைய்ஊர் அரிதின் பளி என்ற தமிழிக் கல்வெட்டு இங்குள்ள குகை முகப்பில் காணப்படுகிறது. ஏழையூர் என்பது இடையூர் என்பதன் திரிபாக இருக்கலாமென்று ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கருதுகிறார்கள். சிறப்பு ழகரம் இங்குள்ள கல்வெட்டில் உள்ளது. அரிதின் என்ற முனிவர்க்கு படுக்கைகள் செதுக்கித்தந்ததை குறிக்கிறது.

தமிழிக்கல்வெட்டு

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் குன்றின் மேலே உள்ள குகையில் காணப்படுகிறது. கிடாரிப்பட்டி, சிவகங்கை திருமலை போன்ற இடங்களிலும் இதுபோன்ற பாறை ஓவியங்கள் காணப்படும் தொல்குடிகள் வாழ்ந்த பகுதிகளில் போய் சமணத்துறவிகள் தங்கியுள்ளனர்.

அச்சணந்தி செய்வித்த திருமேனி

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண முனிவரின் சிலையொன்று குன்றில் காணப்படுகிறது. முக்குடை இல்லாததால் இது சமணத்துறவி ஒருவரின் சிலையாகும். சிலையின் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்னும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. சமணத்திற்கு ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பிறகு அச்சணந்தி என்ற சமணத்துறவி கால்நடையாக தமிழகம் முழுவதும் பயணித்து சமணத்துறவிகள் வசித்த இடங்களில் சமணச்சிற்பங்களை வடித்து மீண்டும் சமணம் செழிக்க பாடுபட்டார். நாகர்கோயில் சிதறால் மலையிலிருந்து வேலூர் வள்ளிமலை வரையிலான பல மலைகளில் அச்சணந்தி செய்த சிற்பங்களையும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் காணலாம். கழுகுமலையில் இவர் செதுக்கிய சிற்பமெதுவுமில்லை.

மலையின் மீதுள்ள படுக்கையொன்றில் நாலு வரிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் பள்ளித்தரையன் என்ற வரி காணப்படுகிறது. அரையன் என்பவர் பாண்டியர்களின் கீழிருந்த சிற்றசர்களில் ஒருவராயிருக்கலாம்.

வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழகத்தில் பணிரெண்டாம் நூற்றாண்டு வரை எழுநூறு ஆண்டுகள் வழக்கத்தில் இருந்தது. அச்சமயம் மக்கள் வழக்கத்திலிருந்த தமிழ் மிகவும் எளிமையாய் இருந்ததால் வட்டெழுத்து மறைந்து போனது. வட்டெழுத்து மேற்கே நாகர்கோயில், கேரளா பகுதிகளில்  பதினாறாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. இன்றும் சுசீந்தரம் கோயிலிலும், கேரளப்பகுதியிலுள்ள பாறைகளிலும் காணப்படுகிறது. வட்டெழுத்து கேரளத்தில் கிரந்தத்தோடு இணைந்து மலையாளமாகியது.

பாண்டியர்களுக்குப் பிறகு நாயக்கர் ஆட்சி காலத்தில் லிங்கம நாயக்கர் நத்தம் பகுதியை ஆண்டார். மகாபாரதக் கண்ணனின் நினைவாக இப்பகுதி அப்போது துவராபதிவளநாடு என்றழைக்கப்பட்டது. நத்தம் தாசில்தார் அலுவலகத்திற்கு எதிராக உள்ள மண்கோட்டை, சத்திரம் எல்லாம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அக்காலத்தில் மக்கள் குடிநீர் வசதிக்கு கிணறு, பொது செக்கு ஆகியவைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர். அதன்பின் இராவுத்தர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட போது கொடைகளை செய்துள்ளார்.

இந்த ஊருக்கு அருகிலுள்ள திருச்சுனை என்னும் ஊரில் பிற்கால பாண்டியர்கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. சூழும் அரசர் கண்டம் என்ற வரலாற்று பெயர் எப்படி திருச்சுனை என்றானது எனத் தெரியவில்லை.

பசுமைநடை

கருங்காலக்குடி குறித்த தகவல்கள் அடங்கிய கைப்பிரதி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அங்கிருந்து குன்றின் மேலுள்ள பாறை ஓவியங்களைக் காணச் சென்றோம். மலையில் ஏற படிகள் செதுக்கியுள்ளனர். குகை போன்றமைந்த பாறையின் அடியில் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

பாறைஓவியம்

பாறை ஓவியங்கள் குறித்து ஓவியர் பாபு பேசினார். இங்குள்ள பாறைகளில் காணப்படும் ஓவியங்கள் அழகர்கோயில் கிடாரிப்பட்டி ஓவியங்களுக்கு முந்தியவையாக இருக்கலாம். அங்கு ஆடு,மாடுகள் எல்லாம் பழக்கி மேய்ப்புச் சமூகமாக மாறியது போல படங்கள் இருக்கும். இங்கு எல்லாம் தனித்தனியாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள altamira, chauvet குகை ஓவியங்களை மிகப் பழமையானதாகச் சொல்லி அவற்றை யாரும் பார்க்க முடியாதபடி பாதுகாத்து வருகிறார்கள். நாம் இப்போதுதான் இதுபோன்ற துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

அதன்பின் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஓவியங்கள் குறித்தும் பசுமைநடைப் பயணம் குறித்தும் பேசினார். இதுபோன்ற மலைகள் நம் வீட்டு சமையலறை மேடையாகவோ, தளமாகவோ மாறாமலிருக்க நாம் இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் தமிழை செம்மொழியாக நிரூபிக்க உதவியதுபோல இதுபோன்ற பாறை ஓவியங்கள் நம் நீண்ட வரலாற்றை அறிய உதவுகிறது. ஓவியங்கள் குறித்து அறிந்து கொள்ள தனிவகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யலாம். அடுத்த நடை ஜூலை மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரிட்டாபட்டி என்றார். சுற்றிலும் மலைகள், மழைமேகம் சூழ்ந்த வானம், சிலுசிலுவென காத்து அடிக்க அங்கிருந்து வர மனசேயில்லை. மெல்ல இறங்கினோம்.

மலைகள்

எல்லோரும் ஊருணிக்கருகிலிருந்த மலைக்குன்றைச் சுற்றி உணவருந்தினோம். தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம் அய்யாவும், இராஜேந்திரன் அவர்களும் எழுதிய கல்வெட்டுக்கலை என்னும் நூல் வாங்கினேன். கருங்காலக்குடி மந்தைக்கருகிலுள்ள பழைய கோயிலொன்றை பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்சப்பேர் தேனீர் கடையிலும், மந்தையில் விற்ற மாம்பழங்களையும் வாங்கி அந்த ஊரோடு ஐக்கியமாயினர். வருகையில் பேருந்தில் நண்பர்களோடு கதைத்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு பசுமைநடையும் நிறைய புதிய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது. கருங்காலக்குடி பசுமைநடை குறித்து நண்பர்கள் இளஞ்செழியன்(கதிர்), வேல்முருகன்(நெடுஞ்சாலை) பதிவுகளையும் வாசியுங்கள்.

படங்களை எடுத்துத் தந்த சகோதரன் செல்லப்பாவிற்கு நன்றிகள் பல.

பசுமைநடையில் முகநூல் பக்கத்தில் இணைய http://www.facebook.com/groups/251761754837926
மின்னஞ்சல் : greenwalkmdu@gmail.com

???????????????????????????????

ஒரு எழுத்தாளனுடைய வேர்கள் அவன் வாழும் மண்ணில் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் அவன் எழுதித் தீர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக தான் வசிக்கும் கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலையை அவன் பார்த்தபடியே இருக்கிறான். அம்மலை அவனுக்குள் எப்போதும் வளர்ந்தபடி உள்ளது. தான் பார்த்துணர்ந்த மலையின் சிறு துகள்களை காற்றில் அலைந்தபடி இருக்கும் அதன் வாசனைகளை அந்த எழுத்தாளன் எழுதினாலே போதுமானது.                 

– கோணங்கி

(ஆகஸ்ட் 2011ல் சென்ற பசுமை நடை குறித்த நினைவுப்பதிவு)

கொங்கர்புளியங்குளம் பஞ்சபாண்டவமலை பசுமைநடையின் போது அடுத்த நடை மாங்குளம் மீனாட்சிபுரம் என்றதும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அங்குள்ள படுகைகளை செய்வித்தவன் மதுரைக்காஞ்சி, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் என்பதுதான். பசுமைநடை செல்லும் ஞாயிறுக்கு நாலு நாட்களுக்கு முன்பே உடல்நிலை சரியில்லை. எதாவது தகுடுதத்தம் செய்தால்தான் ஞாயிறு செல்ல முடியுமென்றெண்ணி சனிக்கிழமை விடுப்பெடுத்தேன்.

21.08.2011 ஞாயிறு காலை வெள்ளென எழுந்து நண்பரை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். எல்லோரும் மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் முன் கூடினோம். அப்போது டீக்கடைக்காரர் இன்று ஏதும் போட்டித்தேர்வு உள்ளதா எனக் கேட்டார். எனக்கு சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. ஏன்னா எனக்கும் போட்டித்தேர்வுகளுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. எல்லோரும் வந்ததும் கிளம்பினோம். சிட்டம்பட்டி பிரிவிலிருந்து மீனாட்சிபுரம் சென்றோம். வழிநெடுக பசுமையாயிருந்தது. வயல்களிலிருந்து அடிக்கிற காற்று மேனியை சிலிர்க்க வைத்தது. அந்தப்பகுதி மக்கள் மலையை பார்க்க இவ்வளவு பேர் செல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட்டனர்.

???????????????????????????????

மீனாட்சிபுரம் மிக அழகான கிராமம். இங்குள்ள குடிசை வீடுகள், கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் மற்றும் காரை வீடுகள் என பெரும்பாலான வீடுகளில் திண்ணை இருந்தது. திண்ணையில் சாய்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் வாசிப்பதும், எல்லோருமாய் அரட்டையடிப்பதும் அலாதியான சுகம். மீனாட்சிபுரம் பெரிய கண்மாயை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வழியில் ஒரு அண்ணன் ‘மலையப் பாக்கப் போறீங்களா? மேலயிருந்து பார்த்தா அழகர்கோயில் தெரியும்’ பாருங்கன்னு சொன்னார். வண்டியை நிறுத்திவிட்டு மலையை நோக்கி நடந்தோம். மழை மீது ஏறும் போது தொலைவில் தெரிந்த ஒரு மலையை உடன் வந்த நண்பரிடம் காட்டினேன். அந்த மலையைப் பார்க்க ஒரு பொம்மை கணினிப்பெட்டி முன் அமர்ந்திருப்பதை போலிருக்கும். அரிட்டாபட்டி போகும் போது அதை பார்த்திருக்கிறோம்.

மாங்குளம்-மீனாட்சிபுரம்

???????????????????????????????

வழியில் நரந்தம்புல் நிறைய வளர்ந்திருந்தது. வழியில் ஓரிடத்தில் ஒரு கட்டிடத்தின் அடித்தளம் மட்டும் இருந்ததை பார்த்தோம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா அங்கு முன்பு ஆய்வு செய்ததை பற்றிக் கூறினார். அக்காலத்திலேயே செங்கல்கள் வைத்துக் கட்டியுள்ளனர்.

சாந்தலிங்கம்

அடுத்திருந்த குகைத்தளத்தில் எல்லோரும் கூடினோம். குகையின் முகப்பில் தமிழி(தமிழ்பிராமி) எழுத்துக்களைப் பார்த்தோம். இம்முறை நடைக்கு நிறையப்பேர் வந்திருந்தனர். நிறைய நண்பர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். குகைத்தளத்தில் அமர்ந்தோம். சாந்தலிங்கம் அய்யா சமணம் குறித்தும், கல்வெட்டுக்களில் இருந்ததை பற்றியும் பேசினார்.

மாங்குளம் ஓவாமலை 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான இடம். ஐராவதம் மகாதேவன்  அவர்கள் மதுரை வரும் போது மாங்குளத்திற்கு வருவார். சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி இம்மலையில் உள்ள கல்வெட்டில் குறிப்புள்ளது. இந்த மலையில் ஆறு தமிழ் பிராமிக்கல்வெட்டுகள் உள்ளன. மதுரையில் உள்ள தமிழிக் கல்வெட்டுக்களில் மாங்குளம் மிகவும் பழமையானது.

இந்தியாவில் பிராமி எழுத்து போல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் கரோஷ்டி என்ற ஒரு வகை எழுத்துமுறை இருந்தது. கழுதைக் காது போன்றிருப்பதால் இதற்கு இப்பெயர். இன்று அதை வாசிப்பதற்கு கூட அதிகம் ஆளில்லாமல் அழிந்துவிட்டது. வடக்கே அசோகர்கால பிராமிக் கல்வெட்டுக்களுக்கு தமிழிக் கல்வெட்டுகள் மூத்தது.

மாங்குளம் கல்வெட்டில் தம்மம்(தர்மம்), அசுதன்(மகன்), சாலகன்(சகலன்)  போன்ற பிராகிருதச் சொற்கள் கலந்து காணப்படுகிறது. மேலும், இங்குள்ள கல்வெட்டுக்களில் கடல் அன் என்று பிரித்தே எழுதப்பட்டுள்ளது. உயிர் மெய் சேர்த்து கடலன் என எழுதும் வழக்கத்திற்கு முந்தைய கால கல்வெட்டுக்கள் இவை.

மாங்குளத்தில் உள்ள கல்வெட்டில் நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி, கணிநந்த ஸ்ரீகுவன் என்ற துறவிக்கு படுகை வெட்டிக்கொடுத்தை குறிப்பிடுகிறது. இன்னொரு கல்வெட்டில் காவிதி என்ற வரி உள்ளது. இது தற்போது வழங்கப்படும் கலைமாமணி போன்ற பட்டமாக இருக்கலாம். வெள்ளறை நிகமம் என்ற வரி கல்வெட்டில் உள்ளது. இப்போதுள்ள வெள்ளரிப்பட்டி ஊரிலிருந்த வணிகக்குழுவாகயிருக்கும். நிகமம் என்பது வணிகக்குழுக்களைக் குறிக்கும். தற்போது கூட பாரத் சஞ்சார் நிகாம் என்பதை காணலாம்.

மாங்குளத்திற்கு முந்தைய தமிழிக் கல்வெட்டாய் 2004ல் புலிமான்கோம்பை கல்வெட்டைச் சொல்லலாம். இதில் ஆகோள் பூசல் என மாடுபிடி சண்டையைப் பற்றிய குறிப்பு உள்ளது. நிரைகவர்தல், நிரைமீட்டல் என்ற தொல்காப்பியத்தில் வரும் திணைக் கோட்பாடு பற்றி அறிய உதவும் தமிழின் மிகப் பழமையான கல்வெட்டு.

2007ல் இம்மலையில் அகழாய்வு செய்த போது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்புக்காசு கிடைத்தது. அதில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இன்னொரு இடத்தில் செங்கல் கட்டிட அடித்தளம் காணப்பட்டது. அதை வழியில் வரும்போது பார்த்திருப்பீர்கள். இரண்டு அறைகள் கொண்ட கட்டிடம். 33 செ.மீ நீளம் x 13 செ.மீ அகலம் x 5 செ.மீ உயரம் கொண்ட செங்கல் கற்கள். மண் கலவையை வைத்து பூசியிருக்கிறார்கள். கூரை ஓடு பயன்படுத்தியிருக்கிறார்கள். மரச்சட்டங்களை இணைப்பதற்கு ஆணியை பயன்படுத்தியிருக்கிறார்கள். வழிபாட்டு கூடமாக இந்த அறைகள் இருந்திருக்கலாம்.

மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற ஊர் சமீப காலங்களில் உருவாகிய ஊர். மாங்குளம் வழி வரும்போது பாதியோடு நின்றுபோன குடைவரை ஒன்றைக் காணலாம். இதில் தூண்களோடு முன் வராண்டா மட்டும் வெட்டப்பட்டுள்ளது. அதற்குமேல் கட்டாமல் பாதியோடு விடப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மாங்குளம் ஓவாமலை தொல்லியல் ஆய்வாளர்களுக்கு மிக முக்கியமான இடமாகும்.

அ.முத்துக்கிருஷ்ணன்

அ.முத்துக்கிருஷ்ணன் பேசும்போது இந்த இடங்களை குறித்தெல்லாம் நாம் ஒரு இடத்தில் சேர்ந்து ஏசிஹாலில் புரொஜக்டரில் பார்ப்பது வேறு. இது போன்ற இடங்களுக்கே நேரில் வந்து பார்ப்பது வேறு. மேலும், இது போல மதுரையில் உள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாதந்தோறும் பயணிப்போமெனக் கூறினார்.

அடுத்த கல்வெட்டிருந்த இடங்களுக்கு சென்றோம். இரண்டு பெரும் பாறைகளுக்கு நடுவில் சென்ற போது அவ்விடத்திலிருந்த குளுமை, சூழல் எல்லாம் எழுத்தில் எப்படிச் சேர்ப்பது? அங்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் இருந்தன. நிறைய புதிய நண்பர்கள் அறிமுகமானர்கள். அங்கிருந்த கல்வெட்டுக்களையும், படுகைகளையும் பார்த்தோம். அங்கிருந்த ஒரு பாறை வழுவழுப்பாக இருந்தது. எப்படியென்றால் பாலமேடு பால்பன் மீது ஜீராவ ஊத்தி வச்ச மாதிரியிருந்தது.

கண்ணன்

இயற்கையாக குகைபோலிருந்த இடத்தில் தமிழிக் கல்வெட்டுகளைப் பார்த்தோம். வரலாற்று பேராசிரியர் கண்ணன் அவர்கள் தொன்மையான இடங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

தமிழ்பிராமிக்கல்வெட்டுகளையும், தொன்மையான மலைகளையும் காப்பதன் மூலம் சங்ககாலத்தில் மக்கள் வாழ்ந்த முறைகளையும், கல்வி நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது. வடநாட்டிலுள்ள கல்வெட்டுகள் எல்லாம் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பதை காட்டுகிறது. இங்கு அரசர்கள், வணிகர்கள், மக்கள் இந்த எழுத்துகளை பயன்படுத்தியிருப்பதை குகைத்தளங்கள், பானைஓடுகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இது போன்ற தொன்மையான கல்வெட்டுகள் உதவியது. இவைகளை பொக்கிஷமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பது நமது கடமை.

கல்வெட்டு

மற்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு வெயில் ஏறும் முன் மாங்குளம் மலையிலிருந்து இறங்கி வந்து அங்குள்ள சமுதாயக் கூடத்தில் குழுவாக உண்டோம். அடுத்த நடையில் புத்தகத்திருவிழாவிற்கு வரும் எழுத்தாளர்களும் நம்மோடு கலந்து கொள்வார்கள் என்றது மகிழ்வைத் தந்தது. இந்த நடையில் சென்னைப் பகுதியிலிருந்து வந்த தமிழ்ச்சமணர்கள் சிலரும், வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த சிலரும் கலந்து கொண்டது பெருமகிழ்வை தந்தது.

படங்கள் அ.முத்துக்கிருஷ்ணன் தளத்திலிருந்தும், பசுமைநடை நண்பர் கந்தவேலிடம் வாங்கியும், பசுமைநடை முகநூல் பக்கத்தில் சுந்தர்ராஜன் அவர்கள் பகிர்ந்ததிலிருந்தும் எடுத்துள்ளேன். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

சமணப்பள்ளி

யாழ்ப்பாண நூலகத்துச் சாம்பலை
முதுமக்கள் தாழியில் சேமித்து வை.
அதில் இருக்கின்றன
புறநானூறும், கலிங்கத்துப் பரணியும்

–    புவியரசு

பசுமைநடை பயணம் இம்முறை கீழவளவு என்ற குறுந்தகவல் வந்ததும் மகிழ்வானது. ஏறக்குறைய மதுரை மலைகளிலுள்ள தொன்மையான இடங்களையெல்லாம் பசுமைநடைப் பயணத்தில் பார்த்துவிட்டோம். அதிகாலை எழுந்து நானும், சகோதரியின் மகனும் கிளம்பி ஆறு மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்றோம். எல்லோரும் வந்ததும் அங்கிருந்து ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் சென்றோம்.

அ.முத்துக்கிருஷ்ணன்

அக்னிநட்சத்திர வெயில்காலமாகயிருந்தும் அன்று காலை ஆதவனோ மெல்லவே தலையெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே சென்ற யானைமலை, மாங்குளம் மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி மலைகளையெல்லாம் பார்த்துக்கொண்டே சென்றேன். கீழவளவு பஞ்சபாண்டவமலை வந்ததும் மலை நோக்கி இறங்கி நடந்தோம். ஒவ்வொரு மலையையும் காண்பதற்கு அழகோடும், தனித்துவத்தோடும் இருக்கிறது. படைப்பின் கடவுள் பெருங்கலைஞன்.

பூமிப்பந்து போல நிற்கும் பாறையில் உச்சியில் மகாவீரரின் சிற்பமும், கீழே தமிழ்பிராமிக் கல்வெட்டும், அடியில் துறவிகள் தங்குவதற்கு வெட்டப்பட்ட படுகைகளும் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் தொடர்ச்சியாய் எல்லோரும் சாந்தலிங்கம் அய்யாவின் உரை கேட்க படுகைகளில் அமர்ந்தோம்.

தமிழிக்கல்வெட்டு

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கீழவளவு, சமணம், கல்வெட்டுக் குறித்த தகவல்களை கூறினார். மகாபாரதக் கதைகளின் தாக்கத்தில் இதுபோன்ற இடங்களெல்லாம் பஞ்சபாண்டவமலையென்று மக்களால் அழைக்கப்படுகிறது. இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இடம். நூறு பேர் தங்கும் அளவு படுகை இம்மலையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களைவிட வழுவழுப்பாக நேர்த்தியாக படுகைகள் வெட்டப்பட்டுள்ளது. மழைநீர் உள்நுழையாதவாறு காடி வெட்டி வெளியே நீர் செல்லுமாறு அமைத்துள்ளனர். பம்பரம் போல இப்பாறை அழகாக அமைந்துள்ளது. இங்குள்ள தமிழிக்கல்வெட்டு தலைகீழாக உள்ளது. கண்ணாடி வைத்துப் பார்த்தால் நேராகத் தெரியும். உபச(அ)ன் தொண்டி(ல)வோன் கொடு பளி இ என்ற கல்வெட்டின் மூலம் உபவாசமிருந்த துறவிக்கு தொண்டியை சேர்ந்தவர் வெட்டிக்கொடுத்த படுகை என அறியலாம். இதில் உள்ள தொண்டி பாண்டியநாட்டைச் சேர்ந்தது. பாண்டியர்களின் மதுரைக்கும் சோழர்களின் உறையூருக்குமிடையில் யானைமலை, மாங்குளம், அரிட்டாபட்டி, கருங்காலக்குடி என்ற பெருவழிப்பாதை இருந்தது. அதேபோல் கீழவளவு திருப்பத்தூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இவ்வழியே திருமலை என்னுமிடத்தில் சமணப்பள்ளி உள்ளது. எனவே, இந்த வழியை இரண்டாவது பெருவழியாகக் கொள்ளலாம்.

சமணம்

பக்தி இயக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவை மீட்டதில் அச்சணந்தி என்ற சமணத்துறவிக்கு பெரும்பங்கு உண்டு. இம்மலையிலும் சமணத்தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பாறையின் உச்சியில் மகாவீரர் சிலையும், பாறையை சுற்றி வரும் வழியில் பார்சுவ நாதர், பாகுபலி, மகாவீரர் சிலைகளெல்லாம் உள்ளது. அதன் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. சிற்பங்களில் யானைமலை, அரிட்டாபட்டி போல் வண்ணம் பூசப்பட்டுட்டள்ளது. சங்கரன் ஸ்ரீவல்லபன் என்பவன் திருநந்தாவிளக்கு எரிப்பதற்கு 50 ஆடுகளையும், உணவிற்கு முந்நாழி அரிசியும் ஏற்பாடு செய்ததை 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டில் அறியலாம்.

சாந்தலிங்கம்

இல்லறத்தில் இருப்பவர்களை சிராவகர்கள் என்பார்கள். சிராவகர்களும், வணிகர்களும் துறவிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். சமணர்கள் இப்பள்ளியில் கல்விதானம், மருத்துவதானம், அடைக்கலதானம், ஆகாரதானம் செய்வதை தம் கடமையாக கொண்டிருந்தனர். மிகுபொருள் விரும்பாமை என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டில் காரல் மார்க்ஸ் சொல்வதற்கு முன்பே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமணர்கள் தம் கடமையாகக் கொண்டிருந்தனர்.

கீழவளவு சமணப்படுகை

சாந்தலிங்கம் அய்யா பேசிய பின் ‘ஆரிய ஆதிக்கத்தால் பிராமி என்ற பெயர் வந்ததா?, வடக்கிருந்து எழுத்துக்கள் தமிழகத்திற்கு வந்தனவா? திருவள்ளுவர் சமணரா?’ எனப் பலவிதமான சந்தேகங்களை கேட்டனர்.

சாந்தலிங்கம் அய்யா ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக எல்லோருக்கும் புரியும்படி பதிலளித்தார். கி.மு.முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமணநூல் ஒன்றில் 18 வகையான எழுத்துமுறைகள் இந்தியாவில் இருந்தன என்ற குறிப்பு உள்ளது. அதில் தமிழி, பம்மி என்ற எழுத்துவகைகளையும் அடங்கும். பம்மி என்பதே பின் பிராமியானது. வடமொழி ஆதிக்கத்தால் அசோகர் காலத்திற்கு பிறகே இங்கு எழுத்துகள் வந்தன என்று சொல்லி வந்தனர். ஆனால், அது உண்மையில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு கல்வெட்டுகள் மதுரைப்பகுதியில் கண்டறியப் பட்டுள்ளன. மேலும், தமிழில் வர்க்க எழுத்து கிடையாது. மற்ற மொழிகளில் உண்டு. சிறப்பு ‘ழ’கரம், ‘ன’ போன்ற எழுத்துகள் மற்ற மொழிகளில் கிடையாது. சமணர்கள் தமிழகம் வருவதற்கு முன்னரே சிரவணபெலகொலாவிற்கு வந்தனர். ஆனால், அங்கு கல்வெட்டுகள் கிடையாது. ஏழாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில்தான் அவர்கள் பஞ்சகாலத்தில் வந்த கதை சொல்லப்பட்டுள்ளது. எனவே, தமிழி என்று இக்கல்வெட்டுகளை அழைப்பது சரி.

கீழவளவு சமணப்பள்ளி

திருவள்ளுவரை வந்தவாசி பொன்னூர் மலை பக்கம் குந்தகுந்தர் என்று அழைக்கிறார்கள். அவருடைய பாதவழிபாடு அங்கு காணப்படுகிறது. சமணம்தான் அக்காலத்தில் கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் வலியுறுத்தியது. திருவள்ளுவரும் இவற்றை திருக்குறளில் சொல்வதால் அவர் சமணராகயிறுக்க வாய்ப்புள்ளது. மேலும், திருக்குறளை மதுரை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார் என்பர். திருவள்ளுவர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். கல்வெட்டுப்பூர்வமாக திருவள்ளுவர் குறித்த செய்தி எல்லீஸ்துரை 1818ல் இராயப்பேட்டையில் 23 கிணறு தோண்டிய இடத்தில் காணப்படுகிறது.  அந்தக் கல்வெட்டு இப்போது மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்தக்கல்வெட்டில் மைலயம்பதியார் என்ற வரி உள்ளது. மேலும், இராயப்பேட்டையில் திருவள்ளுவருக்கு சிலையும் உள்ளது. திருவள்ளுவர், தொல்காப்பியர் எல்லாம் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று உறுதியாகச் சொல்வது கடினம். இவ்வாறு சாந்தலிங்கம் அய்யா கூறினார்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் சமீபத்தில் மகாவீரர் ஜெயந்திக்கு சிறப்பு விருந்தினராக சாந்தலிங்கம் அய்யாவுடன் வந்தவாசி பகுதிக்கு சென்றிருந்தை குறிப்பிட்டு பேசினார்.  வந்தவாசியில் 25000க்கும் மேற்பட்ட தமிழ்ச்சமணர்கள் வசிக்கிறார்கள். அங்குள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மதுரை பகுதிக்கு வந்து இங்குள்ள சமணத்தலங்களையெல்லாம் பார்த்து செல்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன் சமணம் செழித்திருந்த மதுரையில் அவர்களுக்கு இன்று கைபிடி மண்கூட கிடையாது. சாந்தலிங்கம் அய்யா சொன்னது போல அங்குள்ள ஆண்கள், பெண்கள் எல்லோரும் சங்க இலக்கியங்களில் தேர்ச்சியோடு இருக்கின்றனர். இன்றும் முந்தைய காலத்தைப் போல விளக்கு வைப்பதற்கு முன்பே சாப்பிட்டு விடுகின்றனர். வந்தவாசி பொன்னூர் மலைப்பகுதியில் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். அப்பகுதியில் பெரிய சமணக் கோயில்கள் உள்ளது. சமீபத்தில் மேலக்குயில்குடி அருகில் நூலகம், தங்குமிடத்துடன் ஒரு ஆய்வு மையத்தை தொடங்கியிருக்கிறார்கள். தொடக்கவிழாவிற்கு தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம், வேதாச்சலம், வெங்கட்ராமன் மற்றும் எழுத்தாளர் அருணன், வழக்கறிஞர் லஜபதிராய் போன்றவர்களை அழைத்துள்ளனர். பசுமைநடை குழுவினரையும் அங்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பசுமைநடைக்குழுவினரின் பணிகளைப் பாராட்டினர்.

கீழவளவு

அங்கிருந்து மலையைச் சுற்றியுள்ள சமணத்தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்த்தோம். நெடுஞ்சாலை வலைப்பூ நண்பர் வேல்முருகனை சந்தித்தேன். அவருடன் உரையாடிக் கொண்டே மலையில் ஏறினோம். மலையில் மறுபுறம் சென்று பார்த்தால் கற்களை அறுத்து கூறுபோட்டு வைத்திருப்பதை பார்த்து திகைத்தோம். இயற்கை மீதான நம்முடைய அக்கறையின்மையே இதற்கெல்லாம் காரணம். சமீபகாலங்களில் வாசப்படியில் பட்டியக்கல்லை பார்த்தால்கூட எந்த மலை இங்கு கிடக்கிறதோ என்ற குற்றவுணர்வு வருகிறது. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பேனா மனோகரன் அவர்கள் இயற்கை மீதான இன்றைய கால அத்துமீறல்களை கவிதையாக வாசித்தார். மனது கனத்துப் போனது. எல்லோரும் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம்.

பசுமைநடைகுழுவினர்

மலையிலிருந்து இறங்கி மலைக்கு அருகிலிருந்த குன்றின் கீழிருந்த படுகைகளைப் போய் பார்த்தோம். எல்லோரும் அங்கிருந்த மரத்தடியில் சாப்பிட்டோம். ஐஸ்வண்டிக்காரர் ஒருத்தர் வர எல்லோரும் அவரிடம் போய் ஐஸ்வாங்கி தின்று மகிழ்ந்தனர். சூரியன் எட்டிப்பார்க்க எல்லோரும் கிளம்பினோம். மறக்க முடியாத பயணமாக அமைந்தது.

விருதுநகர், கும்பகோணம், சென்னையிலிருந்தெல்லாம் பசுமைநடைக்கு வரும் நண்பர்களைப் பார்க்கும்போது மகிழ்வாகயிருக்கிறது. மாட்டுத்தாவணியிலிருந்து கீழவளவு செல்வதற்கு பேருந்து வசதி செய்து தந்த குகன் அவர்களுக்கு நன்றிகள் பல. ஆயிரம் ஆண்டுகளாய் நீடிக்கும் தவம் என்ற வரி காவல்கோட்டம் நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. சு.வெங்கடேசனுக்கு நன்றி. ஒவ்வொரு நடையையும் மறக்க முடியாத பயணமாக்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும் நன்றிகள் பல.

கீழவளவு பசுமைநடை குறித்த நண்பர்களின் பதிவுகள்:

கதிர் – இளஞ்செழியன்,

நெடுஞ்சாலை – வேல்முருகன்

கீழவளவு பசுமைநடை குறித்து தி ஹிந்து நாளிதழில் வந்துள்ள செய்தி: http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/vandalised-hills-and-vanished-history/article4717943.ece

நான் முதல் அம்பு

பன்னெடுங்காலமாய்

இந்த மலையுச்சியில்

கிடக்கிறேன்

யார் மீதும் விரோதமற்ற

ஒருவன் வந்து

தன் வில் கொண்டு

என்னை

வெளியில் செலுத்துவானென!

 –                ஆனந்த்

இதற்கு முந்தைய பதிவில் தி ஹிந்து நாளிதழில் வந்திருந்த, திருப்பரங்குன்ற மலையில் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டு பற்றிய குறிப்பு இருந்தது. அச்செய்தியின் சாரம் இதுதான்:

சுனை

Location

இந்திய தொல்லியல் துறையில் வேலைபார்க்கும் பிரசன்னாவும், புதுச்சேரி பல்கலை ஆய்வு மாணவர் ரமேஷும் ஜனவரி 20, 2013 அன்று திருப்பரங்குன்றம் மலையில் இதுவரை வெளிவராத புதிய தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் மச்சமுனி சன்னதியோடு இருக்கும் சுனை ஒன்றுள்ளது. அதற்குச் செல்லும்  படிக்கட்டு ஒன்றில் இந்த கல்வெட்டு உள்ளது.

Script

முதல் வரியில் மூ – நா- க – ரா என்ற நான்கு எழுத்துக்களும் முடிவில் திரிசூல வடிவிலான குறியீடு ஒன்றும் உள்ளன. இரண்டாவது வரியில் மூ – ச – க – தி என்ற நான்கு எழுத்துக்கள் உள்ளன.

முதல்வரியை “மூநகர்” என்று படித்து பழமையான நகராகிய மதுரையைக் குறிக்கிறது என்று கருதலாம். இரண்டாவது வரியை ‘மூ’ ‘யக்‌ஷி’ எனப் பிரித்து “மூத்த இயக்கி” எனக் கொள்ளலாம் என்பது பிரசன்னா – ரமேஷின் கருத்து.

கல்வெட்டறிஞர் வெ.வேதாச்சலம் அவர்கள் முதல்வரி மூத்த சமணத்துறவியைக் குறிப்பதாகவும், இரண்டாவது வரி “மோட்ச கதி”யைக் குறிப்பதாகவும் கருதலாம் என்கிறார். அவ்வாறெனில், வடக்கிருந்து நிர்வாணம் எய்திய சமணத்துறவியைக் குறிக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

 தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆ. கார்த்திகேயன் நாகரா என்ற பெயருடைய, மூத்த சமணப் பெண்துறவி மோட்சம் எய்தியதைக் குறிப்பிடும் கல்வெட்டு என்று கருதலாம் என்கிறார். 

ரமேஷின் ஆய்வு வழிகாட்டியான புதுச்சேரி பல்கலைக்கழக பேரா. கா.ராஜன் இந்த கல்வெட்டுக்கு காலம் நிர்ணயிப்பது கடினமானது என்றாலும் கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று சொல்லமுடியும் என்கிறார். 

Coins

பிறகு மறுப்பு எழுதிய தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி, முதல்வரியின் முடிவில் உள்ள திரிசூலக் குறியீடு ஒரு சைவச்சின்னம் என்றும் இதனால் இந்த வரிகளை சமணத்தோடு தொடர்புபடுத்தக்கூடாது என்றும் சொல்கிறார். இதற்கு ஆதாரமாக பாண்டிய, சேர மன்னர்களின் சங்க கால நாணயங்களில் இதேபோன்ற திரிசூலக் குறியீடு நிற்கும் யானையின் முன்பாகப் பொறிக்கப்பட்டுள்ளதைச் சுட்டுகிறார். இவரது கருத்துப்படி இவ்வெழுத்துக்கள் மூநகர் மதுரையின் ‘சக்தி’யான மீனாட்சியைக் குறிப்பவை. இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

இந்து பத்திரிக்கையில் வந்த செய்திகளின் இணைப்புக்கள்:

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tamilbrahmi-script-discovered-on-tirupparankundram-hill/article4412125.ece

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/trisula-found-on-tirupparankundram-inscription-is-a-saivite-symbol/article4422864.ece

திருப்பரங்குன்றம் சமயநல்லிணக்கச் சின்னம் என்ற தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யாவின் கட்டுரையையும் கட்டாயம் வாசியுங்கள்.

நண்பர்கள் இளஞ்செழியன் மற்றும் ரகுநாத்தின் பசுமைநடை குறித்த பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள்.

http://www.kathirvalaipoo.blogspot.in/2012/04/blog-post_18.html

http://thamizhmani2012.blogspot.in/2013/01/blog-post.html

குன்றிலிருந்து குன்றம் நோக்கி…

திருப்பரங்குன்றத்தில் சமணம்

பரங்குன்றொருவகம் பப்பாரம் பள்ளி                         

யருங்குன்றம் பேராந்தை யானை – இருங்குன்றம்

என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்

சென்றெட்டுமோ பிறவித் தீங்கு.

முருகனின் முதல்படைவீடாக வணங்கப்படும் திருப்பரங்குன்றம் சமணர்களின் எண்பெருங்குன்றத்தில் முதலாவது குன்றமாகத் திகழ்ந்ததை மேலே உள்ள யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாக காட்டப்பட்ட பாடல் வாயிலாக அறியலாம். திருப்பரங்குன்ற மலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமிக்கல்வெட்டு கண்டறியப்பட்ட பத்திரிகை செய்தியை சகோதரர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மலைப்பயணமாகப் பசுமைநடைக்குழுவோடு சென்றால் நன்றாகயிருக்கும் என்று எண்ணிய ஓரிரு நாட்களில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடமிருந்து 24.02.2013 திருப்பரங்குன்றத்தில் பசுமைநடை என்ற குறுஞ்செய்தி வந்தது பெரு மகிழ்ச்சியைத் தந்தது.

விடியலைநோக்கி

அதிகாலை மாசிப்பனி மச்சைத்துளைக்கும் வேளையிலே நானும், சகோதரரும் கிளம்பிச் சென்றோம். தியாகராயர் பொறியியற் கல்லூரி தாண்டி திருப்பரங்குன்றத்திற்குள் நுழையுமிடத்திலேயே திருமங்கல நண்பர்கள் இளஞ்செழியனும், ரகுநாத்தும் வந்தனர். திருப்பரங்குன்றத்திலுள்ள தம்பிகள் இருவரும் பேருந்து நிலையமருகில் வந்தனர். எல்லோரும் வந்ததும் சிக்கந்தர் சுல்தான் பள்ளிவாசல் செல்லும் மலைப்பாதையில் சென்றோம். சூரியன் மெல்ல எட்டிப்பார்த்தார்.

மலையில் ஏறுவதற்கு கற்களைப் படிகள் போல அமைத்து உள்ளனர்.  வழியில் பாறைகளில் நம்மவர்கள் தங்கள் பெயர்களை பொறித்து வைத்துள்ளனர். நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் நாவலில் நாயகியான பூரணியின் வீடு திருப்பரங்குன்றத்திலிருக்கும். அரவிந்தனும், பூரணியும் மலையேறும் போது ஒருநாள் தங்கள் பெயரையும் பாறையில் செதுக்கி வைத்துக்கொள்வது ஞாபகம் வந்தது. அதைக்குறித்து நண்பர்களிடமும் கூறினேன்.

மலையேற்றம்

பசுமைநடை

படிகளைக் கடந்து மலைப்பாதை தொடங்கியதும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டோம். நிறைய நிழற்படங்களெடுத்துக் கொண்டோம். தென்கால் கண்மாயில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். கிரிக்கெட் அழிவதற்காகவாவது தென்கால் கண்மாய் மற்றும் தெப்பக்குளத்திலெல்லாம் நீர் நிறையணும் என்று வேண்டிக்கொண்டேன். காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பள்ளிவாசல் செல்லும் பாதை பிரியும் இடத்தில் அமர்ந்தோம். சமதளமான இடம். இதற்கு முன்பொரு முறை நானும், நண்பரும் வந்திருந்த போது இந்த இடத்தில் பள்ளிவாசலுக்கு வந்திருந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கபடி விளையாடிக்கொண்டிருந்தனர். பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

காசிவிஸ்வநாதர்

குரங்கு

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு படிகள் வழியாக ஏறிச் சென்றோம். குரங்குகள் நிறையத் திரிந்து கொண்டிருந்தது. பாலிடெக்னிக் நண்பர்களுடன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நண்பர்கள் தினம் கொண்டாட இருக்கிற காசெல்லாம் போட்டு கேக் வாங்கிட்டு இம்மலைக்கு வந்தோம். வழியில் மண்டபத்தில் தண்ணீர் குடிப்பதற்காக பையை நண்பன் வைத்தபோது குரங்கொன்று தூக்கி கொண்டு ஓடியது. நாங்களும் துரத்தி பார்த்தோம். முடியவில்லை. பிறகு எங்கள் முன்னாடியே பிரித்து மகிழ்வாகத் தின்றது. மறக்க முடியாத நண்பர்கள் தினமாக அந்நாள் அமைந்தது.

சிவபூஜை

காசி விஸ்வநாதர் கோயில் செல்லும் வழியில் பாறைக்கடியில் சுனையொன்று உள்ளது. கம்பி வேலியிட்டு அடைத்திருக்கிறார்கள். நம்மவர்கள் பாலித்தீன் குப்பைகளை போட்டு மலையை நாசமாக்கி வருகிறார்கள். குரங்குகள் பாலித்தீன் கவரை எடுத்து கடிக்கும்போது மனசுக்கு ரொம்ப சங்கடமாய் இருக்கிறது. கொண்டு செல்லும் பாலித்தீன் பொருட்களை மலைகளில் போடாமல் வந்தாலே பெரிய புண்ணியம்.

பாறையின் மேலே பார்சுவநாதர், கோமதிஸ்வரர் சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டிருந்த இடத்தின் கீழ் எல்லோரும் அமர்ந்தோம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா திருப்பரங்குன்றம் குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார்.

பசுமைநடைநட்சத்திரங்கள்

சமணமுனி

திருப்பரங்குன்றம் சமய நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்குகிறது. சங்க இலக்கியமான அகநானூற்றில் இம்மலை பற்றிய குறிப்புள்ளது. குறிஞ்சி நிலமான அக்காலத்தில் இங்கு புலி, சிங்கமெல்லாம் இருந்ததாம். மனிதர்கள் நுழைந்த பின் நம்முடைய கொடுமை தாங்காமல் வேறு எங்காவது சென்றிருக்கும். கி.பி ஏழாம் நூற்றாண்டில் இப்பொழுது நாம் வணங்கும் குடைவரை எடுக்கப்பட்டது. தேவாரத்தில் திருப்பரங்குன்றத்தைக் குறித்து பாடும்போது திருப்பரங்குன்றமுடைய நாயனார் என்று சிவனுடைய தலமாக குறிப்பிடப்படுகிறது.

இக்குடைவரை ‘ப’ வடிவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து சிவலிங்கமும் லிங்கத்திற்கு பின் சிவன் சோமாஸ்கந்த மூர்த்தியாக சிலைவடிவிலும் பார்வதியுடன் இருக்கிறார். சிவனுக்கு நேரே பவளக்கனிவாய் பெருமாள் இருக்கிறார். அதற்கடுத்து முருகன், துர்க்கை, பிள்ளையார் இருக்கிறார்கள். பாண்டிய பராந்தக நெடுஞ்செழியன் காலத்தில் இக்குடைவரை எடுக்கப்பட்டது. இன்று நாம் பொரி வாங்கிப் போடும் லட்சுமி தீர்த்தம் ஸ்ரீதடாகமென்று முன்பு அழைக்கப்பட்டிருக்கிறது. துர்க்கைக்கும், ஜேஷ்டா தேவிக்கும் ஒரு காலத்தில்  சிறப்பான வழிபாடுகள் இக்கோயிலில் நடைபெற்று இருக்கிறது. ஜேஷ்டா தேவிதான் மூத்த தேவி. வளத்தின் அடையாளமாக வழிபடப்பட்ட இத்தாய் தெய்வம் வைணவம் மேலோங்கிய பின் மெல்ல மறைந்து லட்சுமி வழிபாடு கூடியது.

நாம் திருப்பரங்குன்ற கோயிலில் நுழையும் போது முன்புள்ள மண்டபம் இராணி மங்கம்மாள் கட்டியது. இம்மலையின் பின்புள்ள குடைவரைக்கோயில் சமணர் குடைவரையாகயிருந்து சைவக்குடைவரையாக மாற்றப்பட்டுள்ளது. இன்றும் அர்த்தநாரீஸ்வரின் சிலைக்கு மேலே அசோக மரத்தின் அடையாளத்தைக் காணலாம். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சைவக்குடைவரையாக மாற்றப்பட்டிருக்கிறது. சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

பார்சுவநாதர் சிலையும், பாகுபலி சிலையும் இங்குள்ளது. பார்சுவநாதர் மகாவீரருக்கு முந்தையவர். 23வது தீர்த்தங்கரர். சமணப் புராணக்கதையொன்றை இங்கு சிற்பமாக வடித்திருக்கிறார்கள். ஐந்துதலை நாகத்தை குடையாகக் கொண்டுள்ள பார்சுவநாதர் மேல் கல்லை போட கமடன் என்ற அசுரன் வருவதாகவும் பின் அவன் திருந்தி அவரை வணங்குவதாகவும் சிலை உள்ளது. கோமதிஸ்வரர் என்றழைக்கப்படும் பாகுபலி சிற்பம் பார்சுவநாதரின் அருகில் உள்ளது. இவருடைய தங்கைகள் பிராமி மற்றும் சுந்தரி அருகில் உள்ளனர். பல்லாண்டுகளாக தவம் இருந்ததால் இவர் காலுக்கடியில் புற்றிருப்பதுபோலவும் பாம்பு சிலைகளும் உள்ளது. இம்மலையிலுள்ள சிக்கந்தர் ஷாவின் பள்ளிவாசல் மிகப்பழமையானது.

சாந்தலிங்கம் அய்யா பேசிய பிறகு பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பேசும் போது நூற்றுக்கும் மேற்பட்ட முறை இம்மலைக்கு வந்ததைக் குறிப்பிட்டார். தமிழகத்திலுள்ள முக்கியமான எழுத்தாளர்கள் பலரோடு இம்மலையில் இரவு தங்கி உரையாடியதைக் குறிப்பிட்டார். மேலும், இம்மலையிலிருந்து சுற்றிப்பார்க்கும்போது நிறைய கண்மாய்கள் நீரால் நிரம்பி காட்சியளிக்கும். துரதிர்ஷ்டவசமாக இம்முறை எந்த கண்மாயும் நிரம்பவில்லை. மலைக்கு வருவதற்கு படிக்கட்டு வழி வருவதை விட பள்ளிவாசலுக்கு வரும் மலைப்பாதையே சிறந்தது. பாதுகாப்பானது. தினமும் பள்ளிவாசலுக்கு, கோயிலுக்கு வருபவர்கள் இப்பாதையையே உபயோகிப்பதால் நமக்கும் பாதுகாப்பு எனக் கூறினார். மேலும், இம்மலைக்கு நாமெல்லாரும் அடிக்கடி குடும்பத்தோடும், நண்பர்களோடும் வந்து சென்றால் இந்த இடத்தின் பழமை பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

மலைரயில்

திருப்பரங்குன்றம்

காசிவிஸ்வநாதர் கோயில் சென்றோம். சிவனை வணங்கி பின்னாலுள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டைக்காணச் சென்றோம். சுனையருகே அமைந்திருந்த சிலைகள் மிக அழகாகயிருந்தது. அந்தச் சூழல் மனதிற்கு மிக நெருக்கமாகயிருந்தது. சாந்தலிங்கம் அய்யா சுனையின் கரையோரமிருந்த தமிழ்பிராமிக் கல்வெட்டை படித்துக் காண்பித்தார். இக்கல்வெட்டு சமீபத்தில்தான் கண்டறியப்பட்டதாம். சுனையில் நீர் இருந்ததால் முன்பு காணமுடியாமல் இருந்திருக்கும்.

சாந்தலிங்கம்

சாந்தலிங்கம் அய்யா எழுதிய மதுரையில் சமணம் நூல் இம்முறை நடைபயணத்தின்போது கொண்டு வந்தார்கள். எனக்கொரு பிரதி வாங்கினேன். சகோதரர்களுடனும், நண்பர்களுடனும் மலையிலிருந்து கதைத்துக் கொண்டே கீழேயிறங்கினோம்.

Kalvettu - Copy

பழனியாண்டவர் கோயில் மண்டபத்தில் வைத்து எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இக்கோயிலின் சுனையிருக்கும்  (சமீபத்தில் தூர்ந்து போய் குப்பையாக போட்டிருக்கிறார்கள்) பாறைக்கு மேல் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி சிற்பங்கள் உள்ளது. இதற்கருகிலேயே வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இவை கி.பி.எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சாந்தலிங்கம் அய்யா அக்கல்வெட்டுகளை வாசித்துக் காண்பித்தார். ஆவியூர் அருகிலுள்ள குரண்டியைச் சேர்ந்தவர் இதை செய்திருக்கிறார். குரண்டி திருக்காட்டாம் பள்ளி முன்பு பெரிய சமணப் பள்ளியாகயிருந்து இன்று அதன் சுவடே இல்லாமல் மறைந்துவிட்டது. சமணமுனிவர்கள் சிலையிருக்கும் பாறைக்கருகிலேயே நாயக்கர்கால கல்வெட்டு ஒன்று உள்ளது.

பசுமைநடை முடிந்ததும் நண்பர்களிடம் விடைபெற்று கிளம்பினோம். திருப்பரங்குன்றத்திலுள்ள சித்தி வீட்டிற்கு சென்றோம். மத்தியானம் கிளம்பி நானும் சகோதரரும் வீடு வந்தோம்.

இதே தொடர்பில் சில முக்கியமான இணைப்புகள் அடுத்த பதிவில்.

அற்புத மரங்களின் அணைப்பில்

நான் ஒரு காற்றாடி

வேப்ப மரக்கிளைகளின் இடையே

நான் ஒரு சூரியரேகை.

பப்பாளிச் செடிகளின் நடுவே

நான் ஒரு இனிமை

சடை சடையாய்த் தொங்கும் கொடிகளில்  

நான் ஒரு நட்சத்திரம்.

–    ஆத்மாநாம்

பசுமைநடை குழுவும், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வுமையமும் இணைந்து புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருநாள் வரலாற்றுப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். முதலில் கொடும்பாளூர் மூவர்கோயிலைப் பார்த்துவிட்டு பிறகு குடுமியான்மலை வந்தோம்.

சாந்தலிங்கம்

குகைத்தளத்தில் குழு

குடுமியான்மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளத்தை நோக்கி நடந்தோம். கொஞ்சம் சறுகலாக இருந்தாலும் ஏறுவதற்கு சிரமமில்லாமல் இருந்தது. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா குகைத்தளத்தில் வெட்டப்பட்டிருந்த தமிழ்பிராமிக்கல்வெட்டை சுட்டிக்காட்டினார். பின் அங்கிருந்த படுகைகளைப் பார்த்தோம்.

படுகை

தமிழ் பிராமி கல்வெட்டு

எல்லோரும் அக்குகைத்தளத்திற்கு வந்து சேர்ந்ததும் சாந்தலிங்கம் அய்யா அவ்விடம் குறித்த தகவல்களை கூறத்தொடங்கினார்.

இந்த ஊரின் பெயர் சங்க காலப் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் பெயரால் அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. (நிலவிவரும் இன்னொரு கருத்து பற்றி அடுத்த பதிவில் காண்போம்) சமணர்கள் தங்குவதற்கு வெட்டப்பட்ட படுகைகளுக்கு அருகில் உள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டில் ‘நாழள் கொற்றந்தய் பளிய்’ என்றுள்ளது. இக்கல்வெட்டு கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இம்மலைமீது குலசேகரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட முருகன்கோயில் ஒன்று உள்ளது. இது எழுநூறு ஆண்டுகள் பழமையானது.

மலையடிவாரத்திலுள்ள பெரிய கிணற்றில் ஒரு பொருளைப் போட்டால் மலைக்கு மறுபுறம் உள்ள கிணற்றில் அதை எடுக்கலாம் என்ற கதை இந்தப் பகுதியில் நிலவுகிறது. இதை அண்ணன் கிணறு, தம்பி கிணறு என்கிறார்கள். மலையைச்சுற்றி முன்பு முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகயிருக்கலாம்

மலையிலிருந்து மெல்ல இறங்கினோம். அங்கிருந்து குடுமிநாதர்கோயில் சென்றோம். (குடுமிநாதர்கோயிலைக் குறித்து அடுத்த பதிவில் காண்போம்) குடுமிநாதர்கோயிலுக்குள் சென்று மலையின் கிழக்குச்சரிவில் வெட்டப்பட்டுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றோம்.

குடுமியான்மலை

வாயிலோன்சாந்தலிங்கம் அய்யா இக்குடைவரை குறித்த வரலாற்றுத்தகவல்களை கூறினார். இக்குடைவரையிலுள்ள ஈசனுக்கு திருமூலட்டானத்து எம்பெருமான் என்று பெயர். இக்குடைவரை மேலைக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்குடைவரை ஒரு கருவறையும், முன்மண்டபமும் கொண்டுள்ளது. இங்குள்ள வாயில் காவலர் உருவங்கள் மிகவும் எழிலார்ந்தவை. இங்குள்ள தூண்களில் கி.பி.எட்டாம்நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் சடையன் மாறனின் கல்வெட்டு உள்ளது.

தேவதூதர்கள்வாயில்காவலர் சிலை ஒரு கையை இடுப்பில் வைத்து மறுகையை ஒரு தூணில் சாய்ந்து ஒயிலாக நிற்கிறார். மிகவும் அழகாகயிருந்தது. சிவலிங்கம் இருக்கும் கருவறையின் வாசலில் படிபோல செதுக்கப்பட்டுள்ளதை சாந்தலிங்கம் அய்யா சுட்டிக்காட்டினார். கருவறை வாசல் முகப்பில் மேலே தேவதூதர்கள் பறந்து வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்கள் மிகவும் அழகாக வெட்டப்பட்டுள்ளது. அதிலும் கல்வெட்டுகள் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

பிள்ளையார்வாயில்காப்போன் சிலைக்கு இடதுபுறம் ஒரு சிறிய பிள்ளையார் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.

குடைவரையைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். குடைவரைக்கு இடதுபுறம் மலையில் ஒரு பெரிய பிள்ளையார் சிலையும் அதனருகில் இசைக்கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏழுபத்திகளில் சமஸ்கிருதக்கல்வெட்டு உள்ளதை சாந்தலிங்கம் அய்யா சுட்டிக்காட்டினார். இதைக் குறித்து இசைப்பேராசிரியர் ராமநாதன் போன்றோர் எழுதியிருப்பதையும் குறிப்பிட்டார். இங்குள்ள இசைக்கல்வெட்டுகள் மிகவும் புகழ் பெற்றவை. ஏழுசுவரங்களையும், ஏகப்பட்ட ராகங்களையும் இக்கல்வெட்டில் அந்தக்காலத்தே பதிவு செய்திருக்கிறார்கள்.

(பெரிய தேன்கூடு இருந்ததால் கலைந்துவிடும் அபாயம் கருதி கூட்டமாக மிக அருகில் செல்லவில்லை)

இசைக்கல்வெட்டு உள்ள மண்டபம்

மலைமீது மலைப்பாறையில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் சிலைகளுக்கு மத்தியில் சிவன் உமையுடன் காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது போல சிலை வெட்டப்பட்டிருக்கிறதைப் பார்த்தோம். மலைமீது வரிசையாக அச்சிற்பங்களைப் பார்த்ததும் அக்காலச் சிற்பிகளை எண்ணி வியப்பாகயிருக்கிறது. இந்த சிற்பங்களின் படத்தை ஒரிரு மாதங்களுக்கு முன்பு மின்னஞ்சலில் சகோதரன் அனுப்பியிருந்தான். பதில் மின்னஞ்சலாக கழுகுமலை-சங்கரன்கோயில் பசுமைநடைப் பயண நிழற்படங்களுடன் டிசம்பர் மாதத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை பயணம் நிகழவுள்ள தகவலையும் அனுப்பினேன். படங்களையும் பதிவையும் வாசித்து இம்முறைப் வரலாற்றுப் பயணத்திற்கு மிக ஆர்வமுடன் கலந்துகொண்டான். (சகோதரன் அனுப்பிய நிழற்படத்தை எடுத்த முகமறியாத அந்தக் கலைஞனுக்கு நன்றி) சிற்பங்களின் அழகைக் கண்டுவிட்டு சித்திரங்களின் அழகைக் காண சித்தண்ணவாசல் சென்றோம்.

காட்டுக்கவிதை

என் கவிதை,

கேட்டு மகிழ எண்ணாதீர்,

முடிந்தால்

அதனுள் புகுந்து ,

அலைந்து திரிந்து,

காண்பன கண்டு,

கேட்பன கேட்டு

திகைப்பு நீங்கித்  

திரும்பிடுவீரே.           

– சுப்பையா

சித்தர்மலை பசுமைநடை செல்ல அதிகாலை எழுந்து பனியினூடாக நானும், சகோதரனும் கிளம்பினோம். மதுரை காமராசர் பல்கலைக்கழக வாசல்முன் பசுமைநடை நண்பர்கள் குழுமியிருந்தனர். எல்லோரும் வந்ததும் அங்கிருந்து செக்கானூரணி, விக்கிரமங்கலம், பெருமாள்பட்டி வழியாக கல்யாணிப்பட்டி சென்றோம்.

பார்க்கும் திசைகளிலெல்லாம் மலைகள் வரவேற்றன. வழியெங்கும் தென்னந்தோப்புகளும், நெல்வயல்களும், மல்லிகைத்தோட்டங்களும், கரும்புத்தோட்டங்களும், வெண்டிச்செடிகளும் எனச் சுற்றிலும் பசுமையாகயிருந்தது. அதிகாலையில் குழுவாகச் செல்லும் எங்களை கிராம மக்கள் வியந்து பார்த்தனர். அதிகாலையிலேயே தோட்டங்களில் வேலை செய்பவர்களையும், இன்னும் தண்டட்டி போட்ட பாட்டிகளையும்  நாங்களும் வியந்து பார்த்தோம்.

சித்தர்மலையடிவாரத்தில் கல்யாணிப்பட்டி அமைந்துள்ளது. மலையேறுவதற்கு கொஞ்சதூரம் படிக்கட்டுகள் உள்ளது. மலையடிவாரத்திலிருந்து நண்பர் கந்தவேல் வழிகாட்ட முன்நோக்கி நடந்தோம். மரங்களுக்கிடையே உள்ள பாதையினூடாக சென்றோம். என்னுடன் வந்த சகோதரன் ஏற முடியாமல் திணறினான். எனக்கு என்னவோ இந்த மலை அவ்வளவு சிரமமாக தோன்றவில்லை. கொஞ்சதூரம் மலையில் நடக்க பாறைகளில் படிகள் செதுக்கியுள்ளனர்.

(குறிப்பு: படங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் நான்கைந்து படங்களைச் சேர்த்து தொகுப்பாக இட்டுள்ளேன். தயவுசெய்து சொடுக்கி சொடுக்கி அடுத்தடுத்த படங்களைப் பார்க்கவும்)

மலைமீது இயற்கையாக அமைந்த குகைத்தளத்தைக் கண்டோம். அதில் பத்திற்கும் மேற்பட்ட படுகைகள் வெட்டப்பட்டுள்ளன. படுக்கைகளின் தலையணை போன்ற அமைப்பில் தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. குகையில் நிறைய இடங்களில் தற்கால மனிதர்களின் பெயர்களும் பெயிண்டில் எழுதப்பட்டுள்ளது. படுகையிருக்கும் குகைத்தளத்தினுள் ஆள் நிற்குமளவு பெரிய குகையொன்று உள்ளேயிருக்கிறது.

பசுமைநடை ஒருங்கினைப்பாளரும் எழுத்தாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் குழுவினரை வரவேற்றுப்பேசினார். வெயில் குறைவாக உள்ளதால் மலையேறுவதற்கு எளிதாகயிருப்பதை சொன்னார். பசுமைநடையில் பயணிக்கும் பெண்கள் சிலரின் கருத்துகள் இன்றைய தினகரனில்(18.11.12) அரைப்பக்கம் வந்திருப்பதாக கூறினார். இன்றும் நம்மோடு சேனல்1, ரேடியோமிர்ச்சி, தினமலர் போன்ற ஊடகங்களிலிருந்து நண்பர்கள் பசுமைநடையில் இணைந்து வந்திருப்பதாக கூறினார். இந்த சித்தர்மலையை தொல்லியல்அறிஞர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கூறுகிறார்கள். இங்கு மதுரை என்ற பெயருள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டு உள்ளது. மேலும், மலைமீது இன்னும் கொஞ்சம் ஏறிச்சென்றால் வைகை ஆற்றுப்படுகையை காணலாம் என்றார்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இந்த மலை குறித்த வரலாற்றுத்தகவல்களைக் கூறினார். இந்த மலையிருக்கும் பகுதி முன்பு சித்தர்கள் நத்தம் என்று அழைக்கப்பட்டது. உசிலம்பட்டியிலிருந்து விக்கிரமங்கலம் வரும் வழியில் இந்த மலை அமைந்துள்ளது. மதுரை என்ற பெயருள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள் இரண்டு இடங்களில்தான் உள்ளது. ஒன்று அழகர்கோயில் கிடாரிப்பட்டி மலை. அதில் மதிரை உப்பு வணிகன், மதிரை பொன் வணிகன் போன்ற பெயர்கள் காணப்படுகிறது.

சித்தர்மலையில் மதிரை அமணன் உதயணச என்ற தமிழ்பிராமிக்கல்வெட்டு குகைமுகப்பில் உள்ளது. அமணன் என்ற சொல் வருவதால் இங்கு சமணத்துறவிகள் தங்கியிருந்ததை அறிய முடிகிறது. ஸ்ரமணர்கள் என்ற சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் ஸ்ரமணர்கள் என்ற சொல் மகாவீரர் வழிவந்த சமணமுனிவர்களையே குறிக்கும். தொல்காப்பியம் மொழிக்கு முன் ‘ச’ என்ற எழுத்து வராது என்கிறது. அதை உறுதி செய்வது போல இங்கு அமணன் என்றே காணப்படுகிறது.

இந்த குகைத்தளத்தில் 11 கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கையிலும் தலையணை போன்ற பகுதியில் தமிழ்பிராமிக்கல்வெட்டு உள்ளது. இதை செதுக்கி தந்தவர்களின் பெயராகயிருக்கலாம். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் சமணத்துறவிகளுக்கு உதவியுள்ளதை திடியில் ஆதன் என்ற கல்வெட்டின் வாயிலாக அறியலாம். உசிலம்பட்டி பகுதியில் திடியன் என்ற ஊர் இன்றும் உள்ளது. அந்தக்காலத்தில் இல்’ விகுதியில் முடியும் பெயர்கள் நிறைய உண்டு.

பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி இப்பகுதியில் முன்பு இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதை இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அகஸ்டஸ் சீசர்  காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. கம்பம் – உத்தமபாளையம் – சின்னமனூர் – வீரபாண்டி – சித்தர்மலை – விக்கிரமங்கலம் – கொங்கர்புளியங்குளம் – முத்துப்பட்டி பெருமாள்மலை – கீழ்குயில்குடி – மதுரை என வழியெங்கும் வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. உத்தமபாளையத்தில் சமணத்துறவிகள் தங்கியிருந்த படுகைகள் காணப்படுகிறது. சின்னமனூரில் ஏழாம் (அ) எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவன்கோயில் ஒன்று காணப்படுகிறது. வீரபாண்டி கௌமாரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. முருகனின் பெண் வடிவமாகக் கூட கௌமாரியைச் சொல்வார்கள். அவர் கௌமாரன். பெண் வடிவில் கௌமாரி. ஏழாவது தாமரையில் தோன்றியவள் என்பார்கள்.

சித்தர்மலை மீது உள்ள மகாலிங்கம்கோயில், நந்திப்பாறை எல்லாம் சமகாலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். உசிலம்பட்டி பகுதியில் சிறுத்தைபுலியை வென்ற வீரன் ஒருவனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நடுகள் உள்ளது.

சாந்தலிங்கம் அய்யாவின் உரையைக் கேட்டபின் அங்கிருந்து மலைமீது ஏறத்தொடங்கினோம். குகைத்தளத்தில் ராமர்பாதம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். மலைமீது ஏறிப்பார்த்தால் வைகை ஆறு மணலாக தொலைவில் காட்சி தந்தது. தொலைவில் உள்ள இடங்கள் எல்லாம் பனிமூடியிருந்தது. தூரத்தில் அணைப்பட்டி பாலம் தெரிந்தது. அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தம். அங்கு ஒருமுறை நானும் சகோதரரும் சென்று வைகையில் நீராடியது ஞாபகம் வந்தது. மலை மேல் மகாலிங்கம் கோயில் ஒன்று உள்ளது. நாங்கள் சென்ற போது கோயில் அடைத்திருந்தது. இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாவின் போது மலைக்கு நிறைய பேர் வருவார்களாம். இந்தக்கோயில் பூசாரி மலைக்கு மறுபுறம் உள்ள மல்லிகைப்பட்டி ஊரைச்சேர்ந்தவராம். நாங்கள் ஏறிய பாதைக்கு மறுபுறம் உள்ள மேட்டுப்பட்டி வழியாகவும் வரலாமாம். எங்களோடு மலைக்கு வந்த கல்யாணிப்பட்டியை சேர்ந்த சிறுவர்கள் சொன்ன தகவலிது.

சர்ப்பத்தின் கோணல்

புற்றிற்கு சரியாகவே இருக்கும்

ஆற்றின் கோணல்

கடலுக்கு சரியாகவே இருக்கும்

மனிதர்களின் கோணல்

ஆண்டவனுக்கு சரியாகவே இருக்கும்.            

– இராமானுஜம்

மலையில் சுனை ஒன்று காணப்படுகிறது. ஆற்றுப்படுகையை நீர் உள்ள போது வந்து ஒருமுறை பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். மலையில் மகாலிங்கம் கோயிலுக்கு நேரே இறங்கும் பாறையில் நந்தியை செதுக்கி வண்ணம் பூசியிருக்கிறார்கள். கொஞ்சம் சரிவாக இறங்கும் பாதையில் மெல்ல இறங்கினோம். நந்திப்பாறையைப் பார்த்துவிட்டு எல்லோரும் கீழே இறங்கத் தொடங்கினோம். மரங்கள் சூழ உள்ள பகுதியில் நடக்கும் போது சுத்தமான காற்றை சுவாசிக்க முடிந்தது. வழியில் ஆலமரம் போல இலைகள் உள்ள மரத்தில் விழுதுகள் இல்லையே என்று குழம்பிக்கொண்டிருந்தேன். சாந்தலிங்கம் அய்யா அந்த மரம் அத்தி மரம் எனக் கூறினார். இறங்கும்போது கொஞ்சம் வேகமாக இறங்கினோம்.

