திருப்பரங்குன்றம் போற்றுவோம்

Posted: ஜனவரி 19, 2014 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்
குறிச்சொற்கள்:, , ,

தென்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சைவம், வைணவம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என பல சமயத்தலங்கள் அருகருகே கொண்ட சமயநல்லிணக்கத் தலம். சங்க இலக்கியங்களாம் அகநானூறு, பரிபாடல் தொடங்கி திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கியங்களில் பாடப்பட்டு குறிஞ்சிமலர், காவல்கோட்டம் போன்ற நாவல்களில் பேசப்பட்ட திருப்பரங்குன்றம் மதுரையின் தொன்மையான இடம்.

திருப்பரங்குன்றத்தின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக ஜனவரி 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் திருப்பரங்குன்றம் போற்றுவோம் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்திலுள்ள சமணப்படுகையை சமீபத்தில் சுத்தம் செய்ததாக நாளிதழில் வாசித்தேன். அதன்பொருட்டு முன்பு எழுதிவைத்த திருப்பரங்குன்றத்தில் சமணநடை என்ற பதிவை சுந்தர்ராஜன் அவர்கள் எடுத்த படங்களுடன் இரண்டாண்டுகளுக்கு பிறகு பதிவிடுகிறேன். சுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றிகள் பல.

அக்டோபர் 30, 2011 அன்று பசுமைநடையாக திருப்பரங்குன்றம் சமணப்படுகை மற்றும் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றதைக் குறித்த பதிவு:

பயணத்திற்கு முதல்நாள் மாலையிலிருந்து மழை பெய்துகொண்டேயிருந்தது. அதனால் இம்முறை பசுமைநடை ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருந்தது. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பார்த்தால் அப்பொழுதும் மழை பெய்து கொண்டிருந்தது. மழை விட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன். நினைத்தது போல மழை ஆறுமணிப்போல வெறித்துவிட்டது. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் எங்கு வருவது என அலைபேசியில் கேட்ட போது திருப்பரங்குன்றம் சுகாதார நிலையம் அருகில் வரச்சொன்னார். திருப்பரங்குன்றத்திலிருக்கும் சகோதரன் வந்ததும் மலை நோக்கி நடந்தோம்.

அமன்பாழி

பசுமைநடை குழுவினரை திருப்பரங்குன்ற ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள அமண்பாழிகிட்ட சந்தித்தோம். எல்லோரும் கூடியதும் மலை ஏறத்தொடங்கினோம். மழை பெய்திருந்ததால் மலையைக் காண மிகவும் ரம்மியமாகயிருந்தது. மலையேற பாதி தூரத்திற்கு கட்டிய படிகள் உள்ளன. பிறகு பாறையை படிபோல் செதுக்கியிருக்கிறார்கள். மலை மேல் ஏறி குகைகளைப் பார்த்தோம்.

பசுமைநடை_1

சாந்தலிங்கம் அய்யாவிடம் இந்த படுகையில் கல்வெட்டுகள் எங்கு உள்ளன என்று கேட்ட போது எங்களுக்கருகில் இருந்த கல்வெட்டை காண்பித்தார். இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அங்கிருந்த கல்வெட்டுக்கள் குறித்த தகவல்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பேசினார்.

சமணப்படுகை

முதல் கல்வெட்டு கற்படுக்கையின் தலைப்பகுதியில் தலைகீழாக ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ளது.

 ‘ அந்துவன் கொடு பிதவன் ‘

 இதில் அந்துவன் என்பவன் இக்கல்படுக்கையை செய்து கொடுத்தவன் என்பது பொருள். அந்துவன் என்ற பெயர் சங்க காலத்தில் ஒரிரு புலவர்களுக்கு வழங்கியுள்ளதைக் காணலாம்.

இரண்டாவது கல்வெட்டு இரண்டு படுக்கைகளின் பக்கவாட்டில் இரண்டு துண்டுகளாக உள்ளது.

 ‘ மாரயது கய(ம்) ‘

மாராயம் என்பது அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம். மாராயம் என்னும் பட்டும் பெற்ற ஒருவர் ஒரு நீர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைக் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கயம் என்றால் குளம், நீர்நிலை எனப் பொருள் கொள்ளலாம்.

 மூன்றாவது கல்வெட்டு வரிசையாக உள்ள கற்படுக்கைகளின் தலைப்பகுதிக்கு பின்புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டுள்ளது.