அந்த ஊரை சேர்ந்த பெரியவர் ஒருவர் எங்களைவிட வேகமாக இறங்கினார். எங்களிடம் அவர் வென்னீர் வைத்து இரண்டு நாள் குளிச்சா மலையேறி இறங்குன மேலுகாலு வலி போகுமுன்னார். மலையடிவாரத்தில் உள்ள கருப்புசாமியை வணங்கினேன். அங்கு கருப்புசாமிக்கு சமீபத்தில்தான் சிலை வைத்தார்களாம். மாயாண்டிகுடும்பத்தார் படம் இங்கு எடுத்தபோது அவர்கள் கருப்புசாமி சிலையை அமைத்துக்கொடுத்தார்களாம். அதற்குமுன் அருகில் உள்ள மலைப்பாறையை கருப்பசாமியாக வழிபட்டு வந்துள்ளனர். எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. இட்லியை உண்டபின் அங்கிருந்து கிளம்பினோம். இந்தப்பகுதியில் நீர்கொண்டு செல்வதற்கு தொட்டிப்பாலம் போல ஒன்றிருந்ததை வழியில் பார்த்தேன். ஒருநாளின் முற்பகல் வரை நிறைவாக அமைந்தது. இதற்கு காரணமான எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் & தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்களுக்கும் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

 

நேற்று ராத்திரி மழையீரத்தை

நக்கிக்குடித்தது சூரியன்!

மரத்தோடிறுகிய

கோந்துப் பாளமும்

மனதிளகியதால் தழுதழுத்தது!

தொண்டை கனத்த

காகம் ஒன்று

தலையைச் சிலிர்த்து

வானம் பார்க்குது

முருங்கைப் பூவைக்

குடையாய்ப் பிடித்தும்

முதுகு நனைத்ததோர்

கம்பிளிப்பூச்சி!

ஆம்! நேற்று ராத்திரி

நல்ல மழைதான்

இன்று

நத்தை மீண்டும் நகர்ந்தது. 

– கமல்ஹாசன்

உத்தமபாளையத்திற்கு சென்ற பயணஅனுபவத்தை குறித்தக் கட்டுரையிது. அதற்கு ஏன் முதலில் கமல்ஹாசனின் கவிதை இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? பயணத்திற்கு முதல்நாள் மாலை இடியும், மின்னலும் இணைந்து மிரட்ட மழை பெய்தது. மழைபெய்யும் போது ஒரு கடைவாசலில் நின்று கொண்டிருந்தேன். அருகில் உள்ள இடம் கூட தெரியாத அளவிற்கு மழை கொட்டியது. மறுநாள் சூரியன் வந்து மழையீரத்தை நக்கிக் குடித்தது.

சகோதரியின் மகனுக்கு முடியிறக்கி, காதுகுத்துவதற்காக அவங்க குலதெய்வ கோயிலுக்கு உத்தமபாளையம் சென்றோம். மதுரையிலிருந்து இரண்டு வேனில் கிளம்பினோம். வண்டியில் ஏறியதும் பவர்ஸ்டார் பாசறையினர் எல்லோரும் கடைசிச்சீட்டைப் பிடித்தோம். அரட்டையடிப்பதற்கும், அலப்பறை பண்ணுவதற்கும் ஏற்ற இருக்கை. வண்டியில் ஏறியதும் பவர்ஸ்டார் படப்பாடல்கள் போடச்சொன்னோம். தலைவரது பாடல்கள் இல்லாததால் பாடல் கேட்பதை புறக்கணித்து அரட்டையை ஆரம்பித்தோம். செக்காணூரணி தாண்டி ஒரு கடையில் தேநீர் இடைவேளை முடிந்து வண்டி ஏறியதும் பாட்டுக்குப் பாட்டு ஆரம்பித்தோம். அந்தாதி போல முடியும் அடியில் தொடங்கிப் பாடினோம். பழைய பாடல்கள், புதுப்பாடல்கள் என கச்சேரி களைகட்டியது.

வழிநெடுக மலைகள் கூடவே வந்தன. உத்தமபாளையம் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சிறுகுன்றிற்கு அடிவாரத்திலுள்ள முத்துக்கருப்பண சாமி கோயிலுக்கு சென்றோம். பொங்கல் வைப்பதற்கான சாமான்களை இறக்கி வைத்து விட்டு ஐஸ் வாங்கித் தின்று கொண்டிருந்தோம். எங்க அண்ணன் வந்து நம்ம ஆளுங்க இங்க இருக்காங்க வா போகலாம்ன்னார்.

கோயிலையொட்டிய பாதையில் சென்றோம். பின்னாலேயே குன்று அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்தில் முன்மண்டபம் ஒன்று காணப்படுகிறது. மலைப்பாறையிலேயே சமணத்தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளன. பார்த்ததும் ஒரே மகிழ்ச்சியாகிவிட்டது. இரண்டு வரிசையாக சிலைகள் அமைந்துள்ளன. பார்சுவநாதர், முக்குடைநாதர் சிலைகள்தான் அதிகமிருந்தன. இங்கு வட்டெழுத்துக்கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் அச்சணந்தியின் பெயர் உள்ளது. மேலும், இதை அமைத்துத்தந்தவர்களைக் குறித்த கல்வெட்டும் உள்ளன. கழுகுமலை பயணத்தின் போது சாந்தலிங்கம் ஐயாவிடம் உத்தம்பாளையத்திலுள்ள  சமணமுனிவர்களின் சிலைகளைப் பற்றி கேட்டபோது இத்தகவலைச் சொன்னார். இந்த இடம் பராமரிப்பில்லாமல் இருக்கிறது. இந்த மண்டபத்தின் கீழே பெரியகுகை போன்ற பகுதி காணப்படுகிறது.  அதன் உள்ளே செல்லமுடியாதபடி குப்பையாகக் கிடக்கிறது. இதைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள தமிழ்மொழித்தளத்தைப் பாருங்கள்.

சமணமுனிகளின் சிலைகளிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் முன்பே மலையேறிச்செல்வதற்கு படிகள் கட்டப்பட்டுள்ளது. படியேறும் முன்  நந்தி சிலை நம்மை வரவேற்கிறது.

கொஞ்சம்படிகள் ஏறிச்சென்று பார்த்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதைப்போன்ற அம்மன் சிலை ஒன்று உள்ளது. அருகில் செங்கல் கட்டிடம் ஒன்றின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. முன்பு இந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம்.

குன்றிலிருந்து பார்த்தால் நாலாபக்கமும் மலைகள் தெரிந்தது. எல்லோரும் சேர்ந்து குழுவாய் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

மலையைப் பார்த்துவிட்டு கோயிலுக்குச் சென்றோம். அங்கு காவல்பூதத்தின் முன் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர். இங்குள்ள மிக உயரமான காவல் பூதத்தின் சிலைகள் கருப்புசாமி சன்னதிக்கு இருபுறமும் வெளியில் இருக்கிறது. குதிரை சிலையொன்றும் உள்ளது.

சகோதரியின் மகனிற்கு முடியிறக்கினர்.

எங்க அண்ணனும் இன்னொரு தம்பியும் ஆத்திற்கு குளிக்கச் சென்றனர். நானும் இன்னொரு தம்பியும் அவர்களைத் தேடி ஆத்திற்குச் சென்றோம். நாங்கள் பாதை மாறி வேறுபக்கம் போய்விட்டோம். ஒரு வழியாக ஆற்றுக்குப் போனால் அதற்குள் எங்கள் நால்வரையும் வரச்சொல்லி அலைபேசியில் அலை போல மாறிமாறி அழைத்துக் கொண்டேயிருந்தார்கள்.

நாங்கள் ஷேர்ஆட்டோ பிடித்துக் கோயிலுக்கு போக, ஆட்டோக்காரர் காசு குறைவாக கொடுத்துருவோம்ன்னு நினைச்சு உத்தம்பாளையத்தை எங்கள் அவசரம் தெரியாமல் சுற்றிக்காண்பித்துக்கொண்டிருந்தார். எஜமான் ரஜினி மாதிரி ஒரு சின்ன சந்தில் எல்லாம் நுழைந்து சென்றார்.

நாங்கள் நடந்து சென்றபோது ரெண்டு நெட்டு ரோடுதான் இருந்தது ஆறு. கடைசியில் இறக்கிவிட்டு நாலுபேருக்கு முப்பதுரூபாய் கேட்டார். இதை அங்கேயே சொல்லியிருந்தா கொடுத்துருப்போமே இப்படி ஊரைச்சுத்திக்காட்டணுமான்னு கேட்கலாம் என்பதற்குள் அவர் போய்விட்டார். பிறகு சாமி கும்பிட்டு எல்லோரும் சாப்பிட்டோம்.

உத்தமபாளையத்திலிருந்து வருகையில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு சென்றோம்.

இங்கு சித்திரை மாதம் பெருந்திருவிழா நடைபெறுமாம்.

வைகை அணைக்குச் சென்றோம்.

தண்ணீர் குறைவாக வறண்டு இருந்தது.  அணையைச் சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம்.

 

இந்தப் பயணத்தில் சமணமுனிகளின் சிலைகளைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம் மட்டுமல்ல, எதிர்பாராத ஆச்சர்யமும் கூட. பயணங்கள் முடிவதில்லை.