 ‘ எருகாடூர் ஈழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன நெடுசாதன் ‘

எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுஞ்சாத்தன் இந்தக் கற்படுக்கையை செய்து கொடுத்தான் எனப் பொருள் கொள்ளலாம். எருகாட்டூர் என்பது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமலை தமிழ் பிராமிக் கல்வெட்டிலும், பிள்ளையார்பட்டி குடைவரைக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. திருப்பத்தூர் பகுதியிலுள்ள ஒரு ஊராக இருக்கலாம். சங்க இலக்கியமான புறநானூறு 397 ஆம் பாடலை பாடியவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் புலவர் ஆவார். எக்காட்டூர், எருக்காட்டூர் இரண்டும் ஒன்றே எனக்கருதலாம். இங்குள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்குகைத்தளத்தினருகில் சிறிய சுனை ஒன்று காணப்படுகிறது.

இம்முறை மழைபெய்தும் நிறையப்பேர் வந்திருந்தனர். மலையிலிருந்து கீழே பார்க்கும் போது ரயில் வந்தது. அங்கிருந்து அதைக்காணும் போது மிக அழகாக தெரிந்தது. இந்த குகையிலிருந்து காணும் பொழுது தொலைவிலுள்ள சமண மலை, கொங்கர் புளியங்குளம் பஞ்சபாண்டவ மலை தெரிந்தது. கொஞ்சம் இறங்கி வந்து பார்த்தால் தொலைவில் யானைமலை, மற்றும் அதன் பின்னால் உள்ள அழகர்மலை, மாங்குளம் மலைகள் எல்லாம் தெரிந்தன.

குடைவரை

மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரையைக் காணச் சென்றோம். அனைவரும் கூடியதும் அந்த இடம் குறித்த வரலாற்றுத் தகவல்களை சாந்தலிங்கம் அய்யா கூறினார். நான்கு தூண்களுடன் கூடிய முன்மண்டபத்துடன் இக்குடைவரை அமைந்துள்ளது. இது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் குடைவரை. கி.பி.1223ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது. சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் பாரமரிப்புக்காக புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை தானமளித்த செய்தி இங்குள்ள கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறையில் அர்த்தநாரியின் சிற்பம் உள்ளது. முன்பிருந்த சமணத்தீர்த்தங்கரர் சிற்பத்தை மாற்றி இதைச் செய்திருக்கிறார்கள். சிற்பத்தின் தலைக்கு மேலாக காணப்படும் சுருள் சுருளான கிளைகள் அசோக மரத்தைக் குறிக்கும். இக்கோயிலை அமைக்க பிரசன்னதேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும், 13ஆம் நூற்றாண்டில் குடைவரைக்கோயில் எடுக்கும் வழக்கம் இல்லை.

கல்வெட்டுக்கோயிலில் சரியான கூட்டம். ஷஷ்டி விரத காலம் என்பதால் ஏராளமான முருகபக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர். நிறையப்பேர் இந்த சமயத்தில் ஷஷ்டி முடியும் வரை இங்கேயே தங்கி இருப்பர். பஜனைக்குழு முருகனது பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். கல்வெட்டுக்கோயிலுக்கருகில் உள்ள ஓரிடத்தில் கூடி அனைவரும் உணவருந்தினோம். பலமுறை திருப்பரங்குன்றம் வந்திருந்தும் அதன் வரலாற்றுத் தொன்மையை இந்நடையில் அறிய முடிந்தது பெருமகிழ்வைத் தந்தது.

எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்களின் இந்நடை குறித்த  பதிவு

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் போற்றுவோம் நிகழ்வில் ஜனவரி 26 அன்று மாலை சமணப்படுகையில் ஜோதி ஏற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து நாட்டுப்புறக்கலைநிகழ்ச்சிகளுடன் ரதவீதிகளில் உலாப் போகிறார்கள். அனைவரும் வருக. திருப்பரங்குன்றம் குறித்த முந்தைய பதிவுகள்.

திருப்பரங்குன்றத்தில் பசுமைநடை

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

குன்றிலிருந்து குன்றம் நோக்கி

பின்னூட்டங்கள்
  1. வரலாற்றுத் தொன்மையை அறிய வைத்தமைக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…

  2. G.krishnamoorthy சொல்கிறார்:

    Nice

  3. rathnavelnatarajan சொல்கிறார்:

    திருப்பரங்குன்றம் போற்றுவோம் = சித்திரவீதிக்காரன் = நன்றி திரு சுந்தரே சிவம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக